தவக்காலப் பாடல்கள்

தவக்காலப் பாடல்கள்

01. இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

மறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பை

மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2

மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ ­ இயேசுவின்

1. அளவில்லா அன்பு அதிசய அன்பு

ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு

களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2

கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு ­ இயேசுவின்

2. அலைகடலை விட பரந்த பேரன்பு

அன்னைமர் அன்பெல்லாம் திரையிடும் அன்பு

மலை போல் எழுந்தென்னை வழைத்திடும் அன்பு ­- 2

சிலை என பிரமையில் நிருத்திடும் அன்பு ­ இயேசுவின்

3. எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு

எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு

எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு ­

எனக்காக உயிரையே தந்த தேவன்பு ­ இயேசுவின்

02. உம் அன்பு எத்தனை பெரிதய்யா

ஏசையா உம் அன்பு பெரிதய்யா

எப்படி நான் மறப்பேன் எப்படி நான் மறப்பேன்

எப்படி நான் மறப்பேன் உம் அன்பை – 2 உன் அன்பு

1. பாவியாய் நான் இருந்தும் பாதத்தை நீர் கழுவி

பரமனே உமதன்பை பகிர்ந்து கொண்டீரே – எப்படி

2. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்

பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் – 2 எப்படி

3. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்

வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் – 2– எப்படி

4. துரோகி நான் உம்மையே பரிகாசம் செய்தேனே

நேசமாய் வந்தென்னை தேற்றுக் கொண்டீரே – 2– எப்படி

03. உம்மை போல் இந்த உலகிலே

வேறொருவரும் இல்லையே -2

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

என் ஆத்ம நேசர் நீரல்லோ

அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

என் இதய துடிப்பும் நீரல்லோ

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்

மனித உறவுகளால் நொருக்கப்பட்டேன் – 2

வேதனையில் நான வாடுகையில்

உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் – 2

2. குழப்பமான சில நேரங்களில்

கேள்விகள் அநேகம் எழுகையில் -2

உம் ஞானத்தினால என்னை வழிநடத்தும்

உம் சமூகத்தில என்னை பலப்படுத்தும் – 2

04. என் இயேசுவே என்னை மன்னியும் – 2 (3)

உன் குரல் எனத் தெரிந்தும் கேட்காமல் நான் திரிந்தேன்…

உன் முகத்தைக் கண்ட பின்னும்

பேசாமல் திரும்பிக்கொண்டேன்…

1. உன் அருள் எனில் இருந்தும் உணராமல் நான் வாழ்ந்தேன்…

உன் வழியை அறிந்திருந்தும் நடவாமல் மாறிச் சென்றேன்…

2. உதவி செய்ய வாய்ப்பிருந்தும் உதவாமல் உதறிச் சென்றேன்…

உண்மை வாழ்வில் தெளிவிருந்தும்

உலகப்போக்கில் நானலைந்தேன்…

05. என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன் – 2

நான் நம்பிடுவேன் வானில் உம்மை சார்ந்திடுவேன்

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன்

1. நான் நம்பிடும் நேச யேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன் – 2

தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுமே – 2

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன் – 2

2. இவரே நல்ல நேசர் யேசுவே என்றும் தாங்கி நடத்துவார் – 2

தீமைகள் சேருங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – 2

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன் – 2

06. கருணை தெய்வமே கண்பாரும்

எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்

1. உடலும் மனமும் அறிவும் ஒன்றுசேர்ந்து

உம்மை எதிர்த்ததையா (2)

தேவ வாக்கின் வழியை மனம்

பன்முறை அறிந்தும் வெறுத்ததையா

பாவச்சேற்றை வாழ்வில் எம்வாழ்வே கொண்டு நிறைந்ததையா

2. பாதை தெளிவுறத் தெரிந்தும் – அதைப்

பார்த்து நாங்கள் நடக்கவில்லை (2)

உண்மை விளக்கு எரிந்தும் – அதன்

ஒளியின் அருகே வாழவில்லை

இறைவன் அன்பு அழைத்தும் – அதை

உணர்ந்த பின்னும் திருந்தவில்லை

07. கல்மனம் கரைய கண்களும் பனிக்க

கைகளைக் குவித்தேன் இறைவா

என் மனம் வருவாய் இறைவா (2)

1. என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து

பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு

புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய

இன்னருள் தருவாய் இறைவா -2

பாசத்தைக் களைந்து பாவத்தை விலக்க

2. பாதத்தைப் பிடித்தேன் இறைவா (2) துயர்

வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும்

அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2

3. நான் எனும் அகந்தை நரகத்தை அழித்து

நல்லுலகமைப்போம் இறைவா (2) அங்கு

பூவெனும் இதய பீடத்தில் எனையே

பலியாய் அளிப்பேன் இறைவா

08. கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா – 2

கருணை கூருமையா எங்கள் கறைகள் நீக்குமையா

எங்கள் கறைகள் நீக்குமையா – இயேசையா -4 (2)

1. கள்ளம் கபடு சூது நினைப்பேன் காரிருள் நீக்குமையா -2

உள்ளம் உருகி உனை நான் அழைத்தேன் -2

உன் கரம் நீட்டுமையா-2 – இயேசையா -4 (2)

2. இறை உன்னை பிரிந்தேன் இதயம் நொந்தழுதேன்

இரக்கம் காட்டுமையா (2)

மறையினை மறந்தேன் மனதையும் இழந்தேன் -2

மன்னிப்பு தாருமையா -2 – இயேசையா -4 (2)

3. அனலிடை துடித்த புழுப்போலானேன் அன்பு கூருமையா-2

கானலைக் கண்ட மான் போலானேன் -2

மயக்கம் தீருமையா -2 – இயேசையா -4 (2)

09. சர்வதயாபர யேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள்பேரில்

தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

1. மண்ணால் மனிதனை உண்டாக்கி

திவ்விய கருணையால் வல்லவனாக்கி

அவன்கையால் பாடுபடத் திருவுளமான   என் தயாபர யேசுவே!

2. துஷ்ட யூதர் கையில் சிறைப்பட்டு

திருக்கண்டத்தில் கரத்தில் கயிறிட்டு

செம்மறிபோலப் பலிக்கேகப்பட்ட           என் தயாபர யேசுவே!

3. அநீத குருச்சபையிலமைந்து

பொய்ச்சாட்சிகளுக்குப் பணிந்து

தேவபழிகாரனாகக் கூறப்பட்ட                என் தயாபர யேசுவே!

4. திருக்கன்னத்தில் அறையுண்டு

திருவிழிகள் மறைக்கப்பட்டு இராமுழுதும்

கோறணி வாதைகள் அனுபவித்த என் தயாபர யேசுவே!

5. பிலாத்திட்ட துஷ்ட தீர்வையால் கற்றூணில் கட்டுண்டு

நிஷ்டூரமாய் ஐயாயிரத்துக்கதிகம் அடிபட்டு

சர்வாங்கமுமிரத்தவாறாக்கப்பட்ட                      என் தயாபர யேசுவே!

6. திருச்சிரசில் முள்முடி தரித்து

பீற்றற்சகலாத்தை மேலில் போர்த்து

பரிகாச ராசனாக நிந்திக்கப்பட்ட             என் தயாபர யேசுவே!

7. பாரதூர சிலுவை தோளிற்சுமந்து

கபாலமலை மட்டும் தொய்வோடே நடந்து

பலவீனமாகத் தரையிலே விழுந்த என் தயாபர யேசுவே!

8. திருத்துகிலைக் கடூரமாயுரிந்து

சர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து

சபைமுன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட  என் தயாபர யேசுவே!

9. சிலுவைமரத்தின்மீதே சயனித்து

திருப்பாத கரங்களில் ஆணிகள் அறைந்து

இரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட  என் தயாபர யேசுவே!

10. சிலுவையிலேறிச் சுகிர்தம் மொழிந்து

வாதிக்கிற சத்துராதிகளுக்கு பாவம் பொறுத்து

அனைவருக்கும் தயவு காண்பித்த என் தயாபர யேசுவே!

11. சகல வாதைகளையும் தீர அனுபவித்து

பாவகளீடேற்றம் முகியமுகித்து

சீவபலியாகப் பிராணனைக் கொடுத்த     என் தயாபர யேசுவே!

12. திருமுக மலர்வு மடிந்து, திருவிழிகள் மறைந்து

திருத்தலை கவிழ்ந்து மரணித்த                என் தயாபர யேசுவே!

13. எனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே

என்பாவமுத்தரிக்க உமதுதிரம் சிந்தினீரே

எனதாத்துமத்திற்காக உமதாத்துமத்தைக் கொடுத்த

என் தயாபர யேசுவே

14. இந்த நன்றிகளையெல்லாம் அடியேன் பாராமல்

எனக்காகப் பாடுபட்டதையுமெண்ணாமல்

மகா துஷ்ட துரோகத்தைச் செய்தேனே!

என் பாவத்தைப் பொறும் சுவாமி, என் பாவத்தைப்பொறும்

15. இதோ என்னிருதயம் சகலமுமதிர்ந்து

விதனத்தால் பொடிப்பொடியாகப்பிழந்து

கண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன்

என் பாவத்தைப் பொறும் சுவாமி என் பாவத்தைப்பொறும்

16. என் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல்

என் பாவத்தைப் பொறும் சுவாமி என் பாவத்தைப்பொறும்

உம்முடைய கிருபைபையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து

என் பாவத்தைப் பொறும் சுவாமி என் பாவத்தைப்பொறும்

உம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து

என் பாவத்தைப் பொறும் சுவாமி என் பாவத்தைப்பொறும்

உம்முடைய சிலுவையையும், திருமரணத்தையும் பார்த்து

என் பாவத்தைப் பொறும் சுவாமி என் பாவத்தைப்பொறும்

உம்முடைய சர்வாங்க காயங்களையும், திருவுதிரங்களையும் பார்த்து

என் பாவத்தைப் பொறும் சுவாமி என் பாவத்தைப்பொறும்

சர்வதயாபர யேசுவே, பாவிகளாயிருக்கிற எங்கள்பேரில்,

தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

10. சிலுவையை நிமிர்ந்து பாராயோ அதன்

புதுமையைக் கொஞ்சம் கேளாயோ

உலகமே – 4

1. பாவியை மன்னிக்கும் சிலுவையிது

புது ஆவியைத் தந்திடும் சிலுவையிது

துன்பத்தைப் போக்கிடும் சிலுவை இது – 2

மனத் துயரத்தை நீக்கிடும் சிலுவை இது

சிலுவை இது – 4

2. குறைகளை அகற்றிடும் சிலுவை இது

பல நிறைகளை அளித்திடும் சிலுவை இது

மரணத்தை வென்ற சிலுவை இது 2

பலர் மானத்தைக் காத்த சிலுவை இது

சிலுவை இது – 4

11. சுமைசுமந்து சோர்ந்திருப்போரே

என்னிடம் எல்லோரும் வாருங்கள்

1. உங்களை நான் இளைப்பாற்றுவேன்

உங்களை நான் காப்பாற்றுவேன்

உங்களை நான் தேற்றிடுவேன் உங்களை நான் ஏற்றிடுவேன்

2. உங்களை நான் நடத்திச் செல்வேன்

உங்களை நான் அன்பு செய்வேன்

உங்களை நான் அரவணைப்பேன்

உங்களை நான் வாழச் செய்வேன்

3. உங்களை நான் வளரச் செய்வேன்

உங்களை நான் ஒளிரச் செய்வேன்

உங்களை நான் மலரச் செய்வேன்

உங்களை நான் மிளிரச் செய்வேன்

12. தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்

அனுதபித்து என் பிழையை அகற்றுமையா

பாவமதை நீக்கி என்னைப் பனிபோலாக்கும்

தோசமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும்

1. என் குற்றம் நானறிவேன் வெள்ளிடைமலைபோல்

தீவினையை மறவாதென் மனது என்றும் – உம்

புனிதத்தைப் போக்கி நான் பாவியானேன் – நீர்

தீமையென்று கருதுவதைத் துணிந்து செய்தேன்

1. உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகின்றீர் – என்

ஆத்துமத்தின் அந்தரத்தில் அறிவையூட்டும்

என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

பனிவெண்மைக் குயர்வாகப் புனிதமாவேன்

13. தேவ அன்பு பெரியதே

அது தாயன்பிலும் உயர்ந்ததே – 2

உள்ளங்கையில் என்னை வரைந்த அன்பு

கள்ளமில்லாமல் காக்கும் அன்பு – 2

1. கன்னத்தில் அறைந்த நேரமதிலும்

புன்னகை தந்த அன்பல்லோ – 2

காட்டீக் கொடுத்த வேளைதனிலும்

மீட்பு தந்த மெய்யன்பு – 2

தூரமாய் நீ ஓடினாலும்

தேடி அலைந்த அன்பல்லோ – 2

மனம் நொந்து நீ கலங்கும் போதும்

உனக்காய் கதறும் மெய்யன்பு – 2

2. பாவத்தில் நீ மாண்டிடாமல்

ஜீவன் தந்த அன்பல்லோ – 2

தகப்பன் தாயும் தள்ளினாலும்

தாங்கி அணைக்கும் தேவன்பு – 2

14. தொடும் என் கண்களையே

உம்மை நான் காண வேண்டுமே

இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே

1. தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே

இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே

2. தொடும் என் மனதினையே பாவப் புண்கள் ஆற வேண்டுமே

இயேசுவே மனப்புண்கள் ஆற வேண்டுமே

3.தொடும் என் உடலினையே உடல் நோய்கள் தீர வேண்டுமே

இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே

4. தொடும் என் ஆன்மாவையே என் பாவம் போக்க வேண்டுமே

இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

5. தொடும் என் இதயத்தையே உம் அன்பு பெருக வேண்டுமே

இயேசுவே உம் அன்பு பெருக வேண்டுமே

15. பாடுகள் நீர் பட்டபோது பாய்ந்து ஓடிய இரத்தம்

கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே

கெட்டுப்போனோம் பாவியானோம்

கிருபை செய் நாதனே

மட்டில்லாக் கருணை என்மேல்

வைத்திரங்கும் யேசுவே

1. துஷ்ட யூதர் தூணினோடு

தூய கைகள் கட்டியே

கடுமையாய் அடித்தபோது

கான்ற செந்நீர் எத்துணை

2. சென்னிமேற் கொடிய யூதர்

சேர்த்து வைத்த முண்முடி

தன்னால் வடிந்த ரத்தத்தால்

சர்வ பாவம் நீங்குமே

3. நீண்ட இருப்பாணி கொண்டு

நிஷ்டூரர் கை கால்களை

தோண்டியபோது சொரிந்த

தூய இரத்தம் எத்துணை

4. மெத்து குரோதத்தினாலே

விலாவை ஒரு சேவகன்

குத்தவே சொரிந்த ரத்தம்

கொண்டே எம்மை மீட்பீரே

5. ஐந்து காயத்தால் வடிந்த

அரிய ரத்தத்தினால்

மிஞ்சும் எங்கள் பாவந்தீர்க்க

வேண்டுகிறோம் யேசுவே

16. பாவி என்மேல் இரக்கம் வையும்

பாவம் பொறுத்து அருள் புரியும்

தந்தை உம்மை பிரிந்து சென்றேன்

உறவினை தேடி திரும்பி வந்தேன்

ஆ…….ஆ……

1. அருகினில் வாடும் மனிதனையே

அறியாது நானும் வாழுகின்றேன்

தெருவினில் நிகழும் விபத்தினையோ

தெரியாது பயணம் செல்லுகிறேன்

நேசக்கரங்களை நான் அறியேன்

பாசமொழியினை மறந்து விட்டேன்

ஆ……ஆ….

2. கண்டும் காணா மனநிலையே

கவலைகள் கொள்ளாத இதயமிதே

கரிசனம் கனிவும் நானறியேன்

கதவினை திறந்திட மனமிசையேன்

இருளினை பழித்திடும் விளக்கானேன்

துடுப்பினை உதறிடும் படகானேன்

17. மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்

மறவாதே மறவாதே மனிதனே

1. பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் – 2

பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

2. மரணம் வருவதை மனிதன் அறிவானோ -2

தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ

3. இறைவன் இயேசுவோ இறப்பைக் காடந்தவர் -2

அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்


18. மனிதா ஓ மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய்

மண்ணுக்கே திரும்புவாய் (2)

நினைவில் வை –  (3) – ஓ மனிதா

மனிதா ஓ மனிதா

1. இரக்கத்தின் காலம்  இது என உணர்வோம்

இறைவனின் இரக்கம் வேண்டிப் பெறுவோம்  (2)

பழையனை விடுத்து புதியன புனைவோம் – (2)

புனிதத்தில் நிலைத்து புது படைப்பாவோம்

புனிதத்தில் நிலைத்து  புது படைப்பாவோம் – மனிதா ஓ மனிதா

2. கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்

கடவுளின் இதயம் நாம் பெறவேண்டும்

சாம்பலை அணிந்து ஜெப தவம் புரிந்து – (2)

சாவினைக் கடந்து வாழ்வினில் நுழைவோம்

சாவினைக் கடந்து வாழ்வினில் நுழைவோம் – மனிதா ஓ மனிதா

குருத்து ஞாயிறு பாடல்கள்

01. ஆண்டவர் புனித நகரத்தில்

நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம்

உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்

குருத்து மடல்களை ஏந்தி நின்று

’உன்னதங்களிலே ஓசான்னா’ என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான்

வருவதைக் கேட்ட மக்களெல்லாம்

அவரை எதிர் கொண்டழைத்தனரே – குருத்து மடல்களை…

02. ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்

ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்

இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்

இயேசு இரட்சகரே எழுந்தருளும்

மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா

முனி சூசை கரங்களில் வளர்ந்தவரே

மானிடர் குலத்தினிலுதித்தவரே – எம்

மன்னவரே எழுந்தருள்வீரே

1. தாவீது அரசனின் புத்திரரே – ஓர்

தெய்வீக முடியோடு வந்தவரே

தருமரென புகழ் அடைந்தவரே – எம்

தேவனே தேவனே வருவீரே

2. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா

அருள் போதனரால் புகழப்பட்டீர்

ஆகாயங்களை நீர் திறக்கவிட்டீர் – உம்

ஆதிப் பிதாவிடம் பதவி பெற்றீர்

3. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் – நீர்

கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்

கொண்டுவர சொன்னீர் சுத்தத் தண்ணீர் – அதை

சுத்த ரசமாக்கிப் பெயர் அடைந்தீர்

03. எபிரேயர்களின் சிறுவர் குழாம்

ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்

உன்னதங்களிலே ஓசான்னா

என்று முழங்கி ஆர்ப்பரித்து

ஆண்டவரை எதிர் கொண்டனரே

1. மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன

பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்

அவர் தம் உடைமையே

ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை

நிலை நிறுத்தியவர் அவரே

ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே

2. ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?

அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?

மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்

மனத்தைச் செலுத்தாதவன்

தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

04. என் இறைவா என் இறைவா

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)

1. என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை

ஏளனம் செய்கின்றனர்

உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்

ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்

அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்

இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

2. ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன

பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது

என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்

அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்

3. என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்

என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்

ஆனால் நீரோ ஆண்டவரே

என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்

எனக்கு துணையான நீர் எனக்கு

உதவி புரிய விரைந்து வாரும்

05. கிறிஸ்து அரசே இரட்சகரே

மகிமை வணக்கம் புகழ் உமக்கே

எழிலார் சிறுவர் திரள் உமக்கே

அன்புடன் பாடினர் ஓசான்னா (2)

1. இஸ்ராயேலின் அரசர் நீர்

தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்

ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்

2. வானோர் அணிகள் அத்தனையும்

உன்னதங்களிலே உமைப் புகழ

அழிவுறும் மனிதரும் படைப்புகளும்

யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

06. கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி (நற்செய்திக்கு முன்)

சாவை ஏற்கும் அளவுக்கு – அதுவும்

சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்

ஆதலால் தான் கடவுள் அவரை

எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி

எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

07. தாவீதின் மகனுக்கு ஓசான்னா

ஆண்டவர் பெயரால் வருகிறவர்

ஆசி நிரம்பப் பெற்றவரே

இஸ்ராயேலின் பேரரசே

உன்னதங்களிலே ஓசான்னா – 2

08. புகழ்வாய் எருசலேம் உன் ஆண்டவரை

புகழ்வாய் சீயோனே உன் தேவனை

ஓசான்னா  ஓசான்னா  ஓசான்னா

தாவீதின் குமாரா

1. பூமியும் அதில் நிறையாவும் ஆண்டவருடையதே

பூ மண்டலமும் அதில் வாழும் குடிகளும் அவர்தம் உடமையே

ஏனெனில் கடல்களின் மேல் நிலை தந்தவர் அவரே

ஆறுகள் மீது அதை நிறுவினார் அவரே – புகழ்

2. ஆண்டவரது மலைமேல் ஏறிச்செல்ல தகுந்தவன் யார்

அவரது திருத்தலத்தில் நிலை நிற்கககூடியவன் யார்

மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன்

தன் அயலானுக்கு வஞ்சகமாய் ஆணையிடாதவன் – புகழ்

பெரிய வியாழன் பாடல்கள்

01. அன்பும் நட்பும் எங்குள்ளதோ

அங்கே இறைவன் இருக்கின்றார்

1. கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம்

ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்ததுவே

அவரில் அக்களித்திடுவோம் யாம்

அவரில் மகிழ்ச்சி கொள்வோம்

2. சீவிய தேவனுக்கஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்

நேய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்

02. ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் – இந்த

பாஸ்கா உணவை உண்பதற்கு (நான்) – 2

1. பாடுகள் துவங்கும் காலம் இது நம் கண் முன் தெரிகின்றது

பகிர்ந்திடும் விருந்து வேளையிது இங்கு அன்பு மலர்கின்றது

அன்பில் பிறந்திடும் துன்பங்கள் – மகிமையின் வாசல்கள் – 2

2. உடலின் உழைப்பும் வலிமையையும் – நாம்

பகிர்ந்தே வாழ்ந்திடுவோம்

குருதியில் கலந்த நல்லறங்கள் நம்

வாழ்வில் நிறைத்திடுவோம்

பகிர்ந்து வாழும் நெஞ்சங்கள் – பலியதன் பீடங்கள் – 2

03. ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

1. சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே

இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

2. நான் செய்வது இன்னதென்று

உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்

ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது?

அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்

உனக்கு என்னோடு பங்கில்லை என்றார்

04. ஆண்டவரே பரிசுத்த குருக்களை நீர் தாரும்

அருள் வாழ்வில் உம் குரல் கேட்டு வாழ அருள் கூரும்

1. இறை மகனின் திருப்பலியை தொடர்ந்தெங்கும் ஆற்ற

இருள் சூழ்ந்த உலகினிலே அருள் விளக்கை ஏற்ற

வாழ்வளிக்கும் உண்மைகளை உலகிற்கு வழங்க

வற்றாத பேரன்பின் ஊற்றாகத் திகழ

2. நெஞ்சிற்கு நிறைவளிக்கும் இறைவனையே புகழ

நிலவுலகில் அமைதியின் தூதுவராய் திகழ

நஞ்சான கொள்கைகளை அஞ்சாமல் காக்க

நலம் சேர்க்கம் நெறிகள்  தன்னை பலமாகக் காக்க

3. புனிதத்தின் நறுமணத்தை புவியெங்கும் சேர்க்க

புண்ணான நெஞ்சத்தில் புத்துயிரை வளர்க்க

கருணையிலே தந்தையென தாயெனவும் இலங்க

கற்பு நிறை வாழ்வுக்கு காவலராய் துலங்க

4. தீமையென்னும் நோய் தீர்க்கும் மருத்துவராய் மிளிர

திரிபோல எரிந்துருகும் தியாகிகளாய் ஒளிர

திருவருளின் சாதனத்தால் இறையுயிரை ஊட்ட

திருச்சபையாம் இறையரசை நாடெங்கும் நாட்ட

05. நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்

கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதன்றோ!

1. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்

நான் என்ன கைம்மாறு செய்வேன்!

மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து,

ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்

2. ஆண்டவர் தம் அடியாரின் மரணம்

அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது

நான் உம் அடியேன் உம் அடியான் மகன்

என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்

06. பணிகள் புரிய வந்தார் – சீடர்

பாதம் கழுவி பணிந்தார்

அன்பை வளர்க்கும் உறவு, யேசு

தன்னை ஈந்தார் உணவாய்

1. தொட்டதும் தீர்ந்தது தொழுநோய்

சொல்லி கேட்டதும் அகன்றது அலகை

பிட்டதும் பலுகிய அப்பம்;

அதைப் பகிர்ந்ததும் மென்றது பசியே

2. அழைத்ததும் பிறந்தது மாற்றம்

அவர் ஜெபித்ததும் வந்தது உயிரே

மன்னிப்பும் தந்தது மகிழ்ச்சி

அதை உணர்ந்ததும் கனிந்தது வாழ்வே-

07. பாடுவாய் என் நாவே மாண்பு

மிக்க உடலின் இரகசியத்தை

பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தாம்

பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லாதுயர்ந்த

தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயே

1. அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று

நமக் கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து

அரிய தேவ வார்த்தை யான வித்து அதனை விதைத்த பின்னர்

உலக வாழ்வின் நாளை மிகவே

வியக்கும் முறையில் முடிக்கலானார்

08. பாஸ்கா உணவினை அருந்திட சீடரோடு இயேசு வந்து

பந்தியிலே அமர்ந்திருந்தார்

தம் மேலாடை களைந்து இடுப்பினில் துண்டைக் கட்டி

சீடரிடம் எழுந்து வந்தார்

1. குவளையில் தண்ணீர் மொண்டு சீடர்களின் பாதம் தொட்டு

கழுவியே துடைத்து விட்டார்

பணி வாழ்வின் பெருமை சொன்னார்

2. சீமோன் இராயப்பரை நாடி வந்து பாதங்களைக் கழுவிட

இயேசு வந்த நேரத்திலே

இராயப்பரோ பாதங்களை இயேசுவிடம் காட்டாது

உரிமையில் கடிந்து கொண்டார்

என்னுடைய பாதங்களை என் ஆண்டவர் கழுவுவதா

ஒருபோதும் அனுமதியேன் ஒரு காலும் சம்மதியேன்

3. நான் செய்வது இன்னதென்று இப்போது புரியாது

பின்னரே புரிந்து கொள்வாய்

உன் பாதம் கழுவிட அனுமதியாவிடில்

என்னோடு பங்கில்லை

ஆண்டவரே போதகரே என் கால்களை மட்டுமல்ல

என் கைகளை தலையையுமே முழுவதும் கழுவி விடும்

முழுவதும் குளித்தவன் கால் மட்டும் கழுவினால்

போதுமென்று அறியாயோ ?

நான் செய்வதன் அர்த்தம் என்னவென்று உமக்கு

இந்நேரம் புரியாதோ ?

4. நான் ஆண்டவர் போதகர் தான் முன் மாதிரி காட்டுகிறேன்

நீங்கள் ஒருவர் ஒருவரது பாதங்களைக் கழுவுங்கள்

இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் இருத்தி

நாமும் வாழ்ந்திடுவோம்

பிறர் பணி செய்து வாழ்வதே நம் வாழ்வின் கடமை

சீடரின் தகுதியென்போம் (2) – 3

09. புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன்

உங்களுக்கு நான் அன்பு செய்தது போலவே

நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்

என்றுரைக்கின்றார் எம்பெருமான் இயேசு

பெரிய வெள்ளி பாடல்கள்

01. ஆணி கொண்ட உன் காயங்களை

அன்புடன் முத்தி செய்கின்றேன் – 2

1. வலது கரத்தின் காயமே -2 அழகு நிறைந்த ரத்தினமே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2 கடவுளின் திரு அன்புருவே

அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே – 2 பலன் மிகத் தரும் நற்கனியே …

அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே – 2 திடம் மிகத் தரும் தேனமுதே …

அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே – 2 அருள் சொரிந்திடும் ஆலயமே …

அன்புடன் முத்தி செய்கின்றேன்

02. எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் ? சொல்

எதிலே உனக்குத் துயர் தந்தேன்?

எனக்குப் பதில் நீ கூறிடுவாய்

1. எகிப்து நாட்டில் நின்றுன்னை

மீட்டுக் கொண்டு வந்தேனே

அதனாலோ உன் மீட்பருக்குச்

சிலுவை மரத்தை நீ தந்தாய்?

2. நான் உனக்காக எகிப்தியரை

அவர்தம் தலைச்சன் பிள்ளைகளை

வதைத்து ஒழித்தேன், நீ என்னைக்

கசையால் வதைத்துக் கையளித்தாய்

3. பார்வோனை செங்கடலிலாழ்த்தி

எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்

நீயோ என்னைத் தலைமையாம்

குருக்களிடத்தில் கையளித்தாய்

4. நானே உனக்கு முன்பாகக்

கடலைத் திறந்து வழி செய்தேன்

நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே

குத்தித் திறந்தாயே!

5. மேகத் தூணில் வழிகாட்டி

உனக்கு முன்னே யான் சென்றேன்

நீயோ பிலாத்தின் நீதி மன்றம்

என்னை இழுத்துச் சென்றாயே!

6. பாலை வனத்தில் மன்னாவால்

நானே உன்னை உண்பித்தேன்

நீயோ என்னைக் கன்னத்தில்

அடித்து கசையால் வதைத்தாயே!

7. இனிய நீரை பாறை நின்று

உனக்குக் குடிக்கத் தந்தேனே

நீயோ பிச்சுக் காடியையே

எனக்குக் குடிக்கத் தந்தாயே!

8. கானான் அரசரை உனக்காக

நானே அடித்து நொறுக்கினேன்

நீயோ நாணல் தடி கொண்டு

எந்தன் தலையில் அடித்தாயே!

9. அரசர்க்குரிய செங்கோலை

உனக்குத் தந்தது நானன்றோ?

நீயோ எந்தன் சிரசிற்கு

முள்ளின் முடியைத் தந்தாயே!

10. உன்னை மிகுந்த திறனோடு

சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்

நீயோ என்னைச் சிலுவை என்னும்

தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்!

எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் ? சொல்

எதிலே உனக்குத் துயர் தந்தேன்?

எனக்குப் பதில் நீ கூறிடுவாய்

03. கல்வாரி அன்பை எண்ணிடும்வேளை கண்கள் கலங்கிடுதே

கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்

நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1. கெத்சமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை – 2

எத்திசையும் அன்பு தொனிக்கின்றதே

எந்தன் மனம் நினைக்கின்றதே

கண்கள் கலங்கிடுதே

2. எம்மையும் உம்மைப்போல் மாற்றிடவே

உம்ஜீவன் தந்தீரன்றோ

எங்களை தரைமட்டும் தாழ்த்துகிறீரோ

தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே

ஏற்று என்றும் நடத்தும்

04. கல்வாரிக்குப் போகலாம் வாரீர் – 2 என்

காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட

1. பொல்லாப் பகைவர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே

நல்லாயன் மீட்பர்தனை கொல்லும் வாதை காண (2)

2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முள்முடி பூண்டு

தவத்தில் உயர்ந்த ஞானன் தவிக்கும் முகத்தைப் பார்க்க (2)

3. பாரச் சிலுவை தனை தோளில் சுமந்து – மிகக்

கொடுமையாய் இருக்கின்ற கொடூரத்தை பார்த்திட (2)

05. கல்வாரி மலைமேலே கள்வர்களின் நடுவினிலே

கனிவுள்ள முகம் பார்த்தேன் – அது

கர்த்தரின் முகமன்றோ அது கடவுளின் முகமன்றோ

1. தேகமெல்லாம் இரத்தமயம் திணறுகின்றார் மூச்சுவிட

தாகம் தாகம் என்கிறார் தண்ணீர் கொடுக்க யாருமில்லை

2. அழுவதற்கோ ஆட்களில்லை அணைப்பதற்கோ கரங்களிலில்லை

அப்பா தந்தாய் என்கிறார் ஐயோ பாவம் தேவமைந்தன்

06. சிலுவை மரமே சிலுவை மரமே

உன்னை நான் முத்தி செய்கிறேன் (2)

இறைவன் இயேசு உன்னைச் சுமக்க என்ன தவம் செய்தாய் (2)

1. பாவச் சுமையின் சின்னமாக உன்னைச் சுமந்த இயேசுவே -2

புதிய வாழ்வின் புனிதமாக உன்னை உயர்த்திவிட்டார் – 2

2. ஆணி கொண்டு உன்னில் அறைந்து உயிரை மீட்டார் இயேசுவே (2)

மேனி வழிந்த குருதி நனைந்து புனிதமானாய் சிலுவையே – 2

3. இறைவன் வார்த்தை இறுதியாக உந்தன் மேலே ஒலித்தது -2

அன்பும் அருளும் ஆசி பொழிவும் உந்தனிடமே பிறந்தது – 2

4. பிறந்த நிகழ்வும் இறந்த விதமும் அடிமைக் கோலக் காட்சியே – 2

நிகழ்ந்ததனைத்தும் சிகரமாக உன்னில் முடிந்தது மாட்சியே -2

5. தலையைச் சாய்த்து உயிரைநீக்க அன்னை மடியும் இல்லையே 2

கரங்கள் விரித்து உம்மில் மரித்தார் புனிதமானாய் சிலுவையே (2)

07. தந்தையே உம் கையில் என்

ஆவியை ஒப்படைக்கிறேன்

ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்

நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்

உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்  

உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் –

ஆண்டவரே வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும்

1. என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்கு நான்

ஆளானேன் – என் அயலாரின் நகைப்புகுக்கு இலக்கானேன்

எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்

வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னை விட்டு ஓடுகின்றனர்

இறந்து போனவன்போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்

உடைந்து போன மட்கலத்தை போலானேன்

2. ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்

நீரே என் கடவுள் என்றேன் – என் கதி உம் கையில் உள்ளது

ஆண்டவரே என் எதிரிகளிடமிருந்தும் என்னை துன்புறுத்துவோரிடமிருந்தும்

நீர் என்னை விடுவித்தருளும்

கனிந்த உம் திருமுகத்தை காட்டியருளும்

உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்

ஆண்டவர் மீது நம்பிக்கை உள்ளவர்களே

மனத்திடன் கொள்ளுங்கள் உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்

08. பாடுகள் நீர் பட்ட போது பாய்ந்து ஓடிய இரத்தம்

கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே

1. கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே

மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே

2. துட்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே

கஷ்டமாய் அடித்த போது காய்ந்த செந்நீர் எத்துணை

3. சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி

தன்னால் வடிந்த ரத்தத்தால் சாவான பாவம் நீங்குமே

4. ஐந்து காயத்தால் வடிந்த அரிய ரத்தத்தினால்

மிஞ்சும் எங்கள் பாவம் தீர்க்க வேண்டுகின்றோம் இயேசுவே

சிலுவைப் பாதை பாடல்கள்

01. இயேசுவே ஏன் இந்தப் பாடுகள்

இயேசுவே ஏன் இந்தக் காயங்கள்

எனக்காகவோ எனக்காகவோ – 2

1 பொய்களின் கூடாரத்தில் உண்மையின் யேசு

மன்னன் பிலாத்துவால் அநியாய தீர்ப்பு

மாசற்ற செம்மறிக்கு அவமான தீர்ப்பு

எனக்காகவோ எனக்காகவோ – 2

2 சிலுவை சுமந்த அன்பின் யேசு

சுயநல சூழ்ச்சிகள் அரங்கேறும் நேரம்

இறையேசு தோள் மீது சிலுவையின் பாரம்

எனக்காகவோ எனக்காகவோ – 2

3 விதையாய் விழுந்த ஒளியின் யேசு

சிலுவையின் சுமையோ தோள் மீது அழுத்த

முதல்முறை யேசு மண்மீது விழுந்தார்

எனக்காகவோ எனக்காகவோ -2

4 தாயை சந்தித்த தாயான யேசு

தாயும் சேயும் உறவாலே தேட

அன்னையும் ஏற்றாள் பிரிவாலே வாட

எனக்காகவோ எனக்காகவோ -2

5 சீமோன் உதவியில் இரக்கத்தின் யேசு

எண்ணற்ற மாந்தர் வேடிக்கை பார்க்க

சீமோனும் வந்தார் சிலுவையை ஏற்க

எனக்காகவோ எனக்காகவோ -2

6 பரிசு தந்த பரிசுத்தத்தின் யேசு

தன்னிலை துணிந்து வெரோணிக்காள் வந்தாள்

வெண்துணி அதிலே வெகுமதி அடைந்தாள்

எனக்காகவோ எனக்காகவோ -2

7 வீழ்ந்தாலும் எழும் விடுதலையின் யேசு

ஓய்வில்லா கசையடி உடலெல்லாம் கிழிக்க

மறுமுறை வீழ்ந்தார் இறைமைந்தன் துடிக்க

எனக்காகவோ எனக்காகவோ -2

8 ஆறுதல் தந்த பாசத்தின் யேசு

விழியோடும் நீரால் வழி எங்கும் சென்ற

மகளிர்க்கு ஆறுதல் சொன்னாரே நின்று

எனக்காகவோ எனக்காகவோ -2

9 வீழ்ச்சியில் எழும் தாழ்ச்சியின் யேசு

மனுக்குலப் பாவம் மனமெல்லாம் சுமந்து

மூன்றாம் முறையாய் விழுந்தார் துவண்டு

எனக்காகவோ எனக்காகவோ -2

10 அவமானம் ஏற்ற பொறுமையின் யேசு

ஆடைகள் களைய அவமானம் ஏற்றார்

சதைகள் கிழிந்து வலியெல்லாம் சுமந்தார்

எனக்காகவோ எனக்காகவோ -2

11 காயங்களை ஆற்றிடும் குணமளிக்கும் யேசு

கூரான ஆணிகள் கை கால்கள் எங்கும்

தீராத வேதனையில் துடித்தது நெஞ்சம்

எனக்காகவோ எனக்காகவோ -2

12 எல்லாம் நிறைவேற்றிய மனுமகன் யேசு

சிலுவையில் உயிர்விட்ட என் யேசுநாதா

எனை மீட்கத் தனைத் தந்தாய் என் அன்பு தேவா

எனக்;காகவோ எனக்காகவோ -2

13 தாயின் மடியில் விடியலின் யேசு

தாய்மடி தேடியே அடைக்கலம் ஆனார்

ஊனுடல் பிரிந்து இறையடி சேர்ந்தார்

எனக்;காகவோ எனக்காகவோ -2

14 இறப்பை வென்ற வாழ்வின் யேசு

மனுமகன் தலைசாய இடமொன்றும் இல்லையே

கல்லறை கூட இங்கு சொந்தமே இல்லையே

எனக்காகவோ எனக்காகவோ -2

02.          எங்கே சுமந்துபோகிறீர்?

1.        எங்கே சுமந்துபோகிறீர் – சிலுவையை நீர்

                     எங்கே சுமந்துபோகிறீர்

                     பொங்கும் பகைவராலே – அங்கம் நடுநடுங்க

                     எங்கே போகிறீர்?

2.        மனித பாவத்தாலே – மரணத்தீர்வை பெற்று

                     தூயசெம்மறிபோலே – துக்கத்துடன் வருந்தி

                     எங்கே போகிறீர்?

3.        பாரச்சிலுவையை நீர் – பாசத்துடன் அணைத்து

                     பாவத்தின் சுமைதாங்கி – ஆர்வத்துடன் நடந்து

                     எங்கே போகிறீர்?

4.        கல்வாரி மலைநாடி – தள்ளாடித் தரைவீழ்ந்து

                     எல்லோரின் பாவங்களை – தனிமையாய்ச்சுமந்து

                     எங்கே போகிறீர்?

5.        மாமரி கன்னி அன்னை – மகனின் கோலம் கண்டு

                     மாதுயருடன் வாடி – மனம் நொந்து வருந்த

                     எங்கே போகிறீர்?

6.        உதிரமாறாய் சிந்தி – உள்ள வீரமிழந்து

                     சீரேன் சீமோன் துணையை – ஏற்று வழி நடந்து

                     எங்கே போகிறீர்?

7.        கர்த்தனே உம்வதனம் – ரத்தக்கறையால் மங்கி

உத்தமி வெரோணிக்கம்மாள் – வெண்துகிலால் துடைத்தும்

எங்கே போகிறீர்?

8.        பாவங்கள் ஒன்றாய்ச்சேர்ந்த – பாரச்சுமையினாலே

                     மீண்டும் தரையில் வீழ்ந்து – வீரத்துடன் எழுந்து

                     எங்கே போகிறீர்?

9.        புண்ணிய ஸ்திரீகள் – புலம்பி அழும்வேளை

                     தேற்றுதல் கூறி நீரும் – நேசக்கண்ணீர் சொரிந்து

                     எங்கே போகிறீர்?

10.      தூரவழி சிலுவை – தாங்கப் பெலமுமின்றி

                     மூன்றாம்முறை தரையில் – முகம்படிந்தெழுந்து

                     எங்கே போகிறீர்?

11.      நீட்டாடை கழற்றவே – கோடி காயங்களாலே

                     இரத்தமாறாய்ப் பெருக – வேதனையால் வருந்தி

                     தூயா நின்றீர்

12.      நீட்டிய கை கால்களில் – நீண்ட இருப்பாணிகள்

                     நிஷ்டூரமாய் அறைய – நேசத்தினாலே வெந்து

                     பலியானீர்

13.      சிலுவைப் பீடமேறி – மும்மணி நேரந்தொங்கி

                     நேய பிதாவை வேண்டி – ஆருயிர் ஒப்படைத்து

                     பலியானீர்

14.      உமது மடிமீதில் – மரித்த மகன் தாங்கி     

                     ஏழு சோக வாட்களால் ஊடுருவி வருந்தி

                     தாயே நின்றீர்

15.      கர்த்தனே நின் உடலை – கல்லறைக்குள்ளடக்க

                     உத்தானம் ஜீவனுமாய் உயிருடன் எழுந்து

                     காட்சி தந்தீர்

03. எனக்காக இறைவா எனக்காக

இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளைச் சுமத்தி பரிகசித்தார் – உயிர்

பறித்திட எண்ணி தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் – உம்மை

மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு மீண்டும்

எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே உம்மைத்

தாங்கிய அன்னை துயருற்றாள்

5. மறுத்திட முடியா நிலையாலே சீமோன்

வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் – அன்பின்

விலையாய் மாதின் சிறுதுணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் – அந்தோ

சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு அன்பு

மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் – கால்

ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் – இரத்த

மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதிரம் வடிந்திடவே உம்மைத்

தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உம்மைவிட்டு பூமி

இருளினில் ஆழ்ந்தது ஒளிகெட்டு

13. துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து அன்னை

உயிரற்ற உடலினை மடிசுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு நீர்

அடங்கிய கல்லறை உமதன்று

04. பாடுகளின் பாதையிலே

தேவமகன் ஊர்வலமோ

பாவங்களின் பாரமெல்லாம்

திருச்சிலுவை வடிவல்லவோ

1. மக்களுக்காய் இரங்கி நின்றாய்

மக்கள் மனம் இரங்கவில்லை

பக்கமெல்லாம் பறந்ததம்மா

பார்த்த கண்கள் சிவந்ததம்மா

2. முடி தாங்கும் சிரசினிலே

முள் தாங்கும் நிலையல்லவா

அணைத்திருக்கும் கரங்களுக்கு

பிணைத்திருக்கும் முடிவல்லவா

3. வாழ வைக்க வந்த உள்ளம்

வாடி நிற்கும் நிலை இங்கு

தேடி வந்த திருமகனை

சாடி நிற்கும் மனங்கள் இங்கு

4. அன்பு செய்ய வந்த நெஞ்சம்

துன்பம் பெறும் கொடுமையிது

எம் இறைவா இறைஞ்சுகின்றோம்

ஏழைகளின் பாவம் பொறும்

5. சீரேனூர் சிமோனிவர்

தேவ மகன் தான் சுமக்கும்

பார மரச் சிலுவையிலே

பங்கெடுத்தார் இங்கிதமே

6. மங்கை நல்லாள் வரோணிக்கா

தங்க முகம் தான் துடைக்க

விந்தை முகச் சாயலுமே

வெண் துகிலில் பதிந்ததுமே

7. பார மரச் சுமை அழுத்த

தேவ பரன் சோர்வுடனே

மறு முறையும் வீழ்ந்தனரே

பரம சுதன் பார் தனிலே

8. நொந்தழுது நெஞ்சுருகும்

மங்கையர்க்கு மாபரனார்

சிந்தை கொள் வாக்குரைத்த

விந்தையுரை தான் நினைப்போம்

9. பார மரச் சிலுவையுடன்

தூர வழிப் பாதை தனில்

தேவ சுதன் மும் முறையாய்

மேவு தரை வீழ்ந்தெழுந்தார்

10. கல் மனத்துக் காவலர் தாம்

நம் பரனின் ஆடைகளை

வன் மனதாய் களைந்தவரின்

செயலினைத்தான் நாம் நினைப்போம்

11. தேவசுதன் இயேசுவையே

நீச யூதர் சிலுவையிலே

சோகமுற அறைந்தனரே

பேச உள்ளம் பேதலிக்கும்

12. அன்பு செய்ய வந்த நெஞ்சம்

துன்பம் பெறும் கொடுமையிது

என் இறைவா இறைஞ்சுகின்றோம்

ஏழைகளின் பாவம் பொறும்

13. உயிர் நீத்து மீட்பளித்த

உயர் தேவன் உடல் தனையே

கீழிறக்கித் தாய் மடியில்

கிடத்தியோர் துயர் காட்சி

14. திருச்சுதனின் திரு உடலம்

பெருங்குழியில் அடக்கப்படும்

அரும் பெரிய காட்சியிதே

ஆண்டவரின் மாட்சியிதே

உயிர்ப்புப் பாடல்கள்

உயிர்ப்புப் பாடல்கள்

01. அல்லேலூயா பாடுங்களே

அல்லேலூயா பாடுங்களே ஆர்ப்பரித்து அகமகிழ்வோம் – 2

வல்லதேவன் உயிர்த்தெழுந்தார் இனி வாழ்வுக்குச் சாவில்லையென்றார்

அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,

1. வானகமே வையகமே வைகறை பூத்தது வாழ்த்துங்களே

பூங்காற்றே வண்ணமலர் அழகே

புதுவாழ்வு புலர்ந்தது பாருங்களே (2)

ஏழில் கொஞ்சும் இந்த பூமி எங்கும்

இறையரசு நிலையாக வாழுங்களே

அழிவில்லா ஒரு வாழ்வைத்தேடி

நிலையான இன்பம் காணுங்களே

2. ஆண்டவர் எனது நல்லாயன்

ஆகவே எனக்கு குறையில்லையே

எதையும் செய்யும் ஆற்றலுண்டு

இயேசுவின் உறுதிக்கு இணையில்லையே (2)

ஏந்த நாளும் நான் உங்களோடு

இருப்பேன் என்றவர் துணையிருக்க

அன்பால் நாமும் இந்த உலகை வெல்வோம்

இலட்சிய மனிதராய் வாழ்ந்திடுவோம்

02. ஆண்டவர் உயிர்த்தார் லலலா அல்லேலுயா

லலலா லா லா லா லா லா லலலா

அகமகிழ்வோமே அல்லேலுயா – 2

1. உயிர்ப்பின் மகிமை வானில் நிறைந்ததே ஆ ஆ

கிறிஸ்துவின் வாழ்வு மண்ணில் பதிந்ததே ஆ ஆ

இருளின் ஆட்சி இங்கு இறந்ததே – 2

ஒளியின் மாட்சி எங்கும் ஒளிர்ந்ததே– 2

லா லா லா லா லா லா லல லலலா

2. வருந்திடும் நெஞ்சம் மன்னிப்படைந்ததே ஆ  ஆ

நொறுங்கிய உள்ளம் அருளை அடைந்ததே ஆஆ – 2 

திருந்திடும் அன்னை ஆயனை இங்கு கண்டதே – 2

நிறைந்தது சாந்தி நெஞ்சம் நெகிழ்ந்ததே – 2

லா லா லா லா லா லா லல லல லா

03. ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார்

எனவே அவரைப் பாடிடுவோம்     (2)

1. குதிரை வீரனைக் குதிரையுடன்

அவரே கடலில் வீழ்த்தி விட்டார்

எனக்கு மீட்பாய் அவரே என்

துணையும் காவலும் ஆயினரே

2. இறைவன் எனக்கு இவர் தானே

இவரையே போற்றி புகழ்ந்திடுவேன்

என் முன்னோரின் இறைவன் இவர்

இவரை ஏற்றிப் புகழ்ந்திடுவேன்

04. இயேசு ஆண்டவர் உயிர்த்தார் நம் 

இயேசு ஆண்டவர் உயிர்த்தார் 

நம் அடிமை விலங்கினை அறுத்தார்

அனைத்து உள்ளங்களில் அன்பைப் பொழிந்தார்

ஆனந்தம் பாடிடுவோம் – 2 

1. அவர் தம் உயிரையே அளித்தார் – அதில் 

அனைவர்க்கும் பங்களித்தார்

அவரே பாஸ்கா மகிழ்வானார்

ஆனந்தம் பாடிடுவோம் – 2

2. துன்பத்தை அவரே சுமந்தார் – நம்

துயர்களைத் தாங்கிக் கொண்டார்

நமக்காய் துணை வர ஏங்குகின்றார்

ஆனந்தம் பாடிடுவோம் – 2

ஆண்டவர் உயிர்த்தார் அல்லேலூயா

05. உமது ஆவியை விடுத்தருளும்

ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும் (2)

1. நெஞ்சே! நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர்

மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர்

2. பூமியை நீர் அடித்தளத்தின் மீது அமைத்தீர்

அது எந்நாளும் அசையவே அசையாது

கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கின்றீர்

வெள்ளப் பெருக்கு மலைகளை மூடியிருக்கும்படி செய்தீர்

3. நீரூற்றுகள் ஆறுகளாய் பெருக்கெடுக்க கட்டளை இடுகிறீர்

அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கிறீர்

அவற்றின் அருகே வானத்துப் பறவைகள் குடியிருக்கின்றன

மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன

4. தம் உள்ளத்திலிருந்து மலைகள்மீது நீர் பாயச் செய்கிறீர்

உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது

கால்நடைகள் உண்ண புல் முளைக்கச் செய்கிறீர்

மனிதருக்குப் பயன்பட பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர்

06. உலகோரை மீட்க உயிர் தந்த தேவன்

உயிர்த்தார் அல்லேலூயா – 2

பலகோடி மாந்தர்க்காய் விலையான வாழ்வினை

ஒரு விலையின்றி தந்திட

உயிர்த்தார் அல்லேலூயா

அல்லேலூயா – 2 ஆமென் அல்லேலூயா

1. தேவனின் சித்தம் நிறைவேற்ற புவிலே வந்தவர்

சாவினை வென்ற யாவர்க்கும் ஜீவனை தந்தவர்

பாவத்தை போக்கும் பலி ஆடாய் நம்மையே ஈன்றவர் – 2

மேவிடும் அன்பால் உலகத்தை ஆளவே தகுந்தவர்

அல்லேலூயா – 2 ஆமென் அல்லேலூயா

2. உன்னையும் என்னையும் காக்கவே உயிரோடு எழுந்தவர்

இன்னல் இல்லாத வாழ்வினை நமக்காக வைத்தவர்

மண்ணோரை நியாயம் தீர்க்கவே மறுபடியும் வருபவர் – 2

விண்ணில் எந்நாளும் யாவர்க்கும் வேண்டுதல் செய்பவர்

அல்லேலூயா – 2 ஆமென் அல்லேலூயா

07. உயிர்த்தெழுந்தார் யேசு உயிர்த்தெழுந்தார் 

உலகினில் உதித்திடும் கதிரவன்போல் 

சாவினை வென்றிங்கு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா  ஆனந்தமே  – 2

1. பாறையை பிளந்திடும்  தணல் பிழம்பாய்

கல்லறை திறந்தே உயிர்த்தெழுந்தார் – 2 

விண்ணக வாயிலும் திறக்கின்றதே – 2

இறைவன் அரசிங்கு தொடர்கின்றதே –

தீமைகள் விரட்டிட எழுந்திடுவோம்

நம் அன்பின் போர்களை தொடர்ந்திடுவோம் – 2

வெற்றி நமதென முழங்கிடுவோம் 

இயேசுவின் உயிர்ப்பை மலர செய்வோம் –

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா ஆனந்தமே  – 2

2. மானிட வாழ்க்கையின் கொடுமுடியாய்

மாபரன் யேசுவே உயிர்த்தாரே – 2

போரிடும் ஏழைகள் ஆற்றலுமாய் – 2

செல்வரின் செருக்கினை உடைத்தாரே –

சோர்ந்திடும் வறியவர் நம்பிக்கையே இன்று விடியலின் விளக்காய் துலங்கிடுதே -2

உண்மை நிலையாய் ஆள்கின்றதே அன்பில் நீதியும் கனிகின்றதே –

அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா  ஆனந்தமே  – 2

08. உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்-2

இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்

மரணத்தின் கூர் முறித்தவராய்-2

மகிமையாய் உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா -2

1. கல்லறையின் கல் திறந்திடவே-2

காத்திடும் சேவகர் நடுங்கிடவே

ஜீவதேவன் உயிர்த்தெழுந்தார்

ஆர்ப்பரித்தே நாம் மகிழ்வோம்-2 (உயிர்த்தெழுந்தார்)

2. வானத்தின் சேனை துதித்திடவே-2

வேதாளர் கரங்கள் ஓடிடவே

முன்னுரைத்த வாக்கின் படியே-2

மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார். (உயிர்த்தெழுந்தார்)

3. மரித்தவர் ஓர் நாள் எழும்பிடுவார்-2

மாதேவன் சாயலாம் இயேசுவைப்போல்

இயேசுராஜன் வரும் நாளில்

மகிமைமேல் மகிமை அடைவோம். (உயிர்த்தெழுந்தார்)

09. என்  உயிரே உயிரின் உயிரே நீ எதற்காக உயிர் நீத்து சென்றாய்;

உறவே என் உறவான உறவே நீ எதற்காக எனைப் பிரிந்து சென்றாய்

நீ எதற்காக எனைப் பிரிந்து சென்றாய்

என் உயிரே உயிரின் உயிரே நீ எதற்காக உயிர் நீத்து சென்றாய்

1. நாற்பது ஆண்டுகள் பாலைவனத்திலே மன்னா உணவளித்தாய்

எகிப்தியர் தலைச்சன் பிள்ளைகள் ஒழித்தே அடிமை விலங்கொடித்தாய்

அதனால் உனக்கு சிலுவை மரத்தை பரிசாய் கொடுத்தேனே

உயிரின் ஊற்று உன் உயிரைப் பறிக்க பலியாய் அழைத்தேனே

மன்னித்து அருள்புரிவாய் மன்னவா மன்னித்து அருள்புரிவாய்

2. மேகத்தின் தூணிலே வழிகாட்டிச் சென்று

செங்கடலை கடக்க வைத்தாய்

பாறையைப் பிழந்து சுவைதரும் நீராய் தாகம் தணித்து வந்தாய்

அதனால் உனக்கு காடியைத் தந்தேன் முள்முடி சூட்டிவிட்டேன்

கீழ்வானம் சிவப்பாய் எமை மீட்க வந்தாய்

உன் மேனி சிவப்பாக்கினேன்

மன்னித்து அருள்புரிவாய் மன்னவா மன்னித்து அருள்புரிவாய்

10. கல்லறையை திறந்தாரே காரிருளைக் கலைத்தாரே

விண்ணொளியை வளர்த்தாரே தண்ணொளியை தந்தாரே

விண்ணவரே மண்ணவரே மன்னனின் வெற்றியைப் பாடுங்களே – நம்

மன்னனின் வெற்றியைப் பாடுங்களே

1. சிலுவையை வென்றாரே ஜெகத்தினை மீட்டாரே – 2

சிலுவை வழியைத் தந்தாரே அதுவே அவர் வழி என்றாரே – 2

2. மாண்டார் மீண்டாரே மாந்தரை உயர்த்தினரே – 2

அன்பை நாளும் பொழிந்தாரே – அதுவே அவர் வழி என்றாரே – 2

11. சிலுவையில் அறையுண்ட மெசியா

இறைவல்லமையும் இறைஞானமுமாய் உள்ளார்

இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும் – இந்த

உலகமும் உணர்ந்திடட்டும்

அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா -4

1. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் – மன

நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்

நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் – எங்கள்

தேவனே சிலுவையின் பொருள் சொல்வாய்

இந்தச் சிலுவை உமது வல்லமையோ

இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) அல்லேலூ…

2. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்

உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை

பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே எங்கள்

வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன்

இந்தச் சிலுவை உமது வல்லமையோ

இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) அல்லேலூ…

12. சொன்னபடி உயிர்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு-2

அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் -2

சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே -2

1. சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது

சகல அதிகாரம் நமக்கு உண்டு

2. விண்ணும் ஒழிந்து போகும் மண்ணும் மறைந்து போகும் -2

ஆண்டவர் வாக்கு இன்றும் என்றும் அழியாதது மாறாதது

13. புதிய இதயம் வேண்டுமா புதிய ஆவி வேண்டுமா

காசில்லாமல் பணமில்லாமல் பெற்றுச் செல்வோம் வாருங்கள்

உயிர்த்த இயேசுவைக் கேளுங்கள்

அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா – 4

1. சாதிகள் இனி இல்லை மதங்களும் இனி இல்லை -2

ஏற்றத் தாழ்வுகள் இல்லா இறைவன் அரசே உண்மை -2

அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா – 4

2. கடின இதயம் கரைந்து போகும்

நல்ல உணர்வுகள் நம்மில் நிறையும்

இறைவன் வார்த்தை தெளிவைத் தாருமே

இயங்கும் நம்பிக்கை நம்மில் மலரும்

அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா – 4

14. புனிதர்கள் மன்றாட்டுமாலை,

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

ஆண்டவரே, இரக்கமாயிரும்.

புனித மரியே, இறைவனின் தாயே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மிக்கேலே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் புனித தூதர்களே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனிதத் திருமுழுக்கு யோவானே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித யோசேப்பே, புனித பேதுருவே, புனித பவுலே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித அந்திரேயாவே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித யோவானே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மகதலா மரியாவே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித ஸ்தேவானே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித லாரன்ஸே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பெர்பேத்துவா, புனித பெலிசிட்டியே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித ஆக்னஸே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித கிரகோரியே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அகுஸ்தினே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அத்தனாசியுஸே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பேசிலே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித மார்ட்டினே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பெனடிக்டே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித பிரான்சிஸே, புனித தோமினிக்கே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

புனித பிரான்சிஸ் சவேரியாரே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித வியான்னி மரிய ஜானே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித சியன்னா கத்தரீனே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புனித அவிலா தெரேசே, – எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே, – எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கனிவு கூர்ந்து, – எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

தீமை அனைத்திலுமிருந்து – எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவம் அனைத்திலுமிருந்து – எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

முடிவில்லாச் சாவிலிருந்து – எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

உமது மனித உடலேற்பினாலே – எங்களைமீட்டருளும் ஆண்டவரே.

உமது இறப்பினாலே, உயிர்ப்பினாலே – எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

தூய ஆவியாரின் வருகையினாலே – எங்களை மீட்டருளும் ஆண்டவரே.

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகின்றோம்

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்):

தேர்ந்து கொள்ளப்பெற்ற இவர்கள் திருமுழுக்கின் அருளினால்

புதுப் பிறப்பு அடையச் செய்தருள வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம்

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்):

உம் மக்களுக்குப் புதுப் பிறப்பு அளிக்கும் இந்த நீரூற்றை

உமது அருளினால் புனிதமாக்க வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம் –

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழும் கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகின்றோம் –

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும்.

கிறிஸ்துவே, கனிவாய்ச் செவி சாய்த்தருளும்.

15. வானத்தில் இருந்து வையகம் எழுந்து

புனித ஆவியே வருக

ஞானத்தின் ஒளியை மனதினில் ஏற்றும்

மாசற்ற அன்பே வருக

1. உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே

உண்மையின் வடிவே வருக

பயிருக்கு மழையே பார்வையின் ஒளியே

பரமனின் அருளே வருக

2. கீழ்த்திசை வானில் வாழ்த்திசை பாடும்

காலைக் கதிரே வருக

ஆழ்கடல் மீதினில் அலையுடன் ஆடும்

ஆனந்த நிலவே வருக – 2

3. மனிதனின் மனதில் மணியெனத் துலங்கும்

மாணிக்க விளக்கே வருக

இனிய நல் வாழ்வை உவப்புடன் வழங்கும்

இன்னருட் பெருக்கே வருக – 2

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy