காணிக்கைப் பாடல்கள்

காணிக்கைப் பாடல்கள்

01. அகிலம் படைத்த ஆண்டவனே

அனைத்தையும் தருகின்றோம்

ஆற்றல் நிறைந்த அகிலவனே

அனைத்தையும் தருகின்றோம் (2)

தருவோம் தருவோம் தந்து கொண்டிருப்போம்

இதயத்தின் துடிப்பு இருக்கும் வரை (2)

1. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

விளைச்சலைத் தருகின்றோம்

பாலை போன்ற எங்கள் மனதின் வறட்சியைத் தருகின்றோம் (2)

நிறைவாய்க் கொடுத்தால் நிறைவாய்க் கிடைக்கும்

என்பதை நம்புகிறோம் (2)

2. கதிரவன் ஒளிபோல் கடலின் வளம் போல்

நிறைகளைத் தருகின்றோம்

இருள்போல் எங்கள் இதயத்தில் இருக்கும்

குறைகளைத் தருகின்றோம் (2)

நல்லது கொடுத்தால் நல்லது கிடைக்கும் என்பதை நம்புகிறோம்

02. அடியோர் யாம் தரும் காணிக்கையை

அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே (2)

1. பாவியென்றெம்மைப் பாராமல்

பாவத்தின் தீமையை அடையாமல் (2)

பரிகாரம் என ஏற்றிடுவாய்

பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

2. வாழ்வுக்கு ஒருநாள் முடிவு உண்டு – விண்

வாழ்வுக்கு எமக்கென்று எது உண்டு (2)

என் மனம் அறிந்ததன் பயன் என்னவோ

எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

03. அப்பா பிதாவே அனைத்தையும் நான்

உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

1. என் உடலும், உள்ளமும், அனைத்தையுமே

உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் குடும்பம், குழந்தைகள், உறவினரை

உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

2. என் படிப்பு, பட்டங்கள் பதவிகளை

உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே

உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

3. என் கவலைகள், துயரங்கள் அனைத்தையுமே

உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே

உம்மிடம்  ஒப்படைக்கின்றேன்

04. அர்ப்பணமாகினேன் உன் அன்பிலே

அர்ப்பணித்தேன் என்னை அருளினிலே (2)

ஏற்றிடுவாய் என் இயல்பினிலே மாற்றிடுவாய் உன் உறவினிலே

1. தாய் தந்தை அன்பு உயர்வானது – உந்தன்

பேரன்பு அதனிலும் மேலானது (2)

பொறிகளில் வார்த்திட இயலாதது – எந்தன்

விழிகளில் கவலை ஏன் துளிர்க்கின்றது – 2

2. எத்தனை ஆயிரம் நன்மைகளால் – ஐயா

ஏழை என் வாழ்வினை அலங்கரித்தாய் (2)

என்னுடல் பொருள் ஆவி உவந்தளித்தே – எந்தன்

இன்னுயிர் உள்ளவரே உமைப் புகழ்வேன் – 2

05. அள்ளித் தருகின்றேன் அனைத்தையும் தருகின்றேன்

அர்ப்பணமாய் ஏற்றிடுவாய்

அருள் பொழிந்து எனைக் காத்திடுவாய் (2)

1. சிறிய இதயத்தைத் தருகின்றேன் – என்

செல்வம் அனைத்தையும் தருகின்றேன்

எளிய இதயத்தைத் தருகின்றேன் – யாம்

பெற்றவை அனைத்தையும் தருகின்றேன்

உடல் பொருள் ஆவியைத் தருகின்றேன் – 2

உளம் உவந்தே அனைத்தையும் தருகின்றேன் – 2

2. சொந்த பந்தத்தைத் தருகின்றேன் – என்

சுகங்கள் அனைத்தையும் தருகின்றேன்

ஆசைகள் அனைத்தையும் தருகின்றேன் – அதை

அளவின்றி உமக்கே தருகின்றேன்

மண் பொன் பொருளையும் தருகின்றேன் – 2

மனம் மகிழ்ந்தே அனைத்தையும் தருகின்றேன் – 2

06. அன்பின் பலியாய் ஏற்பாய் – உம்மை

அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்

அன்பின் பலியாய் ஏற்பாய்

புண்படும் மனதின் துயர் தீர்ப்பாய் -2 எமைப்

புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

1. வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள்

வள்ளல் உன் கருணையில் வாழ்கின்றோம் (2)

முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் – 2 எமைத்

திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

2. படைப்பின் மீதே பரிவிருக்க – அந்தப்

பரிவால் உன் மகன் உயிர்கொடுக்க (2)

படைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க – 2

உனில் படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க

07. அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே

உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே (2)

1. பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்

பூவாக மணம் வீச வைத்தோம் ஆ … (2)

புதிரான வாழ்வே எதிரானதாலே -2

பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே

உம் அருளோடு அணைப்பாய் மாபரனே

2. அருளான வாழ்வு இருளானதாலே

திரியாக எமை ஏற்றி வைத்தோம் (2)

திரியாகக் கருகி மெழுகாக உருகி – 2

பலியாக வைத்தோம் ஆண்டவனே

புது ஒளியாக மாற்றும் தூயவனே

08. ஆயிரம் தீபங்கள் ஏந்தி

ஆனந்த இராகங்கள் மீட்டி

அர்ப்பணப் பூவாக வந்தேன்

அன்பே நீ என் வாழ்வை ஏற்பாய்

1. கவலையும் கண்ணீரும் என் வாழ்வில் தேங்கும் – உன்

கருணையும் இரக்கமும் என் சோர்வைத் தாங்கும்

தியாகங்கள் செய்யவும் தீபங்கள் ஏற்றவும்

தலைவனே உன்னிடம் யாம் வேண்டுகின்றோம்

வரமாக உன்னைக் கேட்பதெல்லாம்

உடைந்த உள்ளத்தை உரு மாற்றவே

2. வளங்களைப் பொழிந்திடும் நாயகன் உன்னில் – எம்

கரங்களைக் குவித்து யாம் வேண்டி நின்றோம்

தரும்பலிப் பொருட்களை தயவுடன் ஏற்றிட

திருவே உன் திருப்பாதம் பலியாக வந்தேன்

09. ஆனந்தமாய் உந்தன் பீடம் விரைந்தேன்

ஆலயமணி அழைக்கையிலே ஆனந்தமாய்

அன்பே உன் பலிதனில் பலியாக்க வந்தேன்

எனை தருகின்றேன் காணிக்கையாய் காணிக்கையாய்

வருகின்றேன் தருகின்றேன் பலியினில் இணைகின்றேன்

இயேசுவே காணிக்கையாய்

சமர்ப்பணம் சமர்ப்பணம் – 2 (யேசுவே)

1. பலிப்பொருளாய் திருவேள்வியாய் அதனாய்

தன்னையே முழுவதும் தருகின்ற அன்பே

திருஉடலாய் திருநினைவாம் மறைப்பொருளாய்

விழிதனில் நிறைகின்ற தெய்வீக அன்பே

எதை நான் தருவேன் இதற்கிணையாய் இறைவா

இதயம் தருவேன்; ஏற்பாயா தலைவா

இது கல்வாரி நாயகன் பலியே

நம்மை விண்ணோடு இணைக்கும் பலியே –  2 வருகின்றேன்

2. எனை அழைத்தாய் கருவாய் உருவாகும் முன்பே

கனிவோடு என்னை கண்ணோக்கினாய்

எனை பதித்தாய் உம் கரம் தனில் என் பெயர்தன்னை

பூவாய் மலர்ந்தேன் உம் பீடம் தனிலே

மாறாத உமதன்பு எனைச் சூழ்ந்ததை உணர்ந்தேன்……

அனல்கின்ற நெருப்பாய் நீ எனில் நிறைவதை அறிந்தேன்

இனி வாழ்வது நான் அல்ல நீயே

எனை பலியாக்கினேன் உந்தன் பீடம் – 2 ஆனந்தமாய்

10. இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் எம்மை

1. எரியா விளக்கு எனை நான் உனக்குத்

தந்தேன் ஏற்றிடுவாய் (2)

உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்

சுடராய் மாற்றிடுவாய்

2. மலரா கொத்து வாழ்வினைக் கொய்து

தாள்களில் படைக்கின்றேன் (2)

புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட வரம் கேட்பேன்

11. இருகரம் குவித்து இறைவா தொழுதோம்

இதயத்தைப் பதத்தில் பலியாய் அளித்தோம்

இருகரம் குவித்து இறைவா தொழுதோம்

1. நிலத்தில் விளைந்த மணிகள் குவித்து

கொடியில் குலுங்கும் கனிகள் உதிர்ந்து (2)

படைப்புகளனைத்தும் பரம் புகழ் இசைத்து -2

பகலவன் ஒளியில் பலியாய் உயரும்

2. பசித்தவர் மனதில் உதித்திடும் கனவும்

புசித்தவர் உள்ளத்தில் எழுந்திடும் மகிழ்வும் (2)

மணியென உழைப்போர் உதிர்க்கும் துளியும் – 2

பிணியில் மடிவோர் துயரும் அளித்தோம்

12. இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)

மலர்களில் விழுந்து மணமென நுழைந்து

காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து

1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்

உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)

விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு

நலிந்தவரின் துணையிருப்பேன்

இதுவே நான் தரும் காணிக்கையே

2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்

இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)

பலியை அல்ல இரக்கத்தையே என்னில்

விரும்புகின்ற இறைமகனே

உன்னைப்போல் நானும் உருவாகிட

13. உடல் பொருள் ஆவி அனைத்தையுமே

உவப்புடன் உமக்கே அளிக்கின்றோம்

ஏற்றுக் கொள்வீர் எம்மை காணிக்கையாக

திருப்பலி பீடம் வருகின்றோம்

பாவங்கள் பொறுத்தெம்மை பரிவோடு காத்திடுவீர்

இயலோடு இசை மீட்டும் எம் பாடல் கேட்பீர் … ஆ… உடல் பொருள்

1. கலங்கிய கண்களோடும் இதயத்தில் வெறுமையோடும்

விலங்கிட்ட கைகளோடும் வாழ்கின்றோம்

என் இயேசுவே இறைமகனே மனுகுலத்தின் தலைமகனே

உம்மை யாம் போற்றுவோம்

எம்மை நீர் தேற்றுவாய்

எம்மை நீர் மாற்றுவாய் …ஆ… உடல் பொருள்

2. மணம் தரும் மலர்களோடும்

சுவை தரும் கனிகளோடும்

நிலம் தந்த நெல்மணிகள் கொண்டு வந்தோம்

என் இறைவா என் தலைவா

கருணையுடன் ஏற்றிடுவாய்

உம்மை யாம் போற்றுவோம்

எம்மை நீர் தேற்றுவாய்

எம்மை நீர் மாற்றுவாய் ..ஆ.. உடல் பொருள்

14. உள்ளத்தைத் தந்தேன் இறைவா

உண்மையை உரைத்தேன் தலைவா

உள்ளதைத் தந்தேன் தேவா உயர் பலி ஆக்குவாய் நாதா

1. ஆலயம் திறந்தது பலி செய்ய நுழைந்தேன்

அதிலொரு பெருந்துடிப்பு

கலசம் ஒளிர்ந்தது கனிமொழி ஒலித்தது

அது ஒரு நல் விதைப்பு

தாபத்தை ஏற்றேன் தவறினைக் களைந்தேன்

அதிலொரு பலனளிப்பு

உள்ளத்தை அளித்தேன் இடரையும் இணைத்தேன்

அது ஒரு உளப் பிணைப்பு

2. படைத்த உன் பொருளை உனக்கே படைத்தேன்

அதிலொரு புது மகிழ்ச்சி

அளித்த மண்பொருளை பலியாய் மாற்றுவாய்

அது ஒரு விண் நிகழ்ச்சி

மகனின் பலியாய் மானிடன் பொருளாம்

அதிலொரு தனிச் சிறப்பு

இறைவன் நிகழ்ச்சியில் மானிடன் பங்காம்

அது ஒரு புதுப் பிறப்பு

15. எது வேண்டும் உனக்கு இறைவா – 2

எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா -2 எது வேண்டும் – 4

1. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்

உனக்கது மணமில்லையோ

கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்

உனக்கது சுவையில்லையோ

எதை நான் தருவேன் தலைவா

நீ விரும்புவதென்னவோ இறைவா

எளிய என் இதயம் தந்தேன் – 2

அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா – எது வேண்டும் – 2

2. பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்

உனக்கது ஈடில்லையே

உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்

உனக்கது இணையில்லையே

எதை நான் தருவேன் தலைவா

நீ விரும்புவதென்னவோ இறைவா

சின்ன என் இதயம் தந்தேன் – 2

அது சிறப்பாய் இருக்குமோ இறைவா – எது வேண்டும் – 4

16. எதை நான் தருவேன் இயேசய்யா

எனதென்று சொல்ல ஒன்றுமில்லையே (2)

எல்லாம் நீ தந்ததே நான் வாழ்வது உமது கிருபையினால்-2

1. தாயின் வயிற்றிலே எனக்கு உருவம் தந்து

தாயைப்போல் தாங்கின தேவன் நீரே (2)

என்னில் உம் சுவாசத்தை ஊதி

தந்தையைப்போல் என்னோடிருப்பவரே (2)

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

போற்றுகிறோம் உம்மைப் புகழுகிறோம் (2)

2. இவ்வுலகமும் அதன் உல்லாசமும்

என் கண்முன் அழிந்து போகிறதே (2)

ஆனால் நீர் தந்த ஆவியின் அருட் கொடைகள்

என்னில் புதுவாழ்வு தருகிறதே (2) – வாழ்த்துகிறோம்…

17. எதை நான் தருவேன் இறைவா – உன்

இதயத்தின் அன்பிற்கீடாக

1. குறைநான் செய்தேன் இறைவா – பாவக்

குழியில் விழுந்தேன் இறைவா (2)

கறையாம் பாவத்தை நீக்கிடவே – 2

நீ கல்வாரி மலையில் இறந்தாயோ

2. பாவம் என்றொரு விசத்தால் – நான்

பாதகம் செய்தேன் இறைவா (2)

தேவனே உம் திருப்பாடுகளால் – 2 எனைத்

தேற்றிடவே நீ இறந்தாயோ

18. எல்லாம் தருகின்றேன் தந்தாய்

என்னையும் தருகின்றேன் (2)

1. இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே

தருவேன் உமக்குக் காணிக்கை (2)

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை

என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2

2. பிறருக்காக வாழ்வதில் நானும்

என்னையே உம்மிடம் தருகின்றேன் (2)

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க

என்னையும் தகுதியாக்குவாய் – 2

19. எல்லையில்லாத அன்பாலே உம்

ஏக மகனை எமக்களித்த பிதாவே

ஏற்றருள்வீர் எம் பலிப்பொருளிதையே

கல்மனம் வெயில் முன் பனிமலைபோல

கசிந்துருகிடுமே உம் நினைவாலே

1. புலன்களை அடக்கி மனதினை ஒடுக்கி

புரிந்திடும் ஒறுத்தல் முயற்சிகள் அனைத்தும்

நலன்களின் சுனையே உமக்களிக்கின்றோம்

நலிந்திடும் எளியோர் நலம் பெறச் செய்வீர்

2. உடலினை ஒறுத்து வன்செயல் அகற்றி

உள்ளத்தை என்றும் மேலே உயர்த்தி

இடர்களைப் பொறுத்து உம் மகனோடு

இனிதுமைப் புகழும் வரமருள்வீரே

20. என்ன தருவேன் என்ன தருவேன் அன்புக்கு ஈடாக – 2

உயிரிலே பாட்டெழுதி உள் அன்போடு நான் தருவேன்

என்ன தருவேன் என்ன தருவேன் அன்புக்கு ஈடாக

1. எந்தன் உழைப்பில் கிடைத்த பலனை உந்தன் கரத்தில் தருகிறேன் – 2

அதை ஏற்றிட வேண்டும் இறைவா பயனாக்கிட வேண்டும் தயவாய்

ஆலமரத்தின் விதைபோல் எந்தன் காணிக்கையோ சிறிது

அதை உனது கரத்தில் தந்தால் அதன் மேன்மையோ பெரிது – என்னதருவேன்

2. அன்பு விளக்கை ஏந்தி உந்தன் ஆலயம் நான் வருகின்றேன் – 2

ஒளி ஏற்றிட வேண்டும் மகிழ்வாய் இருள் நீக்கிட வேண்டும் முழுதாய்

வீதியில் விழுந்த மலர்போல் எந்தன் வாழ்க்கையோ சிறிது

உந்தன் திருப்பதம் அது வீழ்ந்தால் அதன் இனிமையோ பெரிது – என்னதருவேன்

21. என்னைத் தருகின்றேன் ஏற்றுக்கொள்ளும் தேவா

உன்னிலே மலர்ந்திட உள்ளத்தைத் தருகின்றேன் – 2

1. நான் போகும் பாதைகள் நீயாக வேண்டும்

நான் பேசும் பேச்செல்லாம் உமதாக வேண்டும்

இறைவார்த்தையில் மனம் வாழ்ந்திட

தளராமல் நான் உன்னில் சேர்ந்திட

என்றும் எந்தன் காணிக்கையாக – என்னைத் தருகின்றேன்

2. கல்லான என் நெஞ்சம் கரைந்திடவேண்டும்

முள்ளான பாவங்கள் மறைந்திட வேண்டும்

உமக்காக நான் பலியாகிட

பிறர் வாழ்விலே தினம் சாய்ந்திட

என்றும் எந்தன் காணிக்கையாக – என்னைத் தருகின்றேன்

3. நீ தந்த வாழ்வு உனதாக வேண்டும்

அன்பென்ற மொழியில் நான் பேசவேண்டும்

உன் பாதையில் நான் சென்றிட

உனதானவே நான் மாறிட

என்றும் எந்தன் காணிக்கையாக – என்னைத் தருகின்றேன்

22. என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன்

என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய் (2)

1. உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு

உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று (2)

என் நெஞ்சில் வாழ்பவன் நீ தானே

இனி அச்சம் கொள்வதும் வீண்தானே (2)

எந்தன் பணியில் ஆயிரம் தடைகள் வந்திடுமாயினும் இயேசுவே

உனது வழியில் பயணம் தொடரும்

2. எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன்

சுயநலத்தின் திரைகளைக் களைந்து என்னைத் தந்தேன் (2)

ஒரு ஜீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால்

அது தானே உம் முன்னால் பெரிதாகும் (2)

மகிழ்வைத் தேடும் மானிடர் மகிழ்ந்திட

தந்திடும் என்னை இயேசுவே – உனது கரத்தில் ஏற்க வேண்டி

23. எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி

உனக்காக நான் தந்தேன் இறைவா

இதை ஏற்று உனதாக மாற்றி அருட் பலியில்

எனை நீ இணைப்பாய் இறைவா

1. அணையாத தீபம் உன் திரு இதயம்

ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை (2)

உலகின் ஒளியாய் இருப்பவனே

உன் கோயில் நானாக மாற்றிடுவாய்

ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்

இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் (2)

2. ஏங்கும் விழியில் தேங்கிய நீரும்

அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் (2)

எதையும் தாங்கும் இறையவனே

உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய்

ஏற்றிடுவாய் ….

24. எனக்காகப் பலியாகும் அன்பின் தெய்வமே – 2

என் வாழ்வைப் பலியாக்க உன் பாதம் வருகின்றேன்

இறைவா ஏற்று பலியாய் மாற்றி

உன் பணி செய்ய அருள் தாரும்

1. தாலாட்டுப் பாடும் அருவியிலே ஊஞ்சலாடி வரும் மலரெடுத்து (2)

மனதைத் தொடுத்து உன்பாதம் மணம் வீசப் படைக்கின்றேன்

இறைவா ஏற்று….

2. அலைந்தோயும் வாழ்வினிலே கரைந்து ஓடிடும் நீரெடுத்து (2)

என் பாவம் கழுவி உன் நினைவில் வாழ்ந்திட விழைகின்றேன்

இறைவா ஏற்று….

25. ஏழை என்னை காணிக்கையாகத்

தருகின்றேன் தெய்வமே ஏற்றுக் கொள்ளுமே – 2

1. என் உயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் – என்

உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் (2)

யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்

2. என் கடந்த கால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் – நான்

எதிர் கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் (2)

யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள்

26. கனிவோடு ஏற்பாய் என் இறைவா

மகிழ்வோடு தரும் எம் காணிக்கையை

மணம் கமழும் மலரெடுத்து பூமாலை நான் தொடுத்து

நிதம் உந்தன் பாதம் படைத்திடுவேன் அருள்மிகு பரம்பொருளே

1. தாகம் தீர்ந்திடவும் பாவம் போக்கிடவும் அப்பரசத்தை நீர் தந்தீர்

அன்பு வழியிலே நாளும் சென்றிட அருளமுதாய் நீர் வந்தீர் (2)

இறைமகனே என் இனியவனே துணையவனே என் காவலனே

என் மனக்குறை நீங்கிட மகிழ்வினில் வாழ்ந்திட

2. ஏழை பெண்ணெருத்தி அளித்த காணிக்கையை

மிகவும் உயர்ந்ததென்று மொழிந்தீர்

பகிர்ந்து வாழ்தலே சிறந்த வாழ்வு என்று

வாழ்ந்து காட்டியே சென்றீர் (2) இறைமகனே

27. காணிக்கை தந்தேன் இறைவா – என்னை

காணிக்கை தந்தேன் இறைவா – 2

1. உடலாக வந்தாய் உயிராக வந்தாய்

ஒளியாக வழியாக உண்மையிலும் வந்தாய் – 2

உடலோடு இணைந்து உயிரோடு கலந்து – 2

ஒளியாக, வழியாக உம்மில் என்றும் மலர

2. என்வாழ்வு என்றும் குன்றாது போக

உன் வாழ்வில் என்றும் நான் வாழ வேண்டும் – 2

என்நாளும் என்னில் உன் அன்பு கொள்ள – 2

இந்நாளும் என்னில் உன் பாதம் வைத்தேன்

3. புதிதான உலகம் நான் வாழ வேண்டும்

புனிதான செயல்கள் நான் செய்ய வேண்டும்

இனிதான உன்னை நான் காண வேண்டும் – 2

பணிவாய் என் வாழ்க்கை பிறர் வாழ அளித்து

28. காணிக்கை தந்தேன் தேவா என்னைக்

காணிக்கை தந்தேன் நாதா (2) எந்தன்

நிலையான சொந்தம் நீதானே என்று

காணிக்கை தந்தேன் தேவா

1. உன்னில்லம் நான் வந்த நேரம் என்றும்

என்னுள்ளம் தூய்மையின் வெண்பனியாகும்

எந்நாளும் எனைத் தரத் தூண்டும்

உந்தன் அருட்கரம் எனை ஏற்க வேண்டும்

கொடையாய் உந்தன் கொடையாய் இன்று

நிறைவாய் எனையும் ஏற்பாய்

வந்தேன் உந்தன் அருகில் அருட்கரத்தினில்

எனை நீ இணைப்பாய்

2. உலகத்தில் நான் கண்ட செல்வம் உந்தன்

பலகோடி நன்மையின் சிறுதுளி வெள்ளம்

உன்னையே பலி தந்த கோலம் நீ

கொடுத்ததால் கண்டேனே இன்பம்

கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன் இன்று

அன்பின் முழுமையாய்க் கொடுத்தேன்

நிறைவாய் உந்தன் அருகில் நான்

நிலைத்திட வரம் எனில் பொழிவாய்

29. காணிக்கை தந்தோம் கர்த்தாவே

ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே

காணிக்கை யார் தந்தார் நீர்தானே

1. நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது

மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் – 2

ஆகாயம் மாறும் கடவுளின் மகனே

ஆனாலும் உம் அன்பு மாறாது

2. ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே

ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)

கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2

கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே

கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

30. காணிக்கை தர நான் வருகின்றேன்

உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்

காணிக்கை தர நான் வருகின்றேன் (2)

1. என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்

என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)

என்னையே தான் நீ கேட்கின்றாய் – நான்

என்னையே முழுவதும் தருகின்றேன் (2)

2. சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் – மனம்

உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)

ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் – அதை

பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)

31. காணிக்கை மலர்கள் உன் பாதம் வைத்தோம்

கருணை மழை பொழிந்தாய் காணிக்கை தந்தோம்

இதை ஏற்று உனதாக்கி புதுவாழ்வு தரவேண்டும்

1. வானம் தந்த ஒளிர்சுடர்கள் மேகம் தந்த மழைத்துளிகள்

அவையெல்லாம் சிறந்தவையென்றோம்

நாங்தள் தரும் ஒவ்வொன்றும்; குறைவுள்ளது என்றாலும்

ஏற்றிட வேண்டுகின்றோம்

நாங்கள் உம் சாயல் நாங்கள் உம் அன்பு

எம்மையே ஏற்பாய் பரம்பொருளே

2. தினம் தினம் எம் வாழ்வினிலே பெறுகின்ற எல்லாமே

உம் அன்பின் கொடைகள்தானே

எம் வாழ்வின் இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே

அப்பமாய் தருகின்றோம்

உம் உடலாய் மாற பிறருக்காய் உடைய

எம்மையே ஏற்பாய் பரம்பொருளே

32. தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் (2)

1. வழங்கிட கனியோ உணவோ இன்றி

வாடிடும் வறியோர் பலர் இறைவா (2) – வெறும்

விழிநீர் வியர்வை வேதனை அன்றி

வேறெதும் அல்லா நிலை இறைவா

2. உனக்கென என்னை வழங்கிடும் வேளை

உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் (2) – எங்கள்

மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்

மனத்துயர் நீங்க படைக்கின்றோம்

33. தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக

இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்

கொடுத்தவன் நீயன்றோ இறைவா

1. எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும்

இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே

வரம் தருவாய் இறைமகனே

2. என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன்

உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும்

வரம் தருவாய் இறைமகனே

34. தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்

தலைவனுன் பீடத்தில் காணிக்கையாய் (2)

தகுதியில்லா என்னை உம் அன்பினால்

தயவுடன் ஏற்பாய் பலிப்பொருளாய்

1. உழைப்பின் பலனைப் படைத்திட வந்தேன்

உம் திருப்பதத்தில் எனை ஏற்க வேண்டும் (2)

உம் அருள் துணை நம்பி வாழ்வினைத் தொடர்ந்திட -2

உவந்து நீர் ஏற்பீர் ஏழை என் காணிக்கை

இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்

இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்

2. ஆறுதல் இன்றி வாழ்ந்திடும் வறியோர்

ஆனந்தம் அடைந்திட அடியேனைத் தேர்ந்தீர் (2)

அன்பதன் கொடைகளை அவனிக்கு அளித்திட -2

அர்ப்பண பலி என்னை அன்பாய் ஏற்பீர் – இறைவா …

35. திருவே திருப்பலிப் பொருள்தனையே உன்

திருக்கழல் வணங்கித் தருகின்றோம் – 2 (2)

2. ஒளிரும் தணலில் உனதெழில் வடிவை

உணர்ந்திடப் புகுந்தோம் அன்பாக (2)

புரிந்திடும் வேள்வி விளைந்திடும் ஒளியில்

புவிதனைப் படைத்தோம் பலியாக – 2

2. ஏழையர் வழங்கும் உளமெனும் தீபம்

ஏந்திட உன்னருள் கனல் வேண்டும் (2)

உலகிருள் அகன்று ஒளிபெற என்றும்

உனைச் சரண் அடையும் வரம் வேண்டும் – 2

36. தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே – 2

உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்

காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய்

தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே

1. வானம் காணும் ஒளி எல்லாம் என்

தேவன் தந்த காணிக்கை (2)

மேகம் சிந்தும் துளி எல்லாம்

என் தேவன் தந்த காணிக்கை (2)

இந்த நினைவில் எந்தன் வாழ்வை

காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

2. வேதம் சொன்ன வழி எல்லாம் என்

தேவன் தந்த காணிக்கை (2)

பாதம் படைத்த கனி எல்லாம் என்

தேவன் தந்த காணிக்கை (2) – இந்த நினைவில்….

37. நாங்கள் தருகின்ற காணிக்கை

இதை ஏற்றருள் தெய்வமே

நாங்கள் தருகின்ற காணிக்கை

1. நிலையற்ற உலகம் நிலையென நினைத்து

நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் (2)

கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்

காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

2. வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி

பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் (2)

அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை

காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

38. நிலையில்லா எம் வாழ்விலே நிலைப்பதே

நிலைப்பது உன் அருளொன்றே

அளவில்லா உம் கருணையில்

அனைத்தும் பலியாய் அளிக்கின்றோம்

1. அமைதியான உலகம் தேடி

அலைந்து நாளும் வேண்டினோம்

அன்பு பொழியும் இறைவனென்று

அருளின் தாளைப் பணிகின்றோம்

2. உழைப்பதெங்கள் கரமென்றாலும்

உறுதி உம்மால் வேண்டுமே

உழைக்கும் எண்ணம் இனிது வளர

உமது தூய்மை வேண்டும்

39. நீர் தந்த வாழ்க்கையிது உன் கருணை மூச்சு இது

என்னில் வாழும் என்னிறைவா எதை உனக்கு நான் தருவேன் 2

ஏற்றுக்கொள்ளும் என் தேவா

என்னையே நான் தருகின்றேன்

ஏற்றுக்கொண்ட என் வாழ்வை

என்றும் உமதாய் மாற்றிடுமே 2

1. சோர்ந்துபோன மனதினையே ஏந்தி பீடம் வந்தேன் அதை

மாற்ற வேண்டி கேட்டேன்

எனை அழைக்கும் சுமைகளையே தாங்கி பீடம் வந்தேன்

அதை ஏற்க வேண்டி கேட்டேன்

எம்மிடம் நீர் என்ன வேண்டும் என்று கேட்கிறீர்

எதனைக் கொடுக்க என்று நானும் ஏங்கித் தவிக்கிறேன்

என்னிடம் உள்ளதோ எந்தன் வாழ்வு ஒன்றேதான்

ஏற்றுக்கொள்ளும் … …

2. நிலத்தில் விளைந்த கனிகளையே காணிக்கையாய்த் தந்தேன்

அதை ஏற்க வேண்டிக் கேட்டேன்

உலகில் சிறந்த பொருட்களையே உந்தன் பாதம் வைத்தேன்

அதை உமதாய் மாற்றக் கேட்டேன் – எம்மிடம் நீர்.

40. படியேறி வருகின்றேன் தேவா என்னை

பலியாக்க வருகின்றேன் தேவா நான்

படியேறி வருகின்றேன் தேவா

1. மகனையே பலியாகக் கேட்டாய் – ஆபிரகாம்

மனமார பலியாக்க வந்தார் (2)

மனதினை மாசின்றிக் கேட்டாய் – நான்

மகிழ்வோடு தருகின்றேன் உமக்கே

2. ஏழை நான் என்றேங்கி நின்றேன் – என்னை

நீ வேண்டும் வாவென்று சொன்னாய் (2)

பிழை செய்து நான் வாழ்ந்த போதும் – நீ

தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய்

41. பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)

சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்

எந்தையும் என் தாயும் நீயன்றோ – நீயே

என்னையாளும் மன்னவனன்றோ

1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்

நிம்மதி இழந்து நின்றேன்

வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்

அளவில்லா பாவம் செய்தேன்

தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே

உனக்கு நான் எதையளிப்பேன்? – இன்று

உனக்கு நான் எனையளித்தேன்

2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்

ஒழிந்திட உழைத்திடுவேன்

அமைதியும் நீதியும் அன்பும் அறமும்

நிலைத்திட பணி செய்வேன்

உன்னத தேவனே உமதருட்கருவியாய்

உலகினில் வாழ்ந்திடுவேன் – என்றும்

உன்னிலே வாழ்ந்திடுவேன்

42. மணிமொழி கலைகளிலே உனை வாழ்த்த

இணைந்து வந்தோம் மண் தந்த கனிகளையே

உன் பாதம் படைக்க வந்தோம்

ஏற்றருள் தந்தையே இணைத்தருளும் எம்மையே – 2

1. மணிகளின் மறு வடிவாய் மனுமகன் திருவுடலாய்

மாறிடும் கோதுமை நல் அப்பம் தந்தோம் – 2

கனிகளின் மறு வடிவாய் திருமகன் குருதியாய்

மாறிடும் திராட்சை ரசத்தையும் தந்தோம் – 2

கனி மணி இவற்றுடன் கண்மணி எம்மையும்

கனிவுடன் ஏற்றருளும் – 2

2. தியாகத்தின் திருவுருவாய் ஏழ்மையின் உறைவிடமாய்

பிறர்க்கென வாழ்ந்திடும் வாழ்வையும் தந்தோம் – 2

விண்ணெழும் புகை வடிவாய் என் மன வாழ்வையும்

விண்ணவன் பதமே பணிந்தே தந்தோம்

கனி மணி இவற்றுடன் கண்மணி எம்மையும்

கனிவுடன் ஏற்றருளும் – 2

43.  மலரென மனதினை திறந்து வைத்தேன் – அதில்

மணமென இணைந்திட உனையழைத்தேன்

உளமெனும் அகலினில் உனை வளர்த்தேன் – அங்கு

உயர்ந்திடும் சுடரினில் உனையறிவென்

1. பால் நிறம் படைத்த மன் மழலை உள்ளம்

வீணே கார் நிழல் கொண்டது காலத்தினால்

காவலா கள்ளமெல்லாம் கழித்து – இன்று

கோலமிடும் உந்தன் திரு உருவே – 2

2. அகத்தினில் ஆலயம் அமைத்திடுவேன் – அங்கு

உகந்ததோர் பலியினை நடத்திடுவாய்

தலைவனே உள்ளமெலாம் நிறையும் – உந்தன்

பலியுடன் கலந்து யான் உயர்ந்திடுவேன் – 2

44. மனமென்னும் பொன்தட்டில் இறைவா – எம்

காணிக்கை தந்திட்டோம் ஏற்பாய் (2)

1. புகைபோல மறைகின்ற வாழ்வில் – வெறும்

புகழ்தேடிப் பயனேதும் இல்லை (2) தூபப்

புகைபோல உயர்ந்து நாங்கள் – என்றும்

புனிதராய் வாழ்ந்திட அருள்வாய்

2. அழகோடு இருந்தாலும் பிள்ளை – அது

அழுக்கோடு இருந்தாலும் பிள்ளை (2) என்றும்

பழச்சாற்றில் கலக்கின்ற நீர்போல் – இன்று

பாவியை அணைக்கின்ற உமக்கு

45. வந்தேன் உந்தன் இல்லம் இறைவா – இன்று

தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா

உள்ளதை எல்லாம் எடுத்துவந்தேன் – அதில்

நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்

எனை ஏற்றிடுவாய் இறைவா உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே

எரியும் மெழுகென உருகி ஒளி தரவே (2)

என்னையே முழுவதும் தருகின்றேன் – எனை

2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே

நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே (2)

என்னையே முழுவதும் தருகின்றேன் – எனை

46. வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்

என்னையே மாற்றிடுவாய்

முழுமனதுடனே கையளிக்கின்றேன்

காணிக்கை ஏற்றிடுவாய்

1. கோதுமை மணியும் திராட்சைக் கனியும்

புதுஉரு பெறுவது பெறுவது போல்-2

அன்பும் அமைதியும் நீதியுமே

மனிதனில் மலர்ந்திட உயிர்தருவாய்-2

2. நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்

தேவை என்றிருந்தேன்-2

சமத்துவ சோதர நோக்குடனே

புதுயுகம் காண்போம் அகத்தினிலே-2

47. விடியலின் கீதத்தில் விழித்திடும் சுடர்களாக

அர்ச்சனை யாக்குகின்றோம் தலைவா

இறைவா அனைத்தையும் தருகின்றோம்

1. மாணிக்க விழிகள் மண்டியிடும்போது

மனங்களில் உறக்கமில்லை

பூக்களே கருகிடும் புன்மைகள் பரவியும்

புரட்சிகள் வெடிக்கவில்லை

புது யுகம் கனவில் புறப்படும் அணியில்

காலடி எடுத்து வந்தோம் – இன்று

காணிக்கையாக்கி நின்றோம்

2. அடிமைத்தனங்கள் அழுத்தியபோது

ஆயிரம் உணர்வலைகள்

நெருப்பினில் கருகிட வெறுப்பினில் எரிந்திட

ஆயிரம் சோதனைகள்

ஊழ் விழிச் சுடர்கள் தந்திட்ட துணிவில்

காரிருள் கடந்து வந்தோம் – இன்று

காணிக்கையாகி நின்றோம்

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy