தியானப்பாடல்கள்

தியானப்பாடல்

01. அகழ்ந்திடுவார் தம்மை என்றும்

அன்புடன் நிலம் தாங்கும்

என்ன தான் குறைகள் செய்தாலும் உன் இதயம் தாங்கும்

என்றும் எனைத் தாங்கும்

1. அழுதாலும் உன் கரம் தேற்றும்

மகிழ்ந்தாலும் அது உன் நிழலில் (2)

உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வதும் உன்னாலே

வல்லவன் நீயின்றி என் இதயத்தில் நிறைவில்லை

உன் தாளில் கூடும் பல கோடி பூவிதழுள் நானும் ஒன்றாவேன்

உன் திருநாளில் என் உள்ளம் மங்களம் பாடும் தன் இல்லம்

உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வுபெறும்

2. ஆசைகளில் தடுமாறி அதில் விழுந்தால்

எடுப்பதும் உன் உருவே (2)

துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும் வாடுவதும் நீயே

என்னிடம் வலுவில்லை உன் பலமின்றி கதியில்லை

வருங்காலம் உன் அடியில் வாழ்வும் உன் மடியில்

நானும் உன் சந்நிதியில்

உம் திரு உள்ளம் என் இல்லம்

உன் திருசொல்லே என் சொந்தம்

உன் உறவொன்றே என் இன்பம் என்றென்றும்

02. அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு (2)

1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்

உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்

எந்த நிலை தான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது

அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் -2

2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ

சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ

அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே

அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் – 2

03. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் -2

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் நான்

மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் (2)

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்

தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்

நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் -2

நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் (2)

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்

நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் – அதன்

விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் -2

நிரந்தரம் -2 நீயே நிரந்தரம் (2)

04. அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே – 2

அன்பனே இறைவனே என்னிலே வாருமே

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே

1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் – 2

வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும்

கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்

2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் – 2

இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்

துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்

3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் – 2

கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும்

தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்

05. அமைதியின் தெய்வமே இறைவா

என் இதயத் தலைவனே

அருள்வாய் அருள்வாய் யாம் ஏங்கித் தேடுகின்ற அமைதி

அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி – 2

1. நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி

தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி (2)

அன்பு மொழியை விதைத்திடுவோர்

அருளின் பயிரை அறுத்திடுவார் (2)

அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி – 2

2. உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி

உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி(2)

ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்

வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் (2)

அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி – 2

06. அழியாத உறவில் நிலையான நினைவில்

நீங்காத நிழலாக நீ வருவாய்

நெஞ்சோடு என்னைச் சேர்த்து அணைத்துக் கொள்வாய்

உன்னில் நான் வாழ அருள் புரிவாய் – அழியாத

1. உன்னை அறிந்த நாள் முதல்

பிரியாத நேசம் கொண்டேனே

உன்னோடு வாழ துடிக்கின்றேன்

என்னைத் தேர்ந்த தெய்வமே

அணையாய் தொடரும் சொந்தமே – உன்

சாயல் உள்ளத்தில் நான் சுமந்தேன்

கண்ணுக்குள்ளே கண்மணியாய் எனைவைத்துக் காத்திடுவாய்

சிறகினில் எனைவைத்து மறைத்துக் காத்திடுவாய்

வாழ்வு என்னில் தந்திடுவாய் – அழியாத உறவு

2. நிலையில்லாத உலகினிலே நிம்மதி தேடி அலைகின்றேன்

கறை படிந்த உள்ளத்தோடு துணையில்லாமல் திரிகின்றேன்

சம்மதம் நானும் தருகின்றேன்

சாட்சியாய் என்னை மாற்றிடுவாய்

நின் பெயரை உன் கையிலே பொறித்ததேன் இறைவா

என்னை உன் பணிக்காக அழைத்ததேன் இறைவா

சுகமாய் என்னை நடத்திடுவாய் – அழியாத உறவு

07. அன்பர் நேசர் அன்பே என்றும் மாறா அன்பே

மனிதன் அன்பு மாறிப் போகும்

மாறாத அன்பென்று உண்டு

எபிநேசர் நமக்கென்று உண்டு – அன்பே

1. உலகம் உன்னை பழிக்கும் பேரை சொல்லி வெறுக்கும்

உயிரில் கலந்த உறவும் கூட குறைகள் கண்டு ஒதுக்கும் – 2

மாறாத மறையாத யேசு என்றென்றும் நம் வாழ்வில் உண்டு – 2 அன்பே

2. கவலை கண்ணீரெல்லாம் கரைந்தே ஓடிப்போகும்

துயரம் கண்ட உள்ளம் என்றும் உவகை கொண்டு துள்ளும் – 2

குன்றாத குறையாத இயேசு என்றென்றும் நம் வாழ்வில் உண்டு – 2 அன்பே

3. அடிமை விலங்கு ஒடியும் இரும்பு கதவுகள் நொறுங்கும்

பலங்கள் வந்து சிறக்கும் சிறகை அடித்தே வானில் பறக்கும் – 2

மங்காத ஒளிவீசும் இயேசு என்றென்றும் நம் வாழ்வில் உண்டு – 2 அன்பே

 08. அன்பால் என்னைக் கவர்ந்தவரே

என்னுள் வாழ்பவரே என் நேசர் நீரே – 2

நான் என்னென்று சொல்வேன் உம் மாறாத அன்பை

உயிர் வாழும் நாளில் ஒருபோதும் மறவேன் – அன்பால்

1. வழி தெரியாமல் அலைகின்ற நேரம்

கருணையால் என்னை அழைத்தீர் – 2

இதுவரை உதவி செய்த தேவன் நீரே – 2

வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன் – அன்பால்

2. தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து

தூக்கியே சுமந்தவர் நீர் – 2

அன்பிற்கீடாக என்ன செய்வேன் – 2

என்னையே தருகிறேன் யேசுவே – அன்பே

3. அன்பே உம்மை மறவேனோ உம்மைப் பிரிவேனோ

என்வாழ்வும் நீரே – 2

கண்மணிபோல காத்தீர் கரம் நீட்டி அணைத்தீர்

உயிர் வாழும் நாளில் ஒரு போதும் மறவேன் – அன்பால்

09. அன்பு என்பது வல்லமை

ஆக்கம் அழித்திடும் ஆற்றலே

அர்த்தமாகிடும் வாழ்விலே

அன்பு என்றும் வாழவே

1. நின்று நிலைக்கும் எதுவுமே

அன்பு உருவம் கொடுத்ததே

தன்னை வழங்கும் இதயமே அன்பில் நினைந்தே கனிந்ததே

ஆளவிடுங்கள் அன்பையே அன்பையே – 2

ஆளும் தெய்வம் நம்மிலே நம்மிலே – 2

2. உயிர் அனைத்தின் இயக்கமாய் இயங்கும் உலகின் ஏக்கமாய்

ஏங்கும் மனங்களின் இறைவனாய் அனைத்தின் நிறைவும் அன்புதான்

ஆள விடுங்கள் அன்பையே அன்பையே – 2

ஆளும் தெய்வம் நம்மிலே  நம்மிலே – 2

10. அன்புக்குப் பாடல் பாடுவேன்

நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன்

இன்பத்தின் ஊற்றே இயேசுவே – உன்

இன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்

1. வேதனை ஆயிரம் நான் அடைந்தேன் அந்த

வேளையில் ஊன்றுகோல் நீ தெரிந்தேன் (2)

உயிரின் வார்த்தையே எந்தன் உள்ளத்தில் வாழுமே – 2

உன் நாமம் பாடுகையில் என் நாவும் ஒலித்திடுமே

2. கல்வாரி மலையில் உன்னுயிர் தந்ததும்

எல்லோர்க்கும் வாழ்வாய் எழுந்ததுவும் (2)

அன்பின் ஆட்சியாய் என்றும் இன்பத் தாழ்ச்சியாய் -2

சொல்லில்லை கூறிடவே இசையில்லை பாடிடவே

11. அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்

அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்

1. மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா -2

விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா

2. இறைவாக்குச் சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா -2

மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா

12. ஆண்டவர் எனதாயன் எனக்கு

வேண்டியதொன்றுமில்லை

பசும்புல் மேய்ச்சல் நிலத்தில் – என்னை

படுக்கச் செய்கின்றாரே – என்னை – 2

1. தேற்றும் நீரருகே எனை அழைத்து

புத்துயிர் ஊட்டுகின்றாரே

தம் பெயர் பொருட்டென்னை

நேரிய வழியில் நடத்திச் செல்கின்றாரே – என்னை – 2

2. காரிருள் கணவாயில் நான் நடந்தும்

தீமை எதற்கும் அஞ்சேன் – ஏனெனில்

        நீர் என்னோடிருக்கையில் – உம்

        தண்டும் கோலும் தேற்றும் – உம் – 2

3. எனது பகைவர் பார்த்திட – எனக்கு

விருந்தொன்றமைக்கின்றீரே

என் தலைக்கெண்ணெய் பூசுகின்றீர் – என்

கிண்ணம் நிரம்பி வழிகின்றதே – இதோ – 2

4. அன்பும் தயவும் என் வாழ் நாளெல்லாம்

என்னைத் தொடருமன்றோ

ஆண்டவர் தம் இல்லந்தனில் – நான்

நீடூழி குடியிருப்பேன் – நான் – 2

13. ஆண்டவரே உம்மை நோக்கி – என்

ஆன்மாவை எழுப்பினேன் – என்

ஆன்மாவை எழுப்பினேன் – 2

1. உமது வழியை இறைவா காட்டுவீர் – 2

உமது நெறியைக் கற்றுக்கொடுப்பீர் – 2

உமது உண்மையில் அழைத்துச் செல்வீர் – 2

எனது மீட்பரும் இறைவனும் நீரே.

2. கண்கள் உம்மை நோக்குகின்றன – 2

கவலையாலே வாடுகின்றேன் – 2

கண்ணீரிலிருந்து மீட்டருள்வீரே -2

கருணையின் தேவா கனிந்திடுவீரே

3. உம்மையே நம்பி வாழ்கின்றேன் நான் – 2

நம்பினோர் எவரும் நலமுடன் வாழ்ந்தார் – 2

இம்மையில் பகைவர் ஏளனம் செய்ய – 2

என்றுமே விடாமல் காத்திடுவீரே

14. ஆண்டவரே நீர் எவ்வளவு பெரியவர்

ஆழகான மகத்துவம் உள்ளவர் மகிமை உள்ளவர்

ஆண்டவரே உம் பெருமையும் மகிமையும்; என்ன 

1. போர்வைக்காகவே ஒளியைக் கொண்டுள்ளீர் – 2

கூடாரத்திற்கு கான விரிவையும் இரதத்திற்கு

நல் மேகங்களைக் கொண்டுள்ளீர்

காற்றுக்கள் உமக்குக் கீழ்ப்படிகின்றன

2. நெருப்பும் உமது நல் ஊழியன்தானே

நீர்தான் பூமியின் முகத்தை உருவாக்கினீர்

ஆழ்கடலை அதனிடத்தில்தான் வைத்தீரே

3. முலைகள் அங்கே பள்ளத்தாக்குகள் இங்கே

நீர் ஊற்றுக்கள் வழிந்தோட

வயல் வெளியில் மிருகங்கள் அங்கே

பருக வருகின்றன – 2

15. ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன்

உன் அடியவன் கேட்கின்றேன் – 2 பேசும் – 4

1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் – உன்

வார்த்தை வழிகாட்ட வேண்டும் (2)

தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது என்

நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் – உன்

அருள் ஒன்றே நான் தேட வேண்டும் – அது

என் வாழ்வை வளமாக்க வேண்டும் – பேசும் -4

2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே உன்

வார்த்தை விளக்காக வேண்டும் (2)

நாளும் நடக்கின்ற செயல்களிலே – உன்

கரம் ஒன்றே நான் காண வேண்டும் – என்

இதயத்தில் நீ பேச வேண்டும் – உன்

இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் – பேசும் – 4

16. ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்

ஆனந்தம் ஆனந்தம் என் மனதில்

ஆண்டவா உனைப் பாட – 2

1. வான் முகிலும் உயர் மலையும் உந்தன் புகழ் பாட

தேன் பொழியும் நறு மலர்கள்

உந்தன் பெயர் பாட

வான் பொழியும் நீர்த்துளிகள்

உந்தன் அருள் பாட

யான் உனது திருப் புகழை

கவியால் தினம் பாட – ஆண்டவா

2. பகல் ஒளியும் பால் நிலவும்

ஒளியாம் உனைப்பாட

அலை கடலும் அதன் சிறப்பும்

கருணையின் விதம் பாட

மழலைகளின் தேன் மொழிகள்

தூய்மையின் நிறம் பாட

யான் உனது திருப் புகழை

கவியால் தினம் பாட – ஆண்டவா

17. இசை ஒன்று இசைக்கின்றேன்

இறைவா எளிய குரல்தனிலே (2)

என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே(2

1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2

ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2

மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்

மலர்ந்திடும் மண்ணிலே (2)

2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்

சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (2)

சமத்துவம் எம்மில் வாழ்ந்திட – 2

உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது

விடியலின் ஆரம்பம் (2)

18. இதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே

இயேசு நாமக் கீதத்துக்கு தாளம் இல்லையே (2)

வாழ்க்கையெல்லாம் பாடலாம் ஆன்ம சாந்தி கொள்ளலாம் ஆ..

1. வாழவைப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

வளமை சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

கவலை தீர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

2. இன்னல் அழிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

இனிமை அளிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

சக்தியைத் தருவதும் எந்தன் இயேசு நாமம் தான்

சகலமும் வாழ்வில் எந்தன் இயேசு நாமம் தான்

19. இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது

என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை

ஏழிசையில் பாடுகின்றது (2)

1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்

வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)

பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று

பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்

2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்

தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)

இயேசுவும் நானும் மானிடர் யாவரும்

சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்

20. இயேசு நாதர் கூறுகிறார் இதை

கொஞ்சம் கேளுங்கள்

அவர் இதயத்தை திறந்து சொல்வதைக் கேட்டு

மனிதராய் வாழுங்கள் – 2

1. மாசறு பொன் மனம் படைத்தவன் தானே

உலகில் முழு மனிதன் – 2 புவி

மாந்தருக்காக தியாகங்கள் செய:பவன்

மனிதருள் அவன் புனிதன் – 2

2. ஆசையை வென்றவன் அகிலத்தை வென்றவன்

ஆவான் இது உண்மை – 2

நுல் அமைதியைக் கெடுக்கும் மனச்சுமை குறைந்தால்

ஆயிரம் வரும் நன்மை – 2

21. இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே -அற்ர்

இல்லம் வாழ எந்தன் இதயம் ஏங்கித் தவிக்குதே – 2

1. ஓங்கும் குரலைக் காக்க வேண்டும் உன் நாமம் பாடவே -2

என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே

உன்னன்பில் வாழவே என் தேவா தேவா வா

2. ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும் வான் தீபம் காணவே – 2

உன்னன்பில் வாழவே உன்னோடு சேரவே

என்னில் நீ வாழவே என் தேவா தேவா வா

22. இயேசுவின் பொன் மொழிகள்

எந்தன் இதயத்தில் பாய்ந்ததம்மா – அவர்

ஆற்றிய அரும்பணிகள்

நெஞ்சில் அக்கினி மூட்டுதம்மா

1. பகைவரை நேசி என்றார் – நெஞ்சில்

பாசத்தை வளர்த்திரு என்றார்

இறைவனை நினைத்திரு என்றார் – நெஞ்சில்

இரக்கத்தை வைத்திரு என்றார்

2. பசித்தவர்க்கு உணவு அளித்தார் – நெஞ்சில்

பரிவுடன் உயிர் அளித்தார்

இறைவனை நினைத்திரென்றார் – நெஞ்சில்

இரக்கத்தை வைத்திரு என்றார்

3. இறைவனில் விழித்திரு என்றார் – துன்பம்

வருகையில் பொறுத்திரு என்றார்

தூய்மையில் நிலைத்திரென்றார் – துயர்

துடைப்பதில் களித்திரென்றார்

4. உண்மைக்குச் சாட்சி சொன்னார் – பல

நன்மைகள் நாடி நின்றார்

உயிருக்கு உயிர் கொடுத்தார் – எந்தன்

உள்ளத்தில் நிறைந்திருப்பார்

23. இயேசுவே இயேசுவே என்னோடு பேசுமே

இயேசுவே இயேசுவே என்னோடு வாழுமே

உந்தன் உறவு எனக்கு போதுமே

உயிரே உறவே வாருமே – 2

இயேசுவே இயேசுவே என்னோடு பேசுமே

1. விழியில் என்னை பதித்தாய் வழியில் உடன் நடந்தாய்

நிழலாய் என்னை தொடர்ந்தாய் நிஜமாய் அன்பை ஈந்தாய்

சிறகில் அரவணைத்தாய் விரைவாய் கண்துகில்வேன்

வாழ்வும் வழியும் எனக்கு நீர் – 2

உறவை வளர்க்கும் அமுதம் நீர் – இயேசுவே

2. அன்பே அருள் அமுதே வாழ்வின் ஒளி விளக்கே

கண்ணின் இமை ஆனாய் கரத்தில் பெயர் பொறித்தாய்

தாய்போல் என்னைக் காத்தாய் சேயாய் நான் வாழ்வேன்

வாழ்வும் வழியும் எனக்கு நீர் – 2

உறவை வளர்க்கும் அமுதம் நீர்

24. இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே

நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே

தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே

பகைமையும் சுய நலன்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே (2)

நீதியும் அன்பு நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே

இயேசுவே என் தேவனே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே

2. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே

நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலைவருமே (2)

வென்றிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே

25. இயேசுவே என்னுடன் நீ பேசு

என் இதயம் கூறுவதைக் கேளு

நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு

நாள் முழுதும் என்னை வழிநடத்து

1. உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம்

உன் திரு இதயம் பேரானந்தம் (2)

உன் திருவாழ்வெமக்கருளும் இறைவா இறைவா

உன் திருவாழ்வெமக்கருளும்

உன் திருநிழலில் நான் குடிகொள்ள

என்றும் என்னுடன் இருப்பாய்

2. இயேசுவின் பெயருக்கு மூவுலகென்றும்

இணையடி பணிந்து தலைவணங்கிடுமே (2)

இயேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க

இயேசுவே உம் புகழ் வாழ்க

இயேசுவே நீர் என் இதயத்தின் வேந்தன் என்னைத் தள்ளிவிடாதே

26. இறைவன் நமது வானகத் தந்தை

இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை

குறைகள் தீரும் கவலைகள் மாறும்

குழம்பிய மனதில் அமைதி வந்தேறும்

இறைவன் நமது வானகத் தந்தை

1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதுமில்லை

பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை (2)

மறந்துவிடாமல் அவைகளுக்குணவு – 2

வாரி வழங்கிப் பேணியே காக்கும் – 3

2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள்

வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை (2)

மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் – 2

மன்னனும் என்றும் உடுத்தியதில்லை – 3

27. இறைவா உன்னைக் காணவேண்டுமே – என்

நெஞ்சில் நீயும் வளர வேண்டுமே

புவியெங்கும் புதுமை நான் காணவே

வார்த்தை வடிவில் பேசவேண்டுமே (இறைவா)

1. உன் தேவ வாக்கு என் வாழ்வை மாற்ற

ஆகாயம் வரையில் புது நினைவுகள் மலர – என்

பாவம் தீர அருள்கோடி தந்தாய்

கவிச்சந்தம் எடுத்து புகழ்மாலை அணிந்தேன்

என் தேவனே உன் வார்த்தையில் தினம்

வாழ மணித் தீபம் நான் ஏற்றினே; ( இறைவா)

2. கடலோடு கலக்கும் நதிநீரைப் போல

ஆனந்தம் பொங்க உன்னோடு இணைய

திருப்பாதம் தேடி பறந்தோடி வந்தேன்

மனப்பாரம் குறைய மகிழ்வாக வந்தேன்

கலைவேந்தனே என் பாடலில் சுரம்

சேர உன்ராகம் நான் கேட்கிறேன் ( இறைவா )

28. இனியொரு பொழுதும் உனைப்பிரியாத

உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும் (2)

1. கனவிலும் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் (2)

2. உயர்விலும் தாழ்விலும் மகிழ்விலும் துயரிலும் (2)

3. வாழ்கின்ற வரையிலும் வாழ்வில் எந்நிலையிலும் (2)

29. உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்

உம்மை ஏத்துவோம் இறைவா – 2

1. இறைவன் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில்

இறைவனின் செயல்களுக்காய்

இறைவனின் மாட்சிமைக்காய் – உம்மை

2. எக்காளத் தொனியுடனே – நம்

இறைவனைப் போற்றுவோம்

மத்தாளத்துடனே யாம் – நம்

இறைவனை ஏத்துவோம் – உம்மை

3. யாழோடும் வீணையோடும் நம்

இறைவனைப் போற்றுவோம்

புல்லாங்குழலோடும் – நம்

இறைவனைப் போற்றுவோம்

30. உறவு ஒன்று உலகில் தேடி

அலைந்து நான் திரிந்தேன்

உறவே நீ என்றாய்

அன்பு தெய்வமே

உறவே வா உயிரே வா

எழுந்து வா மகிழ்ந்து வா -2

1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே

வாழ்வெனும் சோலையில் வந்திடும் வசந்தமே

அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா

ஆன்ம உணவே அருளின் வடிவே

அடியேன் இல்லம் வா

உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா

அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

2. துன்பமென்னும் வேளையில் அன்புடன் அழைக்கவே

துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே

இறைவனே யேசுவே இதயம் எழுந்து வா

நாதனே நேசனே பாசமாய் நீ வா

உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா

அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

31. உன் கையில் என் பெயரெழுதி இறைவா

உன் நெஞ்சில் என் நினைவெழுதி (2)

என்றென்றும் என்னை நிலைக்கச் செய்தாய் – 4

உன் நெஞ்சில் என் நினைவெழுதி இறைவா

என்னை நீ நிலைக்கச் செய்தாய்

1. என் கண்ணில் உந்தன் வடிவெழுதி

இம்மண்ணில் உந்தன் அடிதொழுது (2)

பித்தனாய் என்னை அலையவிட்டாய் – உன்

பக்தனாய் என்றும் தொடரவிட்டாய் (2)

2. என் கண்ணீரில் உந்தன் பாதம் கழுவி

உன் மலர்பதத்தில் என் இதழ் பதித்து (2)

உள்ளத்தை உடைத்து வார்த்துவிட்டேன் உன்

இல்லத்தை அடைந்து உயர்ந்துவிட்டேன் (2)

32. உன் திருயாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு

என்னையும் ஓர் சிறு நரம்பெனவே – அதில்

இணைத்திட வேண்டும் இசையரசே

1. யாழினை நீயும் மீட்டுகையில் – இந்த

ஏழையின் இதயம் துயில் கலையும் (2)

யாழிசைக் கேட்டுத் தனை மறந்து – 2 உந்தன்

ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே

2. விண்ணகச் சோலையில் மலரெனவே – திகழ்

எண்ணிலாத் தாரகை உனக்குண்டு (2)

உன்னருட் பேரொளி நடுவினிலே – 2 நான்

என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்

33. உன் நாமம் சொல்லச் சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா

என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதையா (2)

1. மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உனக்கது ஈடாகுமா-2

உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா

2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்

உன் நாமம் என்னென்பேன் (2)

நிறையென்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்

உன் நாமம் என்னென்பேன்

34. உன்புகழைப் பாடுவது – என்

வாழ்வின் இன்பமையா

உன் அருளைப் போற்றுவது – என்

வாழ்வின் செல்வமையா.

1. துன்பத்திலும் இன்பத்திலும் – நல்

தந்தையாய் நீ இருப்பாய்

கண்ணயரக் காத்திருக்கும் – நல்

அன்னையாய் அருகிருப்பாய்

அன்பு என்னும் அமுதத்தினை நான்

அருந்திட எனக்களிப்பாய்

உன்னின்று பிரியாமல் – நீ

என்றும் அணைத்திருப்பாய் – 2 (உன்)

2. பல்லுயிரைப் படைத்திருப்பாய்

என்னையும் ஏன் படைத்தாய்

பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ

என்னையம் ஏன் அழைத்தாய் – 2

அன்பினிற்கு அடைக்குந் தாழ் ஒன்று

இல்லை என்றுணர்ந்தேன்

உன் அன்பை மறவாமல்

நான் என்றும் வாழ்ந்திருப்பேன் – 2 (உன்)

35. உன்னை நம்பி வாழும் போது உறுதிபெறுகிறேன்

உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்

உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்

இறைவா இறைவா அமைதி காண்கிறேன்

நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

1. என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்

எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் (2)

என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைப்பேன் -2

இனி இமயமென தடைவரினும் எளிதாய்க் கடப்பேன்

எளிதாய்க் கடப்பேன் – நான் எளிதாய்க் கடப்பேன்

2. இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே

இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே (2)

உன்சொல்லின் உறுதியில் நான் பயணம் செல்லுவேன் -2

உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்

என்றும் வாழுவேன் – நான் என்றும் வாழுவேன்

36. உன்னைப்  பார்க்க நான் துடிக்கின்றேன்

உடன் பேச நான் அழைக்கின்றேன்

வந்து சந்திப்பாயா இறைவா – 2     

1. வழிகாட்டும் உன் மொழி கேட்கின்றேன்

பலிப்பீடம் தவறாது விழைகின்றேன்

வெளிவேடம் கொண்டே நான் வாழ்கின்றேன் – 2

தலைவா நீ என் வாழ்வில் சந்திப்பாயா – உன்னை

2. பாதையில் வறியோர் பார்க்கின்றோம்

வாதையில் துடிப்பதைக் காண்கின்றோம் – 2

விதியை வெறுத்தே ஒடுகின்றோம்

வீதியில் வந்து நீ சந்திப்பாயா – உன்னை

37. உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னைக் கைவிடுவதுமில்லை (2)

அஞ்சாதே நான் உன்னோடு – நீ அஞ்சாதே நான் உன்னோடு

நானுன்னை ஒருபோதும் மறக்கவே மாட்டேன் நான்

1. தாய் உன்னை மறந்திட்ட போதும்

நான் உன்னை விட்டு விலகுவதில்லை (2)

சேயுன்னை மறந்திட்ட போதும்

நான் உன்னை விட்டு விலகுவதில்லை (2)

நீயென்னை மறந்திட்ட போதும் – 2

நான் உன்னை விட்டு விலகுவதில்லை – 2

2. ஊரெல்லாம் உன்னைப் பழித்தாலும்

நான் உன்னை விட்டு விலகுவதில்லை (2)

பாரெல்லாம் உன்னை நகைத்தாலும்

நான் உன்னை விட்டு விலகுவதில்லை (2)

சீரெல்லாம் உன்னைப் பிரிந்தாலும் – 2

நான் உன்னை விட்டு விலகுவதில்லை – 2

 38. எந்தன் இதயம் பாடும் நேரம் எங்கும் ஆனந்தம்-2

உன் உறவில் கலந்தே நான் உந்தன் புகழைப் பாடுவேன்

உந்தன் அன்பும் அருளுமே எந்தன் இனிய வாழ்வில் கீதங்கள்

1. எந்தன் இதயக் குரலிலே உன் ராகங்கள் கேட்குதே

பொங்கும் கான மழையிலே எந்தன் உள்ளம் நனையுதே

மலரின் மணமாம் இயேசுவைப் பலரும் போற்ற வாழ்த்துவேன்

உன் அன்பும் உன் அருளும் என்னிடத்தில் கூட

உன் உயிரில் நான் கலந்து உன் புகழைப் பாட (2)

2. பாயும் நீரின் நடுவிலே என் வாழ்வின் ஓடங்கள்

மின்னும் தூர ஒளியினைக் கண்டும் உள்ளம் கலங்காதே

ஒளியின் ஒளியாம் இயேசுவை உணர்ந்தே ஓடம் செலுத்துவேன்

உன் அன்பும் உன் அருளும்…

39. எந்தன் உயிரே நீதான் இயேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் – 2

நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் – 2

எம்மீது பாசம் கொண்டாய் என் நெஞ்சில் வாசம் செய்தாய் – 2

எந்தன் உயிரே நீதான் யேசுவே உன்னை மட்டும் சுவாசிப்பேன் – 2

1. கல்வாரி நினைவுகள்தான் என் வாழ்வில் கனவாகுமே

உன்னோடு ஒன்றாகினால்; என் வாழ்வில் நலமாகுமே

உணவாய் எழுந்து எனில் வந்து என்

உணர்வாய் கலந்து உயிர் சுமந்தாய்

மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே

உனது ஆற்றல் வேண்டுமே – எந்தன் உயிரே

2. என் வாழ்வின் தேடல்களில் வழியாகி ஒளியாகவா

என் வாழ்வின் சோகங்களில் தாயாகி தாலாட்டவா

உறவாய் என்னை நீ அணைத்தாய் என் உறவுகள் இங்கு உயிர்பெறுமே

சிலுவைகள் தோளில் நான் சுமக்க

உனது சிறகுகள் வேண்டுமே – எந்தன் உயிரே

40. எந்தன் நாவில் புதுப் பாடல் எந்தன் இயேசு தருகின்றார்

ஆனந்தம் கொள்வேன் அவரை நான் பாடுவேன்

உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்

தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் – ஆனந்தம்

2. தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார்

நிந்தை தாங்கி எந்தன் யேசு மீட்புமாயினார் – ஆனந்தம்

3. வாதை நோயும் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்

பாதை காட்டி துன்ப துயர் முற்றும் நீக்கினார் – ஆனந்தம்

41. எம் குடும்பம் உம் பணிக்கே

எந் நாளும் அர்ப்பணிப்போம்-2

என் குடும்பம் உம் பணிக்கே

1. எம் நாட்டின் நிலை மாற

புதிதான வழிதோன்ற-2

விசுவாச வாழ்வினிலே

ஒற்றுமைக்காய் தருகின்றோம்

2. பழிபாவம் ஒழிந்திடவே

பசிதாகம் போக்கிடவே-2

உமதாவி தனைத்தாரும்

இருளான நிலைமாற

3. எமக்காக வாழாது

பிறர்க்காக வாழ்வதுவே-2

எம் குடும்ப குறிக்கோளாய்

இந் நாட்டில் வாழ்ந்திவோம்

42. எம்மை உமது கருவியாய் மாற்றிடு தேவா

உமது ஆவி ஆற்றலோடு நடத்திடு தேவா (2)

1. உள்ளம் உடைந்தவர் உருக்குலைந்தவர்

உமதாற்றல் பெற்றிட வேண்டும்

உறவை இழந்தவர் ஒதுக்கப்பட்டவர்

உன் துணையில் எழுந்திட வேண்டும்

இருளினை அகற்றவும் விலங்கினை உடைக்கவும் -2

நீதி நேர்மை உணர்வு ஓங்க நிம்மதியே வாழ்வில் தொடர

எம்மை உமது கருவியாக்கும்

2. மனித நேயங்கள் மதிக்கும் பண்புகள்

மனதில் தினம் வளர்த்திட வேண்டும்

இறைவன் வார்த்தையில் இனிதோர் ஆட்சியை

இம்மண்ணில் கட்டிட வேண்டும்

பிரிவுகள் நீங்கவும் ஒற்றுமை ஓங்கவும் -2

உண்மை அறிவு என்றும் வாழ உரிமை வாழ்வு நிறைவு காண

எம்மை உமது கருவியாக்கும்

43. என் ஆன்மா இறைவனையே

ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது – என்

மீட்பராம் கடவுளை நினைக்கின்றது

1. தாழ்நிலை இருந்த தம் அடியவரைத்

தயையுடன் கடைக்கண் நோக்கினார் – 2

இந்நாள் முதலாம் தலைமுறைகள் – 2

எனைப்பேறுடையாள் என்றிடுமே

2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே

எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார் – 2

அவர்தம் பெயரும் புனிதமாகும் – 2

அவரில் அஞ்சுவோர்க்கிரக்கமாகும்

3. அவர் தம் கைத்திறன் காட்டினார்

அகந்தையின் மனிதரைச் சிதறடித்தார் – 2

வலியோர் அரியணை நீங்கச் செய்தார் – 2

வறியோர் தமையே உயரச் செய்தார்

4. செல்வரை வெறுங்கையில் செல்ல வைத்தார்

சிறுமையுற்றோர் பசி நீங்கச் செய்தார் – 2

நம் முன்னோர்க்கு உரைத்ததுபோல் – 2

தம் வாக்குறுதியை நிலைக்கச் செய்தார்

5. ஆபிரகாம் நம் தந்தையர்க்கும்

அவர் வழி வந்த யாவருக்கும் – 2

என்றும் இரக்கம் நினைவு கூர்ந்தார் – 2

இஸ்ராயேலரை ஆதரித்தார்

44. என் இதயம் யாருக்கு தெரியும்

என் வேதனை யாருக்கு புரியும்

என் தனிமை என் சோர்வுகள்

யார் என்னை தேற்றக் கூடும்  யார் என்னை தேற்றக் கூடும் .

1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்

தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே உள்ளம் ஏங்குதே .

2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ

வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2) .

3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ

உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2) .

4. அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ

இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே – (2)

45. என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்

எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திடுவேன்

1. உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கின்றது (2)

உன் அன்பை நாளும் எண்ணும்போது ஆனந்தம் பிறக்கின்றது

2. உன் வாயில் சொல்லமுதாய் எந்நாளும் வாழ்ந்திடுவேன் (2)

நல் வாழ்வு நல்கும் வார்த்தையெல்லாம் நானிலம் புகழ்ந்திடுவேன்

46. என் இயேசுவே என் இயேசுவே உம்மை நான் காணவேண்டும்

என் இயேசுவே என் இயேசுவே உம் அருகில் வாழவேண்டும்

என் தாகம் தீரும் அய்யா என் ஏக்கம் போக்கும் அய்யா-2

1. கிறிஸ்துவே எனக்கு ஜீவியம் ஆனார்

கிறிஸ்துவே எனக்கு வாழ்வும் ஆனார்-2

எதற்கும் நான் அஞ்சமாட்டேன்

எதற்கும் நான் கலங்க மாட்டேன்-2

2. கிறிஸ்துவே எனக்கு உண்மையும் ஆனார்

கிறிஸ்துவே எனக்கு உயிரும் ஆனார்-2

எதற்கும் நான் அஞ்சமாட்டேன்

எதற்கும் நான் கலங்க மாட்டேன்-2

3. கிறிஸ்துவே எனக்கு கேடயம் ஆனார்

கிறிஸ்துவே எனக்கு பெலுமும் ஆனார்-2

எதற்கும் நான் அஞ்சமாட்டேன்

எதற்கும் நான் கலங்க மாட்டேன்-2

47. என் இறைவா உனை நான் மறவேன்

என்றும் உந்தன் அன்பில் வாழுவேன் (2)

1. பொருள் கொண்டு வாழ்ந்த நேரம் கூடி வந்த சொந்தம் கோடி -2

வழியிழந்து வாழ்ந்த நேரம் ஓடிவிட்ட உறவும் கோடி

நண்பனாய் நீயிருந்து கரம் சேர்த்து பலம் தந்தாய்

தாயாக நீயும் வந்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாய்

நானும் உந்தன் நெஞ்சின் ஓரம் வாழுகின்ற காலம் யாவும்

இருந்திடும் நிலைவேண்டும் தொழுதிடும் வரம் வேண்டும் -2

2. தந்துவிடும் பொருளெல்லாம் மகிழ்கின்ற நெஞ்சம் யாவும் – 2

தேவையென்று தேடும் நேரம் மகிழ்ந்திடும் மனிதம் யாவும்

வள்ளலாய் நீயிருந்து வரம் தந்து வாழவைத்தாய்

சொல்லிட வார்த்தையில்லா உறவென்று நீயுமானாய்

நானும் உந்தன்…

48. என் உள்ளம் கவியொன்று பாடும்

அது என் தேவன் உன்னைத் தேடும் (2)

தேனும் சுவையும் போல தேடிய இன்பம் சேர

என் தேவன் உன்னில் வாழும்

1. மாநிலத்தின் படைப்பினிலே உன்னை நானறிந்தேன்

மலர்களின் புன்னகையில் உன் எழில் நானுணர்ந்தேன் (2)

மழலைக் குழந்தை அழகினிலே மாந்தர் மனதின் அன்பினிலே -2

மன்னவா உனைக் கண்டேன் மாபெரும் மகிழ்வடைந்தேன்

2. நண்பர்களின் பண்பினிலே உன் நயம் நானுணர்ந்தேன்

பண்களின் இசையினிலே உன் சுவை நானறிந்தேன் (2)

பணிகள் ஆற்றும் கரங்களிலே

பகிர்ந்திடும் அன்பர் குணங்களிலே (2)

பரமனே உனைக்கண்டேன் பக்தனாய் மாறிவிட்டேன்

49. என் தஞ்சம் நீ இயேசுவே என் சொந்தம் நீ இயேசுவே என் தஞ்சம் நீ இயேசுவே

உனை பிரிந்து உலகில் வாழ எனக்கு வழியில்லை

உன்னை விட்டால் உலகில் எனக்கு வேறு கதியில்லை

எல்லாமும் நீ யேசுவே எனக்கெல்லாமும் நீ இயேசுவே

தஞ்சம் தஞ்சம் நீ இயேசுவே

நெஞ்சம் நித்தம் உனைத் தேடுதே

1. ஆயிரம் அம்புகள் என் வலப்பக்கம்

ஆயிரம் அம்புகள் என் இடப்பக்கம் என் தஞசம் நீ இயேசுவே

என் கோட்டை நீ இயேசுவே என் காவல் நீ இயேசுவே

எல்லாமும் நீ இயேசுவே எனக்கெல்லாமும் நீ இயேசுவே – 2

2. வேதனை கண்ணியில் நான் விழுந்தாலும்

வேதனை தீயில் நான் வெந்தாலும் என் தஞ்சம் நீ இயேசுவே

என் ஆயன் நீ இயேசுவே என் மீட்பு நீர் இயேசுவே

எல்லாமும் நீ இயேசுவே எனக்கெல்லாமும் நீ இயேசுவே – 2

50. என் தேடல் நீ என் தெய்வமே

நீயின்றி என் வாழ்வு நிதம் மாறுதே

உன்னை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே (2)

இறைவா இறைவா வருவாய் இங்கே

இதயம் அருகில் அமர்வாய் இன்றே (2)

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்

நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்

பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்

உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்

இறைவார்த்தையில் நிறைவாகுவேன்

மறைவாழ்விலே நிலையாகுவேன்

வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே – இறைவா

2. உன்னோடு நான் காணும் உறவானது

உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்

பலியான உனை நானும் தினம் ஏற்கையில்

எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்

உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்

உன் தேடலால் எனில் ஆற்றல்கள்

வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே – இறைவா

51. என் தேவனே என் இறைவனே உன்னை

எந்நாளும் போற்றிடுவேன்

உன்னை என்னாளும் பாடிடுவேன்

1. கண்ணிழந்தோர் பார்த்திடக் கண்டேன் இறை

யேசுவின் கருணை அதில் கண்டேன்

விண்ணிழந்தோர் அதை பெறக்கண்டேன் இறை

யேசுவின் மனதை அதில் கண்டேன்

2. உடலில் ஒளி வீசிடக் கண்டேன் இறை

யேசுவின் மகிமை அதில் கண்டேன்

கடல்களிலே பெரும் அமைதி கண்டேன் இறை

யேசுவின் தன்மை அதில் கண்டேன்

3. எளியவரும் மகிழ்ந்திடக் கண்டேன் இறை

யேசுவின் இன்பம் அதில் கண்டேன்

ஓளி விளக்காய் திகழ்ந்திடக் கண்டேன் இறை

யேசுவின் தூய்மை அதில் கண்டேன்

4. தன்னுடலை அளித்திடக் கண்டேன் இறை

இயேசுவின் இதயம் அதில் கண்டேன்

தன்னுயிரைத் தந்திடக் கண்டேன் இறை

யேசுவின் ஈகை அதில் கண்டேன்

52. என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

எல்லாமும் நீயாக வேண்டும் – எந்தன்

எல்லாமும் நீயாக வேண்டும் (2)

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது

தாயாக நீ மாற வேண்டும் (அன்புத்) – 2

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது

பாதங்கள் நீயாக வேண்டும் (எந்தன்) – 2

பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது

ஓடங்கள் நீயாக வேண்டும் (வரும்) – 2

2. போராட்டம் சூழ்ந்தென்னைத் தீவாக்கும் போது

பாலங்கள் நீயாக வேண்டும் (இணை) 2

தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்

பாடங்கள் நீயாக வேண்டும் (மறைப்) – 2

53. ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க

வருவாயோ என் தலைவா (2) அந்த

சிறுபொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் இறைவா

1. விழிகளை மூடி உனை நினைக்கையிலே

விந்தைகள் நிகழ்வது ஏன் இறைவா (2)

மொழிகளைத் தாண்டி மனம் உறவாட

மகிழ்வினில் திளைப்பதும் ஏன் இறைவா -3 ஆ…

2. சோதர மானிட அழுகுரல் கேட்க

வேள்விகள் நிகழ்வதும் ஏன் இறைவா (2)

வேதனைக் கண்டும் காட்டிடும் மௌனம்

விளங்கவில்லை அது ஏன் இறைவா -3 ஆ…

54. ஒரு பாடல் நான் பாடுவேன் மன்னன்

உந்தன் கருணையை எண்ணி எண்ணி

வியந்து மகிழ்ந்து நன்றிப் பாடல் நான் பாடுவேன்

1. ஒரு நாளில் நீ செய்த நக்மைகளை

சொல்ல நினைத்தால் வாழ்நாளே போதாதையா

சொல்லியும் தீராதையா

நன்றி சொல்வேன் நாளெல்லாம்

உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்

2. என் அன்புத் தாயாக தந்தையாக

எந்தன் இறைவா எந்நாளும் எனைப் பார்க்கின்றாய்

கண்ணாரக் காத்தாள்கின்றாய்

நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்

நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்

55. ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்                                         

ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்

ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்

அந்த இயேசுவை உணவாய் உண்போம்

இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் – 2

1. இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே

இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே – 2

வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே – 2

நம்மை இழப்போம் பின்பு உயிர்ப்போம் – 2

நாளைய உலகின் விடியலாகவே        (ஒவ்வொரு பகிர்வும்)

2. பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே

புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே புனிதமாய் நிலைத்ததே – 2

இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே – 2

இதை உணர்வோம் நம்மைப் பகிர்வோம் – 2

இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே  .(ஒவ்வொரு பகிர்வும்)

56. ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்

ஒவ்வொரு மனிதனும் சகோதரன் – 2 – என் சகோதரன்

1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்

வருத்தத்தில் இருப்பவன் சகோதரன்

அல்லல் படுபவன் என் நண்பன்

ஆபத்தில் இருப்பவன் சகோதரன்

காரணம் அவனும் மனிதன் – 2

2. பிற குலம் சேர்ந்தாலும் என் நண்பன்

பிற இனம் வாழ்ந்தாலும் சகோதரன்

பிறமொழி பேசினாலும் என் நண்பன்

பிற மதம் சார்ந்தாலும் சகோதரன்

காரணம் அவனும் மனிதன் – 2

3. அழகை இழந்தவன் என் நண்பன்

அறிவை இழந்தவன் சகோதரன்

ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்

ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்

காரணம் அவனும் மனிதன் – 2

57. கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்

புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்

உன்னோடு நானிருப்பேன் – 2 அஞ்சாதே கலங்காதே (2)

1. தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்

பொன் விளை நிலம் போலே

பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை

உயர்ந்தது அவராலே (2)

பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே

மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே

அஞ்சாதே கலங்காதே

2. பாலையில் பாதையும் பால்வெளி ஓடையும்

தோன்றிடும் அவர் கையால்

வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்

மேன்மையை எவர் சொல்வார் (2)

பார்வை இழந்தவர் வாய் திறவாதோர் யாவரும் நலமடைவார்

இறையாட்சியில் அவர் மாட்சியில் மானுடம் ஒன்றாகும்

அஞ்சாதே கலங்காதே

58. கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்

அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் (2)

1. குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை -2

நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை -2

ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் -2

2. காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை -2

நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும்

உள்ளம் ஏனோ உணர்வதில்லை (2)

தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் – 2

59. கலைமான்கள் நீரோடை தேடும்

எந்தன் இதயம் இறைவனை நாடும்

உள்ளத் தாகம் உந்தன் மீது கொண்டபோது

எனக்கு வேறென்ன வேண்டும்

1. காலம் தோன்றா பொழுதினிலே

கருணையில் என்னை நீ நினைத்தாய் – 2

உயிரைத் தந்திடும் கருவினிலே – 2

அருளினைப் பொழிந்து அரவணைத்தாய்

குயவன் கையாலே மண்பானை முடைந்திடும்

கதையில் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே

நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் – 2

காலை மாலை அறியாமல்

கண்ணீர் வடித்திடும் நிலையானேன்

சிதறிய மணிகளை சோர்த்து எடுத்தால்

அழகிய மணிமாலை நானாவேன்

60. கலைமான் நீரோடையை

ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை

ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில்

தாகம் கொண்டலைந்தது

இறைவா உன்னை என்று நான் காண்பேன்

கண்ணீரே எந்தன் உணவானது

2. மக்களின் கூட்டத்தோடு

விழாவில் கலந்தேனே

அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க

என் உள்ளம் பாகாய் வடிகின்றது

61. குறையாத அன்பு கடல் போல வந்து

நிறைவாக என்னில் அலை மோதுதே – அந்த

அலைமீது யேசு அசைந்தாடி வரவே

பல கோடி கீதம் உருவாகுதே

1. கண்மூடி இரவில் நான் தூங்கும்போது

கண்ணான யேசு என்னைக் காக்கின்றார் – உன்னை

எண்ணாத என்னை எந்நாளுமெண்ணி

மண்ணாகுமென்னை மனம் கொள்கின்றோம்

ஆ ஆ ஆ ஆ ஆ உன்னை

எண்ணாத என்னை மனம் கொள்கிறாய்

2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – மண்ணில்

துடிக்கின்ற வாழ்வில் வீழ்கின்ற துன்பம்

துடைக்கின்ற இயேசு நிறைவாகுமே

ஆ ஆ ஆ ஆ ஆ மண்ணில்

துடிக்கின்ற வாழ்வின் நிறைவாகுமே

3. இருள் வந்து சூழ பயம் மேவும் காலை

அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – பாவ

சிறை கொண்ட உள்ளம் பாய்கின்றவேளை

சிறை உன்னை வைத்து மீட்பேகினாய்

ஆ ஆ ஆ ஆ ஆ பாவ

சிறை கொண்ட உள்ளம் மீட்பேகினாய்

62. சுமை சுமந்து சோர்ந்திருப்போரே

எல்லோரும் என்னிடம் வாருங்கள் (2)

சுமைகள் எனக்குத் தாருங்கள் எனது அன்பில் வாழுங்கள் -2

உள்ளத்தில் தாழ்ச்சியும் அமைதியும் உள்ளவன்

என்பதை எண்ணிப் பாருங்கள்

1. பகைவர்களை அன்பு செய்யுங்கள்

உம்மை வெறுப்போர்க்கு நன்மை புரியுங்கள் (2)

சபிப்போர்க்கு ஆசி கூறுங்கள் -2

உம்மை வதைப்போர்க்காய் என்றும் வேண்டுங்கள் – 2

2. எளியவர்க்கு என்றும் உதவுங்கள்

அன்பு இறைமக்களாய் என்றும் திகழுங்கள் (2)

ஏழைகளை அன்பு செய்யுங்கள் -2

அவர் ஏற்றம்பெற என்றும் உழையுங்கள் – 2

63. தேவனே நீர் கண்ணோக்கும் என்னை கவலை நீங்குமே – 2

என் சோகம் பாரம் தாங்குமே நீரே என் தஞ்சமே

தேவனே நீர் கண்ணோக்கும் என்னை கவலை நீங்குமே

1. பாவம் செய்தேன் பாவியானேன் பாதை நான் மறந்தேன்

பாசக் கரத்தால் பாவம் கழுவி பாசமாய் அணைத்தீரே

2. உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன்; உள்ளதெல்லாம் இழந்தேன்

உதிரம் சிந்தியே உயிரைக் கொடுத்து உம்முடன் சேர்த்தீரே

3. என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி துடித்து தவிக்குதே

என்னை என்றும் ஏந்தித் தாங்கும் கிருபை நாதனே

64. நல்லதொரு செய்தியினை நான்

உனக்குச் சொல்லுகிறேன்

யேசு என்னை அன்பு செய்கிறார்

நலமுடனே வாழ்வதற்குக்

காரணத்தைச் சொல்லுகிறேன்

யேசு என்னைத் தேடி வருகிறார்

1. வாழ்வில் நிறைவு கண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

வாழ்வை மாற்றிக்கொண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

யேசு என்னைத் தேடி வருகிறார்

2. நம்பிக்கையில் வாழ்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

நன்மை பல செய்ததற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

யேசு என்னைத் தேடி வருகிறார்

3. அழுகையிலும் சிரிப்பதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

துன்பத்தையும் பொறுப்பதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

யேசு என்னைத் தேடி வருகிறார்

4. சூரியனே சந்திரனே சொல்லுவதைக் கேளுங்களே

வெண்நிலவே விண்மீனே

சொல்லுவதைக் கேளுங்களே

யேசு என்னைத் தேடி வருகிறார்

65. நான் உன்னைப் பாடவந்தேன் அன்பனே நல் அன்பனே

என் இனிய இயேசுவே எந்நாளுமே உன் இதயமே

எந்தன் இல்லமே எந்தன் இல்லமே (2)

1. அமுதமொழிகள் பேசும் உந்தன் வார்த்தை ஒன்று போதுமே (2)

அலையும் புயலும் தாக்கும் எனது மனதில் அமைதி தோணுமே

ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு மாறுமே -2

2. சேயை அணைக்கும் தாயைப்போல

என்னை அணைக்க வேணுமே (2)

நோயும் பேயும் நீங்கினாலும் நலமாய் வாழவேணுமே

உன் கரங்கள் போதுமே நான் சுகமாய் வாழுவேன் – 2

66. நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை          (2)

1. தாயுன்னை மறந்தாலும் ஊருன்னை வெறுத்தாலும் – 2

உன்னோடு உனக்காக நானிருக்கிறேன் – 2

விலகுவதில்லை நான் விலகுவதில்லை

உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை     (2)

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை

நீர் என்னைவிட்டு விலகுவதில்லை

நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை   (2)

2. சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும் – 2

என்னோடு எனக்காக நீரிருக்கின்றீர் 2

கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை

என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை (2)

நீர் என்னைவிட்டு விலகுவதில்லை

நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை

67. நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே – 2

நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே

அணையாத தீபமே இயேசுவே இயேசுவே

1. ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ

உன் துணையில் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ

தடை கோடி வரலாம் உளம் தவித்தோடி விடலாம்

ஆனாலும் உன் வார்த்தை உண்டு

எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு

இயேசுவே இயேசுவே

2. இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ

முடிவாக வெல்வதும் நன்மையன்றோ

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்

என்றென்றும் உன் ஆசி கொண்டு

வரும் நல் வாழ்வை கண்முன்னே கண்டு

இயேசுவே இயேசுவே

68. நீயாக நான் மாறனும் நிஜமாக நான் வாழனும்

எனக்காக பலியானதால் உனக்காக நான் மாறனும்

உயிரேவா உறவேவா வழியேவா ஒளியே நீவா – 2 – நீயாக

1. உயர்ந்தவன்; தாழ்ந்தவன் நிலை இங்குமாறிட

நான் மாறனும் நீயாகவே

மனிதமும் புனிதமும் இணைந்திடவே

நான் மாறனும் நீயாகவே

உயிரேவா உறவேவா வழியேவா ஒளியே நீவா – 2 – நீயாக

2. பாவமும் சாபமும் மறைந்திடவே

நான் மாறனும் நீயாகவே

பணிவையும் கனிவையும் வளர்ந்திடவே

நான் மாறனும் நீயாகவே

உயிரேவா உறவேவா வழியேவா ஒளியே நீவா – 2 – நீயாக

69. நீயே எமது வழி நீயே எமது ஒளி

நீயே எமது வாழ்வு இயேசய்யா (2)

1. நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள்

நன்மையென்ன தீமையென்ன அறியாத கோலங்கள் (2)

நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையின் பொருளாவாய் -2

உனது பாத பதிவுகள் எமது வாழ்வின் தெரிவுகள்

அவற்றில் நாம் நடந்தால் வெற்றியின் கனிகள்

2. துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக் காலங்கள்

தட்டுத் தடுமாறி விழ தகுமான சூழல்கள்

நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையின் சுடராவாய் (2)

உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட

உண்மையின் இறைவா உனதருள் தாரும்

70. பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்

பண்பட்ட நிலம்போல் பலன் கொடுப்பீர்

வழியோரமா? நான் கற்பாறையா? – 2

முட்புதரா? நான் நல்ல நிலமா?

1. இறைவனின் வார்த்தை விதையாகும்

அறியா உள்ளம் வழியோரம்

பறவைகள் விரைந்தே தின்பதுபோல்

பகைவனாம் தீயோன் பறித்திடுவான்

2. மண்ணில்லா பாறை நிலமாகும்

மனதில் நிலையற்ற மனிதர்களே

வேரற்ற வாழ்க்கை வாழ்வதனால்

வெயிலில் வார்த்தை கருகிவிடும்

3. இறைவனின் வார்த்தையை உணர்ந்திடுவோர்

குறையில்லாப் பண்பட்ட நிலமாகும்

அறுபது முப்பது நூறு என்றே

அறுவடை எடுப்பார் தம் வாழ்வில்

71. பலன் தரவே பயன்படுத்தும் என்னைப்

பரிசுத்த ஆவியே பண்படுத்தும் பண்படுத்தும்

1. பாறை நிலமாய் ஆகிவிட்டேன் என்னில்

பாறைக் கோலத்தைப் பண்படுத்தும் – 2

பாறைக் கற்களை உடைத்தெறியும் – அதில்

பயன்தரும் பண்கள் நிரப்பிவிடும்

2. பாதைத் தடமாய் மாறிவிட்டேன் – என்னில்

பாவப் பழக்கங்கள் இருப்பதனால்

விதைத்த வார்த்தை முளைக்கவில்லை – நீரே

விரும்பி பாதையை உழுதுவிடும்

3. கூரிய முட்கள் புதரானேன் – என்னில்

கூட்டமாய் இச்சைகள் இருப்பதனால்

நேரிய நெருப்பாய் எழுந்தவரே – எந்தன்

நேஞ்சத்தில் நெருப்பை பற்ற வையும்

72. பயன் படுத்தும் இறைவா

பதரான என்னைப் பயனுள்ள கருவியாய்

பயன் படுத்தும் இறைவா

1. எனது கரங்கள் உம் பணி புரிய

எனது கால்கள் உம் வழி செல்ல

எனது கண்கள் உம்மைப்போல் பார்க்க – 2

எனது நாவும் உம் புகழ் பாட

2. எனது செவிகள் உம் மொழி கேட்க

எனது மனமும் உம்மையே காட்ட

எனது மனம் உம்மையே நினைக்க – 2

எனது இதயம் உம்மில் அக்களிக்க

3. எனது இன்பம் பிறருக்கு நிறைவாய்

எனது வாழ்வும் பிறருக்கு ஒளியாய்

எனது வாழ்வு பிறருக்கு வாழ்வாய் – 2

எனது சாவு பிறருக்கு வாழ்வாய்

73. பாட வந்தேன் ஆண்டவரே

பாடலிலே வாழ்த்த வந்தேன்

1. என்றும் வாழ்பவன் நீயன்றோ

எதிலும் உமது அருளன்றோ

கண்மணிபோல் என்னைக் காப்பவரே

காலமெல்லாம் உனை மறவேன்

2. இறைவா வார்த்தை வாழ்வன்றோ

இதயம் வாழ்வது உமக்கன்றோ

ஆண்டவரே அக நிறைவே

ஆசையுடன் பாடுகின்றேன்

3. வாழ்வில் சோர்வு நானடையேன்

வளமை சேர்க்கும் அருள் பெறுவேன்

ஞாலமெல்லாம் உன்னை அறிதலன்றோ

நாயகனே வாழ்த்துகிறேன்

74. பாடுகிறேன் இறைவா உன்னை பாடுகிறேன் இறைவா

வழியாய் ஒளியாய் நீயிருக்க பாடுகிறேன் இறைவா

1. உலகுக்கு உயிராக வந்தாய்

உயிருக்கு உணவாக வந்தாய்

உலகுக்கு வழியாய் வந்தாய்

உந்தன் வழியில் அழைத்தாய் – 2

2. இறைவார்த்தை மனுவாகி வந்தாய்

நிறை வாழ்வின் வழியாக வந்தாய்

உலகுக்கு ஒளியாய் வந்தாய்

ஒளியில்  என்னை அழைத்தாய் – 2

75. பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெறவேண்டும்

என் உள்ளம் உன் ஒளி பெற வேண்டும் – புதுப்

பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

1. வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும் புதுப்

பார்வை பெறவேண்டும் (2)

நாளும் பிறக்கும் உன் வழியைக்

காணும் பார்வை தரவேண்டும் (2)

உன்னாலே எல்லாமுமே ஆகும் நிலை வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

2. நீதி நேர்மை உணர்வுகளை நான் பார்க்கும் வரம்வேண்டும் – 2

உண்மை அன்பு உயர்ந்திடவே

உழைக்கும் உறுதி தரவேண்டும் (2)

எல்லோரும் ஒன்றாகவே வாழ வழி வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

76. புது வரவு புது உறவு புதுமை தரும் புதுவாழ்வு

பொங்கி வரும் என் வாழ்விலே – 2;

வளமை தரும் அருள்வாழ்வு வசந்தம் தரும் திரு வாழ்வு

என் வாழ்வின் ஆரம்பமே – 2

என் இயேசு எனில் வந்ததால் – என் இயேசு  எனில் வந்ததால்

என் இயேசு  நமில் வந்ததால் – என் இயேசு  நம்மில் வந்ததால்

1. மாறாத உறவு ஒன்று எனில் வந்தது

தேயாத நிலவு ஒன்று எனைத் தேர்ந்தது – 2

ஒருபோதும் பிரியாது ஒருபோதும் தீராது

எந்நாளும் அவர் அன்பு நிலையானது – 2

நெஞ்சம் இனி பாடும் ஒரு சங்கீதமே

தஞ்சம் இனி இயேசு  என் புது வாழ்விலே

நெஞ்சம் இனி பாடும் ஒரு சங்கீதமே

தஞ்சம் இனி இயேசு  எம் புது வாழ்விலே

2. நிலையான சுகம் ஒன்று எனில் வந்தது

நீங்காத அன்பு ஒன்று எனைத் சேர்ந்தது – 2

நிஜமான உறவாலே நிறைகின்ற அன்பாலே

எனில் நாளும் வருகின்ற இறை இயேசு வே – 2

நெஞ்சம் இனி பாடும் ஒரு சங்கீதமே

தஞ்சம் இனி இயேசுவே உம்பாதமே –  2

77. மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல

மன்னன் யேசு என்னில் வரும் நேரம்

கண்ணில் இமைகள் இணைந்திருப்பது போல்

அன்பின் யேசு இணைகின்ற நேரம்

மனதினை திறந்து மகிழ்வுடனே நான் பாடுவேன்

மனத்துயர் எல்லாம் சொல்லி சொல்லி சொல்லி நான் பாடுவேன்

இறைவா இறைவா என்னில் இணைந்திடவா

என் இதயம் இதயம் உன்னில் உறைந்திடவா

1. எழுதாத ஓவியம் நானன்றோ

எழுந்து நீயும் தீட்டிடவா – 2

பழுதான வீணை நானன்றோ

அன்பு இசை மீட்டிடவா – 2

அழுகின்ற மெழுகாக துடிக்கின்றேன்

நிதம் அழியாத வாழ்வாக வருவாயே – இறைவா இறைவா

2. பாழான கிணறும் நானன்றோ

பாய்ந்தோடும் ஊற்றாய் வா – 2

உதவாத பரிசும் நானன்றோ

வழமை என்னில் நிதம் தருவாய் – 2

தொழுகின்ற கைகளை காண்பேனோ

உன்னில் வழுவாமல் வாழ்ந்திட வருவாயே – இறைவா இறைவா

78. மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ

இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ

மானைப்போல் தவித்து நிற்கும் இதயம் பாரீரோ

தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ

1. குழந்தை போல பேச எனக்கு இதயமில்லையே

மழலைச் சொல்லும் நாட்களாக மறந்து போனதே (2)

இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ

வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே

2. பாவி என்னைப் பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர்

மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் (2)

தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன்

மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தலளிப்பீரோ

79. மாறாத தெய்வம் மாறாத தெய்வம் நீ மட்டும்

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு

நிலையான தொன்றும் இங்கில்லை

நேற்றும் இன்றும் என்றும்

மாறாத தெய்வம் நீ மட்டும் போதும் – எப்போதும்

நீ மட்டும் போதும் – 3 எப்போதும் – (2)

1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து

ஆடிஇங்கு அடங்குவது வாழ்க்கை

வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்

வசந்தம் இங்கு நம்மில் என்றும் தங்கும்

நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்

நீ மட்டும் போதும் எப்போதும்

2. பொய்மையிலே நிறைந்து போலியாக நடந்து

பொழுதிங்கு போகுது கழிந்து

உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் இருந்தால்

ஊதியங்கள் தேலையில்லை நமக்கு

நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்

நீ மட்டும் போதும் எப்போதும்

80. யாரிடம் செல்வோம் இறைவா

வாழ்வுதரும் வார்த்தையெல்லாம்

உம்மிடம் அன்றோ உள்ளன – யாரிடம் செல்வோம் இறைவா

1. அலைமோதும் உலகினிலே ஆறதல் நீ தரவேண்டும் -2

அண்டி வந்தோம் அடைக்கலம் நீ

ஆதரித்தே அரவணைப்பாய் – 2

2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா

குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ – 2

3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப்போல்

உலகிருக்கும் நிலைகண்டு உனது மனம் இரங்காதோ – 2

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy