மரியன்னை பாடல்கள்
01. அடைக்கலமே, அடைக்கலமே தாயே
அடியாரை அம்புவியில் ஆதரித்தாளுவாயே
1. அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா? – 2
மங்கையர்க்கரசியே மாமரித்தாயே
துங்கசூசைமுனியின் தூய மணாளியே.
2. இல்லற வாழ்க்கையின் இன்னல்கள் யாவையும்
இன்பமாய் ஏற்றுநாம் இந்நிலம் வாழ்ந்துமே – 2
உன்னத மோட்சத்தை நிர்ணயப்படுத்திட
நிர்மல இராய்க்கினி நீ தயை புரிகுவாய்.
3. ஆறுகுடம் தண்ணீரை அரிய இரசமாக்கி
அற்புதம் செய்த உந்தன் ஆருயிர் நேச மைந்தன் – 2
ஆசியை அடைந்து நாம் மாசின்றி வாழ்ந்திட
அனுக்கிரகம் செய்வாய் அமல உற்பவ மாதே!
02. அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அருளைப் பொழிவதும் நீதானம்மா
ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா
1. மணிமுடி அணிந்த மாதவளே – இந்த
மாநிலம் காத்திடும் தூயவளே – 2
உண்மையை ஊட்டிடும் பேரழகே
உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே
2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே – நீ
துணை தந்து காத்திட வேண்டுமம்மா – 2
அன்பினில் என்றும் அரவணைத்து – எமை
அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா
03. அம்மா உந்தன் அன்பினிலே
அருள்வாய் எமக்கு அடைக்கலமே (2)
1. இறைவன் படைத்த எழிலே இயேசுவைத் தந்த முகிலே -2
தூய்மை பொழியும் நிலவே துணையே வாழ்வில் நீயே
2. புவியோர் எங்கள் புகழே புனிதம் பொங்கும் அழகே -2
உன் மகன் புதிய உறவில் எம்மையும் அறியச் செய்வாய்
04. அம்மா உன் மலர்ப்பாதம் வருவேன்
அன்பை என் கரம் வாரித்தருவேன்
கனிவான அருளாலே அணைப்பாய்
இனிதான பொருளாகி வா
1. பாவங்கள் நிழலில் பாவி உயிர்தேடி
உன்பாதம் நான் சரணம்
காலங்கள் மாறும் கவலைகள் தீரும்
அருளே நீ வடிவான தாயே
2. இருட்டில் என் நெஞ்சம் அழுகின்றது
அம்மா உன் முகம்வாடிப் போகின்றது
சாபங்கள் நீங்கும் சேமங்கள் ஓங்கும்
அருளே நீ வடிவான தாயே
05. அம்மா என்று அழைத்தால் குழந்தாய் என்ற வருவாய்
அபயம் என்ற சொன்னால் அன்பாய் தூக்கி
நெஞ்சில் வைத்து என்னைக் காத்துக்கொள்வாய்.
1. வேடிக்கை உலகம் பின்னால் நான் சென்றேன்
வேண்டியதெல்லாம் தருமென்று நான் சென்றேன் – 2
மீளாத்துன்பம் நானடைந்தேன் என் நிலை நானுணர்ந்தேன்
அம்மா உனையழைத்தேன்
2. உலக மாந்தர்க்கு கலங்கரை விளக்காய் நீ
கண்மணியாய் எமை நாளும் காப்பவள் நீ – 2
உன்னை நான் பிரிந்திடேன் நாழியும் நான்
மறவேன் அம்மா உனையழைத்தேன்
3. மின்னுவதெல்லாம் பொன்னென்று நான் கொண்டேன்
வெளுத்தவை யாவும் பாலென்னு நான் உண்டேன்
பொன்னும் தீயானது பாலும் நஞ்சானது
அம்மா உனையழைத்தேன்
06. அம்மா என்றே உன்னை அழைத்திடுவேன் – 2
இம்மானிலத்தின் நல் மாதிரியே
எம்மாத்திரம் உம் புகழே அம்மா
1. புவி மீட்ட பரமனுடன் சேர்ந்தெமை மீட்டாயே
புவிதனில் வாழும் மாந்தருக்கு
புது அன்னையாகக் கல்வாரியில்
புது ஒளி தந்து
புது நலம் சேர்க்க இறைவனே உனைத் தந்தார் அம்மா
2. தாயவளின் அன்பிலே சேயும் மகிழ்ந்திருக்கும்
தரணியில் நாளும் தவிப்பதென்ன
தாயுந்தன் அன்பின் நிகரென்ன இயேசுவைப்போல்
என்னையும் அணைத்திட இனியொரு தடையென்ன அம்மா
3. ஆதவனாம் யேசுவினால் ஒளிரும் நிலவானாய்
தாயினைப்போல் பிள்ளையென்று
தண்டமிழ் அறிஞர் சொல்லி வைத்தார்
தாயுனைப்போல் நானும் இன்று ஆகிடும் வரம் வேண்டும் அம்மா
07. அருள் நிறை மரியே ஆரோக்கிய தாயே
கனடா மண்ணிலே காத்து நம்மை ஆள்பவளே
1. நாடோடி வந்தோம் தேடி ஓடி வந்தாய்
தமிழுக்கு பங்கும் நீ தேடித் தந்தாய்
தாயாக நாளும் தாலாட்டுகின்றாய்
தமிழால் உன் புகழ்பாடி தினம் போற்றுகின்றோம்
2. வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லை
வாழ்கையிலே எமக்கு துன்பங்கள் தொல்லை
அரவணைத்தெம்மை காத்திடுவாயே – உன்
அருள் தந்து இருள்போக்க உனை வேண்டுகின்றோம்
3. ஈழத்தில் மக்கள் கண்ணீரில் வாழ – எம்
உள்ளத்தில் அமைதி இன்றி நாம் வாட
ஆண்டிடும் தலைவர்கள் அறிவுக்கண் திறக்க – உன்
ஓளி தந்து வழிகாட்ட உனை வேண்டுகின்றோம்
4. குடும்பங்களை உம் கண்களில் காரும்
இல்லற வாழ்க்கையில் இன்னல்கள் தீரும்
ஒருவரில் ஒருவர் அன்பினில் வாழ
உன்துணையோடு இணையாக உனை வேண்டுகின்றோம்
08. அலையொளிர் அருணனை அணிந்திடுமா
மணிமுடி மாமரியே (2)
வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி – 2
கலையெல்லாம் சேர்ந்தெழும் தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்
1. அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே – 2
பொல்லாத கூளியின் தொல்லைகள் நீங்கிட
வல்ல உம் மகனிடம் கேள்
2. அகோரப் போர் முழங்கி அல்லலும் தோன்றுதன்றோ – 2
எல்லோரும் விரும்பிடும் நல்லதோர் அமைதியை
சொல்லாமல் அளித்திடுவாய்
09. அழகின் முழுமையே தாயே
அலகையின் தலைமிதித்தாயே
உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே (2)
1. இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
அருளே நிறைந்த மாமரியே அருள் வழி காட்டிடுவாயே
2. அன்பும் அறமும் செய்வோம்
அன்னை உனைப் பின் செல்வோம் (2)
உன்னைத் துணையாய்க் கொள்வோம்
என்றும் பாவத்தை வெல்வோம்
10. அன்னைக்குக் கரம் குவிப்போம்
அவள் அன்பைப் பாடிடுவோம் – 2
1. கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தாள் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்
2. பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்
11. ஆனந்தம் பொங்குதே ஆனந்தம் பொங்குதே – 2
அன்னையே அருள்மரியே ஆனந்தத் திருமழையே
அன்னையே அருள்மரியே எங்கள் ஆகாய திருஒளியே
பாசக் குறையின் பிறைநிலா மனுக்குலத்தின் திருவுருவாம்
தேவன்தாயை நினைக்கையிலே ஆனந்தம் பொங்குதே
1. ஞானத்தின் இருப்பிடமாம் எங்கள் மகிழ்ச்சியின் காரணமாம் – 2
மகிமையின் பாத்திரமாம் அன்பின் மாண்புறு ஓவியமாம் – 2
பரலோகத்தின் படிக்கட்டாம் பெரும் பாவிகளின் அடைக்கலமாம் – பாசக்
2. சொர்ணமய ஆலயமாம் வாக்குத்தத்தத்தின் பெட்டகமாம் – 2
வியாதியின் விமோச்சனமாம் விடிய எக்கால நட்சத்திரமாம் – 2
தருமத்தின் கண்ணாடியாம் எங்கள் விசுவாசக் கன்னிகையாம் – பாசக்
12. உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2
1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2
2. கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா (2) -2
13. உன்னைப் பாட வந்தேன் அருள்நிறை மரியே
உன்னை வாழ்த்த வந்தேன் வரம் தரும் மரியே
உன்னை அண்டி வந்தோர்க் அருள் தரும் உன்னையே
நான் நாள்தோறும் நாடி நின்றேன்
நீ வாழ்க நிதம் வாழ்க தாயே என்னாளும் நீ வாழ்கவே – 2
1. நான் அருள் அற்று மகிழ்வற்று வந்திருந்தேன்
என்னைக் கனிவுடன் கண்ணோக்கினாய்
நான் இடருற்றுத் தனிமையில் தவித்து நின்றேன்
ஒரு தாயாக அருகில் வந்தாய் – 2
உந்தன் அன்பை நாளும்
இனி ஞாலம்; மீதினில் வாயார வாழ்த்திடுவேன்
உன் பண்பாடி வாழ்த்திடுவேன்
2. இதோ ஆண்டவரே உன் அடிமை என்று
உன்னை முழுவதுமே பணித்தாய்
இறைச் சித்தம் உன்னில் நிறைபெறவே
பெரும் துன்பங்களும் ஏற்றாய் – 2
உந்தன் அன்பை நாளும் இனி
ஞாலம் மீதினில் வாயார வாழ்த்திடுவேன்
உன் பண்பாடி வாழ்த்திடுவேன்
14. என் ஆன்மா இறைவனையே
ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
1. தாழ்நிலை இருந்து தம் அடியவரைத்
தயையுடன் கண்கள் நோக்கினார் (2)
இந்நாள் முதலாம் தலைமுறைகள் – 2
எனைப் பேறுடையாள் என்றிடுமே
2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் (2)
அவர்தம் பெயரும் புனிதமாகும் – 2
அவருக் கஞ்சுவோர்க்கு இரக்கமாகும்
15. எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றிடுதே
இந்த அடிமை என்னை அவர் நினைத்ததனால்
அந்த மீட்பரின் நெஞ்சம் மகிழ்கின்றதே!
1. வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
அருள் நிறைந்த மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள்ளே பெரும் பேறு பெற்றீர்
வாழ்க மரியே வாழ்க.
2. வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
தம் கரம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம் – 2
3. அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செருக்கடைந்தோரை சிதறடித்தார் – அவர்
வலியோரை உயர் இருக்கையினின்று இறக்கி
எளியோரை மிக உயர்த்தி விட்டார்
பசித்தோரை பல நலன் கொண்டு நிறைத்து
செல்வரை வெறுங்கையரென விடுத்தார்.
16. ஓ அன்னையே உன் பிள்ளை நான் அல்லவோ
என்னை நீ கை நெகிழாயே – உத்தமி
என்னைப் பெற்ற தாயிலும் மிக்க அன்புள்ள இரட்சகி
இரட்சகி உன்னை நம்பினேன்
1. உன்னத கடவுளின் தாயாய்
ஒப்பில்லா வல்லமை உடையவளாய்
அன்னை நீ இருக்கையிலே அலகைக்கும் நரகுக்கும்
உலகத்தின் மயலுக்கும் அஞ்சிடேனே
2. பஞ்சம் போர் பிணி நோய் பாரினில்
பலுகியே வருத்துதம்மா தஞ்சம் என அடைந்தோம்
உன் மகன் யேசுவை எம்மிடர் தீர்த்திட வேண்டுவாயே
17. கோடி விண்மீன் வானத்திலே கண்டேனம்மா- அது
கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா – 2
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2 அந்த
உத்தமியில் ஒழித்து விண்மீன் உறவுகொண்டதே – கோடிவிண்மீன்….
1. வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய்ப் பாதத்திலே எழில் காட்டி இருப்பதுமென்ன – 2
ஞாலத்தை படைத்த தேவன் தாயல்லவா – 2
அன்னை தாழ்ப்பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா
2. ஆரோக்கியம் தேடிவந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள் நிறை மரியே என்று ஜெபிப்பது மென்ன -2
கருணை திருவுருவாம் கன்னி மரியாள் தந்த -2
காட்சிக்கு மாதா குளம் சாட்சியாகுமே -2
3. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும் -2
அன்னை வீடாக வேளை நகர் இருப்பதேனம்மா – 2
தீராத பிணிதீர்க்கும் ஆரோக்கிய மாதா
தீராத பிணிதீர்க்கும் ஆரோக்கிய மாதாவின்
திருப்பாதம் பட்டமண் வேளாங்கண்ணி – 2
18. ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் – 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே
1. பாவ நிழலே அணுகா பாதுகாத்தார் உமையே பரமன்
பாவ நிழலே அணுகா – தாயுதரம் நீ தரித்திடவே 2
தனதோர் அமலன் தலமெனக் கொண்டார்
2. வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே
வாழ்வோர் அனைவரின் தாயே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே – 2
வானோர் துதிக்கும் இறைவியே வாழி
19. தாயில் நம்பிக்கை வைக்கும் பிள்ளைகளைப் பாரும்
எம் நேச அன்னையே பற்றிமா மாதாவே (2)
ஈடேற்றத்தின் நற்றுணை நீர்தாம் அன்றோ
உம் இதயத்திலே எம்மைக் காப்பாற்றாயோ –தாயில்
1. இருளின் ஒளியே நீ வழி நடத்திச் செல்வாய்
சீவியத்தின் கடலில் தாயே ஓர் நம்பிக்கை (2)
சோதனை தருணத்தில் ஆபத்தின்றி
நின் அடைக்கலமே அண்டினோம் அன்னiயே –தாயில்
2. மரண வேளையிலே சத்துரு செய்யும் போரில்
எம் அருகில் நிற்காயோ அன்னை மரி தாயே (2)
மோட்சத்தின் நல் வாசலில் நின்றே அணைத்து
நின் மகன் அருகில் நேர்த்திடாய் தாயே – தாயில்
3. வானின் தேவதையாக வந்த விண்ணோர் திருமகளே
தேவன் தன்னைத் தாங்கி நின்ற மண்ணோர் மறைபுகழே
இலங்கை மன்னார் மருதமடுவில் குடி கொண்டருளுகின்றாய்
கலங்கும் தமிழர் குறைகள் களைந்து விடுதலை அருள்வாய்
4. கேவலாரில் பாத்திமாவில்; லூர்து நகர் தன்னில்
சுவிற்சலாந்து இறுதியாக வேளாங்கண்ணியிலே
காட்சி தந்த தாயே மீண்டும் மண்ணில் வருவாயோ-2
மாட்சியோடு அமைதி மகிழ்வும் மீட்டுத்தருவாயோ
5. காலங்கள் தோறும் கலங்கும் தமிழர் குரலைக் கேட்பாயோ
உள்ளங்கள் உடைந்து வரண்ட இனத்தின் குறைகள் தீர்ப்பாயோ
நாட்டை இழந்தோம் வீட்டை துறந்தோம் இழக்க ஏதுமில்லை-2
தேற்றும் தேவா கரத்தில் அணைத்து சாந்தி அளிப்பாயோ
6. வேதம் சாற்றும் விதிகளெல்லாம் மனித உறவு ஒன்றே
தேவன் நாமம் ஓதி உலகில் அமைதி ஓங்கச்செய்வோம்
நிலைகும் அன்பை நிலத்தில் விதைத்து உயிர்கள் வாழச்செய்வோம்-2
விளையும் பயிராய் வளரும் உறவில் உலகம் மலரச்செய்வோம்
20. தாயே உன் பாதம் தஞ்சமென்றோடி வந்தோம் – 2
நீயல்லால் ஓர் துணை யாருமில்லாதது நிட்சயம் நிட்சயமே – 2
1. வானோர்க்கரசியாய் மாட்சி சுருதியாய்
மங்கா ஒளி சுடராய் – அருள்
ஞானோ கிருபை சிம்மாசனமாகிய
நாயகியே மரியே – 2 – (தாயே)
2. பாவிகட்காதாரமாகவே சீர் அருள்
மேவி அடைந்தவளே – எங்கள்
சீவியமாகிய மாமரியே உந்தன்
காவலை அண்டி வந்தோம் – 2 (தாயே)
3. பத்திராசரும் ஒத்த வியப்புடன்
நித்தமும் உம்மை ஸ்துதிக்க – விடா
ஸ்துத்தியம் எத்திசை சத்தித்தொலித்திடு
உத்தமியே தாயே – 2 (தாயே)
4. உம்மைச் சலுகையால் தேடி வந்தோரென்றும்
உற்ற பலன் அடையாப் போனது
இம்மையில் கேட்டது இல்லை நாம் என்பதால்
இன்றும்மை நாடி வந்தோம் (தாயே)
21. தாயே தயவோடு பாரம்மா
சேயாய் அடியேனைச் சேரம்மா – 2
அம்மா அம்மா ஆதரி எனை – 2
1. வந்தேன் உன் சரணம் தேடியே
என் தாய் நீ எனவே ஓடியே – 2
2. வானோர் புகழ்ந்திடும் அன்னையே
அன்பாய் அணைத்திடும் என்னையே – 2
22. பரமனின் திரு அன்னையே
பாவியின் அடைக்கலமே
அருள் தரும் தேன் சுனையே
ஆதரிப்பாய் ஆதரிப்பாய் எனையே
1. கண்களைக் காக்கும் இமைகளைப்போல
கருத்துடன் என்னைக் காப்பவள் நீயே
விண்ணகம் ஆளும் வேந்தனின் தாயே
விருப்புடன் மக்களை அரவணைப்பாயே
2. உயரிய வானம் உன்னருள் தாயே
உருகிடும் உள்ளம் உன் திரு உள்ளம்
கடைக்கண் பார்வையில் கனிந்திடும் வெள்ளம்
கருணையின் அன்பும் தாய்மையின் செல்வம்
3. உன் புகழ் பாட ஒரு வரம் கேட்பேன்
உன் பதம் சேர்ந்திட ஒருநாள் வருவேன்
என் மனம் கேட்பதை நீ தர வேண்டும்
என்றும் உன்னிடம் நான் வரவேண்டும்
4. அன்னை என்றால் அன்பின் எல்லை
அன்புக்கு உவமை வேறேதும் இல்லை
அன்பால் கனிந்த தாயே வாழ்க
அருள் நிறை அன்னை மரியே வாழ்க
23. மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே
கருணையருட் செபமாலை கனிந்திட நாம் செய்தாயே
1. மகிமை நிறை மாமரியே மாதவருள் பூரணியே
மக்கள் பவம் பொறுத்தருள மன்றாடாய் நின் சுதனை
2. பாவம் செய்தோம் பாரினிலே தவம் செய்வோம் உன் தயவால்
பட்சமுடன் பாரம்மா பாவியெம்மைக் காரம்மா
3. ஐம்பத்து மூன்றுமணி அனுதினமும் ஓதிடுவோம்
மெய்பத்தி தான் பெருக மேதினியில் நீ அருள்வாய்
4. முப்பொழுதும் கன்னிகையே மூவுலகாள் இராக்கினியே
இப்பொழுதும் எம்மரணத்திலும் எங்களை நீ காத்திடுவாய்
5. துயரம் நிறைந்த தாயகத்தை தூயவளே பாரம்மா
புயல் அரக்க போர் முடிந்து புவி மீள அருள் தாயே
6. நீண்ட காலம் உறங்காமல் நிலம் அழுது கிடக்குதம்மா
நின்னருளைப் பொழிந்து அங்கு நீ அருள்வாய் சமாதானம்
24. மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல்
நேசமில்லாதவர் நீசரே யாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே -2 (2)
1. மூதாதை தாயாசெய் முற்பாவ மற்றாய்
ஆதியில் லாதோனை மாதே நீ பெற்றாய் – வாழ்க …
2. உம் மகன் தாமே உயிர் விடும் வேளை
என்னை உன் மைந்தனாய் ஈந்தனரன்றோ?-வாழ்க …
25. மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி
1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோயுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்
2. நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்
26. மாதாவே துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரம் தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எமைப்பாரும் (2)
1. வானோர் தம்அரசே தாயே எம் மன்றாட்டை தயவாய்க் கேளும்
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல் எக்காலத்துமே தற்காரும்
2. ஒன்றே கேட்டிடுவோம் தாயேயாம் ஓர் சாவான பாவந்தானும்
என்றேனும் செய்திடாமல் காத்து எம்மை சுத்தர்களாய்ப் பேணும்
27. மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)
1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த அன்னையரே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே
2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)
இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டி
வானக வாழ்வை அளிப்பாயே
28. வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா – 2
வான்புகழ் ரொறன்ரொ ஆரோக்கிய மாதாவே
வணக்கம் வணக்கம் வணக்கமம்மா
1. மணக்கும் தமிழாலே வணக்கமம்மா – எழில்
மலர்ந்திடும் இசையாலே வணக்கம்மா – 2
நினைக்கும் என்நினைவாலே துதிக்கும் என்கரத்தாலே
தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே – 2
2. ரொறன்ரொ நகர் வந்த விண்ணவர் தாயே
வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே -2
தாழை பணிந்தவர்க்கே தஞ்சம் அழித்தாயே
பங்கின் இல்லங்களில் கோவிலும் கொண்டாயே – 2
29. வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத்தாயே
சந்தோசமாகப் பாடி உன் தாள் பணியவே
1. பூலோகந் தோன்றுமுன்னே ஓ பூரணத்தாயே
மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே
2. வானோர்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட
ஊனஞ்செய் பாம்பு ஓட நீர் உற்பவித்தாயே
3. தூயர்களாம் எல்லோரும் நீ தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப் பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே
4. நூவுள்ளபேரெல்லோரும் உன் நாமம் போற்றுவர்
பாவுள்ளபேரொல்லோரும் உன்மேல் பாட்டிசைப்பாரே
5. மாதாவின் மதுரமான நல் வாழ்வு எங்களை
தீதேதுமின்றி வாழ மன்றாடினேனம்மா
6. கோடி பிரகாசனான திவ்விய யேசு பாலனை
நாடி வரங்கள் பெற்று ஈடேற்றுவீரம்மா
30. வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம் மாதாவை – 2
1. இரட்சகர் திரு மாதாவை
பட்சம் நிறையும் மாதாவை
துஷ்ட பேயை வென்றவரை
மட்டில்லா மகிழ்ச்சியோடு – வாழ்த்துவோம்
2. தாயே எம்மைப் பாதுகாரும்
பேயின் மாயைகளைத் தீரும்
வாயாரத் துதிக்கும் எமக்கு
ஓயாத பாக்கியம் தாரும்
31. வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)
1. பன்னிரு வயதில் ஆலயத்தில்
அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை (2)
கரங்களை விரித்தே கள்வனைப் போல் -2
கழுமரத்தினில் கண்டதினால்
2. கண்ணீரே சிந்திய மனிதருக்கு
அருள் பண்ணிய திருமகனே (2)
மண்ணவர்க்காகத் தன்னுயிரை -2
இன்று மாய்த்திடக் கண்டதினால்