வருகைப்பாடல்கள்
01. அணி அணியாய் வாருங்கள்
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
1. அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணைநின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
2. மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
02. அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே (2)
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2
அவரன்றி வேறில்லையே
1. போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே (2)
காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே (2)
2. இறைவனே என் இதயமே இந்த
இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே (2)
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே (2)
03. அமைதியின் கருவியாய் ஆண்டவரே
அமைதியின் கருவியாய் ஆண்டவரே வருகின்றோம் (2)
நெஞ்சுக்குள்ளே நீர் அமைத்த அன்பு என்னும்
இல்லம் தன்னில் வளர்கின்றோம் – 2
1. நீயாக தந்த வாழ்க்கை இங்கு
நிலைமாறி போவதேனோ
மாறாத அருள் நேசம்
மன்றாடி கேட்கின்றேன்
ஊருக்கு ஊரிங்கு போர்க்களங்கள்
உள்ளுக்குள் உள்ளத்தில் போர்க்குணங்கள்
மாறும் காலம் காண வேண்டும்
மனித நேயம் வாழட்டும்
2. பேதங்கள் ஏதும் இல்லை
என்னும் வேதங்கள் இன்று வேண்டும்
எல்லோரும் உன் பிள்ளைகள்
இது இல்லையென்றால் நீரும் இல்லை
வானுக்கு மேல் உந்தன் வீடு இல்லை
பூமிக்கு கீழும் ஏதும் இல்லை
மனித இதயம் மாறும் போது
புதிய அரசு பூமியில்
04. அர்ச்சனை மலராக ஆலயத்தில்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2)
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வாழ்ந்திட
ஆசையோடு அருள்வேண்டிப் பணிகின்றோம்.
1. தாயின் கருவிலே உருவாகுமுன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சைப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர், கற்பித்திருக்கின்றீர்.
பிறரும் வாழ எங்கள் வாழ்வை கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்.
2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினிர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை என்னில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டியெழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
05. அருட்கரம் தேடி உன்
அருட்கரம் தேடி உன் ஆலய பீடம்
அலை அலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் (2)
1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2)
மூழ்கிடும் வேளையில் எம் தலைவா
உம் கரம்தானே எம்மைக் கரைசேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ
நிதம் வருமோ ஒளி இருக்க (2)
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
2. ஆறுதல் தேடும் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றது (2)
தேற்றிட விரையும் எம் தலைவா – உம்
தெய்வீகக் கரம்தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ
துயர் தருமோ துணை இருக்க (2)
நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்
06. அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1. தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
2. அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
07. அன்பினில் பிறந்த
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் இயேசு
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்
08. ஆண்டவர் அவையினில்
ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல
ஆனந்த கீதங்களே நல்ல ஆனந்த கீதங்களே (2)
1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே நம்
அவயங்கள் அருளிசை பாடிடுமே (2)
நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ… – 2
அனைவரின் அன்பனை வாழ்த்திடவே
2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் – நம்
மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் (2)
இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ… 2
இதயத்தின் அன்பனை வணங்கிடவே
09. ஆண்டவரின் திருச்சந்நிதியில்
ஆண்டவரின் திருச்சந்நிதியில்
ஆனந்தமுடனே பாடுவோமே-2
1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்போம்
மங்கள கீதங்கள் முழங்கிடுவோம் (2)
அவரே தேவன் என்றறிவோம்
அவரே நம்மைப் படைத்தாரே
2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் (2)
துதிப் புகழோடு நுழைந்திடுவோம்
தூய அவரது வாசல்களில்
3. தேவனின் திருப்பெயர் போற்றிடுவோம்
தேவனின் நன்மைகள் சாற்றிடுவோம் (2)
தேவனின் கிருபை உண்மையுமே
தலைமுறை தலைமுறை நீடிக்குமே
10. ஆலயத்தில் நாம் நுழைகையிலே
ஆலயத்தில் நாம் நுழைகையிலே
புது நினைவுகள் எழுகின்றன
அந்த நினைவுகளின் புது வருகையிலே
நம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ… (2)
1. அன்பான மகனைப் பலிகொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)
பண்பான ஆட்டினைப் பலியீந்த
ஆபேலும் இங்கே தெரிகின்றார்
2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2)
என் வீடு இது செப வீடு
வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்
11. ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே
ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
நிறைவாய் பெறுவதே அருளென்போம்
இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு
2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி
இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி
தன்னையே தருகின்ற தலைவன் வழி
பகிர்வில் உயர்வு காணும் நெறி – இந்த
உண்மையை நாளும் உணர்ந்திடவே -2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு
12. இயேசுவின் தலைமையில்
இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்
அமைத்திட எழுந்திடுவோம் – நம்
இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும்
இசையுடன் முழங்கிடுவோம் – 2
இறைகுலமே எழுக – 2
இறையரசே வருக – 2
1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி
இயேசுவே நடந்து சென்றார் – நம்
இறைவனின் அரசு இவர்களுக்குரியது – 2
என்பதை எடுத்துச் சொன்னார் – அந்த
இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில்
பயணத்தைத் தொடர்ந்திடுவோம் – வாழ்க்கை – 2
2. விடுதலை அடைவார் சிறைகளில் வாழ்வோர்
என்று இயேசு சொன்னார் – அவர்
ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையற்றோருக்கும்
வழங்குவேன் வாழ்வு என்றார் – நாம் – 2
விழிகளைத் திறந்து உலகினைப் பார்ப்போம்
ஆவியில் வழி நடப்போம் – தூய – 2
13. இயேசுவின் வழியில் ஓர் அணியாக
இயேசுவின் வழியில் ஓர் அணியாக
இயங்கிட அனைவரும் கூடிடுவோம்
கறைகளை கழுவி நிறைவினை அளிக்கும்
கல்வாரி பலியினில் கலந்திடுவோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் சம்மதமே – 2
1. மதங்களில் புதைந்து மனிதத்தை மறந்தோம் மாறி வருகின்றோம்
உள்ளங்கள் தெளிந்து உறவினை புரிந்து உன் இல்லம் வருகின்றோம்-2
கண்போல எம்மை காக்கின்ற தேவா
அன்போடு நாளும் அணைக்கின்ற நாதா
அலை என திரண்டு ஓடோடி வந்தோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் சம்மதமே – 2
2. கனவினில் மிதந்து கடமைகள் மறந்தோம் மாறி வருகின்றோம்
சுயநலம் கடந்து சமத்துவ உலகில் சுடர்விட வருகின்றோம் – 2
பண்பாடும் நாங்கள் உன்போல வாழ
எம் ஆவல் ஆற்றல் எல்லாமும் சேர்ந்து
உன் வாசல் வந்தோம் எம் வாழ்வை தந்தோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் சம்மதமே – 2
14. இறை பலியினில் இணைந்திடுவோம்
இறை பலியினில் இணைந்திடுவோம்
இறைவனில் கலந்திடுவோம்
இதயத்தில் இருப்பவரே இறைகுலமாய் வருவோம்
இறை மகிமைக்காக உழைப்போம் நம்மில்
மனிதம் மலர இணைவோம் (2)
1. இறைவன் வார்த்தையில் இல்லம் அமைத்திட
இயேசு வழியில் செல்வோம்
உறவு வளம் பெற உண்மை உருபெற உலகில் சாட்சியாவோம் (2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
இறை மகிமைக்காக உழைப்போம் நம்மில்
மனிதம் மலர இணைவோம் (2)
2. ஏழை எளியவர் இறைவன் செய்தியை ஏற்று மகிழச்செய்வோம்
மாறும் உலகில் மாறா உன் அன்பில்
மாற்றம் கண்டு கொள்வோம் (2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
இறை மகிமைக்காக உழைப்போம் நம்மில்
மனிதம் மலர இணைவோம் (2)
15. இறைமக்கள் அகமகிழ்ந்து
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி – 2
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப் பலி
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே – 2
1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே – 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம்
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே – 2
2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே – 2
திருவாழ்வைத் தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே – 2
16. இறையாட்சியின் மனிதர்களே
இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே
1. நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா (2)
இயேசுவே காட்டிய வழியுண்டு இயங்கிட நமக்கொரு நெறியுண்டு (2)
எதிர் நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் -2
2. இன்று மானிட இதயங்களெல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா (2)
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம் மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே (2)
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம் எந்த பகையினும் வென்றிடுவோம் (2)
17. இறைவா இதோ வருகின்றோம்
இறைவா இதோ வருகின்றோம்
உம்திரு உள்ளம் நிறைவேற்ற (2)
1. கல்லான இதயத்தை எடுத்துவிடு – எமைக்
கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு (2)
எம்மையே நாங்கள் மறக்கவிடு – 2 நெஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
2. பலியென உணவைத் தருகின்றோம் – நிதம்
பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம் (2)
கடமை முடிந்ததென நினைக்கின்றோம் – 2 எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு
18. இறைவா வந்தேன் உன் இல்லம்
லா… லா… லா… லா … லா … லா …
இறைவா வந்தேன் உன் இல்லம்
மன நிறைவைக் கண்டது என் உள்ளம்
என்றென்றும் நான் உந்தன் சொந்தம்
ஓடி வருகின்றேன் தேடி உன் பாதம்
ல… ல… ல… ல…
1. உழைத்து சேர்த்திடும் புகழ் எல்லாம்
முடிவில்லா வாழ்வைத் தந்திடுமா? – 2
சுமைகளால் சோர்ந்திட்ட மனங்களுக்கு
அமைதியை உலகம் அளித்திடுமா?
அழைக்கும் இறைவன் குரல் கேட்போம்
ஆண்டவன் பாதம் அமர்ந்திடுவோம் – 2
அவர் மொழி கேட்டு வாழ்ந்திடுவோம்
தெய்வீக வாழ்வை அடைந்திடுவோம் (இறைவா)
2. வறியவர் வளமுடன் வாழ்ந்திடவும்
வாழ்பவர் வறுமை உணர்ந்திடவும் – 2
உன் திருப்பீடத்தில் அனைவருமே
ஓர் குலம் என்பதை உணர்ந்திடவும்
பலியினை அல்ல நல் மனத்தினையே
மகிழ்ந்தளித்தேன் திருப்பலியினிலே – 2
இறைவனின் விருப்பம் நான் ஏற்று
தொடர்வேன் வாழ்வு பலியினையே (இறைவா)
19. இறைவன் படைத்த நாளில்
இறைவன் படைத்த நாளில்
இணைவோம் இயேசு பெயரில்
இறைவனின் அன்பில் இறைமக்களாவோம்
கிறிஸ்துவில் இன்று புது வாழ்வு காண்போம் -2 ஆஆ
1. உலகம் எல்லாம் ஓர்குலமாய்
இணைந்திட இறைவன் நினைத்தாரே (2)
அது நனவாகிட நம்மில் நிறைவேறிட -2
அன்பாலே தேர்ந்தெடுத்தார்
2. கோடான கோடி மாந்தரிலே
கோமகன் நம்மை தேர்ந்தாரே -2
அவர் அன்பானது நம் உயிரானது -2
அன்பாகச் சேர்ந்திடுவோம்
20. இறைவனின் புகழ்பாட
இறைவனின் புகழ்பாட இங்கே இதயங்கள் பல கோடி
துறையெல்லாம் கடந்தவனே உன் துணையொன்றே நாம் தேடி
1. மறைபொருள் ஆனவனே உன்னை
மனங்களில் சிறை வைத்தோம் (2)
குறையுள்ள கோயிலிலே உன்னைக்
கொண்டு நாம் குடி வைத்தோம்
2. அன்பு உன் பேர் அறிவோம் தூய
அறிவென்றும் நாம் தெரிவோம் (2)
இன்பம் நீ எனக் கொள்வோம் நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்
21. இறைவனைத் தேடும் இதயங்களே
இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள்
1. பாடும் குயிலுக்கு பாடச்சொல்லித் தந்தவன் யார்?
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார்?
அவரே என் இறைவன் அவர்தாள் நான் பணிவேன்
அவர்தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்
2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவர் யார்?
என்னென்ன விந்தைகள் எங்கெங்கு காண்கின்றோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர்தான் காரணம்
22. இறைவனைப் புகழ்வோம் வாருங்களே
இறைவனைப் புகழ்வோம் வாருங்களே
இணையில்லா அன்பில் இணைந்திடுவோம் (2)
இந்நாளில் நம்மை அழைக்கின்றார்
எல்லோரும் ஒன்றாய் கூடிடுவோம் (2)
1. இருகரம் நீட்டி அழைக்கின்றார்
இதயத்தை திறந்து அழைக்கின்றார் (2)
உதயத்தை தேடி அலைவோரின்
உள்ளத்தை தேடி அலைகின்றார் (2)
புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்
புனிதன் இயேசு கொடுக்கின்றார் (2)
2. அன்புடன் வாழ அழைக்கின்றார்
அருளினைப் பொழிந்து அழைக்கின்றார் (2)
இன்னலில் வாடி அழுவோரின்
இதயத்தைத் தேற்ற அழைக்கின்றார் (2)
புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்
புனிதன் இயேசு கொடுக்கின்றார் (2)
23. இனிய கீதங்கள் இசைத்திடுவோம்
இனிய கீதங்கள் இசைத்திடுவோம்
புதிய கானங்கள் முழங்கிடுவோம் (2)
இறைவன் வந்து தங்கும் நடுவில் நமது இல்லம் அமைப்போம் – 2
வருவோம் இணைந்து வருவோம் இணைவோம் அவரில் இணைவோம் (2)
ஆனந்தமாக கூடிடுவோம் நாம் அவரில் வாழ்ந்து மகிழ்வோம்
1. இருவர் மூவர் இறைவன் பெயரால் கூடும்போது அவர் இருப்பார்
தூய உள்ளம் கொண்டு வருவோம்
தீயசெயலை வீழ்த்தி மகிழ்வோம்
விண்ணும் மண்ணும் இணையும் பலியில்
உறவுப் பாலம் அமைக்க எழுவோம் (2)
மனிதநேயம் வெல்லும் என்போம்
உலகை அன்பால் நிறைப்போம் – வருவோம்
2. பகையும் இருளும் விலகும் பலியில் பரமன் கருணை கொண்டு
வழியில் சிலுவை மரத்தின் தியாக வாழ்வை
தீப ஒளியாய் ஏற்றி மகிழ்வோம்
எங்கும் நிறையும் ஆவியாரின் கொடைகளாலே
நிறைவு பெறுவோம் (2)
ஏழை மனிதரில் இறையைக் காண்போம்
அவரை மதித்துத் தொழுவோம்
24. ஒளியே ஒளியே எழிலே
ஒளியே ஒளியே எழிலே வருக
உயிரே உயிரே இறையே வருக
வழியே வழியே வளமே வருக
விழியே விழியே விரைவாய் வருக
1. மூவுலகிறைவனே முதல்வனே வருக
முத்தமிழ் போற்றிடும் தலைவனே வருக (2)
முப்பெரும் காலமும் கடந்தவா வருக
முதலே முடிவே முழுமையே வருக
2. கருணையின் கடலே கனிவுடன் வருக
களங்கமில்லா ஒளி தரவே வருக (2)
அலைகளின் கலையே கடவுளே வருக
கனிவே துணிவே துணையே வருக
25. கல்வாரித் தென்றலே வா
கல்வாரித் தென்றலே வா கனிவாக தேற்றிட வா
தங்கும் பாவக் கனல்போக்க எங்கும் தேவ அருள் வீச
1. பெரும் யோர்தான் ஆற்றினிலே திருமுழுக்கானீரே
சிறு கல்வாரி மலைதன்னிலே திருப்பலியானீரே
திருமறையின் உயிரே வா
அருட்கொடையின் தென்றலே வா
2. செங்கடல் கடந்திட சீர் பாதையானீரே
பாவக்கடல் கடந்திட பலிப்பொருளானீரே
செங்கடல் தென்றல் காற்றதுவே
கல்வாரித் தென்றல் ஆனதுவே
3. கடும் கோடை காலத்திலே கல்வாரி சென்றீரே
கோடையினிலே வாடையாகக் குளிர்ந்திட வந்தீரே
பாவம் என்னும் கோடை போக்கப்
பாடிவரும் தென்றலே வா
26. காலை இளங்கதிரே நீ
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை
1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு (2)
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் – 2
திருமறைத் தகனப்பலி பீடத்தில் குழுமிவிடு
2. வருங்குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து (2)
சிரமே தாள் பணிந்து சிந்தனையை இறைக்களித்து – 2
பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்
27. சக்தியானவா ஜீவநாயகா
சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா – 2
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா
1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா
அக்களிக்க வா அன்பில் அக்களிக்க வா
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா
ஒத்துழைக்க வா வாழ்வில் ஒத்துழைக்க வா
திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்க வா
எதிரொலிக்க வா உண்மை எதிரொலிக்கவா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்ய வா
உதிக்கச் செய்ய வா அமைதி உதிக்கச் செய்ய வா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா
2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்க வா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்க வா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்த வா
ஆணவத்தையே வென்று பணிவையாக்க வா
பணிவையாக்க வா வென்று பணிவையாக்க வா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
ஊக்கம் ஊட்ட வா உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா
28. தமிழால் உன் புகழ் பாடி
தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா
1. எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி உனையாள்பவா – 2
மன நோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு – 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா – 2
நீ தானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீ தானே – 2
நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
29. தலைவா உனை வணங்க
தலைவா உனை வணங்க
என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான்
சிரமே தாள் பணிந்தேன் (2)
1. அகல்போல் எரியும் அன்பு
அது பகல்போல் மணம் பரவும் -2
நிலையாய் உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன் – 2
2. நீர்போல் தூய்மையையும் என்
நினைவில் ஓடச்செய்யும் – 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னை
சீக்கிரம் தூக்கிவிடும் -2
30. தினம் தினம் வலம் வரும்
தினம் தினம் வலம் வரும் எங்கள் காலடி
நலம் தரும் வளம் தரும் தெய்வத் தாளடி (2)
1. சரண் என்று தேடினால் தோன்றித் தேற்றுவார்
அரண் நாமே அஞ்சற்கென்று ஆற்றல் நல்குவார் (2)
வரம் கோடி நாளும் தந்து வாழச் செய்குவார் – 2
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நாளும் பாடுவோம்
2. கரையின்றி துன்பம் வாழ்வில் நாளும் தோன்றினும்
மறைந்திடும் மலர்ந்திடும் இன்பம் வாழ்விலே (2)
இறைகரம் தரும் வரம் போதும் வாழ்விலே – 2
கறைபோக்கி குறை நீக்கி வாழ்வோம் பாரிலே
31. தேவா உன் திருவடியை
தேவா உன் திருவடியை என்றென்றும் நான் தேடுவேன்
நாதா உன் சந்நிதியை தினந்தோறும் நான் நாடுவேன் (2)
சுகமான நினைவாலே சுரமான சொல்லாலே – 2
நிதம் உந்தன் பதம் தேடுவேன் – உன்
அருளாலே உயிர் வாழுவேன்
1. இருளான உலகத்திலே நீ ஒளியாக வரவேண்டுமே – 2
தடுமாறி தவறாக நான் வாழும்போது
வழிகாட்டி எனைக் காக்க வா எனக்காக உயிர் வாழ்பவா
ஒளியாக வழியாக உயிராக வந்து
எனக்காக உயிர் நீத்தவா – கல்வாரி பலியானவா
2. நிலையில்லா உலகத்திலே நீ நிலை வாழ்வு தரவேண்டுமே -2
பொய்யான சுகம் தேடி நான் வாழும்போது
மெய்ஞானம் சுடர் ஆனவா இருள்நீக்கி அருள் ஆனவா
உயிராக உறவாக நிறைவாழ்வு தந்து
இறையாக எனை ஆள்பவா – என் இயேசு மனுவானவா
32. நித்தம் ஒரு புத்தம் புது விடியல்
நித்தம் ஒரு புத்தம் புது விடியல் காணுவோம்
இனி தேவன் தந்த வாழ்வின் பலி ஒன்றாய்க் கூடுவோம்
உள்ளம் அவர் இல்லமதில் மாற்றம் காணுவோம் – 2
என்றும் காக்கும் அன்பு தேவன் அவர் பாதம் நாடுவோம் – 2
வாருங்கள் புகழ்பாடுங்கள் அவர் அன்பில் வாழுவோம் – 4
1. கருவினில் நம்மை தேர்ந்து அழைத்ததும்
கரத்தினில் நம்மை பொறித்து வைத்ததும்
இறைவன் கொடை அன்றோ – 2
பகிர்வினில் உள்ளம் நிறைவுகாணவும்
பாரினில் நாம் சான்று பகரவும் அழைக்கும் பலியன்றோ – 2
நல் ஆயன் வழியில் செல்வோம் அவர் அன்பில் அரசில் மகிழ்வோம் – 2
2. அடிமை விலங்கினை முற்றும் அகற்றவும்
சமத்துவ அன்பினை எங்கும் காணவும்
உணர்த்தும் பலியன்றோ – 2
மனங்களில் முழுமாற்றம் காணவும்
மண்ணிலே இறை மனிதம் வளரவும் அழைக்கும் பலியன்றோ
நல் ஆயன் வழியில் செல்வோம் அவர் அன்பில் அரசில் மகிழ்வோம் – 2
33. நிறையருள் வாழ்வு பயணத்திலே
33. நிறையருள் வாழ்வு பயணத்திலே
பேரணியாய் நாம் செல்வோம்
இறைவனின் தியாக பலியினிலே
கலந்திடவே நாம் இணைவோம் (2)
1. அவனியிலே இறைவனுக்காய்
அர்ப்பணம் செய்தவர் பேறுபெற்றோர் – எனும்
அருட்சான்று பகர்ந்திடவே அன்பர்களே ஒன்று கூடிடுவோம் (2)
அன்பு உள்ளங்கள் நாம் இணைவோம்
இன்ப வெள்ளத்தில் நனைந்திடுவோம் (2)
2. அன்பரசை அகிலமெங்கும்
பரவிடச் செய்பவர் பேறுபெற்றோர் – அந்த
அருள் வாழ்வு பரவிடவே தீபங்களாய் நின்று எரிந்திடுவோம் (2)
உண்மை தெய்வத்தை நாம் தொழுவோம்
விண்ணின் செல்வத்தில் திளைத்திடுவோம் (2)
34. படியேறி வருகின்றேன்
படியேறி வருகின்றேன் தேவா என்னை – 2
பலியாக்க வருகின்றேன் தேவா – நான்
படியேறி வருகின்றேன் தேவா
1. மகனையே பலியாகக் கேட்டாய் ஆபிரகாம்
மனமார பலியாக்க வந்தார்
மனதினை மாசின்றிக் கேட்டாய் – நான்
மகிழ்வோடு தருகின்றேன் – உனக்கே
2. ஏழை நான் என்றேங்கி நின்றேன் – எனக்கு
நீ வேண்டும் வாவென்று சொன்னாய்
பிழை செய்த நான் வாழ்ந்த போதும் – நீ
தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய்
35. பரிசுத்த குலம் நீங்கள்
35. பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள்
இறைவனுக்குரியவர்கள் என்றும் இறைபுகழ் கூறுங்கள்
அரச குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே
இறைவன் அழைத்த இனமே இதை அறிந்து வாழ் மனமே
1. ஒளியின் மைந்தர் நீங்கள் இந்த உலகினில் ஒளிர்ந்திடுங்கள்
முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன்முதல் தேடிடுங்கள்
மறையுடல் உறுப்புகளாய் என்றும் ஒன்றித்து வாழ்ந்திடுங்கள்
இறைவாக்குரைப்பவராய் இந்த இகமதில் திகழ்ந்திடுங்கள்
2. தந்தை இறைவனின் சிறுமந்தையும் நீங்கள்
ஆயனின் மேய்ச்சலில் புது வாழ்வையும் கண்டிடுங்கள்
அக ஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள்
பெற்ற இப்பெருவாழ்வை இங்கு பிறருடன் பகிர்ந்திடுங்கள்
36. புத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட
புத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட புதிய நாள் பிறந்தது
அருள் ஒளி தோன்றிட அகமெங்கும் சூழ்ந்திட
புனித நாள் மலர்ந்தது புதிய மணம் கொண்டு புனித பீடம் சென்று
தூயவர் பலியில் கலந்திடுவோம் (2)
1. இறைவன் நம்மை அழைத்ததால் நாமும்
இறைவனின் பிள்ளைகள் ஆனோம்
இறைவன் நம்மைத் தேர்ந்ததால்
அரசக் குருத்துவ திருக்கூட்டமானோம்
பறைசாற்றுவோம் அவர் புகழை
பாரெங்கும் ஒலிக்கச் செய்வோம் (2)
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம் (2)
2. இறைவனின் அன்புச் செயலினால் நாமும்
அவரது உடமைகள் ஆனோம்
இறைவனின் அன்பு வார்த்தையால்
அருள் அருவியில் நனைந்தவரானோம்
அணுகிச் செல்வோம் அவர் பாதம்
அழியாத வார்த்தை கேட்போம் (2)
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம் (2)
37. புதிய வானகமும் புதிய வையகமும்
புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது
புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது
அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்
ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம் (2)
1. இறைவனின் சொந்தப் பிள்ளைகள் நாம்
இறையரசின் குருத்துவக் குலமும் நாம் (2)
உரிமை வாழ்விலே நமை அழைத்தார் – இந்த
உலகம் வாழவே நமைப் பணித்தார்
உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் – இங்கு
உருகும் விழிகளை நாம் துடைப்போம் -2
2. தம்மையே இயேசு பலியெனத் தந்து
விடுதலை வாழ்வைத் தந்துள்ளார் (2)
கருணை இறைவனில் நாம் நிலைப்போம் – மனக்
கதவு நிலைகளை நாம் திறப்போம்
கரங்கள் இறைவனின் பலிக்கானால் – இங்கு
கடவுள் அரசுதான் பிறக்காதோ -2
38. புதிய விடியல் தந்த தெய்வம்
புதிய விடியல் தந்த தெய்வம் பாதம் நாடிட
புரட்சி நாதன் இயேசு நாமம் பாடி போற்றிட
வாருங்கள் இறைகுலமே பலிதனை செலுத்துவோம் – 2
பாடுங்கள் தினம் தினமே நன்றி சொல்லுவோம் – புதிய
1. உத்தமர் இயேசுவின் மலரடி துதிப்போம்
உலகம் யாவிலும் மனிதம் வளர்ப்போம்
வேற்றுமை எண்ணத்தை விட்டு ஒழிப்போம்
ஒற்றுமை நதியாய் ஓரிடம் கலப்போம்
பாதை மறந்த உறவுகளே பாசம் சுரக்கும் இதயம் கொண்டு – 2
அனைவரும் வாருங்கள் ஆனந்தம் பாடுங்கள் – புதிய
2. அன்பின் குடும்பமாய் அனைவரும் இணைவோம்
அமைதியின் தூதனாய் சாட்சியாகுவோம்
சிலுவையின் வழியினில் அனுதினம் நடப்போம்
சிதறிய உறவுகள் சேர்ந்திட உழைப்போம்
பாதை மறந்த உறவுகளே பாசம் சுரக்கும் இதயம் கொண்டு – 2
அனைவரும் வாருங்கள் ஆனந்தம் பாடுங்கள் – புதிய
39. புது யுகம் பிறந்தது
புது யுகம் பிறந்தது புது இனம் மலர்ந்தது
புதிய நல் இதயங்கள் எழுந்ததிங்கே
பழைமைகள் மறைந்தது புதுமைகள் நிறைந்தது
இனிய நல் பலியினில் இணைந்ததிங்கே
வருக வருக இங்கு தருக தருக
நன்மை பெருக பெருக அருளை
பெறு பெறுக அருளை
1. அன்பினில் நம்மை அரவணைக்க – நம்
அண்ணல் இயேசுவே அழைக்கின்றார்
பண்பில் நாளும் வழி நடக்க – அவர்
என் பின்னே வா வென அழைக்கின்றார்
புத வானம் பூமி செய்வோம்
அற வாழ்வில் அமைதி காண்போம்
2. கிறிஸ்துவில் இனியொரு யுகம் மலர – அவர்
கிருபையும் இரக்கமும் கூடி வரும்
நீதியும் நேர்மையின் சுடரொளியும் – இனி
நானிலமெங்கும் நலம் பெருகும்
அன்பினால் உலகை வெல்வோம்
நட்பினால் உறவு கொள்வோம்
3. நன்றே குலமென நாமிணைவோம் – இறை
அரசின் குருத்துவ குலமென்போம்
நம்மைத் தேர்ந்தது இறை பணிக்காய்
இனிநாளும் பகிர்ந்து நம்மை கொடுப்போம்
இதுதான் நமக்குத் திருநாள்
இறை பணியை ஏற்கும் பெருநாள்
40. புதுயுகமும் பிறந்ததின்று
புதுயுகமும் பிறந்ததின்று புது வாழ்வும் மலர்ந்ததின்று
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆனந்த பண்பாடுவோம் (2)
அல்லேலூயா -10
வல்ல தேவன் வார்த்தையே ஆ…
மனித உருவில் வந்ததே ஆ
வரலாற்றின் மையம் ஆனதே (2)
புது சமுதாயம் மலர்ச்சி கொண்டதே இறை
சமுதாயம் எழுச்சி கொண்டதே
1. அடிமை விலங்கு அனைத்தும் இன்று அழிந்து போனதே
உரிமை வாழ்வு உலகினிலே உதயமானதே ஆ… (2)
எளியவரும் நலிந்தவரும் -2
இயேசுபிரான் வாக்கினிலே ஏற்றம் காணவே
எங்கும் நீதி என்ற செய்தி உண்மையானதே (2)
2. ஏற்றத்தாழ்வு பாகுபாடு எங்கும் மறையுதே
இறையரசின் சமத்துவம் இனி எதிலும் மலருதே ஆ… (2)
வானகமும் வையகமும் -2
விடுதலையின் ராகங்களைச் சேர்ந்து பாடுதே
புதிய வானம் புதிய வையகம் புவியில் தோன்றுதே -2
41. மகிழ்ந்திடாய் மாநிலமே
மகிழ்ந்திடாய் மாநிலமே உந்தன்
மைந்தனின் மாட்சியிலே இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால்
1. என்று புகழ்ந்திடாய் திருமறையே (2)
உலகத்தின் பேரொளியாய் வாழும்
உள்ளத்தின் ஆறுதலாய் (2) – எந்தக்
காலமும் வாழ்ந்திடும் எழில் நிலையாம்
இன்பக் காட்சியே குருத்துவமே (2)
2. குருத்துவ நீர்ச்சுனையாய் திகழ்
கிறிஸ்துவை ஈன்றவளே (2) – இன்று
காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க
வரும் குருக்களைக் காத்திடுவாய் (2)
42. மகிழ்வினை விதைத்திட
மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
உறவினராய் வருவோம்
மன்னவன் இயேசுவின் பொன்மொழி நடந்திட
அன்பினில் வாழ்ந்திடுவோம் இறை
அன்பினில் வாழ்ந்திடுவோம் (2)
1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்
பூமியில் ஒன்றுமில்லை
இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்
பகைமையின் தொல்லை இல்லை (2)
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்
புதுவழி படைத்திடுவோம் (2) நாம் இறைவழி வாழ்ந்திடுவோம்
2. மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்
இறைவனின் குடும்பமில்லை
எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்
இறைவனும் உயிர்ப்பதில்லை (2)
அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்
புதுவழி படைத்திடுவோம் (2) நாம்
இறைவழி வாழ்ந்திடுவோம்
43. மணியோசைக் கேட்டேன்
மணியோசைக் கேட்டேன் குழலோசைக் கேட்டேன்
ஆண்டவன் சந்நிதி ஓடோடி வந்தேன் (2)
1. ஆண்டவன் இல்லத்தில் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டவன் புகழினைப் பாடிட வந்தேன் (2)
ஆண்டவன் அருளினை அடைந்திட வந்தேன் -2
ஆண்டவன் வாழ்வினைச் சுவைத்திட வந்தேன்
2. இறைவனின் நாமத்தைப் போற்றிட வந்தேன்
இறைவனின் வார்த்தையைக் கேட்டிட வந்தேன் (2)
இறைவனின் விருந்தினை அருந்திட வந்தேன் -2
இறைவனின் ஆசீரை ஏற்றிட வந்தேன்
44. வரம் கேட்டு வருகின்றேன்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா (2)
1. பகைசூழும் இதயத்துச் சுவரையெல்லாம் – என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் (2)
புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் (2)
பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் – 2 என்
பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்
45. வருகவே வருகவே
வருகவே வருகவே – 2
1. இறையாட்சி வழிகாட்டும் புது வாழ்வு பயணத்தில்
அருளான ஆயரே வருகவே – 2
2. எல்லோரும் வாழ்வு பெற தம் வாழ்வை தந்த
குருகுலமே வருகவே வருகவே – 2
3. நிறை வாழ்வு இதில் உண்டு நிலையான மகிழ்வு உண்டென
அர்ப்பணித்த உள்ளங்களே வருகவே – 2
4. உயிர் கொடுத்து வாழ்வளிக்கும் இறைமகன் வழிதனில்
இறை மக்களே வாழ்ந்திடவே வருகவே வருகவே – 2
வருகவே வருகவே வருகவே
46. வாருங்கள் அன்பு மாந்தரே
வாருங்கள் அன்பு மாந்தரே
பலிசெலுத்த வாருங்கள்
பண்ணிசைத்துப் பாடுங்கள்
வாருங்கள் அன்பு மாந்தரே
1. இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள்
ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே – 2
அருள் வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்
2. அன்பு என்றால் என்னவென்று அவனைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவான்
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றான்
நம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்று திரும்புவோம்
47. வாருங்கள் இறைமக்களே
வாருங்கள் இறைமக்களே – இறைமகன்
காட்டிய முறைதனில் பலியிட
1. குருவுடன் கூடி குடும்பமாய் மாறி
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
2. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று
இனி வரும் வாழ்விலே புது ஒளி பெறவே
3. பகைமையை ஒழித்து புலன்களை ஒறுத்து
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட
4. என்றுமே வாழும் இறைவனை உண்டு
என்றும் நல வாழ்வில் அவருடன் வாழ்ந்திட
48. வாருங்கள் இறைமக்களே
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்-2
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம்
நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம்
1. சிறுதுளி பெருவெள்ளமாகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் (2)
வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் (2)
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்
2. அருள் ஒளி மனதினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் (2)
மனிதரில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் (2)
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்
49. வாருங்கள் புகழ்பாடுங்கள்
வாருங்கள் புகழ்பாடுங்கள் அவர் அன்பில் வாழுவோம் – 4
1. கருவினில் நம்மை தேர்ந்து அழைத்ததும்
கரத்தினில் நம்மை பொறித்து வைத்ததும்
இறைவன் கொடை அன்றோ – 2
பகிர்வினில் உள்ளம் நிறைவுகாணவும்
பாரினில் நாம் சான்று பகரவும் அழைக்கும் பலியன்றோ – 2
நல் ஆயன் வழியில் செல்வோம் அவர் அன்பில் அரசில் மகிழ்வோம் – 2
2. அடிமை விலங்கினை முற்றும் அகற்றவும்
சமத்துவ அன்பினை எங்கும் காணவும்
உணர்த்தும் பலியன்றோ – 2
மனங்களில் முழுமாற்றம் காணவும்
மண்ணிலே இறை மனிதம் வளரவும் அழைக்கும் பலியன்றோ
நல் ஆயன் வழியில் செல்வோம் அவர் அன்பில் அரசில் மகிழ்வோம் – 2
50. வைகறைப் பொழுதின் வசந்தமே
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா
வழியிருளினிலே வளர்மதியென வா
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா
1. அலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர (2)
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா
2. இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே (2)
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா