மறைமாவட்டப் பேராலய நேர்ந்தளிப்பு விழா

பாளை மறைமாவட்டப் புதிய பேராலய
நேர்ந்தளிப்பு திருவழிபாட்டுச் சடங்குகள்

வருகைப் பவனி
குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பேராயரும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் திருவுடைகள் அணிந்தபின் வருகைப் பவனி ஆரம்பமாகிறது.


நுழைவு வாயிலை ஆசீர்வதித்தல்
புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேராலய நுழைவு வாயில் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்களால் மந்திரிக்கப்படுகிறது.


முன்னுரை
ஆவியின் கொடைகளை அள்ளி வழங்கி, இறையனுபவத்தை இதயம் உணர, இறைவன் அருளிய நமது பாளை மறைமாவட்ட தாய்க்கோவிலின் ஆலய நுழைவு வாயில் இப்போது மந்திரிக்கப்படுகிறது. இது அமைதியின் அரசரின் இல்லத்து நுழைவு வாயில். இது புனிதம் கமழும் புதிய வாயில். இந்த நுழைவு வாயிலை பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்கள் இப்போது புனிதப்படுத்தித் திறந்து வைக்கிறார்.


பேராயர் : தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே
மக்கள் : ஆமென்.
பேராயர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.


பேராயர் : மன்றாடுவோமாக.
எங்களை அன்பு செய்யும் தந்தையே, “வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாட்களிலும் உன் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது” என்ற திருப்பாடலுக்கு ஏற்ப இவ்வாயில் வழியாக நுழைபவர் மற்றும் வெளியே செல்பவர் அனைவரும் உம் திருமகனின் அன்பு, அமைதி, நீதி போன்ற பண்புகளுக்குச் சான்று பகரத் தூண்டப் பெறுவார்களாக. இந்த நுழைவு வாயிலின் வழியாக உம் இல்லத்திற்கு வரும் அனைத்து மக்களின் உள்ளங்களையும் புதியதாக்கும். இன்பத்தால் நிறைவாக்கும். இந்த வாயில் வழியே நுழைவோரும் இதைக் கடந்து செல்வோரும் இறைவனின் நிறைவான அமைதியையும், ஆசீரையும் பெற்றுச் செல்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(தீர்த்தம் தெளித்து ரிப்பன் வெட்டுதல்) (சுருக்கமான பேராலய வரலாறு வாசிக்கப்படுகிறது.)


புதிய பேராலய மணிகளை ஆசீர்வதித்தல்


முன்னுரை


ஆவியிலும், உண்மையிலும் வழிபட, நம்மை இறைவன்பால் அழைத்து வர இறைவனின் குரலாக நாள்தோறும் ஒலிப்பது ஆலய மணிகள். இடைவிடாமல் இயங்கி இறைமக்களை இறைவனின்பால் ஈர்க்கத் துணைபுரியும் நமது பேராலய மணிகளை பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை அவர்கள் இப்போது அர்ச்சித்துப் புனிதப்படுத்துகிறார்.


பேராயர் : தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே
மக்கள் : ஆமென்.
பேராயர் : ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
மக்கள் : விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
பேராயர் : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.


பேராயர் : மன்றாடுவோமாக.
இறைவா, திருச்சட்டம் இயற்றிய உம் ஊழியர் தூய மோசே வழியாக எக்காளங்களை வெள்ளியில் உருவாக்கக் கற்பித்தீரே. பலி வேளையில் குருக்கள் அவற்றை ஊதியபோது மக்கள் அவற்றின் இனிய ஒலியால் அறிவிக்கப் பெற்று, உமக்கு ஆராதனை புரியவும், பலி செலுத்தவும் ஒன்று கூடினர். உமது கோவிலுக்கான இம்மணியை எளிய எம் ஊழியத்தின் வழியாகத் தூய ஆவியாரின் வல்லமையால் புனிதமாக்கியருளும். இதன் ஒலியால் இறைமக்கள் புனித கோவிலுக்கும் வானக மகிமைக்கும் அழைக்கப்படுவார்களாக. இதன் ஒலியை மக்கள் கேட்கும்போது அவர்களுள் விசுவாசப் பற்று வளர்வதாக. இம்மணியின் ஒலி கேட்டுத் தீய சக்திகள் அகல்வனவாக. இந்த மணிகளைத் தாங்கும் மணிக்கூண்டுகளையும் ஆசீர்வதித்தருளும். மணியோசையைக் கேட்கின்ற யாவரும் உம் திருமகனை நாடி வந்து அவருக்குச் செவிசாய்ப்பார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(தீர்த்தம் தெளித்தல்)

கல்வெட்டு திறப்பு


பேராலயத்தின் கல்வெட்டு ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.

ஆயரின் முதல் செபம்


முன்னுரை


இஸ்ரயேலின் அரசராகிய சாலமோன் தாம் கட்டியெழுப்பிய எருசலேம் ஆலயத்தை, இறைவனின் குரு என்ற முறையில், வான் நோக்கித் தம் கைகளை உயர்த்தி, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து செபித்தார். இப்போது நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள நமது பாளை மறைமாவட்டப் பேராலயமானது இறைவன் தங்கும் திருத்தூயகமாக மாற வேண்டுமென்று விண்ணக அரியணையில் வல்லமையோடு வீற்றிருக்கும் இறைவனிடம் செபிக்கிறார். நாமும் ஆண்டவரிடம் அமைதியாக செபிப்போம்.


ஆயர் : மன்றாடுவோமாக.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர். அன்று உம் வாயால் உரைத்ததை இன்று உம் கையால் செய்து முடித்தீர். விண்ணும் மண்ணும் உம்மைக் கொள்ளாதிருக்க, நாங்கள் கட்டியுள்ள இந்தக் கோவில் உம்மை எவ்வாறு கொள்ளக்கூடும்? எம் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியானும் உம் ஊழியனுமாகிய என் கூக்குரலுக்கும் விண்ணப்பத்துக்கும் செவிசாய்த்தருளும். “என் பெயர் விளங்கும்” என்று நீர் வாக்களித்த இந்தப் பேராலயத்தின் மேல் இரவும் பகலும் உமது அருட்பார்வை இருப்பதாக! உம் அடியானாகிய எனது விண்ணப்பத்தை நீர் கேட்டருள்வீராக! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் உம்மை நோக்கி எழுப்பும் வேண்டுதலை உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டருள்வீராக! தம் தேவையை உணர்ந்து, இந்தக் கோவிலில் உம்மை நோக்கித் தம் கைகளை விரித்து உம் மக்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் கேட்டு நிறைவான ஆசீர் அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர். நீர் என்றென்றும் தங்கி வாழ அழகிய இல்லம் ஒன்றை ஆலயமாக உமக்காக நாங்கள் கட்டியுள்ளோம். எம் ஆண்டவராகிய கடவுளே, உமது பேரன்பை நினைவுகூர்ந்து, உமக்கான இந்தத் தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! எம் கடவுளாகிய ஆண்டவரே, நீர் போற்றி! போற்றி! உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் உம் மக்களின் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்புரிவீராக! எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.

புதிய பேராலயக் கதவு திறப்பு


முன்னுரை


“நானே வாயில்” என்ற இயேசுவின் வார்த்தைகளை நாளும் தாங்கி நிற்கும் வாயில் இது. “என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, வாருங்கள்!” என்று நம் அனைவரையும் வரவேற்கும் கதவு இது. இந்தப் புதிய பேராலய வாயில் கதவை ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் ஆண்டகை அவர்கள் இப்போது செபம் செய்து திறந்து வைப்பார். இறைமக்கள் அனைவரும் நீங்கள் நிற்கும் இடத்திலேயே இருக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நமது ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்த பிறகு இறைமக்கள் பேராலயத்தினுள் நுழையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மேனாள் ஆயர் : மன்றாடுவோமாக.
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்” (திபா 122:1-2). “படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது” (திபா 84:1). “கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைத்து உருகினோம்” (திபா 48:9). “ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு” (திபா 118:1).
வாருங்கள், அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து, பணிந்து, வாழ்த்துவோம், ஆராதிப்போம்! நம் மறைமாவட்டத்தைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமது அருள் நலங்களால் பராமரித்து வழிநடத்தி வந்தமைக்காகக் கடவுளைப் போற்றுவோம். ஏனெனில், நெருக்கடியான வேளையில் அவர் நமக்குச் செவிசாய்த்தார். நமக்குத் துணை செய்த ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம். எண்ணற்ற மக்கள் வழியாக – (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்) – உதவி செய்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். நமக்கு இறைவன் செய்த செயல்களை, பலதரப்பட்ட இடர்ப்பாடுகளிலிருந்து மீட்ட அவரது அருளாற்றலை, அவரது அக்கறை உணர்வை எல்லாம் நினைத்து, புகழ்ந்து தந்தையாம் இறைவனுக்கு முழுமனத்துடன் நன்றி கூறுவோம். ஆண்டவர் நமக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதார நன்றி சொல்வோம். மானிடரான நமக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவருக்கு நன்றி செலுத்துவோம்.
ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். புகழ்கிறோம். ஆராதிக்கிறோம். நற்செய்தியின் ஒளியில் இறையாட்சியை எம் மறைமாவட்டத்தில் கட்டியெழுப்ப உழைத்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர் மற்றும் நல்லுள்ளம் கொண்ட அனைவர்க்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே, எங்கள் பாவங்களை ஏற்று மனம் வருந்துகிறோம். “உமது பேரன்புக்கேற்ப எமக்கு இரங்கும், உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப எம் குற்றங்களைத் துடைத்தருளும்.” நற்செய்திற்குச் சான்றுபகரத் தவறிய நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கேட்கிறோம். உம் பெயரில் போதுமான அன்பும் நம்பிக்கையும் வைக்காத தவறுக்காகவும், இறையாட்சி விழுமியங்களைத் துணிவுடன் ஏற்று வாழத் தவறிய தருணங்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம். ஒட்டுமொத்தமாக உமது வாழ்வு தரும் வார்த்தைக்கும், திருவுளத்திற்கும் பணியாத, இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தவறிய நிகழ்வுகளுக்காக மனம் வருந்துகின்றோம்.


இறைவா, பகையும் பிரிவினையும் தகர்ந்து அன்பினால் கட்டப்பட்ட ஆலயமாக வாழ விசுவாசப் பார்வையைத் தந்தருளும். கிறிஸ்துவின் ஒரே உடலாக மாறிடவும், தூய ஆவியின் ஒரே கோவிலாகக் கட்டியெழுப்பப்படவும் எங்களுக்குத் தாழ்மையான மனதையும், அன்பு உள்ளத்தையும் கனிவுடன் தந்தருளும். ஆண்டவரே, வரும் காலத்தில் அனைத்து ஈடுபாடுகளிலும் உமது மாட்சியை மட்டுமே கண்முன் கொண்டு வாழ எங்களை வழிநடத்தியருளும். அன்பு இயேசுவே, உமது திருவுடலையும் திருஇரத்தத்தையும் பெறுகின்ற நாங்கள் அனைவரும் சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் உறவை வளர்த்திட, புனித அன்னை மரியாளின் அரவணைப்பும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் பரிந்துரையும் எங்களோடு இருப்பதாக.


அனைத்தையும் ஆளும் இறைவா, உம் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவித்த எங்களுக்கு அருமையான கோவிலை அமைத்துக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எண்ணற்ற மக்களுக்கு ஏற்றம் தரும் ஆற்றலாக, அன்பு, அருள், அமைதி வழங்கும் ஊற்றாக, நாளும் உம்மை நாடி வரும் மக்களின் நலம் காத்து, நீர் காட்டிய புதிய திசையில் நாங்கள் சாட்சிய வாழ்வு வாழ அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(இப்போது பேராலயக் கதவின் சாவியை ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் ஆண்டகை அவர்கள் பெற்று பேராலயத்தைத் திறக்கிறார். அதன் பின்பு அந்தச் சாவியானது பேராலயப் பங்குத்தந்தையிடம் ஒப்படைக்கப்படுகிறது.)


(இப்போது நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் நாம் அனைவரும் பேராலயத்தின் உள்ளே செல்ல நமக்கு அழைப்பு தருகிறார். அவரது அழைப்புக்குப் பிறகு, ஆலய மணிகள் ஒலிக்க, பேராயரும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் முன் செல்ல, அவர்களுக்குப் பின்னே இறைமக்கள் அனைவரும் புதிய பேராலயத்தினுள் மகிழ்வோடு நுழைவோம்.)


ஆயர் : அன்பான இறைமக்களே, புகழ்ப்பா இசைத்து இறைவனின் வாயிலில் நுழையுங்கள். இன்னிசை பாடி அவர்தம் முற்றங்களில் நில்லுங்கள்.


(மக்கள் பேராலயத்தினுள் வந்து தங்கள் இடங்களில் நிற்கும் வரை வருகைப் பாடல் பாடப்படும். அதன் பின் திருப்பலி ஆரம்பமாகிறது.)


ஆயர் : தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே
மக்கள் : ஆமென்.


ஆயர் : இறைவனின் தூய திருச்சபையில் அருளும்
சமாதானமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக்கள் : உம் ஆன்மாவோடும் இருப்பதாக.


(திருப்பலி முன்னுரை – பேராலயப் பங்குத்தந்தை)

தீர்த்தம் மந்திரித்தல்


முன்னுரை


“ஈசோப் புல்லினால் என் மேல் தெளித்தருளும். நான் தூய்மையாவேன். நீர் என்னைக் கழுவியருளும். நான் வெண்பனியிலும் வெண்மையாவேன்” என்ற திருப்பாடலின் வரிகளுக்கேற்ப மனத்துயரின் அடையாளமாகவும், திருமுழுக்கின் நினைவாகவும், மக்கள்மீதும் பேராலயச் சுவர்கள்மீதும் தெளிக்க மற்றும் பேராலயப் பீடத்தைப் புனிதப்படுத்தப் பயன்படும் தண்ணீரை நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் இப்போது மந்திரிக்கிறார்.


ஆயர் : அன்பான சகோதர சகோதரிகளே, இக்கோவிலை நேர்ந்தளிக்கும் சடங்கினைச் சிறப்பாக நிறைவேற்ற வந்துள்ள நாம் இத்தண்ணீரை நம் இறைவனாகிய ஆண்டவர் ஆசீர்வதித்தருள மன்றாடுவோம். இத்தண்ணீர் மனத்துயரின் அடையாளமாகவும் திருமுழுக்கின் நினைவாகவும் நம்மீது தெளிக்கப்படும். மேலும், இக்கோவிலின் சுவர்களையும், புதுப்பீடத்தையும் தூய்மையாக்கும். நாம் ஆண்டவரது திருச்சபையில் உண்மையுள்ள மக்களாய் வாழவும், நாம் பெற்ற தூய ஆவிக்குப் பணிந்து நடக்கவும் அவரே நமக்கு அருள்புரிய மன்றாடுவோம்.


(அனைவரும் சிறிது நேரம் அமைதியாகச் செபிப்பர். பின் ஆயர் தொடர்ந்து பின்வருமாறு செபிக்கிறார்.)


ஆயர் : மன்றாடுவோமாக.
எல்லாம் வல்ல இறைவா, அனைத்திற்கும் ஒளியூட்டி வாழ வைப்பவர் நீரே. மனிதர் எம்மீது தனிப்பட்ட அன்பைப் பொழிகின்றீர். இதனால், விண்ணகத் தந்தையாகிய நீர் அவர்களைப் பேணிப் பராமரிப்பது மட்டுமல்ல, உமது அரவணைக்கும் அன்பினால் பாவத்திலிருந்தும் விடுவிக்கின்றீர். நீரே அவர்களைத் தலையாகிய கிறிஸ்துவிடம் இடையறாது கூட்டிச் செல்கின்றீர். ஏனெனில், பாவக்கறை படிந்த மனிதர் கருணை மிகுந்த உமது திட்டத்தினால் திருமுழுக்கு ஊற்றில் இறங்கி, கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு உயிர்த்து, அவரது உடலின் உறுப்புகளாக மாறவும், நிறைவாழ்வுக்கு உரிமையாளராகத் திகழவும் நீரே திருவுளமானீர். ஆகவே, இறைவா! இத்தண்ணீரை  ஆசீர்வதித்து அர்ச்சித்துப் புனிதப்படுத்தியருளும். எங்கள்மீதும் இக்கோவிலின் சுவர்கள்மீதும் தெளிக்கப்படும் இத்தண்ணீர், கிறிஸ்துவில் எங்களைத் தூய்மையாக்கித் தூய ஆவியாரின் கோவிலாக மாற்றுகின்ற திருமுழுக்கின் அடையாளமாய் இருக்கின்றது. இக்கோவிலில் பக்திச் சிறப்புடன் கொண்டாடப்படும் திருச்சடங்குகளில் கலந்து கொள்ளும் நாங்களும் எங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒருநாள் விண்ணக எருசலேமுக்கு வந்து சேர அருள்கூர்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென். (தீர்த்தம் தெளித்தல்)


ஆயர் : இரக்கம் நிறைந்த தந்தையாகிய இறைவன் இந்தச் செப வீட்டில் எழுந்தருளியிருப்பாராக. அவர் வாழும் கோவிலாகிய நம்மைத் தூய ஆவியாரின் அருளால் புனிதப்படுத்துவாராக.


மக்கள் : ஆமென்.

(“உன்னதங்களிலே” பாடப்படும்.)


திருக்குழும மன்றாட்டு
ஆயர் : என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இந்த இல்லத்தின்மீது உமது அருளைப் பொழிந்தருளும். இங்கு உம்மைக் கூவி அழைப்போர் அனைவருக்கும் அருள் உதவியைத் தந்து உமது அருள்வாக்கு, அருளடையாளங்கள் இவற்றின் ஆற்றலால் நம்பிக்கையாளர் அனைவரின் இதயங்களை உறுதிப்படுத்துவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


இறைவார்த்தைப் பவனி


முன்னுரை
இறைவனின் வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. எத்தகைய இறுகிய உள்ளத்தையும் இலகுவாக்குவது. உடலாலும் உள்ளத்தாலும் சோர்ந்தோரை வலுப்படுத்துவது. இவ்வுலகில் படைப்புகள் உருவானதும், உயிர் வாழ்வதும் இறைவார்த்தையால்தான். இப்போது திருத்தொண்டர் நம் பேராலய முகப்பிலிருந்து உயிருள்ள இறைவார்த்தையைத் தம் கரங்களில் ஏந்தி வருகின்றார். அனைவரும் எழுந்து நின்று அதற்கு அஞ்சலி செலுத்துவோம். நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் இறைவார்த்தையைப் பெற்றுக்கொண்டு ஆசீர் வழங்குவார்.


ஆயர் : இறைவனின் அருள்வாக்கு இக்கோவிலில் என்றும் முழங்குவதாக! கிறிஸ்துவின் மறைபொருளை உங்களுக்கு வெளிப்படுத்துவதாக! திருஅவையில் உங்களுக்கு மீட்பை அருள்வதாக!
மக்கள் : ஆமென்.


முதல் வாசக முன்னுரை


முதல் வாசகம் : ஆகா 2: 6-9
இரண்டாம் வாசக முன்னுரை
இரண்டாம் வாசகம் : 1கொரி 3: 9-11
அல்லேலூயா கீதம்
நற்செய்தி வாசகம் : யோவா 2: 13-22
மறையுரை : பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆண்டகை


(நம்பிக்கை அறிக்கை பாடப்படும்.)


அர்ச்சிப்பு வழிபாடு


அன்பார்ந்தவர்களே, புனிதமான நேரம் இது. புனிதச் சடங்குகள் ஆரம்பமாகும் தருணம் இது. வரலாற்றுச் சிறப்புமிக்க கலைக்கோவிலாகிய நம் மறைமாவட்டத் தாய்க் கோவிலை நேர்ந்தளித்து புனிதத் தைலம் பூசி அர்ப்பணிப்பதன் வழியாக, இது இறைவன் வாழும் இல்லமாக, இறைவனின் உயிருள்ள பிரசன்னம் தங்கும் ஆலயமாக மாறப் போகிறது. இப்புனித வழிபாட்டில் பக்தி நிறைந்த உள்ளத்தோடு நாம் பங்கேற்போம்.


புனிதர்களின் மன்றாட்டு
முன்னுரை

“தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்” என்ற இறைவனின் அழைப்பை ஏற்று புனித வாழ்வு வாழ்ந்து, கிறிஸ்துவின் நற்செய்திக்காகச் சாட்சிய வாழ்வு வாழ்ந்து, நமக்கும் எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டி மகிமைத் திருச்சபையில், கிறிஸ்துவின் ஒரே மறையுடலில் இணைந்திருக்கின்றனர் நம் புனிதர்கள். நம்மோடு ஆழமான நட்புறவில் பயணித்து, நமக்காகக் கடவுளிடம் பரிந்து பேசிக்கொண்டே இருக்கும் அவர்களிடம் நமது பேராலயத்திற்காகச் சிறப்பாகப் பரிந்து பேச இப்பொழுது புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடப்படுகிறது. அதற்கான அழைப்பை நம் ஆயர் தருகிறார். அனைவரும் முழந்தாள்படியிட்டு நம் பேராலயத்திற்காகச் செபிப்போம்.


ஆயர் : அன்புநிறை சகோதர சகோதரிகளே, இறைமக்களின் இதயங்களைத் தமக்குரிய ஞானக் கோவிலாக மாற்றும் எல்லாம் வல்ல இறைவனை நோக்கி நம் புனிதர்களோடு சேர்ந்து மன்றாடுவோம்.
ஆண்டவரே, இரக்கமாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்.
கிறிஸ்துவே, இரக்கமாயிரும். கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
ஆண்டவரே, இரக்கமாயிரும். ஆண்டவரே, இரக்கமாயிரும்.
புனித மரியே, இறைவனின் தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே, ”
இறைவனின் புனித தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித திருமுழுக்கு யோவானே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யோசேப்பே, ”
புனித பேதுருவே, புனித பவுலே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித தோமாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்திரேயாவே, ”
புனித யோவானே, ”
புனித மகதலா மரியாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஸ்தேவானே, ”
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, ”
புனித லாரன்ஸே, ”
புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஆக்னஸே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித கிரகோரியே, ”
புனித அகுஸ்தினே, ”
புனித அத்தனாசியுஸே, ”
புனித அருளானந்தரே, ”
புனித பேசிலே, ”
புனித மார்ட்டினே, ”
புனித பெனடிக்டே, ”
புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித இலொயோலா இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ் சவேரியாரே, ”
புனித வியான்னி மரிய ஜானே, ”
புனித அவிலா தெரேசே, ”
புனித அன்னை தெரேசாவே, ”
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கனிவு கூர்ந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அனைத்திலுமிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனித உடலேற்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தூய ஆவியாரின் வருகையினாலே எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உமது தூய திருஅவையை, ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்;. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருஅவைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும், திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைத்துலக மக்களுக்கும், அமைதியும் மெய்யான ஒற்றுமையும் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிப்படுத்திக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இந்தப் பேராலயத்தைத் திருநிலைப்படுத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும்.
கிறிஸ்துவே, கனிவாய்ச் செவி சாய்த்தருளும்.
(புனிதர்களின் மன்றாட்டின் முடிவில் ஆயர் நின்றுகொண்டு, கைகளை விரித்துப் பின்வருமாறு செபிக்கிறார்.)
ஆயர் : எல்லாம் வல்ல இறைவா, உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம். புனித கன்னி மரியாள் மற்றும் புனிதர் அனைவரின் பரிந்துரையால் எங்கள் வேண்டுதல்களுக்குத் தயவாய்ச் செவிசாய்த்தருளும். உம் திருப்பெயருக்கு நேர்ந்தளிக்கப்படும் இப்பேராலயம் மீட்பின் இல்லமாகவும் அருளின் ஆலயமாகவும் அமைவதாக. இங்கே உம்முடைய மக்கள் அனைவரும் ஒன்றாய்க் கூடிவந்து உண்மையிலும் ஆவியிலும் உம்மை வழிபட்டு அன்பினால் தங்களைத் திருக்கோவிலாகக் கட்டியெழுப்பச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


பேராலய மற்றும் பீட நேர்ந்தளிப்பு செபம்
முன்னுரை

உலக மீட்புக்காக இறந்து, உயிர்த்த கிறிஸ்துவே உண்மையான, நிறைவான ஆலயம். இறைமக்களாகிய நாம் அனைவரும் அதன் உயிருள்ள கற்கள். எனவே, இப்பேராலயம் நமது செப வீடு ஆகும். இதில் நாம் ஒன்று கூடி, இறைவார்த்தையைக் கேட்டு, செபித்து, அருள்சாதனங்களைப் பெறுகிறோம். திருப்பலியில் பங்கேற்கிறோம். கிறிஸ்துவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் உட்கொள்கிறோம். இப்பேராலயம் பயணம் செய்யும் திருச்சபையின் அடையாளமாகவும், விண்ணக எருசலேமின் அடையாளமாகவும் திகழ்கிறது. இதனை நன்கு உணர்ந்தவர்களாக, நம் ஆயரோடு ஒன்றித்து, நாமும் இப்போது பேராலய மற்றும் பீட நேர்ந்தளிப்புச் செபத்தில் பக்தியுடன் பங்கேற்போம்.
ஆயர் தலைச்சீரா இன்றி, கைகளை விரித்து உயர்ந்த குரலில் சொல்வது:
ஆயர் : இறைவா, உமது திருச்சபையை அர்ச்சிப்பவரும் ஆள்பவரும் நீரே. உமது திருப்பெயரை நாங்கள் சிறப்பாகப் பறைசாற்றி விழாக் கொண்டாடுவது முறையே. இன்று நம்பிக்கையாளர்களின் திருக்கூட்டம் இந்தச் செப வீட்டை மிகச் சிறப்பான சடங்குகளால் உமக்கு என்றென்றைக்கும் நேர்ந்தளிக்க விழைகின்றது. ஏனெனில், இங்குதான் அத்திருக்கூட்டம் உம்மை பக்தியார்வத்தோடு வழிபடுகின்றது. உமது வார்த்தையால் படிப்பினை பெறுகின்றது. திருவருட்சாதனத்தால் ஊட்டம் அடைகின்றது. இப்பேராலயம் திருச்சபையின் மறைபொருளைக் குறிப்பாய் உணர்த்துகின்றது. இத்திருச்சபையைக் கிறிஸ்து பெருமான் தம் இரத்தத்தால் புனிப்படுத்தி, மகிமை மிகுந்த தம் மணமகளாகத் துலங்கச் செய்தார். இவ்வாறு, அது நிறைவான நம்பிக்கையால் கன்னியாகவும், தூய ஆவியின் வல்லமையால் பேறுடையதாகவும் திகழ்கின்றது.
தூய திருச்சபையே ஆண்டவர் தேர்ந்தெடுத்த திராட்சைக் கொடி. இக்கொடி தன் கிளைகளை உலகெங்கும் பரப்பி நிற்கின்றது. தனது தண்டுடன் இணைந்த பதியங்களைத் தாங்கிக் கொண்டு, விண்ணுலகை நோக்கி எழும்புகின்றது. பேறுபெற்ற அத்திருச்சபை மக்களிடையே குடிகொள்ளும் இறைவனின் இல்லமாகும். உயிருள்ள கற்களால் கட்டப்பட்ட புனித கோவிலாகும். அது கிறிஸ்து இயேசுவை மூலைக்கல்லாகவும் திருத்தூதர்களை அடித்தளமாகவும் கொண்டுள்ளது. மாண்பு மிகுந்த அத்திருச்சபை எல்லாருக்கும் தெளிவாக விளங்கிட மலைமேல் கட்டப்பட்ட நகரம். அதிலேதான் செம்மறியின் அணையா விளக்கு ஒளிர்கின்றது. புனிதரின் நன்றிப்பா எதிரொலிக்கின்றது.
ஆகவே, இறைவா! உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இந்தக் கோவிலையும் இந்தப் பீடத்தையும் விண்ணகக் கொடைகளால் நிரப்பி புனிதமாக்கும். இதனால் இக்கோவில் எக்காலத்திற்கும் புனிதத் தலமாவதாக. இப்பீடமும் கிறிஸ்துவின் பலிக்கு ஏற்றதாக என்றும் இருப்பதாக.
இங்கே இறையருட்பெருக்கு மனிதரின் பிழைகளைப் போக்குவதாக. இதனால், விண்ணகத் தந்தையே, பாவத்தால் உயிரிழந்த மக்கள் மீண்டும் அருள்வாழ்வு பெற்று புதுப்பிறப்படைவார்களாக.
இங்கே இறைமக்கள் திருப்பீடத்தைச் சுற்றி நின்று பாஸ்கா நினைவுப் பலியைக் கொண்டாடுவார்களாக. கிறிஸ்துவின் வார்த்தையாலும் திருவுடலாலும் ஊட்டம் பெறுவார்களாக.
இங்கே புகழ்ச்சிப் பலியின் மகிழ்ச்சி எதிரொலிப்பதாக. வானகத் தூதரின் இன்னிசையோடு மாந்தரின் குரலும் ஒருங்கிணைவதாக. மண்ணகத்தின் மீட்புக்காக இடைவிடா மன்றாட்டு உம் திருமுன் எழுவதாக.
இங்கே எளியோர் இரக்கம் பெறுவார்களாக. ஒடுக்கப்பட்டோர் உண்மையான உரிமை அடைவார்களாக. மாந்தர் அனைவரும் மகிழ்வோடு வானக எருசலேமுக்கு வந்து சேரும்வரை உம்முடைய மக்கள் என்னும் மகிமைக்கு ஏற்றவாறு வாழ்ந்திடுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


திருத்தைலம் பூசுதல்
முன்னுரை

குருவாகவும் செம்மறியாகவும் உள்ள கிறிஸ்துவே பலிபீடமாகவும் திகழ்கிறார். அவரே விண்ணகக் கோவிலின் உயிருள்ள பீடம் ஆவார். இது சிலுவைப் பலியாகிய திருப்பலி நிறைவேற்றப்படும் பீடம். கிறிஸ்துவின் திருவுடலும் திருஇரத்தமும் பகிர்ந்தளிக்கப்படும் இடம். இத்துணை மாண்புமிக்க பலிபீடத்தின் நடுவிலும், அதன் நான்கு மூலைகளிலும் நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் இப்போது கிறிஸ்மா திருத்தைலத்தை ஊற்றி, அதைப் பீடம் முழுவதும் பூசி, பீடத்தை அர்ச்சிக்கிறார். அதே வேளையில் பேராலயத்தின் சுவரில் பதிக்கப்பட்டுள்ள 12 சிலுவைகள்மீதும் 12 அருள்பணியாளர்களால் (பேரருள்திரு. குழந்தை ராஜ், அருள்பணி. ஞானப்பிரகாசம், அருள்பணி. ளு. யு. அந்தோனிசாமி, அருள்பணி. சந்தியாகு, அருள்பணி. குரூஸ், அருள்பணி. கென்னடி, அருள்பணி. மோட்சராஜன், அருள்பணி. அந்தோனி வியாகப்பன், அருள்பணி. அருள் அந்தோனி, அருள்பணி. போஸ்கோ, அருள்பணி. ஜோமிக்ஸ், அருள்பணி. ஹென்றி ஜெரோம் சே.ச.) கிறிஸ்மா தைலம் பூசப்பட்டு, பேராலயத்தின் சுவர்களும் அர்ச்சிக்கப்படுகின்றன. நாமும் இத்திருச்சடங்கில் பக்தியுணர்வுடன் பங்கெடுப்போம்.


ஆயர் பீடத்திற்கு முன்நின்று குரல் எழுப்பிச் சொல்வது:
ஆயர் : நாம் திருத்தைலம் பூசும் இப்பீடத்தையும் கோவிலையும் இறைவன் தம் வல்லமையால் புனிதப்படுத்துவாராக. இவ்வாறு இவை கிறிஸ்து, திருச்சபை என்னும் மறைபொருளை வெளியடையாளமாய்க் காட்டுவனவாக.
பீடத்திற்கும் பேராலயத்திற்கும் தூபமிடுதல்
முன்னுரை
கிறிஸ்துவின் அடையாளமாகவும் நமது நன்றியறிதலின் மையமாகவும் உள்ள இப்பலிபீடத்திலிருந்து நம் செபங்களும் மன்றாட்டுகளும் வான் நோக்கிச் செல்லும் என்பதன் அடையாளமாக, நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் இப்போது பீடத்தின்மேல் தீ மூட்டி, அதில் சாம்பிராணி இட்டு, தூபம் மேல் நோக்கி எழச் செய்து, பீடத்திற்கு தூபமிட்டு வணக்கம் செலுத்துகின்றார். நாமும் பக்தியுணர்வுடன் இத்திருச்சடங்கில் பங்கெடுப்போம். (பீடத்தின்மீது ஒரு சிறிய தீக்கலம் வைக்கப்படுகிறது. அதில் சாம்பிராணியும் நறுமணப் பொருள்களும் இடப்படுகின்றன. தூபம் எழும்புகிறது.)
ஆயர் : ஆண்டவரே! எங்கள் மன்றாட்டு தூபம்போல் உம் திருமுன் எழுவதாக. இந்த இல்லத்தில் நறுமணம் நிறைவதுபோல், திருச்சபையிலும் கிறிஸ்துவின் நறுமணம் கமழ்வதாக.
(பின்பு ஆயர் ஒரு தூபக்காலில் சாம்பிராணி இட்டு பீடத்திற்குத் தூபமிடுகிறார். பின்பு ஆயர்களுக்குத் திருத்தொண்டரால் தூபம் காட்டப்படுகிறது. பேராலயச் சுவரில் பதிக்கப்பட்டுள்ள சிலுவைகளுக்கு பேராலய முன்னாள் பங்குத்தந்தையர் அருள்பணி. தே. சேவியர் மற்றும் அருள்பணி. ராஜே~; தூபமிடுகிறார்கள். அதன் பிறகு பீடம் அலங்கரிக்கப்படுகிறது.)


பீடத்திலும் பேராலயத்திலும் ஒளியேற்றுதல்
முன்னுரை

ஒளி இறைவனின் பிரசன்னம். இறைவனின் படைப்பிலே முதன்மையானதும் ஒளிதான். “அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது” என்றும், “இயேசுவே உலகின் ஒளி” என்றும் சுட்டிக்காட்டுகிறார் புனித யோவான். எனவே, “நானே உலகின் ஒளி” என்ற இயேசுவை புதிய திரியை ஏற்றுவதன் மூலம் நம் பேராலயத்தில் பிரசன்னப்படுத்துவோம். இப்பொழுது, அருள்பணி. சேவியர் டெரன்ஸ் மற்றும் அருள்பணி. அந்தோனிராஜ் நமது ஆயரிடமிருந்து புதிய திரியைப் பெற்றுக்கொண்டு பீடத்திலுள்ள மெழுகுதிரிகளுக்கு ஒளியேற்றுவார்கள். பின்னர், திரு. வளன் அரசு, திரு. சேவியர் அமல்ராஜ், திரு. பிச்சையா, திருமதி. அல்போன்ஸ், திருமதி. ஜெயராணி ஆகியோரால் குத்துவிளக்கின் ஐந்து திரிகளும் ஏற்றப்படும். அதன்பின், பேராலயத்தில் உள்ள அனைத்து அலங்கார விளக்குகளும் எரியவிடப்படும்.


ஆயர் : கிறிஸ்துவின் ஒளி திருச்சபையில் மிளிர்வதாக! இதனால் உலக மக்கள் அனைவரும் நிறைவான உண்மையைக் கண்டடைவார்களாக!


திருச்சிலுவையை மந்திரித்தல்
முன்னுரை

யூதர்களுக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருந்த சிலுவையை இயேசு மீட்பின் சின்னமாக மாற்றினார். “நம்மை அன்பு செய்தார். தன்னையே நமக்காய் கையளித்தார்” என்ற இறைவார்த்தைக்கேற்ப உலகின்மீது கொண்ட அளவு கடந்த அன்பின் வெளிப்பாடாய் இயேசு மீட்பின் பலியை நிறைவேற்றியது இச்சிலுவையில்தான். சிலுவை நம் மீட்பின் சின்னம். எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் நம்பிக்கையின் சின்னம். கிறிஸ்தவர்களின் அடையாளமான இத்திருச்சிலுவையை நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் இப்போது அர்ச்சித்துப் புனிதப்படுத்துகிறார்.
ஆயர் : மன்றாடுவோமாக.
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனிதரை மீட்க மனுவுருவெடுத்த உம் ஒரே பேறான திருமகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளையும் மரணத்தையும் நினைவூட்டும் இச்சிலுவையை  ஆசீர்வதித்துப் புனிதப்படுத்த உம்மை மன்றாடுகிறோம். இது உம் மக்களுக்கு விசுவாச வாழ்வின் சின்னமாகவும், மனிதரின் மீட்பாகவும், துன்பங்களில் ஆறுதலாகவும், எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் கருவியாகவும், வாழ்க்கையில் நம்பிக்கையாகவும் இருப்பதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(தீர்த்தம் தெளித்தல் மற்றும் தூபம் காட்டுதல்)


சிலுவைப் பாதை படங்களைப் புனிதப்படுத்துதல்
முன்னுரை

தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தன்னுயிர் தந்தார் இயேசு. அவர் நமக்காகப் பட்ட பாடுகளைத் தியானித்து, அவர் அனுபவித்த துன்பங்களை நாமும் உணரவும், அவரது பாடுகளை நினைவில் கொள்ளவும் உதவி புரியும் சிலுவைப் பாதை படங்களை இப்போது நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் அர்ச்சித்துப் புனிதப்படுத்துகிறார்.
ஆயர் : மன்றாடுவோமாக.
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளையும், மரணத்தையும், உயிர்ப்பையும் தியானிக்க நாங்கள் தேர்ந்தெடுத்து இங்கு நிறுவும் இப்படங்களை  ஆசீர்வதித்துப் புனிதப்படுத்த உம்மை மன்றாடுகிறோம். இப்படங்களின் முன் உம்மைப் பக்தியுடன் வழிபடும் மக்கள் அனைவரும், இவ்வாழ்வில் உம் அருளைத் தொடர்ந்து பெற்று, மறுவாழ்வில் முடிவில்லா மகிமை அடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(தீர்த்தம் தெளித்தல் மற்றும் தூபம் காட்டுதல்)


சுரூபங்களைப் புனிதப்படுத்துதல்
முன்னுரை

இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு இறைவனைக் காண்பித்து இன்றும் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் புனிதர்கள். நாம் அனைவரும் அவர்களைப் போல வாழ அழைக்கப்படுகிறோம். நமது வாழ்விற்கு முன்மாதிரிகளாய் இருக்கும் புனிதர்களை நினைவுபடுத்துவது அவர்களது சுரூபங்கள். நமது பேராலயத்தில் உள்ள புனிதர்களின் திருச்சுரூபங்களை இப்போது நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் அர்ச்சித்துப் புனிதப்படுத்துகிறார்.


ஆயர் : மன்றாடுவோமாக.
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் புனிதர்களின் உருவத்தைப் படத்திலோ, சுரூபத்திலோ வடித்து, அவற்றை ஊனக் கண்களினால் நோக்குந்தோறும், எங்கள் ஞானக் கண்களினால் அவர்களுடைய செயல்களையும் புனிதத்தையும் தியானிக்க அருளினீரே. இப்பேராலயத்தினுள் அமைந்துள்ள இறைவனின் அன்னையும் எங்கள் அன்னையுமான கன்னி மரியாவின் சுரூபத்தையும், புனித சூசையப்பர், புனித சவேரியார், புனித குழந்தை தெரசம்மாள் ஆகியோரின் சுரூபங்களையும், திருத்தூதர்களான புனித பேதுரு, புனித அந்திரேயா, புனித பெரிய யாக்கோபு, புனித யூதா ததேயு, புனித பிலிப்பு, புனித யோவான், புனித தோமா, புனித பர்த்தலமேயு, புனித சிறிய யாக்கோபு, புனித சீமோன், புனித மத்தியா, புனித மத்தேயு ஆகியோரின் சுரூபங்களையும், வானதூதர்களின் சுரூபங்களையும், இப்பேராலயக் கோபுரத்தில் அமைந்துள்ள புனித சவேரியார், புனித மிக்கேல் அதிதூதர், புனித கபிரியேல் அதிதூதர் ஆகியோரின் சுரூபங்களையும்  ஆசீர்வதித்து, அர்ச்சித்துப் புனிதப்படுத்த உம்மை இறைஞ்சுகிறோம். இச்சுரூபங்களைப் பக்தியுடன் பயன்படுத்தி உம்மை மகிமைப்படுத்தும் நாங்கள் அனைவரும், இவ்வாழ்வில் உமது அருளைப் பெற்று, மறுவாழ்வில் முடிவில்லா மகிமை அடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(தீர்த்தம் தெளித்தல் மற்றும் தூபம் காட்டுதல்)


புனித சவேரியாரின் திருப்பண்டம் நிறுவுதல்
முன்னுரை

கடவுளது அருளை உணரத் துணைபுரிவது திருப்பண்டங்கள். ஒரு புனிதரின் திருப்பண்டத்தை நம்பிக்கையோடு ஒருவர் பயன்படுத்தும்பொழுது, அப்புனிதரின் புனித வாழ்வு நினைவுபடுத்தப்பட்டு, அவரது பரிந்துரை வழியாக அவர் செபிக்கத் தூண்டப்படுகின்றார் என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் நம்பிக்கையாகும். எனவே, நம்மைக் கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்க்கத் துணைபுரியும் நம் மறைமாவட்டப் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டத்தை இப்போது நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் நம் பேராலயத்தில் நிறுவுகிறார்.


காணிக்கை பவனி
முன்னுரை

மனித வாழ்வு இறைவன் நமக்குத் தந்த சிறப்பானதொரு கொடை. தன்னையே உலகிற்குப் பலியாக அளித்த இறைவனின் அன்பிற்கு ஈடாக நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்று ஆபேலும் ஆபிரகாமும் ஆண்டவருக்கு காணிக்கை செலுத்தியதுபோல நாமும் நிலத்தின் விளைவும், நமது உழைப்பின் பலனுமாகிய பொருட்களை ஆண்டவருக்குக் காணிக்கையாக்குவோம். இப்போது, நமது மறைமாவட்டத்தின் ஒவ்வொரு மறைவட்டத்திலிருந்தும் தலா இரண்டு பேர்களும், பேராலயப் பங்கு மக்களும் காணிக்கை செலுத்துகின்றனர். நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்கிறார்.
(காணிக்கைப் பாடல் பாடப்படுகிறது. திருத்தொண்டர் காணிக்கைகளைத் தயார் செய்கிறார். அனைத்தும் தயார் ஆனபின், ஆயர் பீடத்தை முத்தி செய்து, காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கிறார். தூபம் பயன்படுத்துவது இல்லை.)
ஆயர் : சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
மக்கள் : ஆண்டவர் தம் திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும்…

காணிக்கைமீது மன்றாட்டு
ஆயர் : ஆண்டவரே, திருஅவை பேரின்பத்துடன் அளிக்கும் காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக. அதனால் இப்புனித இல்லத்தில் ஒன்றுகூடும் உம் மக்கள் இங்கு நடைபெறும் மறைநிகழ்ச்சிகளால் முடிவில்லா மீட்பைக் கண்டடையச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.


(திருப்பலி தொடர்கிறது. நற்கருணை வழங்கியபின் நற்கருணை பேழை அர்ச்சித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.)


நற்கருணை பேழையைப் புனிதப்படுத்துதல்
முன்னுரை

நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமும் ஆகும். நற்கருணையிலிருந்தே திருச்சபை தன் வாழ்வைப் பெறுகிறது. திருச்சபையின் அருள்வளம் முழுவதும் நற்கருணையில் அடங்கி இருக்கிறது. “இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்” என்ற இயேசுவின் உயிருள்ள பிரசன்னம் நிறைவாக விளங்கும் நற்கருணையை வைக்கப் பயன்படும் பேழையை இப்போது நம் ஆயர் மேதகு அந்தோனிசாமி ஆண்டகை அவர்கள் அர்ச்சித்துப் புனிதப்படுத்துகிறார்.
ஆயர் : மன்றாடுவோமாக.
எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திருவுடலை வழிபடவும், நோயாளிகளுக்குத் திருவுணவாக வைத்துக் காப்பதற்காகவும் இப்பேழையை அமைத்துள்ளோம். உமது அருளைப் பொழிந்து இதனை  ஆசீர்வதித்து, அர்ச்சித்துப் புனிதப்படுத்துவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.

(தீர்த்தம் தெளித்தல் மற்றும் தூபம் காட்டுதல்)


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆயர் : மன்றாடுவோமாக.
ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இப்பலி உணவின் வழியாக உமது உண்மையை எங்கள் உள்ளங்களில் வளர்ந்தோங்கச் செய்தருளும். நாங்கள் இப்புனிதக் கோவிலில் உம்மை இடைவிடாது வழிபடவும், உம் திருமுன் புனிதர் அனைவருடனும் உம்மை மாட்சிப்படுத்தவும் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
மக்கள் : ஆமென்.

(நன்றியுரை – முதன்மைக் குரு ரூ இறுதி ஆசீர்)
(திருப்பலி முடிந்ததும் பேராயரும், ஆயர்களும், அருள்பணியாளர்களும் பழைய ஆலயத்திற்குப் பவனியாகச் செல்கின்றனர்.)

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy