இல்லற வாழ்வின் வெள்ளிவிழா நன்றித் திருப்பலி

இல்லற வாழ்வின் வெள்ளிவிழா நன்றித் திருப்பலி

வருகைப்பாடல்

இறைவன் நமக்கு நன்மைகள் புரிந்தார்

எனவே நன்றிப்பலி நாம் செலுத்துவோம்

வாருங்கள் அன்பர்களே

நல்மனம் படைத்தோரே – இறை

நம்பிக்கை கொண்டோரே

இணைந்திங்கு வாருங்களே – நம்

இறைவனைப் பாடுங்களே

1. இறைவா இணையில்லாதது உம் அன்பு

தலைவா இடைநில்லாதது உம் பரிவு

தொலைந்து போனதோர் ஆடென ஆனேன்

தேடி வந்தெனை தோளில் சுமந்தீரே

அலையென எழுவோம் அணியென திரள்வோம்

இறையுன்னை புகழ்வோம் அன்பினில் மகிழ்வோம்

2. இறைவா புது ஆற்றல் தருவது உம் வாக்கு

தலைவா புது வாழ்வு தருவது உம் ஆவி

உமது கருவியாய் என்னையே தந்தேன்

இறையருள் வாக்கினை எங்ஙனம் சொல்வேனே

அலையென எழுவோம் அணியென திரள்வோம்

இறையுன்னை புகழ்வோம் அன்பினில்மகிழ்வோம்.

திருப்பலி முன்னுரை

      உலகைப் படைத்த கடவுள் நல்லது எனக் கண்டார். ஆண் – பெண் உறவு அற்புதமானது. இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் திருக்குடும்பமாகிட வேண்டும் என விரும்பினார். இதனாலேயே மனுவுருவான மாபரன் கன்னிமரியின் திருவயிற்றில் தங்கியிருந்து, வளனாரை வளர்ப்புத் தகப்பனாக்கி திருக்குடும்பத்தை வரலாறாக்கினார். அந்தக் குடும்பத்தில் முப்பது ஆண்டுகள் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்து, கீழ்ப்படிந்து நடந்து இளையோருக்கு மாதிரிகையும் ஆனார்.

      இறைவன்தாமே இணைப்பவரை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்று கூறிய இறைமகன்தாமே மங்களகரமான மணவாழ்வை ஆசீர்வதித்து, மனம் ஒத்து வாழும் மனங்களுக்கு மடியில் தவழ மழலைகளையும் தந்து ஆசீர்வதிக்கின்றார். “வயிற்றின் கனி இறைவன் தந்த வெகுமதி” என்று தாவீது அரசர் 127ஆவது திருப்பாடலில் கூறுகிறார்.

      இருபத்தைந்து ஆண்டுகள் மணவாழ்வில் இறைவன் தந்த பரிசே. அதிலும் குழந்தைச் செல்வம் என்பது இறைவன் அருளும் வெகுமதியே. இத்தகைய வெகுமதியைப் பெற்ற தம்பதியரும், அவர்களது குழந்தைகளும் பேறுபெற்றவர்களே. இறைவனுக்கு நன்றி சொல்லவே இணைந்துள்ளோம் இக்கல்வாரிப்பலியினிலே.

      நன்றி நிறைந்த உள்ளம் இறைவன் வாழும் இல்லமே. நன்றி கூற நம்மவரை அழைப்பது என்பது ஆதி கிறித்தவ வாழ்வின் கூடுகையை நினைவூட்டுவதே. மகிழ்வுடனே இறைவனுக்கு நன்றி கூற இணைந்து ஒப்புக்கொடுப்போம் இக்கல்வாரிப்பலியை அனைவரையும் அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.

வானவர் கீதம்

உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.

உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக.

புகழ்கின்றோம் யாம் உம்மையே

வாழ்த்துகின்றோம் இறைவனே.

உமக்கு ஆராதனை புரிந்து

உம்மை மாட்சிப்படுத்துகின்றோம் யாம்.

உமது மேலான மாட்சியின் பொருட்டு

உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே

இணையில்லாத விண்ணரசே.

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்

வல்ல தந்தை இறைவனே.

ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.

ஆண்டவராகிய இறைவனே

இறைவனின் திருச் செம்மறியே.

தந்தையினின்று என்றென்றுமாக உதித்த

இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர்.

உலகின் பாவம் போக்குபவரே எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.

தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே,

நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,

நீர் ஒருவரே தூயவர்!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்!

தூய ஆவியோடு தந்தை இறைவனின்

மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, முறிவுபடா மண உறவினால் திரு. ___________, திருமதி. __________ இவர்களை இணைத்துள்ளீர்; உம் அடியார்கள் இவர்களது உள்ளத்து ஒன்றிப்பு உழைப்பு, மகிழ்ச்சி இவற்றின் நடுவில் நிலைத்திருக்கச் செய்தருளும்; இவர்களது அன்பைப் பெருக்கி, தூய்மைப்படுத்தி, (தம் பிள்ளைகளோடு) இவர்கள் ஒருவர் மற்றவரைப் புனிதப்படுத்தித் துணையாய் இருந்து பேரின்பம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய்  என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

முதல் வாசகம்

தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 63: 7-9

ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

ஏனெனில், “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார். துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்

திபா 138: 1-2a. 2bc-3. 4-5 (பல்லவி: 2b)

பல்லவி: உம் பேரன்பை முன்னிட்டு உமக்கு நன்றி செலுத்துவேன்.

1 ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். – பல்லவி

2bc உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். – பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.

5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! – பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

இறைவன் இணைத்த நாளிது

இனிது அவரைப் புகழுவோம்

இறைவன் அளித்த கொடைகளை

எண்ணி அவரைப் போற்றுவோம்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 09-17

அக்காலத்தில் இயேசு கூறியதாவது: என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தூய ஆவியானவருக்குப் பாடல்

ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவா

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்

புது வலுவூட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்று காட்டும்

அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி

பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

திருமண வாக்குறுதியைப் புதுப்பித்தல்

(வெள்ளி விழாத் தம்பதியர், அவர்களின் பெற்றோர், அவர்களின் பிள்ளைகள் பீடத்திற்கு முன் எழுந்து நிற்கின்றனர்.)

குரு  : அன்புள்ள திரு. ___________, திருமதி. __________

      இறைச்சந்நிதியில் அன்றொரு நாள் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைப் புதுப்பித்து இறையாசீர் பெற வந்துள்ள உங்களை திரு அவையின் பெயராலும் நம்பிக்கையாளர்கள் பெயராலும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன்.

      25 ஆண்டுகளாக இறைவன் செய்த நன்மைகளுக்கும், தந்த நன்மக்களுக்கும் அன்பின் கனிகளாகத் தந்துள்ள பிள்ளைகளுக்கும் நன்றி கூற முன்வந்துள்ள உங்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார்.

      மண வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்த நாட்களில் நீங்கள் காட்டிய பிரமாணிக்கத்திற்கு, இனி கூட்டித் தரும் நாட்களில் உங்களை, உங்களது சந்ததியை அன்றைக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபை பழைய உடன்படிக்கை நூலில் ஆசீர்வதித்தது போல ஆசீர்வதிக்கின்றார்.

      நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்ற விழுமியங்களில் கட்டுக்கோப்பாக உங்களது வாழ்க்கையையும் குழந்தைகளின் வாழ்வையும் அழகுற அமைத்துக் கட்டியெழுப்பியுள்ள உங்களது வாழ்வை எண்ணி மகிழ்ச்சியடையும் நாங்கள் உங்களோடு சேர்ந்து இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.

      திரு. ___________, திருமதி. __________ நீங்கள் இருவரும் இறைவன் இன்னும் நீட்டித்துத் தருகின்ற நாட்களில் அன்புறவிலே இணைந்து பயணித்து, பிரமாணிக்கத்தைத் தொடர்ந்து, அதற்குரிய கைம்மாறாக இறையருளைப் பெற விரும்புகின்றீர்களா?

      (பிள்ளைகளின் பெயர்கள்) பெற்றோர் காட்டிய வழியில் நடந்து வந்துள்ள நீங்கள், இனி தரும் நாட்களில் பெற்றோர், பெரியோருக்குப் பணிந்து நடந்து, இறையன்பு, பிறரன்பில் வளர்ந்து சான்று பகர்ந்திட விரும்புகின்றீர்களா?

      திருவருட்சாதன கொண்டாட்ட நிகழ்வுகளின் வழியில் தன் அருள் தந்து ஆசீர்வதித்த இறைவன் தாமே தொடர்ந்து உங்களை இப்பலியின் வழியாக ஆசீர்வதிப்பாராக! இறை விருப்பத்திற்கு ஏற்ப உங்களது பயணம் இனிதாகட்டும். உடல், உள்ள, ஆன்ம நலனை அவர்தாமே உங்களுக்கு அருள்வாராக.

      என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது திருமுன் நிற்கின்ற இந்தக் குடும்பத்தைக் கண்ணோக்கும். பிரமாணிக்கமாக, உமது அருள் பெற்று உண்மையாக வாழ்ந்திட்ட இந்த அன்பர்களை ஆசீர்வதிக்க விண்ணப்பிக்கின்றோம். இவர்களை எல்லா நலன்களால் நிரப்பி, ஆவியின் கொடைகளை, கனிகளை, வரங்களை நிறைவாகப் பொழிந்து உம்முடைய சாட்சிகளாக இறுதிவரை வாழ்ந்திட வரம் தாரும்.

மோதிரங்களை அர்ச்சித்தல்

இவர்களின் அன்பிற்கு அடையாளமாக இங்கு இருக்கின்ற இந்த மோதிரங்களை அர்ச்சித்து, புனிதப்படுத்தி, ஆசீர்வதித்தருளும். இவர்களின் விரல்களில் இது அன்பின் அடையாளமாக இருந்து, உறவை, பிரமாணிக்கத்தை உறுதி செய்யட்டும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

மலர் மாலைகளை அர்ச்சித்தல்

      ஆண்டவரே, இந்த மலர் மாலைகளை ஆசீர்வதித்தருளும். பல வண்ண மலர்களால் கோர்வையாக, மாலையாக இணைக்கப்பட்டுள்ள இதனை அணிந்து கொள்ளும் இவர்கள் என்றும் தொடர்ந்து இணைந்து பயணிக்கும் அருளைத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

               There shall be showers of blessing:

            This is the promise of love;

There shall be seasons refreshing,

  Sent from the Savior above.

                        Showers of blessing,

                        Showers of blessing we need;

Mercy-drops round us are falling,

But for the showers we plead.

There shall be showers of blessing—

Precious reviving again;

Over the hills and the valleys,

Sound of abundance of rain.

இறைமக்களின் மன்றாட்டுகள்

      அன்பிற்குரியவர்களே! தந்தையாம் கடவுளை நம்பி, அவரது வல்லமைமிக்க செயல்களை நம்பி விசுவசிக்கும் நாம், ஒன்று கூடியுள்ள இந்த வேளையில் அவராலேயே எல்லாம் கூடும் என்ற நம்பிக்கையுடனே விண்ணப்பங்களை ஏறெடுத்து செபிக்க முன்வருவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. மனுவுருவானவரே இறைவா!

      திரு அவையை ஆசீர்வதியும். இக்காலச் சூழலுக்கு ஏற்ப, திரு அவையை முன்னெடுத்துச் செல்ல திரு அவை அன்பர்களுக்கு உம் தூய ஆவியின் துணையினைத் தந்து ஆசீர்வதித்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் அரசரே இறைவா!

      நாட்டின் தலைவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி, நேர்மை, வாய்மை, நீதியின்படி மக்களை நேரிய வழிதனிலே வழிநடத்திட, ஞானத்தின் ஆவியை அவர்களது உள்ளத்தில் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அமைதியின் அரசரே இறைவா!

      போர்களும், வன்முறைகளும் நிறைந்த இந்த உலகில் உம் அமைதியின் தூதனைக் குறுக்கிடச் செய்து, மக்கள் அமைதியான சூழலில் இனி வரும் நாட்களில் வாழ்ந்திட உம் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. திருக்குடும்பத்தின் நாயகனே இறைவா!

      கூடி வந்துள்ள நாங்கள் யாவரும் எங்கள் அன்பைப் புதுப்பித்துக் கொண்டு, உம் அருளால் உடல், உள்ள, ஆன்ம நலன் பெற்று, உம் பேரன்புக்குச் சாட்சிகளாக வாழ்ந்து, வாழ்வின் பலனைப் பெற்றிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இயற்கையை இலகுவாக்கும் இறைவா!

      இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உம் கருணை மழையைப் பொழிந்து, பரிவு, இரக்கம், அன்பு கிடைக்கப் பெற அருள்பொழிய வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. நிறைவாழ்வை நிலையாகத் தரும் நித்தியரே எம் இறைவா!

      உம்மில் வாழும் எம்மவர்கள் உம்மிலே இளைப்பாற, உம்மை முகம்முகமாய் தரிசனம் செய்திட, நித்திய இளைப்பாற்றியை அனைவருக்கும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு:  என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, நம்பிக்கையாளர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே எம் இறைவா, மனமொத்து நாங்கள் ஏறெடுத்துச் செபித்துள்ள எங்களது விண்ணப்பங்களைக் கேட்டு, நிறைவேற்றித் தந்து, எங்களது வாழ்வை வளப்படுத்தும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்

காணிக்கைப்பாடல்

உலகம் இறைவா உன் கைவண்ணமே

உலவும் உறவும் உன் அருளாற்றலே

எழிலாகவே அனைத்தையும் படைத்தாய்

எளியவர் வாழ்வுக்கு உரு கொடுத்தாய்

அனைத்தையும் படைத்த ஆண்டவா உன்பதம்

அன்புணர்வோடு தருகின்றேன் என்னையே ஆ….

1. காலையும் மாலையும் கடவுளின் கொடையே

இரவும் பகலும் இறைவனின் செயலே

குளிரும் நிலவும் ஒளிரும் விண்மீனும்

சுடர் தரும் சூரியனும் எல்லாம் உமதே

உன்னையே நினைத்தேன் ஒருகணம் உறைந்தேன்

உன் பாதம் வந்தேன் வியந்தே நின்றேன்

நானும் உன் படைப்பு என்பதை உணர்கிறேன்

நன்மைகள் புரிய தருகின்றேன் என்னையே ஆ…

2. பாயும் அருவியும் ஓடும் நதியும்

இறைவா உன் பெயர் சொல்லி பயணம் செய்யும்

வீசும் காற்றும் இரையும் கடலும்

ஆண்டவா உந்தன் அருள்தனை உணர்த்தும்

அனைத்தையும் பார்த்தேன் அகமகிழ்வடைந்தேன் – 2

அதிசயமாம் உன்னில் என்மனம் கதித்தேன்

நான் உன் சாயல் என்பதை அறிந்தேன்

நானிலம் பயனுற தருகின்றேன் என்னையே ஆ….

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உம் அடியார்கள் திரு. ___________, திருமதி. __________ இவர்களுக்காக நன்றி செலுத்தி நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் இவற்றிலிருந்து அமைதியையும் மகிழ்ச்சியையும் இவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

தொடக்கவுரை: திருமண உடன்படிக்கையின் மாண்பு

மு. மொ.   :      ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில்       :      உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ.   :      இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில்       :      ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ:   :      நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில்       :      அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

திருமண உடன்படிக்கையை மன ஒற்றுமையின் இனிய நுகத்தாலும் அமைதியின் முறிவுறாத பிணைப்பாலும் நீர் ஏற்படுத்தினீர். அதனால் புனிதத் திருமணத்தின் தூய, பயனுள்ள அன்பு உமக்குச் சொந்தமான பிள்ளைகளைத் தருவதற்கு உதவுகின்றது. ஏனெனில் ஆண்டவரே, உமது பராமரிப்பினாலும் அருளினாலும் திருமணத்தின் இரு பயன்களைச் சொல்லற்கரிய முறையில் விளைவிக்கின்றீர்: பிள்ளைகளின் பிறப்பால் உலகத்தை அணிசெய்கின்றீர்; எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக வரும் அவர்களது மறு பிறப்பால் திரு அவையை வளரச் செய்கின்றீர்.

ஆகவே வானதூதர், புனிதர் அனைவரோடும் நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து, முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.

தூயவர்

தூயவர், தூயவர், தூயவர் – வான்

படைகளின் கடவுளாம் ஆண்டவர்.

விண்ணகமும் மண்ணகமும்

உமது மாட்சியால் நிறைந்துள்ளன.

உன்னதங்களிலே ஓசன்னா – 2

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்

உன்னதங்களிலே ஓசன்னா – 2

திருவிருந்துப்பாடல்

என்னில் இன்று ஆனந்தம்

மன்னன் வந்த பேரின்பம்

உன்னில் நானே என்னில் நீயே

என்னே இன்பம் இயேசுவே

உயிரில் கலந்த உணவிதே

உணர்வில் கலந்த உறவிதே

1. சுமைகள் சுமந்து சோர்ந்த வேளை

இறைவன் சந்நிதி நிம்மதி

இமைகள் காக்கும் விழிகள் போலே

என்னைக் காப்பாய் நிம்மதி

ஊமை மனதின் வலிகள் போக்கி

நலமே அருள்வாய் நிம்மதி

தாயைப் போல ஆற்றி தேற்றி

அணைத்துக் கொள்வாய் நிம்மதி

புகலிடம் உன் சந்நிதி அடைக்கலம் உன் திருவடி

உயிரில் கலந்த உணவிதே

உணர்வில் கலந்த உறவிதே

2. புயலும் காற்றும் சூளும் வேளை

வாழ்வில் இல்லை நிம்மதி

பயமும் இருளும் நிரம்பும் போது

மனதில் ஏது நிம்மதி

அஞ்சேல் என்ற ஒரு சொல் போதும்

உடனே பிறக்கும் நிம்மதி

அலைகள் மேலே நடந்தும் வருவாய்

அமைதி நல்கும் நிம்மதி

புதுமை செய்யும் உம் மொழி

புரியச் செய்வாய் எனக்கினி

உயிரில் கலந்த உணவிதே

உணர்வில் கலந்த உறவிதே

நன்றிப்பாடல்

ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்

பாமாலையாக நான் சூடுவேன்

உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்

புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு

விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)

அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து

கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே

அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்

மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)

என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்

எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் அடியார்கள் திரு. ___________, திருமதி. __________ என்னும் இத்தம்பதியரைத் (தம் பிள்ளைகளோடும் நண்பர்களோடும்) உமது குடும்பத்தின் திருவிருந்தில் அமரச் செய்தீரே; அதனால் ஒருவர் மற்றவரோடு கொண்டுள்ள ஒன்றிப்பில் இவர்கள் அதிக உறுதியும் ஆர்வமும் கொண்டு விண்ணக விருந்துக்கு வந்து சேரும்வரை உமது அருள்கொடையால் ஒன்றித்திருப்பார்களாக.

இறுதி ஆசீர்

      நீங்கள் உள்ளத் தூய்மையும், உடல்நலமும், உங்கள் மக்களால் மகிழ்ச்சியும் உற்றார் உறவினரால் ஆதரவும் பெற்று, இல்லார்க்கு ஈகை காட்டி எல்லார்க்கும் நல்லவர்களாய் அமைதியும், இன்பமும், அன்பும், சமாதானமும் ததும்ப இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

தெய்வ நம்பிக்கையாளர்களாக ஒன்று கூடியுள்ள உங்கள் யாவரையும் தன் கனிவாலும் பரிவாலும் ஆசீர்வதித்து வளமுறச் செய்வாராக. ஆமென்

      உறவுகளாக, உபகாரிகளாக உற்ற உடன் இருப்பால் இறைப்பிரசன்னத்தைத் தந்து வரும் யாவரையும் தம் வாக்குக்கேற்ப ஆழ்ந்த பற்றுறுதியில் அயராது பயணிக்க அருள் தருவாராக. ஆமென்

அன்னைக்குப்பாடல்

அருள்நிறை மாமரியே ஆண்டவரின் தாயே

அழகோவியம் நீயே அடைக்கலம் தருவாயே

ஆவே ஆவே மரியா – 4

1. ஏழைகள் எளியவர் நாங்கள்

வரம் கேட்டு கரம் நீட்டினோம்

உள்ளத்தின் காயங்கள் தீர

உம் பாதம் நாடி வந்தோம்

ஆவே ஆவே மரியா – 4

2. வழிகாட்டும் விண்மீனும் நீ

வலிமையின் அடையாளம் நீ

பலவீனர் எங்களுக்காய்

இறைவேண்டல் செய்யுமம்மா

ஆவே ஆவே மரியா – 4

எழுத்து & ஆக்கம்“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.[email protected]; + 91 944 314 0660;www.arulvakku.com 

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy