திருமண ஐம்பதாம் வருட யூபிலி

பழைய ஏற்பாட்டில் “ஏழு ஆண்டு வாரங்களுக்குப் பிறகு” அதாவது நாற்பத்து ஒன்பது வருடங்களுக்குப் பின்வரும் ஐம்பதாவது ஆண்டை, உழைப்பும், கஷ்டமும், துன்பங்களும் இல்லாத இளைப்பாற்றியின் ஆண்டாகவும், தூய்மை, பாவமன்னிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் ஆண்டாகவும் கொண்டாடும்படி தந்தையாம் இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளையிட்டார். (லேவி 20ஆம் அதிகாரம்) இதுவே யூபிலி ஆண்டுகளின் தொடக்கமாகவும் அடிப்படையாகவும் அமைந்தது.

பல்வேறு பிரச்சினைகள், கவலைகள், துயரங்களும் நிறைந்த திருமண வாழ்விலும், திருமண தம்பதியினர் தங்கள் திருமணத்தின் 50 ஆம் ஆண்டை இளைப்பாற்றி தூய்மை, பாவமன்னிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் ஆண்டாகக் கொண்டாடுவது உண்மையாகவே ஒரு சிறந்த பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது. இந்த யூபிலி ஆண்டில் தந்தையாம் இறைவன் திருமணத் தம்பதியினருக்கு சிறப்பான ஆசீர்வாதங்களை அவர்களுடைய குழந்தைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஆசீர்வதித்து தம்பதியினரின் எஞ்சிய வாழ்நாளை சமாதானத்திலும் தூய்மையிலும் செலவிட அவர்களுக்குத் தேவையான அருள் ஆசீர்வாதங்களை தந்தருளுகின்றார்.

எனவே உலகத் தன்மையான கொண்டாட்டங்களுக்கு முன்பாக, இந்த தேவ அருள் ஆசீர்வாதங்களைப் பெறும் நோக்கம் யூபிலியோடு தொடர்புள்ள திருமண தம்பதியருக்கு இருக்க வேண்டும். அவர்கள் கடவுளில் நம்பிக்கை கொண்டு, அவர் தருகிற பாவமன்னிப்பிலும் சமாதானத்திலும் தங்கள் இளைப்பாற்றியையும் மகிழ்ச்சியையும் கண்டடைய வேண்டும்.

திருமண யூபிலி மந்திரித்தல்

திருமணத் தம்பதியருக்கு அறிவுரை

கடவுளின் திருப்பீடத்திற்கு முன்பாக நீங்கள் திருமண வார்த்தைப்பாடு தந்த நாளில் இருந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு மிக அநேக காரியங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கடவுள் தரும் மகிழ்ச்சியில் உங்கள் முழுமையான பங்கை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். ஆயினும் துன்ப துயரங்களையும் நீங்கள் சுவைத்திருக்கலாம். ஒளி பொருந்திய பிரகாசமுள்ள நாட்களைப் போலவே, இருள் சூழ்ந்த நாட்களும் உங்கள் திருமண வாழ்வில் இருந்திருக்கலாம். இப்போது கடவுளின் இறை பராமரிப்பில் ஒரு மிக விசேஷமான சலுகை உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் குழந்தைகள், உங்கள் பேரக் குழந்தைகள்,   உங்கள் நண்பர்கள் என உங்களை நேசிப்பவர்களால் சூழப்பட்டு, உங்கள் திருமண நாளில் 50ஆம் ஆண்டு நிறைவு யூபிலியை நீங்கள் கொண்டாடுவதே அந்தச் சலுகை.

நன்றியால் நிரம்பிய இதயங்களோடு, கடவுள் உங்களுக்கு செய்த அநேக நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்தவும், அவருடைய திருமுன்னிலையில் நீண்ட காலத்திற்கு முன் நீங்கள் செய்த நல்ல வார்த்தைப்பாடுகளை புதுப்பிக்கவும், உங்களுக்கு எஞ்சியிருக்கும் ஆண்டுகளின் மீது திருச்சபையின் ஆசீரைப் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் இன்று ஆலயத்திற்கு வந்து இருக்கிறீர்கள்.

நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்த மிக உண்மையாகவே நல்ல காரணம் இருக்கின்றது. அவர் உங்கள் மீது தமது ஆசீர்வாதங்களை பொழிந்துள்ளது மட்டுமின்றி அவரது தந்தைக்குரிய திருக்கரம் அடிக்கடி உங்களைத் தீமையிலிருந்தும் பாதுகாத்து வந்துள்ளது. இருள் மற்றும் அதைரியம் ஆகியவற்றை ஆகியவை உங்களை சூழ்ந்து கொண்ட நேரங்களில் அவரது இரக்கத்தினால்தான் நீங்கள் அவநம்பிக்கையிலிருந்து பாதுகாக்கப்பட்டு, நிலையாய் இருப்பதற்கு வேண்டிய தைரியத்தையும் பெற்றுக்கொண்டீர்கள். உங்களுக்கு ஆறுதல் தரவும், வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுக்கு ஆதரித்து தாங்கிக் கொள்ளவும், அவர் உங்களுக்கு குழந்தைகளை தந்திருக்கிறார். ஆயினும் நீங்கள் கடவுளுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பதற்கான காரணங்களை இனியும் நான் பட்டியலிட்டு காட்ட அவசியமில்லை என்பதை நான் உறுதியாக உணர்கின்றேன். அவற்றை நீங்களே நன்கு அறிந்திருப்பீர்கள். அதுவும் இது போன்ற ஒரு நாளில் அவற்றை நீங்கள் நன்கு உணர்ந்து இருப்பீர்கள். இந்த நன்றியறிதலுக்கான காரணங்கள் உங்கள் நினைவில் ஆழமாகப் பதிந்து இருக்க வேண்டும். உங்கள் இதயங்கள் அந்த நினைவுகளை தங்களுக்குள் பொதிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆகவே கடவுளுக்கு பிரமாணிக்கமாக நிலைத்திருப்பதும் எஞ்சியிருக்கும் காலத்தில் எஞ்சியிருக்கும் உங்கள் பலத்தை கொண்டு அவருக்கு ஊழியம் செய்வதும் உங்கள் கடமையாக இருக்கின்றது. நீங்கள் பகல் பொழுதின் வெப்பத்தையும் சுமைகளையும் வீரத்தோடு தங்கியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புகளைக் கொண்டு நீங்கள் சம்பாதித்திருக்கும் நித்திய இளைப்பாற்றியை இப்போது இழந்துவிடாதீர்கள். இந்த ஐம்பது வருடங்களில் நீங்கள் பெற்றுள்ள அனுபவத்தை உங்கள் நன்மைக்காக மட்டுமன்றி மற்றவர்களின் நன்மைக்காகவும் பயன்படுத்துவதன் மூலம் அந்த அனுபவத்தை உங்களுக்கு ஆதாயமாக ஆக்கிக் கொள்ளுங்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சியை இன்று மிக அடிக்கடி சேதப்படுத்தும் ஆழமற்ற நீர்ப்பரப்புகள், புதை மணல்கள் ஆகியவற்றை எப்படி தவிர்ப்பது என்று உங்களை சுற்றி இருக்கும் இளைய தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுங்கள். குறிப்பாக கத்தோலிக்க பயிற்சி மற்றும் கல்வியின் வழியாக அவர்கள் தங்கள் குழந்தைகளின் மிகச் சிறந்த நன்மைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

சில சமயங்களில் முதுமையின் ஆண்டுகளோடு இணைந்தே வருகிற பலவீனம் மற்றும் தவறுதல்கள் ஆகியவற்றில் இன்னும் கூட நீங்கள் ஒருவரை ஒருவர் பொறுமையோடு சகித்துக் கொள்ளுங்கள். சமாதானம், சாந்தம் ஆகியவற்றின் சூழல் ஒன்று உங்களை அதிகதிகமாகச் சூழ்ந்து கொள்வதாக. உங்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ ஒரு நோயை அனுப்புவது கடவுளின் சித்தமாக இருந்தால் முறையிடாதீர்கள். மாறாக, உங்கள் துன்பங்களை நம் மீட்பரின் துன்பங்களோடு ஒன்றித்து, அவர் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் சொல்லி வந்தது போல, என் விருப்பமல்ல, உம் திருவுளமே நிறைவேறக் கடவது என்று அடிக்கடி சொல்லுங்கள்.  இம்முறையில் உங்கள் வாழ்வுகள் நித்தியத்தில் உள்ள நிலையான ஆதாயத்திற்காக தங்கள் முதிர்ச்சியின் கனிகளைப் பிறப்பிக்கும்.

இப்போது இந்த மகிழ்ச்சி மிக்க பெற்றோரின் குழந்தைகளும் பேரக் குழந்தைகளுமான உங்களிடம் நான் பேசுகின்றேன்:  கடவுளின் திருவுளத்தால் யார் வழியாக உங்கள் இருத்தலை பெற்றுக்கொண்டீர்களோ, அந்த உங்கள் பெற்றோரின் வாழ்வுகளை ஒளியும் மகிழ்ச்சியும் நிரம்பியவையாக ஆக்கும் பொறுப்பை நான் உங்கள் மீது சுமத்துகிறேன். அவர்களது ஒவ்வொரு விருப்பத்தையும் முன்கூட்டியே எதிர்பார்த்து காத்திருங்கள். அவர்களுக்குத் துயரமோ வேதனையோ தரக்கூடிய எந்த காரியத்தையும் தவிர்த்து விடுங்கள். தாங்கள் எடுத்த முயற்சிகளும் கஷ்டங்களும் வீணாகி விடவில்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக நீங்கள் நல்ல கிறிஸ்தவ வாழ்வு நடத்துகிறார்கள் என்பதை அறியும் அனைத்திலும் பெரிய ஆறுதலை அவர்களுக்குக் கொடுங்கள். இதை செய்வதன் மூலம் தங்கள் பெற்றோர் மட்டில் நல்லவர்களாக நடந்து கொள்பவர்களுக்குக் கடவுளால் வாக்களிக்கப்பட்டுள்ள சிறப்பான ஆசீரை நீங்கள் சம்பாதித்துக் கொள்வீர்கள்.

சமாதானம் அன்பின் தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. அந்த  ஆசிர்வாதம் தங்கள் திருமண நாளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் படியாக இன்று நமக்கு முன் முழந்தாளிட்டிருக்கும் இருவர் மீதும் ஒரு விசேஷமான முறையில் இறங்குவதாக. அவரது ஆசீர்வாதம் உங்களைத் தாங்கி,  நிலைநிறுத்தி, உங்களுக்கான வாழ்வின் சுமையை இலகுவாக்குவதாக. அவரது வரப்பிரசாதம் உங்களோடு என்றென்றும் தங்கி இருப்பதாக. ஆமென்

குரு   : ஆண்டவருடைய திருப்பெயரால் நமக்கு உதவி உண்டு.

எல்.   : அவரே விண்ணையும் மண்ணையும் படைத்தவர்.

குரு   : ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்.   : என் கூக்குரல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது.

குரு   : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்.: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மன்றாடுவோமாக

ஆண்டவரே எங்கள் ஒவ்வொரு ஜெபமும், வேலையும் எப்போதும் உம்மிடமிருந்தே தொடங்கவும், உம்மாலேயே ஒரு மகிழ்ச்சியான முடிவுக்கு வரவும், எங்கள் செயல்பாடுகளை உமது தூய ஆவியின் ஏவுதல்களைக் கொண்டு வழிநடத்தி, உமது கருணையுள்ள உதவியால் அவைத் தொடர்ந்து நிறைவேறச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் – ஆமென்.

குரு         : (கணவரின் பெயரைச் சொல்லி) இங்கே இருக்கும் இந்தப் பெண்ணை நீர் திருமணம் செய்து உமது மனைவியாக ஏற்றுக் கொண்டதைப் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறீரா?

கணவர்      : உறுதிப்படுத்துகிறேன்.

குரு         : (மனைவியின் பெயரைச் சொல்லி) இங்கே இருக்கும் இந்தப் மனிதரை நீர் திருமணம் செய்து உமது கணவராக ஏற்றுக் கொண்டதைப் புதுப்பித்து உறுதிப்படுத்துகிறீரா?

மனைவி     : உறுதிப்படுத்துகிறேன்.

குரு         : உங்கள் திருமண உறவின் ஐம்பதாம் ஆண்டு நிறைவின் அடையாளமாக, இந்த மோதிரங்களை அணிந்து கொள்ளுங்கள். (குரு மோதிரங்களை மந்திரித்துத் தர, தம்பதியினர் அவற்றை ஒருவருக்கொருவர் அணிவிக்கிறார்கள்.)

எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், ✠ தூய ஆவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இறங்கி என்றென்றும் உங்கள் மீது நிலைத்திருப்பதாக – ஆமென்.

பதில் வாக்கியம்: இதோ ஆண்டவருக்கு அஞ்சுகிற மனிதன் இப்படியே ஆசீர்வதிக்கப்படுவான்.

அனைத்துப் புனிதர்களின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்மாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

புனித மரியே, இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனிதத் திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித யோசேப்பே, புனித பேதுருவே, புனித பவுலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித அந்திரேயாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித யோவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மகதலா மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித ஸ்தேவானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித லாரன்ஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித ஆக்னஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித கிரகோரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அகுஸ்தினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அத்தனாசியுஸே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பேசிலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மார்ட்டினே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பெனடிக்டே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித பிரான்சிஸ் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித வியான்னி மரிய ஜானே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித சியன்னா கத்தரீனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அவிலா தெரேசே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கனிவு கூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவம் அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

உமது மனித உடலேற்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

தூய ஆவியாரின் வருகையினாலேஎங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் யாவரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம்.

திரு அவையின் ஒற்றுமைக்காகவும், திரு அவையினுடைய வளர்ச்சிக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம்.

உம்முடைய திருப்பணியில் எம்மைத் திடப்படுத்தி காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களது உபகாரிகள், எம்மை ஆதரிப்பவர்கள், எம்முடைய சொந்தங்களுக்கும் நிறைவான நன்மை பலனாக கிடைத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம்முடைய சொந்தங்கள், உறவுகள் யாவரும் பிரமாணிக்கமான மனநிலையோடு உமது திருஅவையில் உறுதியாய் நின்று பலன் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பிரபஞ்சத்திலே பருவகால மழை நிறைவாய் கிடைக்கப்பெற்று முறையான நல்ல விளைச்சலைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறந்த ஆன்மாக்கள் உமது மேலான இரக்க பெருக்கத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே

எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம் –

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

கிறிஸ்துவே, கனிவாய்ச் செவிசாய்த்தருளும்.

முதல்  : இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும்

துணை : ஆண்டவருடைய திருப்பெயர் வாழ்த்தப்படக்கடவது.

மன்றாடுவோமாக:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! வாழ்வோர் மேலும் இறந்தவர்கள் மேலும் ஆட்சி செலுத்தி, நம்பிக்கையினாலும் நல்ல செயல்களாலும் உமது அன்பு மக்கள் ஆவார்கள் என்று தேவரீரும் தெரிந்த சகலருக்கும் தயை உள்ளவராக இருக்கின்றீர். நாங்கள் யார் யாருக்காக மன்றாடிக் கேட்கின்றோமோ அவர்கள் எல்லாரும் உடல், உள்ள, ஆன்ம நலத்தோடு இந்த உலகிலே வாழ்ந்து மறு உலகில் நித்திய பேரின்ப வீட்டை சுதந்தரித்துக் கொள்ள தயவு கூர்ந்து அருள் செய்வீராக. உம்முடைய நன்மையினால் எல்லா நலன்களையும் அவர்கள் பெற்று மகிழ்வார்களாக.  உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

திருப்பாடல் 128

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!

உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்;

உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.

ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!

உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!

நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக.

தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

தே தேயும் நன்றிப்பாடல்

இறைவா உம்மை வாழ்த்துகின்றோம்

ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்

நித்திய தந்தாய் உமை என்றும்

இத்தரை எல்லாம் வணங்கிடுமே.

விண்ணும் விண்ணக தூதர்களும்

விண்ணின் மாண்புறு ஆற்றல்களும்

செரபீம் கெரபீம் யாவருமே

சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்.

தூயவர் தூயவர் தூயவராம்

நாயகன் மூவுலகாள் இறைவன்

மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால்

வானமும் வையமும் நிறைந்துள்ளன.

அப்போஸ்தலரின் அருள் அணியும்

இறைவாக்கினரின் புகழ் அணியும்

மறைசாட்சியரின் வெண்குழுவும்

நிறைவாய் உம்மைப் போற்றிடுமே.

இத்தரை எங்கும் திருச்சபையும்

பக்தியாய் உம்மை ஏற்றிடுமே

பகருதற்குரிய மாண்புடையோய்

தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்.

உம் ஒரே திருமகன் இயேசுவையும்

எம் இறையெனப் புகழ்ந்தேற்றுகிறோம்

தேற்றரவெமக்குத் தருபவராம்

தூய உம் ஆவியைத் துதிக்கின்றோம்.

வேந்தே மாண்புயர் கிறிஸ்துவே, நீர்

தந்தையின் நித்திய மகனாவீர்

மண்ணுயிர் மீட்க மனங்கொண்டு

கன்னியின் வயிற்றில் கருவானீர்.

சாவின் கொடுக்கை முறித்தழித்து

பாவிகள் எமக்கு வான் திறந்தீர்

இறுதி நாளில் நடுத்தீர்க்க வருவீர்

என யாம் ஏற்கின்றோம்.

உம் திருஇரத்தம் மீட்ட எம்மை

அன்பாய் காத்திட வேண்டுகின்றோம்

முடியா மகிமையில் புனிதருடன்

அடியார் எம்மையும் சேர்த்திடுவீர்.

உம்மவர் நாங்கள் எமை மீட்பீர்

உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்

எம்மை ஆண்டு இறைமக்களாய்

என்றும் சிறப்புறச் செய்திடுவீர்.

எந்நாளும் உம்மை வாழ்த்துகிறோம்

என்றும் உம் பெயர் போற்றுகிறோம்

இறைவா இந்நாள் எம்பாவக்

கறைகள் போக்கிக் காத்திடுவீர்

கனிவாய் இறங்கும் ஆண்டவரே

கனிவாய் இரங்கும் எம்மீதே

உம்மையே நம்பினோம் ஆண்டவரே

எம்மீதிரக்கம் கொள்வீரே.

உம்துணை நம்பினோம் ஆண்டவரே

என்றும் கலக்கம் அடையோமே

உம்துணை நம்பினோம் ஆண்டவரே

என்றும் கலக்கம் அடையோமே – ஆமென்.

முதல்  : இயேசுகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உள்ளவர்கள் ஆகும்படியாக

துணை : இறைவனின் தூய அன்னையே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குரு   : ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்.   : என் கூக்குரல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது.

மன்றாடுவோமாக:

      ஆண்டவராகிய இறைவா! உமது ஊழியர்களாகிய நாங்கள் எங்கள் உடலிலும் உள்ளத்திலும் தொடர்ந்து நலமாயிருக்குபடி உம்மை வேண்டுகின்றோம். முப்பொழுதும் கன்னியான ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையின் மகிமைமிக்க வேண்டுதலால் நாங்கள் இந்தக் காலத்தின் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று, நிலையான பேரின்ப வாழ்வைச் சுதந்தரித்துக் கொள்ள அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy