திருவிருந்துப் பாடல்கள்

திருவிருந்துப் பாடல்கள்

01. அகவிருந்தாக என் இறைவா வா – மனம்

மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2)

1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு

ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே (2)

உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2 எமை

உமதுடலென நீ மாற வைத்தாய்

2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்

எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2)

உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி

உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

02. அன்பனே என்னுள்ளம் எழுந்திட வா

என் இயேசுவே என் ஜீவன் நீயல்லவா – 2

காலங்கள் மாறினும் கோலங்கள் மாறினும்

நம் சொந்தம் என்றென்றும் மாறாதய்யா – 2

1. வாழ்வில் இனிமை நீயல்லவா உன்

வாசல் தேடி வருகின்றேன் – 2

கலங்கரை தீபம் நீயல்லவா இருளை நீக்கும் ஒளியல்லவா

என் உயிரே உறவே என்னைத் தேற்றவா … அன்பனே

2. அன்பின் ஊற்றே நீயல்லவா உன்

ஆற்றல் எனைத் தாங்க விழைகின்றேன் – 2

ஆறுதல் சொல்லும் மொழியல்லவா

சிறகினில் அணைக்கும் தாயல்லவா

என் உயிரே உறவே எனைத் தேற்றவா …அன்பனே

03. அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே

1. தந்தை தாயும் சொந்தம் யாவும்

தொலை தூரம் போயினும்

அந்த நேரம் வந்து நீயும்

நொந்த என்னைத் தேற்றினாய்

அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே

2. நிலவும் மலரும் அலையும் புயலும்

தாங்கும் பொழுதேன் விழிக்கிறாய்

அன்பு மழையில் அமுத மொழியில்

அள்ளி அணைத்தேன் நடக்கிறாய்

அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே

04. அன்பனே விரைவில் வா – உன்

அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2)

1. பாவச் சுமையால் பதறுகிறேன்

பாதை அறியாது வருந்துகிறேன் (2)

பாதை காட்டிடும் உன்னையே நான்

பாதம் பணிந்து வேண்டுகிறேன்

2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்

அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)

வாழ்வின் உணவே உன்னையே நான்

வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்

3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்

இதயம் நொந்து அழுகிறேன் (2)

ஒளியாய் விளங்கும் உன்னையே நான்

வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்

05. அன்பில் விளைந்த அமுதமே

என்னில் மலர்ந்த தெய்வமே

உயிரில் கலந்த இராகமே

உறவில் எரியும் தீபமே – 2

தேவனே இறைவனே தேடிவந்த தெய்வமே

1. தனித்துச் செல்லும் வழிகளெல்லாம்

இறைவன் நீயே தோன்றினாய்

அணைத்துச் செல்லும் அன்னையாகி

அழைத்துச் சென்றாய் தெய்வமே

அன்பனே நண்பனே என்னை ஆளும் தெய்வமே

2. கல்லும் முள்ளும் காடும் மலையும்

கடந்து செல்லும் வேளையில்

சின்ன எனது இதயம் தனை நீ

சிறகில் அமர்த்த விரைகிறாய்

06. அன்பு இன்று உணவானது

பேரின்பம் என்றும் நமதானது – 2

தன்னையே தருகின்ற தெய்வமிங்கே

தரணி அன்பில் வாழுமிங்கே

1. அனைவரும் இதைவாங்கி உண்ணுங்கள்

ஏனெனில் இது அவர் சரீரம் – ஆ ஆ ஆ ஆ

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்

ஏனெனில் இது அவர் திரு இரத்தம்

அவரை உண்டால் என்றும் வாழ்வு

அவரை கண்டால் இல்லைத் தாழ்வு – 2

ஆமென் ஆமென் ஆமென் ஆமென் – அன்பு

2. உயிருள்ள உணவு இது என்றால்

ஈடுஇணை இனி இதற்குண்டோ – ஆ ஆ ஆ ஆ

உள்ளம் சோர்ந்து வீழ்ந்திட்டால்

ஊக்கம் தரும் அருமருந்தன்றோ

உயிரின் தேவன் உள்ளம் வந்தால்

வாழ்வில் கவலை இல்லையன்றோ – 2

ஆமென் ஆமென் ஆமென் ஆமென் – அன்பு

07. அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து

பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமஸ்காரம்

1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்

நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்

2. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே

மண்ணவர்கள் வாசமதில் வந்ததேனோ வானகமே

08. அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே

ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன் (2)

1. அகமென்னும் கோயிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் – 2

அன்பென்னும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்

2. வாழ்வென்னும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் – 2

தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்

09. அன்பே அன்பே உயர்ந்தது

அன்பே இறை அன்பே

ஆ ….ஆ ……ஆ …………..ஆ…………

அன்பே அன்பே உயர்ந்தது இறை அன்பே உலகில் சிறந்தது – 2

அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தன்னை தந்த

அவர் அன்பே உலகில் சிறந்தது – 2

அன்பே அன்பே உயர்ந்தது இறை அன்பே உலகில் சிறந்தது – 2

1. இறை அன்பில் வேரூன்றி நான் பிறர் அன்பில் செழித்தோங்கி

அவர் அன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி – 2

அன்பு பணி ஆற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் – 2

அவர் அன்பே அன்பே உயர்ந்தது

2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து

கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே – 2

அன்பு பணி ஆற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் – 2 

அவர் அன்பே அன்பே உயர்ந்தது

10. அன்னமும் பானமும் ஆகிய வடிவில்

அமைந்துள்ள தேவ நற்கருணை நாதா

1. இளைப்பையும் பசியையும் ஏக்கமும் தீர்ப்பாய்

தளர்ச்சியைப் போக்குவாய் தாகமும் தணிப்பாய்

அளவில்லா ஞான ஆனந்தம் விளைப்பாய்

வளர்ச்சியைத்தருவாய் வாழ்வினை அளிப்பாய்

2. உணவை நான் வேண்டினால் உணவும் நீயாவாய்

துணையை நான் வேண்டினால் துணையும் நீயாவாய்

உணர்வை நான் வேண்டினால் உணர்வும் நீயாவாய்

துணிவை யான் வேண்டினால் துணிவும் நீயாவாய்

3. அஞ்சி நான் பதைத்தால் அச்சம் நீ ஒழிப்பாய்

கெஞ்சி நான் கேட்டால் கேட்டது கொடுப்பாய்

நெஞ்சில் நான் வாடினால் நிவாரணம் செய்வாய்

தஞ்சம் நீ என்றால் தயவுடன் ஏற்பாய்

11. ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்

ஆனந்தம் ஆனந்தம் என் மனதில்

ஆண்டவா உனைப் பாட – 2

1. வான் முகிலும் உயர் மலையும் உந்தன் புகழ் பாட

தேன் பொழியும் நறு மலர்கள்

உந்தன் பெயர் பாட

வான் பொழியும் நீர்த்துளிகள்

உந்தன் அருள் பாட

யான் உனது திருப் புகழை

கவியால் தினம் பாட

ஆண்டவா உனைப் பாட – 2

2. பகல் ஒளியும் பால் நிலவும்

ஒளியாம் உனைப்பாட

அலை கடலும் அதன் சிறப்பும்

கருணையின் விதம் பாட

மழலைகளின் தேன் மொழிகள்

தூய்மையின் நிறம் பாட

யான் உனது திருப் புகழை

கவியால் தினம் பாட

ஆண்டவா உனைப் பாட – 2

12. ஆராதனை ஆராதனை இதய வேந்தே ஆராதனை

அப்பத்தின் வடிவே நெஞ்சத்தைத் திறக்கும்

ஆண்டவா உமக்கே ஆராதனை

1. நதிகள் கடலில் கலக்கும் நேரம்

அமைதி பிறக்கும் நேரம்

எங்கள் இதயம் உறவில் நிலைக்கும் நேரம்

உம்மில் நிலைக்கும் நேரம்

இயேசுவே உம்மை வணங்கும் நேரம்

எம்மனம் இறைமயமாகும்

வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் காதில் ஒலித்திடுமே

கருத்தில் நிலைத்திடுமே

 2. நீதி உறங்க உண்மை உறங்க

மனிதர் தவிக்கும் நேரம்

மண்ணில் பகைமை, போர்கள், போதை நோய்கள்

இருளைப் பரப்பும் நேரம்

இயேசுவே தேவனே இறங்கி வாரும்

நன்மைகள் ஓங்கிட வாரும்

வானமுதே வாழ்பவரே வாழ்வு தாரும் ஐயா

வலிமை தாரும் ஐயா

13. ஆனந்த மழையில் நானிலம் மகிழ

மன்னவன் எழுகின்றார் (2)

ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ

அவனியை மாற்றிடும் அருட்கடலோ (2)

1. மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றார்

விண்ணகமே என்னிதயம் அன்புடன் அழைக்கின்றார் (2)

இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே

பண்பாடவோ என்றும் கொண்டாடவோ

மலர்கின்ற புது வாழ்விலே இனி சுகமான புது இராகமே-2

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3

2. சேற்றினிலே தாமரையாய்த் தேர்ந்தென்னை எடுத்தாரே

காற்றினிலே நறுமணமாய்க் கலந்தெனில் நிறைந்தாரே

எனில் ஒன்றாகினார் நான் நன்றாகினேன்

பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்

மலர்கின்ற புது வாழ்விலே இனி சுகமான புது இராகமே-2

என்றென்றும் உண்டாகும் பேரின்பமே – 3

14. இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே

இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே

மனதில் தோன்றும் கவலைகள் மறையும் இறைவன் வரவிலே

1. உருகும் உள்ளம் மலர்ந்திடும் உயர் நற்கருணைப் பந்தியிலே

பெருகும் கண்ணீர் உலர்ந்திடும் இறைவன் கருணைக் கரத்திலே

2. பழைய வேத வனத்திலே பொழிந்த மன்னா மறையவே

புதிய வேத மாந்தரின் புனித மன்னா இறைவனே

15. இதய தாகம் இருப்பார் வருக

இதயம் குளிர ஈவேன் நிறைய

தாகம் இருப்பார் வருக குளிர ஈவேன் நிறைய

1. சுமந்து வந்திடும் சீலோத் தண்ணீர்

உமக்கு இருந்தும் உதவாத் தாகம் – 2

உவந்து ஊற்றும் ஊற்றுத் தண்ணீர்

உவமை யாவும் உரைப்பீர் உண்மை

2. பிறந்து வந்து பரனிடம் வந்தே

திறந்த உள்ளம் நிறைவு கொள்வீர் – 2

உடலின் தாகம் உலகம் அறியும்

உளத்தின் தாகம் எவரும் அறியார்

3. பொருளும் பொன்னும் போக்காத் தாகம்

இதயம் தேடும் இறைவன் நானே – 2

வருக வருக வளமாய் பெறுக

பெருகும் இன்பம் பெற்றே வாழ்க

16. இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா

என் உடலை உண்டு உயர மாட்டாயா

குருதி அருந்தி திருந்த மாட்டாயா (என்) 2

என்னைப்போல வாழ மாட்டாயா (நீ) 2

1. கன்னத்தில் அறைந்தால் கன்னத்தைக் காட்டச் சொன்னேன்

தீமை செய்தால் நன்மை செய்யச் சொன்னேன் (2)

இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் – 2

வெறும் வாத்தையல்ல வாழ்ந்தும் காட்டிவிட்டேன் – 2

2. பணிவிடை பெற அன்று பணியைச் செய்யச் சொன்னேன்

தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதியென்றேன் (2)

இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் – 2

உனை வாழச் செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன் – 2

17. இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா

என் இதயத்தில் எழுந்திட வா

என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு

காத்திடு என் தலைவா (2)

1. உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு

சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ (2)

மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா (2)

2. உருவில்லா இறைவன் உன் உதவியின்றி

உலகத்தில் எதுவும் நடந்திடுதோ (2)

குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா (2)

18. இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்

திரும்பிப் பார்க்க மாட்டேன் – 2

சிலுவையே முன்னால் உலகமே பின்னால்

இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே

1. அச்சமுமில்லை அதிர்ச்சியுமில்லை அடியேன் உள்ளத்திலே

ஆண்டவர் இயேசு அடைக்கலப் பாறை ஆதலின் குறையில்லை

ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால்

அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே

2. தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்

சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயனும் அவரன்றோ

ஆயனே முன்னால் அலகையே பின்னால்

அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியாலே

ஆறுதல் அடைந்தேனே

19. இயேசுவே என் உள்ளம் வாருமே

என் உள்ளத்தில் நீ வந்து தங்குமே

இயேசுவே என்னோடு பேசுமே இயேசுவே – 2 பேசுமே (2)

1. ஆசையாய் நான் காத்திருக்கின்றேன்

ஆண்டவர் இயேசு என்னில் வரவேண்டும் (2)

ஆண்டவர் இயேசு என்னில் வளர்ந்திட வேண்டும்

ஆண்டவர் இயேசு என்னை ஆட்கொள்ள வேண்டும்

2. நீ இல்லாமல் வாழ்ந்த போது வெறுமையாகினேன்

நீ என் வாழ்வில் கலந்த போது முழுமையாகினேன் (2)

நீ என்னோடும் நான் உன்னோடும் கலந்திட வேண்டும்

நாளும் நெஞ்சில் புதிய இராகம் மலர்ந்திட வேண்டும்

20. இயேசுவே என் நேசமே இதயம் வாருமே

உந்தன் விருந்தில் அமரும் எனக்கு உம்மைத் தாருமே

நீர் என்னில் வளர்ந்திடுமே (2)

1. பணிகள் புரிவேன் பகிர்ந்து தருவேன் உம்மைப் போலவே

இவ்வுலகம் வாழ்ந்திடவே (2)

உன்திரு உடலை நான் உண்ணும் வேளை

இன்பம் பொங்கிடுதே

என்னோடு இணைந்தாய் இன்னருள் பொழிந்தாய் – 2

அன்பு பெருகிடுதே உன் உயிரில் கலந்திடுதே

2. உலகப்பெருமை செல்வச் செழுமை எதுவும் நான் வேண்டேன்

நீயென்னில் இருப்பதனால் (2)

உன் திரு இரத்தம் பருகும் நேரம் வாழ்வு மலர்ந்திடுதே

என்னோடு இணைந்தாய் இன்னருள் பொழிந்தாய் – 2

அன்பு பெருகிடுதே உன் உயிரில் கலந்திடுதே

21. இறைவா உன் அன்பு நிறைவான அன்பு

உறவாக உணவாக வழங்கிய அன்பு 

தன்னிகர் இல்லா தலைவனின் அன்பு

மனிதத்தை புனிதமாய் மாற்றிடும் அன்பு

எல்லாம் இறைஅன்பே எதிலும் நிறைஅன்பே – 2

வாழ்வாக வழியாக ஒளியாக வந்த தெய்வமே –

என் வாழ்வாக வழியாக ஒளியாக வந்த தெய்வமே – இறைவா உன் அன்பு

1. பாலைநில பயணத்திலே வான்மன்னாவை பொழிந்த அன்பு- …2

பகலிலும் இரவிலுமே எந்த குறையின்றி காத்த அன்பு – 2

குறையின்றி காத்த அன்பு – எல்லாம் இறை அன்பே…..

2. தாய் வயிற்றில் தோன்றும் முன்னே என்னை கருவாக அறிந்த அன்பு – 2

சிறுபிள்ளை என்னையுமே இறைவாக்குரைக்க பணித்த அன்பு – 2

இறைவாக்குரைக்க பணித்த அன்பு – எல்லாம் இறை அன்பே

3. உலகோரை வாழவைக்கும் இயேசு நிலைவாழ்வை வழங்கும் அன்பு – 2

உயிர் மீண்டு; எழும்பச் செய்யும் இது ஒன்றேதான் பேரன்பு

ஒன்றேதான் பேரன்பு – எல்லாம் இறை அன்பே

22. இறை இயேசுவே எனை உனதாக்க வா

என் உயிரோடு உயிராக உறவாடவா – 2

உனைத் தேடி என் கண்கள் அலைபாயுதே

உயிர் உனக்காக என் நெஞ்சில் உருவாகுதே

ஒரு புதுராகமே சுபராகமே

1. அறியாத சிறுபிள்ளை எனை ஆள வா

என் உயிராக வா உயிர் மூச்சாக வா

பிரியாமல் மறையாமல் என்னோடு வா

என் நிழலாக வா எனை நீங்காமல் வா

உனைக் காணும் நேரம் போதும்

கரைந்தோடும் சோகம் யாவும்

இறையே உறவே நீ வா வா

2. நிதம் தோறும் நிறைவேறும் நிஜமாக வா

என் நினைவோடு வா என் கனவோடு வா

எனக்காக பல ஜென்மம் உயிர் வாழவா

என் உருவாக வா எனை உருவாக்க வா

நேசங்கள் என்னில் நீயே

பாசங்கள் தருவாயே

இறையே உறவே நீ வா வா

23. இன்றும் என்றும் திருநாளாம் நம் இயேசுவின் பாதத்திலே

அடியவர்க்கெல்லாம் பெருவிருந்தாம் அவர் ஆலயப் பீடத்திலே -2

1. மன்னவன் தந்த விருந்தாகும் அவர் மகனுக்குத் திருமணமாம்

மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம்

மாறாத பேரின்பமாம் அது மாறாத பேரின்பமாம்

மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம்

2. கொடியில் கிளைகள் சேர்ந்திருந்தால் அவை

கோடியாய் பலன் தருமாம்

இயேசுவில் நானும் இணைந்திருந்தால் என்றும்

இல்லாத பேரின்பமாம்

இல்லாத பேரின்பமாம் என்றும் இல்லாத பேரின்பமாம்

இயேசுவில் நானும் இணைந்திருந்தால்

என்றும் இல்லாத பேரின்பமாம்

24. உயிரோவியம் எனை உனதாக்க வா

என் உயிரோடு உயிராக உறவாட வா (2)

உனைத்தேடி என் கண்கள் அலைபாயுதே

உனக்காக என் நெஞ்சில் உருவாகுதே

ஒரு புதுராகமே சுகராகமே

1. அறியாத சிறுபிள்ளை எனையாள வா

என் உயிராக வா உயிர்மூச்சாக வா

பிரியாமல் மறையாமல் என்னோடு வா

என் நிழலாக வா எனை நீங்காமல் வா

உனைக்காணும் நேரம் போதும்

கரைந்தோடும் சோகம் யாவும்

உயிரே உறவே நீ வா வா

2. தினந்தோறும் நிறைவேறும் நிஜமாக வா

என் நினைவோடு வா என் கனவோடு வா

எனக்காகப் பல ஜென்மம் உயிர்வாழ வா

என் உறவாக வா எனை உனதாக்க வா

நேசங்கள் என்னில் நீயே பாசங்கள் தருவாயே

உயிரே உறவே நீ வா வா

25. உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்

உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே (2)

உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா (2)

1. உள்ளமெனும் கோயிலில் உறவென்னும் தீபமே

வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே (2)

அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா

ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா

உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா

அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே

துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே (2)

இறைவனே இயேசுவே இதயம் எழுந்தே வா

நாதனே நேசனே பாசமாய் நீ வா

உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா

அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

26. உறவை வளர்க்கும் விருந்தாக

பிறந்த வானின் அமுதே வா

1. செடியைப் பிரிந்த கொடியாக

மடிந்து அழிந்து போகாமல் (2)

இணைந்த கொடியாய் புவியினரை

அணைக்கும் இனிய விருந்தே வா

2. படர்ந்த இருளோ மறைந்துவிடும்

பருதி முகத்தைக் காண்பதனால்

பாவி வாழ்வு முழுமை பெறும்

தேவன் உமது வருகையினால்

3. அழியா வாழ்வு விருந்தில் வரும்

பலியால் விருந்தோ தொடர்ந்து வரும்

குருவால் பலியோ தினம் தொடரும்

அருளால் வாழ்வு வளர்ந்து வரும்

4. புலங்கள் காணா இறையவனைப்

புவியில் கொணர்ந்த விருந்தே வா

புனித வாழ்வை வளம் செய்யும்

இனிய விருந்தே எம்மில் வா

27. உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்

உலகாளும் தேவன் நெறி வாழும் இதயம் தெய்வம் தரிசனம்

மறை வழியில் வளரும் தெய்வங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்

நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் – 2

1. மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம்

சம தர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம்

உரிமைகள் காக்க உயிர்த்தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்

இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் – 2

2. அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம்

மெய்யாகி பொய்மையைப் பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம்

ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில் தெய்வம் தரிசனம்

தணலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் – 2

28. உன் மீட்பின் விலை என்னவென்று அறிவாயோ… ஓ… நெஞ்சமே – 2

அழிந்திடும் பொன்னும் வெள்ளியும் அல்ல

விலைமதிப்பில்லா இயேசுவின் திருஇரத்தமே

1. இறைசித்தம் நிறைவேற்ற இறைமகன் வந்தார்

இரக்கமே கொண்டு இரத்தம் சிந்தி மீட்டார்

சிலுவையில் தொங்கி நம் சிறுமைகள் களைந்தார்

சிரம்தாழ்த்தி பலியாக தன்னையே தந்தார்

என்அன்பர் இயேசுவே நான் நன்றி கூறுவேன் – உன் மீட்பின்

2. புதிய உடன்படிக்கை புவியில் இறைவன் செய்தார்

அதை உதிரம் சிந்தி இயேசு உறுதி செய்து தந்தார்

இதைவிட அன்பு இருக்குமோ எங்கும்

இறைமைந்தன் இயேசுவின் அன்பைப் போல

என் அன்பர் இயேசுவே நான் நன்றி கூறுவேன் – உன் மீட்பின்

29. உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக

என்னில் வா என் மன்னவா – 3

1. நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்

துணையாளன் நீயல்லவா (2)

எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக

இணைகின்ற என் மன்னவா (2) இணைகின்ற என் மன்னவா

2. நிலம் வாழ நீராகி மலர்வாழ ஒளியாகி

நலம் சேர்க்கும் என் மன்னவா (2) என்

உளமென்னும் மலர் வாழ அன்பென்னும் மணம் நல்கும்

இளந்தென்றல் நீயல்லவா (2) இளந்தென்றல் நீயல்லவா

30. உன்னைக் கண்டு உறவாட

உன்னை உண்டு உயிர்வாழ

ஏங்குகிறேன் இயேசுவே என்னைத் தாங்கிட வா நேசரே (2)

அழைத்தேன் இறைவா இதயம் வருவாய் -2

1. மாறாத பேரன்பு உன் கருணை அது

மலரச்செய்யும் என்னில் உன் திறனை (2)

வாராது வந்த அன்பே இயேசய்யா – உன்னைச்

சேராது வாழ்வு என்னில் ஏதைய்யா (2)

2. யாவர்க்கும் நிறைவாகும் சமாதானம் – அதை

வாழ்வோர்க்குப் பகிர்ந்தளிக்க வரவேணும் (2)

மேகங்கள் மீதமர்ந்து மீண்டும் வரும் – உந்தன்

வருகையின் மகிழ்வூட்டும் விருந்தருளும் (2)

31. உன்னோடு உறவாடும் நேரம்

என் பாடல் அரங்கேற்றம் ஆகும் (2)

எந்நாளும் என் வாழ்வில் நீ செய்த நன்மை

நாள்தோறும் நான் பாடும் கீதம் – 2

1. பலகோடி பாடல்கள் நான் பாட வேண்டும்

மனவீணை உனை வாழ்த்த வேண்டும்

ஒளிவீசும் தீபங்கள் நீயாக வேண்டும்

இமையோரம் நின்றாட வேண்டும் (2)

இதழோர ராகம் என் ஜீவ கானம்

அருள் தேடும் நெஞ்சம் உன் பாதம் தஞ்சம்

மனமே மனமே இறையோடு பேசு

2. கல்வாரி வாக்குகள் வாழ்வாக வேண்டும்

வாழ்வே உன் கவியாக வேண்டும்

அலைமோதும் எண்ணங்கள் நீயாக வேண்டும்

வினை தீர்க்கும் மருந்தாக வேண்டும் (2)

மணியோசை நாதம் நான் கேட்ட கானம்

வான் தந்த வேதம் தேனாகும் கோலம்

உயிரே உயிரே இறையோடு பேசு

32. உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்

உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும்

உன் அன்பில் நான் உறவாட வேண்டும் (2) உன்னோடு நான்

1. என் வாழ்விலே இது ஒரு பொன்னாள்

என் அகமதிலே நீ வரும் திருநாள் (2)

உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன் -2

மன்னவன் உனக்காய் என்னையே கொடுப்பேன்

2. பொருட் செல்வமே என் கடவுள் என்று

ஏழையின் பொருளை எனக்கெனப் பறித்தேன் (2)

மனம் மாறினேன் மகிழ்வடைந்தேன் நான் -2

பன்மடங்காக ஏழைக்குக் கொடுப்பேன்

3. என் பாவத்தை மன்னிக்க வருவாய்

என் உளமதிலே அமைதியைத் தருவாய் (2)

என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் -2

என் வீட்டிற்கு மீட்பினைத் தருவாய்

33. எத்துணை நன்று எத்துணை நன்று

அத்தனை பேரும் ஒன்றி வாழ்வது – 2

எத்துணை நன்று ஆ ஆ       ஆ

1. ஒரு கொடி கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று – அந்த

ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று

ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று – இன்று

ஒரே வித அழைப்பை நாம் பெற்றுக்கொண்டோம் எத்துணை நன்று

2. ஒரே விருந்தினிலே சேர்ந்து கொண்டோமே எத்துணை நன்று – இன்று

ஒரே அப்பத்தில் நாம் உணவுண்டோமே எத்துணை நன்று

ஒரே கிண்ணத்தில் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று – இன்று

ஒரே உடலாய் மாறி விட்டோமே எத்துணை நன்று

3. புதியதோர் உலகம் கண்டிடுவோமே எத்துணை நன்று – அதில்

புதியதோர் வாழ்வை அடைந்திடுவோமே எத்துணை நன்று

பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே எத்துணை நன்று – இன்று

இறைவனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே எத்துணை நன்று

34. என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது

என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது (2)

என் தவம் நான் செய்தேன் எந்நன்றி நான் சொல்வேன் -2

1. பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன்

பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் (2)

அருளமுதை ஈந்தார்

2. கருணையின் அமுதே பவித்திர அழகே காலமெல்லாம் வருவாய்

பெருமையின் வேந்தே பேரருட்சுடரே

பாசத்தினைப் பொழிவாய் (2) பாசத்தினைப் பொழிவாய்

3. அகிலமும் உமதே ஆற்றலும் உமதே ஆண்டவனே எழுவாய்

இகமதில் இனிமை பொழிந்திடும் இறைவா

இன்புறவே எழுவாய் (2) இன்புறவே எழுவாய்

35. என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா – 2

உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே

உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா

1. அணைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்

அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் (2)

ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ -2

என் இனிய அன்பே எழுந்து வா

2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு

தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு (2)

ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ -2

என் இனிய நண்பா எழுந்து வா

36. என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

இறைவா என் உள்ளம் வருவாய்

என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே

தலைவா நீ உன்னைத் தருவாய்

என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே

இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

நீதானே நீதானே இறைவா

என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

தருவாயே தருவாயே தலைவா

வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே (2)

வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2. எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

அறிவேனே அறிவேனே இறைவா

உனைப்போல நானும் பிறரன்பில் வளர

அருள்வாயே அருள்வாயே தலைவா

மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே (2)

நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்

37. என் தெய்வம் என்னோடு வாழும் தெய்வம்

எனை அழைக்கும் அன்பு தெய்வம் அவர் ஒருவரே என் தெய்வம்

இதோ வருகின்றேன் – 2 உம் அன்பில் வாழவே – 2

இதயம் தருகின்றேன் – 2 உன்னில் உதயம் காணவே – 2

1. தாயின் கருவில் என்னை தேர்ந்தெடுத்து

தாயாய் என்றும் என்னை வளர்த்து வந்து

கண்ணின் மணிபோல காத்து நின்று

கருணை பொழிந்து என்னை வாழ வைத்தாய்

உந்தன் கையில் எந்தன் பெயர் எழுதி

நெஞ்சில் வைத்து என்னை நடத்தும் தெய்வம்

கலங்கிடாதே திகைத்திடாதே – 2

என்றென்னை நாளும் கேட்கும்

எந்தன் தெய்வம் நம் அன்புத் தெய்வம் என்றும் அன்புத் தெய்வம்

2. வாழ்வில் போராடி வீழ்ந்தாலும்

வருத்தம் நோய் நொடிகள் சூழ்ந்தாலும்

கோபதாபங்கள் வதைத்தாலும்

கோட்டை அரணாக காக்கும் தெய்வம்

சொந்தம் சுற்றம் எல்லாம் அவர் அன்பிலே

பந்தம் பாசம் நிதம் நிறைவு தரும்

பயப்படாதே சோர்ந்திடாதே – 2

என்றென்னை நாளும் கேட்கும்

எந்தன் தெய்வம் நம் அன்புத் தெய்வம் என்றும் உண்மைத் தெய்வம்

38. என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

எல்லாமும் நீயாக வேண்டும் – எந்தன்

எல்லாமும் நீயாக வேண்டும் (2)

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது

தாயாக நீ மாற வேண்டும் (அன்புத்) – 2

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது

பாதங்கள் நீயாக வேண்டும் (எந்தன்) – 2

பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது

ஓடங்கள் நீயாக வேண்டும் (வரும்) – 2

2. போராட்டம் சூழ்ந்தென்னைத் தீவாக்கும் போது

பாலங்கள் நீயாக வேண்டும் (இணை) 2

தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்

பாடங்கள் நீயாக வேண்டும் (மறைப்) – 2

39. என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே – 2

எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே

1. மலரைப்போல் எந்தன் மனதினை தினம்

திறந்து காத்திருந்தேன் (2)

காலைப்பொழுதாக எழும் கதிரே எனக்காக

எழுந்து மலர்ந்து இதயம் திறந்து வல்ல தேவன்

என்னில் எழுந்தார்

2. நிலவைப்போல் எந்தன் மனதினில் நீர்

ஒளிரக் காத்திருந்தேன் (2)

மாலைப்பொழுதாக எழும் மதியே எனக்காக

இதயமதிலே உதயமாவாய் புதிய வாழ்வினையே தருவாய்

40. என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன் எழுந்து வருகின்றார்

எண்ணில்லா அருளை அன்புடனே தலைவன் தருகின்றார் – 2 (2)

1. உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே

இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுமே -2

பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே – அந்த

முகிலும் இருளும் கறையும் தீர முழுமை தோன்றுமே

2. என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே

என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் -2

என்று பகர்ந்த இறைவா எம்மை இணைக்க வாருமே – உந்தன்

அன்பு விருந்தை நாளும் அருந்தி அமைதி காணுமே

41. என்னில் நீ வாழவா என்னுள் நீ உறையவா

என்றும் எந்தன் நீங்காத நினைவாக வா

இயேசுவே உன்னோடு நான் வாழவா

1. தடுமாறும் வேளை தாயாக வேண்டும்

தடம்மாறும் வேளை துணையாக வேண்டும்

மனம் வாடும் வேளை நண்பன் நீ வேண்டும்

மனதோடு உறவாட நீ வேண்டுமே

2. போராடும் நெஞ்சில் துணிவாக வேண்டும்

சுமைதாங்கும் வேளை சுகமாக வேண்டும்

பகை சூழும் நிலையில் அன்பாக வேண்டும்

அன்பினால் உலகத்தை வென்றிட வேண்டும்

42. எனில் வாரும் என் இயேசுவே

என்றும் என்னோடு உறவாடவே

நீரின்றி ஒன்றில்லையே – இங்கு

நீர்தானே என் எல்லையே

1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே

உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே

என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே

என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே

தேவா எழுந்து வா தேடும் அமைதி தா – 2

உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

2. பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே

வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே

சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே

நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே

தேவா எழுந்து வா தேடும் அமைதி தா – 2

உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

43. ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே

என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே

அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்

வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே

நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ (2)

பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே

தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்

உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்

கண்ணீர் வடிக்கின்றேன் (2)

சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே

உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்

44. ஏழை மனம் அழைக்கின்றது

இயேசுவே நீ வரவேண்டும்

நான் கலங்கும் வேளையிலும்

நீ துணையாக வேண்டும்

இயேசுவே உன் கரம் தாங்க வேண்டும்

1. உன் வழி தொடரும் என் கால்கள்

உறுதியாய் நடந்திட ஒளி தாராய்

உணவினில் கலந்திடுவாய்

மனம் எனும் கோவிலில் – 2

எரிந்திடும் தீபங்கள் இயேசுவே நீயாவாய்

நீ என்னில் எழுந்திடும் நேரமிது

நான் என்னை மறந்திடும் காலமிது

2. நீயின்றி எனக்கோர் உறுதியில்லை

உன் துணையின்றி எனக்கோர் கதியுமில்லை

உயிராய் எழுந்திடுவாய்

நான் தினம் வளர

அகமதில் நிறைந்திடுவாய்

அமைதியின் பாதையில் நடந்திடவே

அடைக்கலமாகும் ஆண்டவரே

45. ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்

ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்

ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம்

அந்த இயேசுவை உணவாய் உண்போம்

இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் (2)

1. இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே

இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம்

இறுதியில் வெல்லுமே (2)

வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே (2)

நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம் -2

நாளைய உலகின் விடியலாகவே

2. பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே

புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே

புனிதமாய் நிலைத்ததே (2)

இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும்

இறையன்பின் சாட்சிகளே (2)

இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் -2

இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

46. ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே

ஒளியாம் இறையே வாராய் (2)

1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2

உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா

ஒளியே எழிலே வருக – 2

2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2

உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால்

ஒளியே எழிலே வருக – 2

அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் -2

குறையை நீக்கும் நிமலா நிறையை வளர்க்க வா வா…

ஒளியே எழிலே வருக – 2

47. கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்

அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் (2)

1. குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை -2

நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை -2

ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் -2

2. காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை -2

நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும்

உள்ளம் ஏனோ உணர்வதில்லை (2)

தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் – 2

48. களங்கமில்லா ஒளியே என்னில்

கலந்திட வரும் வளியே

கரைசேர்ந்திட வரும் இறையே

களங்கமில்லா ஒளியே

1. இறைகுலம் போற்றும் இணையில் வேந்தே

இறைஞ்சுகிறோம் வருக

நிறைவுறும் மகிழ்வே நிலைக்களன் அன்பே

நிம்மதியே வருக

மறைந்தெழும் உணவே மாண்புறும் உறவே

மனமகிழ்ந்தே வருக.

2. திருவிலும் திருவே தேனிலும் சுவையே

திருவிருந்தே வருக

கருணையின் வடிவே காத்திடும் அருளே

கனியமுதே வருக

இருளினைக் காய்ந்து எழும்கதிர்போல

என்னுள்ளமே வருக.

49. குறையாத அன்பு கடல் போல வந்து

நிறைவாக என்னில் அலை மோதுதே – அந்த

அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

பலகோடி கீதம் உருவாகுதே

1. கண்மூடி இரவில் நான் தூங்கும்போது

கண்ணான இயேசு என்னைக் காக்கின்றார் (2) – உன்னை

எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

மண்மீது வாழ வழிசெய்கிறார் ஆ… (நான்) -2

2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

தொடர்கின்ற இரவின் முடிவாகுமே (2) – மண்ணில்

துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ…(கண்ணீர்) – 2

50. கொண்டாடுவோம் திருவிருந்து

நம்மை ஒன்றாக்கும் ஒற்றுமை விருந்து-2

நம் தேவ தந்தை தனயன் ஆவி

ஒன்றாக இருப்பதுபோல் இணைந்து

1. வானகத் தந்தை தரும் வாஞ்சையின் விருந்து இது

நம் மீட்பினைப் புதுப்பிக்குமே ஆவியில் உயிர்ப்பிக்குமே-2

நம் தந்தை அவரே உரிமை மைந்தர் நாம்

எல்லோரும் சோதரரென்றாகுவோம் 

2. புலர்ந்திடும் புது உலகின் நலந்தரும் விருந்து இது

நம் பார்வையை விரிவாக்கும் பாதையைத் தெளிவாக்கும்-2

நாம் யாவரும் இயேசுவின் சொந்தங்களே

அவருடலில் நாம் அங்கங்களே   

3. சுரங்களின் சங்கமமே சுந்தர இசையாகும்-நம்

கரங்களின் சங்கமமே அன்பின் பிறப்பாகும்-2

அந்த வரந்தரும் இயேசுவின் பந்தியிலே

வாருங்களே ஒன்று சேருங்களே   

51. சுமைசுமந்து சோர்ந்திருப்போரே

வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்

இளைப்பாற்றி கொடுக்கின்றார்

1. இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய்

இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

2. வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய்

வந்தவர் இருக்கின்றார் விரைந்திட தாமதமேன்

3. துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய்

அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்

52. செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி – நான்

பாடிடுவேன் இறைவா என் சிந்தனையில் நீ இருந்து வாழ

எழுந்தருள்வாய் தலைவா என்னில் எழுந்தருள்வாய் தலைவா

1. உன் உடல் உயிர்த்ததுன் வல்லமையால்

உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால் (2)

என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே -2

இறைமகனே இன்று எழுந்தருள்வாய் -2

2. உன்னுயிர்த் தியாகம் புரிந்ததனால்

மண்ணுயிர் தினமும் மகிழ்கின்றது (2)

என்னுயிர் மெழுகாய்க் கரைவதனால் -2

என்னுயிர் காத்திட எழுந்தருள்வாய் -2

53. செம்மறியின் விருந்துக்கு

அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்

அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க (2)

1. இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத்

தடையென்ன உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன (2)

உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்

உவகை என்னும் ஒளி கொணர்ந்து என்னை ஆளுவாய்

2. வானம் பொழிய பூமி விளையும் வளமும் பொங்குமே

வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே (2)

எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே

உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

54. தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா

பிள்ளைகள் கூடி வந்தோம்

எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்

பிள்ளைகளாகினின்றோம்

இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்

எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

1. எங்களுக்கு தீமை செய்தோரை மன்னிக்கும் மனம் வளர்ப்போம்

அன்புடன் அரவணைப்போம்

அனுதினஉணவை எங்களுக்கு என்றும்

உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும் – இங்கு வாரும்

2. உன்னதத்தில் உம்மகிமை ஆள்வதுபோல் எங்கும் எங்குமே எங்கிலும்

உம் அரசே எம் நிறைவாய் இவ்வுலகில் காணும் நாள் வருக

வல்லவரே தலைவா சன்னிதி சரண் அடைவோம்

நல்லவரே இறைவா வாழ்வுதந்திடுவீர்

வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம்தருவீர்

பிள்ளைகள் கூடி வந்தோம்

55. தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ

தனது பிள்ளை அவள் மறப்பாளோ

தாய் மறந்தாலும் நான் மறவேனே

தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே

1. குன்றுகூட அசைந்து போகலாம்

குகைகள்கூட பெயர்ந்து போகலாம்

அன்புகொண்ட என்தன் நெஞ்சமே

அசைவதில்லை பெயர்வதில்லையே

2. தீ நடுவே நீ நடந்தாலும்

ஆழ் கடலைத் தான் கடந்தாலும்

தீமை எதுவும் நிகழ்வதில்லையே

தீதின்றியே காத்திடுவேன் நான்

3. கழுகு சிறகில் குஞ்சை அமர்த்தியே

கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே

கழுகைப்போல தான் உனைத்தானே

காலமெல்லாம் சுமந்து செல்வேனே

4. உன்னை அன்று மீட்டதும் நாமே

உரிய பெயரில் அழைத்ததும் நாமே

என்னைக் கண்டு வந்ததனாலே

என்றும் நீயே எனக்குச் சொந்தமே

56. தாய்போல எனைக்காக்கும் என் தெய்வமே – உன்

துணையின்றி என் வாழ்வு வீணாகுமே (2)

நீயில்லையேல் நானில்லையே 2 உன்

உறவில்லையேல் வாழ்வில்லையே

1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்

உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ஆ.. (2)

அன்பானவா அருளானவா -2

துயர் நீக்கி துணையாக நீர் வாருமே -2

2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்துத் தவித்தாலும்

உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ஆ.. (2)

ஒளியானவா உயிரானவா – 2

உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே – 2

57. தியாகத் தருவே திருவிருந்தே

தினம் தினம் நாவில் வரும் அமுதே 

தியாகத் தருவே திருவிருந்தே – 2

1. உண்டு மகிழ்வோர் உயிர் பிழையார்

உம்மை உண்போர் உயிர் பெறுவார் – 2

உள்ளத்தில் கோயில் கொண்டிட வா

உயிருடன் ஒன்றாய்க் கலந்திட வா

2. அறுந்திட்ட கம்பி இசை தருமோ

முறிந்திட்ட கிளையோ வளர்ந்திடுமோ – 2

ஏழையென் வாழ்வு வளம் பெறவே

என்றும் உம்முடன் இணைந்திடவே.

3. கனத்த இதயம் கரைந்திட வா

கனிந்த அன்பு ஓங்கிட வா – 2

வாழ்வெல்லாம் அன்பு வழிந்திட வா

வருக அன்பே வரம் பொழிவாய்

58. தீபமே எழுந்து வா என் தெய்வமே

என்னில் வா – தெய்வமே எழுந்து வா

1. எரி திரியாய் எழுந்து நின்றேன்

எதிர் வினையால் அணைந்து வீழ்ந்தேன்

உன்னை ஏற்றி எனை எரிக்க

அணையா விளக்கே அகத்தில் வா

2. பிறக்கும் முன்னால் இருளில் கிடந்தேன்

பிறந்த பின்னும் இருளின் நின்றேன்

இறக்கும் நேரம் தொலைவில் இல்லை

எரியும் விளக்கே விரைவில் வா

3. உண்மை வழி நீயே என்றாய்

உனைத் தொடர எனைப் பணித்தாய்

உன்னொளியின்றி எவ்வழி செல்வேன்

உலகின் ஒளியே எழுந்து வா

59. தேடும் அன்புத் தெய்வம் என்னைத் தேடி வந்த நேரம்

கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும்

வாடும் நிலைகள் மாறும்

இந்த வான தேவன் தந்த வாழ்வுப் பாதை

எந்தன் வாழும் காலம் போகும் (2)

1. வார்த்தையாக நின்ற இறைவன் இந்த

வாழ்வைத் தேர்ந்த தலைவன் (2)

பாரில் எங்கும் புதுப் பார்வை தந்து

அந்தப் பாதையில் அழைத்த அறிஞன் (2)

காலம் கடந்த கலைஞன் என் தலைவன் – இந்த வான….

2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய

எங்கும் மனித மாண்பு நிறைய (2)

புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழிவகுத்து

புதுமை செய்த பெரும் புனிதன் (2)

வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன் – இந்த வான….

60. தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா

தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா (2)

உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை

உன் புகழ் பாடவே பொங்கி எழும் வல்லமை

மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை

1. நான் எந்தன் வேலியாக என்னலம் கொண்டேன்

நீ பூமி எங்கும் வாழும் தென்றலாகினாய் (2)

உன் ஒளி காண காண உள்ளம் மலர வேண்டுமே

உன் வழிப் போகப் போக உறவு பெருக வேண்டுமே (2)

இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே – தேவா…

2. நான் சிறுகணம் எரியும் ஒளித்துகளானேன்

நீ அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் (2)

உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே

தன் தலை தியாகம் ஏற்கும் தீப வாழ்க்கை போலவே (2)

இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே – தேவா…

61. நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் – (2)

1. எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் ஆ…

என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடான்

2. அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் ஆ…

என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்

3. மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் ஆ…

எங்கள் மன்னன் உன்னை உண்ணும் எவரும் மடிவதேயில்லை

62. நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே

நீ எனதாகும் பொழுதில் – உன்

எண்ணங்கள் எனை மாற்றுமே

உன் அருள் போதுமே

1. தனிமையில் கூடத் தனி சுகமே – என்

தலைவன் உனது உடனிருப்பால்

சுமைகள் கூட சுகம் தருமே – உன்

இமைகள் என்னை அரவணைத்தால்

படைப்பினில் ஒளிர்வது உன் முகமே – இது

பரமனே உந்தன் அதிசயமே

2. இடர்கள் கூட இனிக்கின்றதே – என்

இனியவன் என்னில் இயங்குவதால்

தடைகளில் மனம் மகிழ்கின்றதே – என்

தாயாய் உன் கரம் தேற்றுவதால்

நினைவிலும் நீங்காது உன் முகமே – இறை

நேசமே உந்தன் அதிசயமே

63. நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்

நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)

1. வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் (2)

செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2

அவர் பாதம் வந்து சேரும்.

2. குருதி சிந்தும் நெஞ்சம் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் -2

அவர் பாதம் வந்து சேரும்.

64. பாட்டு நான் பாடக் கேட்டு

என் பாடல் நாயகா விருந்தாக வா வா

உன் அன்பில் நான் என்றும் ஒன்றாக வேண்டும்

உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும் (2)

1. இராகங்கள் இல்லாத வாழ்வென்னும் வீணையில்

கானங்கள் அரங்கேறும் உன் வரவால் – இறைவா

சோகங்கள் மறைந்தோடும் உன் உறவால்

இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில் – 2

அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா

அதை நாளும் அணையாமல் நான் காக்க வா

2. மாதங்கள் பன்னிரெண்டும் தேவா உன் திருவாசல்

மானிடரின் வரவுக்காய் காத்திருக்கும்

தினம் மாறாத அன்புக்காய் பூத்திருக்கும்

நீ வாழும் கோயில் தான் ஏழை என் உள்ளம் -2

உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே

உனை விட்டுப் பிரிந்தாலே அருளில்லையே

65. பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

என் உள்ளம் உள்ளொளி பெற வேண்டும்  – புது

1. வாழ்வின் தடைகளை தாண்டி எழும் – புதுப்

பார்வை பெற வேண்டும்

நாளும் பிறக்கும் உன் வழியைக் காணும்

பார்வை தர வேண்டும்

உன்னாலே எல்லாமே ஆகும் நிலை வேண்டும்

பார்வை பெற வேண்டும்

2. நீதி நேர்மை உணர்வுகளை – நான்

பார்க்கும் வரம் வேண்டும்

உண்மை அன்பு உயர்ந்திடவே

உழைக்கும் உறுதி தர வேண்டும்

எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

66. யாரிடம் செல்வோம் இறைவா

வாழ்வுதரும் வார்த்தையெல்லாம்

உம்மிடம் அன்றோ உள்ளன

யாரிடம் செல்வோம் இறைவா?

1. அலைமோதும் உலகினிலே

ஆறுதல் நீ தர வேண்டும் – 2

அண்டி வந்தோம் அடைக்கலம் நீ

ஆதரித்தே அரவணைப்பாய் – 2

2. மனதினிலே போராட்டம்

மனிதனையே வாட்டுதையா – 2

குணமதிலே மாறாட்டம்

குவலயம்தான் இணைவதெப்போ – 2

3. வேரறுந்த மரங்களிலே

விளைந்திருக்கும் மலர்களைப்போல் – 2

உலகிருக்கும் நிலைகண்டும் – 2

உமது மனம் இரங்காதோ – 2

67. வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்-3

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார்-2

அன்பும் அருளும் பொழிகின்றார் -2

என்னை முழுவதும் ஆள்கின்றார்

1. உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே -2

யாழும் இசையும் போலவே -2 வாழும் இறையில் ஒன்றிப்போம்

2. கிறிஸ்து நம்மில் வளரவே நாமே தேய்ந்து மறையவே -2

கிறிஸ்து நம்மில் வாழவே -2 நமக்கு பயமே இல்லையே

68. வாழ்வில் இனிமை வழங்கும் கனியே

வளமாய் எம்மில் தவழ்க

1. இயற்கை சுமந்த கனி செய்வினையாம்

இருளின் துயரம் விலக

இறைவன் உவந்து வழங்கும் கனியாய்

அருளைப் பொழிந்தே வருக

2. தூய்மை அமுதம் துளிக்கும் மலராய்

துலங்கும் இறைவா வருக

தேய்வு தொடரா புதுமை நிலவாய்

திகழும் வாழ்வைத் தருக

3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து

புதிய இதயம் பெறவே

புனிதர் சுவைக்கும் இனிய விருந்தால்

கனிவாய் எழுந்தே வருக

69. வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே

வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே (2)

1. ஏனோ இந்த பாசமே ஏழை என்னிடமே – 2

எண்ணில்லாத பாவமே புரிந்த பாவிமேல்

2. உலகம் யாவும் வெறுமையே உமையாம் பெறும் போது (2)

உறவு என்று இல்லையே – உன் உறவு வந்ததால்

70. வானக அப்பமே வரவேண்டும்

இவ்வையக உணவே வரவேண்டும்

விண்ணக உணவைத் தரவேண்டும் நான்

உன்னுடன் வாழும் வரம் வேண்டும்

1. உள்ளத்தில் உனக்குக் கோயில் செய்தேன் அதில்

உயர்ந்த கோபுரம் கட்டி வைத்தேன் (2)

அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தேன் -2 அங்கு

வாழ்ந்திட மன்னவா வரவேண்டும் – 3

2. பொன்னும் பொருளும் நிலமெல்லாம் பெரும்

பெயரும் சீரும் சிறப்பெல்லாம் (2)

உன்னோடு உறவு இல்லையெனில் -2 அதைப்

பெற்றாலும் எனக்கு பயன் என்ன – 3

71. ஜீவன் தேடும் தெய்வம் என் நெஞ்சில் வரும் நேரம்

என் உள்ளம் எங்கும் பூப்பூக்குதே

புது சந்தோஷங்கள் எனில் தோன்றுதே

வாரும் தேவா வாரும் புதுவாழ்வு என்னில் தாரும்

உன் ஆசீர் பொங்க நான் வாழுவேன்

1. எனைத் தேற்றும் உன் வார்த்தை உயிரானது – நான்

உனக்காக உயிர் வாழ உரமாகுது

எனையாளும் நினைவெல்லாம் நீயல்லவா – நிதம்

துணையாகும் என் வாழ்வின் வரமல்லவா

2. எனைத் தாங்கும் உன் அன்பு மாறாதது – அது

என் வாழ்வின் செல்வத்துள் மேலானது

என் சொந்தம் இனி என்றும் நீயல்லவா    – நிதம்

என் வாழ்வின் பொருள் தேடும் உறவல்லவா

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy