மணமக்களுக்காக
(திருமண விழா)
வாசகங்கள்
பழைய ஏற்பாட்டிலிருந்து
1
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26-28, 31a
கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
2
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24
ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.
ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.
அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.
இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
3
ஈசாக்கு ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 24: 48-51, 58-67
அந்நாள்களில்
ஆபிரகாமின் ஊழியன், லாபானை நோக்கி, “நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன். ஏனெனில் என் தலைவரின் சகோதரியின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன். இப்பொழுது நீர் என் தலைவருக்கு அன்பும் நம்பிக்கையும் காட்டுவீரா இல்லையா என்று எனக்குத் தெரிவியும்: அதற்கேற்ப வலமோ இடமோ எங்காகிலும் திரும்பிச் செல்வேன்” என்றார்.
அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, “இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது. நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக்கூடாது. இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக்கொண்டு போங்கள்” என்றார்கள்.
அப்படியே ரெபேக்காவை அழைத்து, ‘இவரோடு போகிறாயா?’ என்று அவரைக் கேட்டனர். அவரும் ‘போகிறேன்’ என்றார்.
எனவே, அவர்கள் தங்கள் சகோதரி ரெபேக்காவையும் அவர் தாதியையும், ஆபிரகாமின் வேலைக்காரரையும், அவரைச் சேர்ந்தவர்களையும் அனுப்பி வைத்தனர். அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவளை நோக்கி, “எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய். உன் வழிமரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!” என்றனர். பின்பு, ரெபேக்காவும் அவருடைய தோழியரும் ஒட்டகங்களின் மீதேறி, அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அந்த வேலைக்காரர் அவரை அழைத்துக் கொண்டு போனார்.
இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார். மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.
ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தை விட்டு இறங்கினார். அவர் அந்த வேலைக்காரரிடம், “வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?” என்று கேட்டார்.
அவ்வேலைக்காரரும், “அவர்தாம் என் தலைவர்” என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார். அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும் பற்றிக் கூறினார். ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்து கொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
4
விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 7: 6-13
அந்நாள்களில்
இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார். “தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக! நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன்! தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி!” என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார். அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார். அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள்.
பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார். அவர்கள் குளித்த பின், கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், “சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்து கொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்” என்றார். இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞரிடம், “நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்துகொள்ள உன்னைத் தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத் தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்” என்றார்.
அதற்கு தோபியா, “நீங்கள் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும் வரை நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன்” என்றார். இரகுவேல், “சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்கு உரியவள்; இன்றுமுதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக” என்றார்.
இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். “மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக்கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக” என்றார்.
பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
5
நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 8: 4-9
தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், “அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம் மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்” என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள்.
தோபியா பின்வருமாறு வேண்டினார்: “எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர்.
அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்’ என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான்.
என் மீதும் இவள் மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்.” இருவரும் “ஆமென், ஆமென்” என்று கூறினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
6
அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது.
இனிமைமிகு பாடல் நூலிலிருந்து வாசகம் 2: 8-10, 14, 16a; 8: 6-7a
என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள் மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.
என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே! என் காதலர் எனக்குரியர்; நானும் அவருக்குரியள்.
உம் நெஞ்சத்தில் இலச்சினை போல் என்னைப் பொறித்திடுக; இலச்சினை போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம் போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
7
நல்ல மனைவியின் அழகு
ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 26: 1-4, 13-16
துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன். அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும். பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான்.
நல்ல மனைவியே ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள். செல்வனாகவோ ஏழையாகவோ இருந்தாலும் அத்தகையவன் உள்ளம் மகிழ்ந்திருக்கும்; எக்காலத்திலும் அவனது முகம் மலர்ந்திருக்கும்.
ஒரு மனைவியிடம் விளங்கும் நன்னயம் அவள் கணவனை மகிழ்விக்கும்; அவளிடம் காணப்படும் அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு வலுவூட்டும். அமைதியான மனைவி ஆண்டவர் அளித்த கொடை; நற்பயிற்சி பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை. அடக்கமுள்ள மனைவியின் அழகே அழகு! கற்புள்ளவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.
ஒழுங்கமைதி உடைய இல்லத்தில் விளங்கும் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
8
இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும்
புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-32a, 33-34a
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.
இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
வாசகங்கள் – புதிய ஏற்பாட்டிலிருந்து
1
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது?
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31-35, 37-39
சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?
கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?
ஆயினும், நம் மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
2
கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2, 9-18
சகோதரர் சகோதரிகளே,
கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவர் என எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம்.
மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள். நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்.
நீங்கள் உங்களையே அறிவாளிகள் எனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள். இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2, 9-13
சகோதரர் சகோதரிகளே,
கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களை விட மதிப்புக்கு உரியவர் என எண்ணுங்கள். விடாமுயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
3
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட
தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13c-15a, 17-20
சகோதரர் சகோதரிகளே,
உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்.
எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர்.
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
4
அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31 – 13: 8
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை. அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப் பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
5
திருமணத்தில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது.
இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 2,21-33
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.
திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம் முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.
அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம் மீதே அன்பு கொள்கிறவராவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். “இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்” என மறைநூல் கூறுகிறது.
இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன். எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம் மீது அன்புகொள்வது போலத் தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
திருமணத்தில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது.
இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 2,25-32
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம் முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.
அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம் மீதே அன்பு கொள்கிறவராவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். “இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்” என மறைநூல் கூறுகிறது.
இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
6
அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள்.
அதுவே அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-17
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப் பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
7
நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும்
சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9
திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.
முற்காலத்தில் கடவுள் மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்துகொண்டார்கள்; தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் “தலைவர்” என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது இருப்பீர்கள் என்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.
அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வு தரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.
இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
8
செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-24
அன்புப் பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றை விட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.
அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம்.
கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
9
கடவுள் அன்பாய் இருக்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-12
அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
இதனால் கடவுள் நம் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம் மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம் மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
10
ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 19: 1, 5-9a
யோவானாகிய நான் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.”
அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.
பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல் போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த பேரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார். எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார். மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”
அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்கள்
1
திபா 33: 12,18. 20-21. 22 (பல்லவி: 5b)
பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது;
அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்
ஆண்டவர் கண்ணோக்குகின்றார். -பல்லவி
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;
ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். -பல்லவி
22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
} உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! -பல்லவி
2
திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.
அல்லது: (8a): ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி
7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி
3
திபா 103: 1-2. 8,13. 17-18 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
அல்லது: (17a): ஆண்டவரின் பேரன்பு அவருக்கு அஞ்சுவோர் மீது இருக்கும்.
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
13 தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல்
ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். -பல்லவி
17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும்;
அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும்.
18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து
அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். -பல்லவி
4
திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்;
அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசி பெறும். -பல்லவி
3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். -பல்லவி
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்;
அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்;
நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7a தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. -பல்லவி
7b ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;
அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;
இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. -பல்லவி
9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். -பல்லவி
5
திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1 காண்க)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்.
அல்லது: (4): ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் ஆசி பெற்றவர்.
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்;
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!
உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி
6
திபா 145: 8-9. 10,15. 17-18 (பல்லவி: 9a)
பல்லவி: ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்.
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;
எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன;
தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். -பல்லவி
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்;
அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். -பல்லவி
7
திபா 148: 1-2. 3-4. 9-10. 11-13ab. 13c-14a(பல்லவி: 13a)
பல்லவி: நீங்கள் எல்லாரும் ஆண்டவரின் பெயரைப் போற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
1 விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்;
உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்;
அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். -பல்லவி
3 கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்;
ஒளி வீசும் விண்மீன்களே, அவரைப் போற்றுங்கள்.
4 விண்ணுலக வானங்களே, அவரைப் போற்றுங்கள்;
வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே, அவரைப் போற்றுங்கள். -பல்லவி
9 மலைகளே, அனைத்துக் குன்றுகளே,
கனி தரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே,
10 காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே,
ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே. -பல்லவி
11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே,
தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே,
நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
13ab அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக;
அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது. -பல்லவி
13c அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.
14a அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிகள்
1 1 யோவா 4: 7b
அல்லேலூயா, அல்லேலூயா! அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அல்லேலூயா.
2 1 யோவா 4: 8b,11
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் இவ்வாறு நம் மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா.
3 1 யோவா 4: 12b
அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும். அல்லேலூயா.
4 1 யோவா 4: 16b
அல்லேலூயா, அல்லேலூயா! அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகங்கள்
1
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்!
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலை மீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
2
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலை மேல் இருக்கும் நகர் மறைவாய் இருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
3
பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-25
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
4
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-6
அக்காலத்தில்
பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர். அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.
மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
5
இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
இதற்கு இணையானது இரண்டாவது கட்டளை.
† மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 35-40
அக்காலத்தில்
பரிசேயரிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.
அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன் மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
6
அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 6-9
அக்காலத்தில்
இயேசு கூறியது: “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
7
இயேசு செய்த முதல் அரும் அடையாளம்
கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-11
அக்காலத்தில்
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இது வரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
8
என் அன்பில் நிலைத்திருங்கள்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-12
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.
நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
9
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-16
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.
இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
10
அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26
அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என் மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.
தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என் மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என் மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-23
அக்காலத்தில்
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என் மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள் மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
‘திருமண ஆண்டு விழா’ கொண்டாட்டங்களுக்குத் தேவையான வாசகங்களை, “மணமக்களுக்காக” (பக்கம் 248) என்ற இதே பகுதியிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில், “26. இறைவனுக்கு நன்றி செலுத்த” (பக்கம் 650) என்ற பகுதியிலிருந்தும் தேர்ந்து கொள்ளலாம்.