திருப்பலி செபங்கள்

பொதுக் கால 2-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 65:4 கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும்; உம் புகழ் பாடிடும்; உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீரே; உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 22:5 என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர்; நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!

அல்லது

1 யோவா 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்; நம்புகிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

பொதுக் கால 3-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

காண். திபா 95:1,6. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன; மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும்; இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக. எங்கள்.

காண். திபா 33:6

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 33:6 ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள்; உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது.

அல்லது

யோவா 8:12

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக. எங்கள்.

பொதுக் கால 4-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 30:17-18   உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.

அல்லது

மத் 5:3,5

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது; கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எங்கள்.

பொதுக் கால 5-ஆம் ஞாயிறு

வருகைப் பல்லவி

திபா 94:6-7 வாருங்கள்! கடவுளைத் தொழுவோம். நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். ஏனெனில் அவரே நம் ஆண்டவராகிய கடவுள்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தை இடையறாத பரிவிரக்கத்தால் காத்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் விண்ணக அருளை மட்டுமே எதிர்நோக்கியுள்ள இக்குடும்பம் உமது நிலையான பாதுகாவலால் என்றும் உறுதி அடைவதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, வலுக்குறைவுற்ற எங்களுக்கு உதவியாக இப்பொருள்களைப் படைத்திருக்கின்றீர்; அதனால் இவை எங்களுக்கு நிலைவாழ்வின் அருளடையாளமாக மாறிட அருள் புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 106:8-9 ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும், மானிடருக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்குப் புகழ் சாற்றுவார்களாக! ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.

அல்லது

மத் 5:4, 6 துயருறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் நாங்கள் பங்கேற்கத் திருவுள மானீரே; அதனால் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஒன்றிணைக்கப்பெற்று உலகின் மீட்புக்காக நற்கனி தந்து மகிழ்ந்து வாழ எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy