பொது செபங்கள்

பொது செபங்கள்

1. மூவொரு கடவுள் புகழ் (திரித்துவப்புகழ்):

பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்

2.திருச்சிலுவை அடையாள செபம்:

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

3.கிறிஸ்து கற்பித்த செபம் :

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். -ஆமென்.

4.மங்கள வார்த்தை செபம் :

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

5. திவ்ய நற்கருணை ஆராதனை :

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு, சதா காலமும், ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.

6.விசுவாச அறிக்கை :

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

7.இறைவனின் இயல்பு :

1.இறைவன் தாமாய் இருப்பவர்.
2.அவருக்கு தொடக்கமும் முடிவும் இல்லை.
3.அவருக்கு உடல் கிடையாது.
4.அளவில்லாத நன்மைகள் அனைத்தும் நிறைந்துள்ளார்.
5.எங்கும் நிறைந்திருக்கிறார்.
6.அனைத்திற்கும் முதற்காரணமாய் இருக்கிறார்.

8.கடவுளின் கட்டளைகள்:

இறைவன் நமக்கருளிய கட்டளைகள் பத்து.
1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை.
2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.
3. கடவுளின் நாட்களைப் புனிதமாக அனுசரி.
4.தாய், தந்தையை மதித்துப் பேணு.
5.கொலை செய்யாதே.
6.மோக பாவம் செய்யாதே.
7.களவு செய்யாதே.
8.பொய் சாட்சி சொல்லாதே.
9.பிறர் தாரத்தை விரும்பாதே.
10.பிறர் உடைமையை விரும்பாதே.

இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்;

அனைத்திற்க்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்.
உன்னை நீ அன்பு செய்வது போல, அனைவரையும் அன்பு செய்.

9.திருச்சபையின் விதிமுறைகள்:

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் திருப்பலி ஒப்புக் கொடு.
2.ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுக.
3.பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கு கொண்டு, நற்கருணை உட்கொள்.
4.குறிப்பிட்ட நாட்களில் புலால் தவிர்த்து, நோன்பு போன்ற தவ முயற்சிகளை மேற்கொள்.
5.குறைந்த வயதிலும், நெருங்கிய உறவிலும் திருமணம் செய்யாதே.
6.உன் ஞான மேய்ப்பர்களுக்கு உன்னாலான உதவி செய்.

10.சுருக்கமான மனத்துயர் செபம்:

என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர், எனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன்.என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன்.உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.

11.ஒப்புரவு அருட்சாதனத்தில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்:

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

12. நீண்ட மனத்துயர் செபம்:

என் சர்வேசுரா சுவாமி தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீர்க்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப் பலன்களையெல்லாம் பார்த்து, என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீரென்று முழுமனதுடனே நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால் நானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் -ஆமென்.

13. காணிக்கை ஜெபம்:

இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.

14. காவல் தூதரை நோக்கி செபம்:

எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

15. அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:

தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென். இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

16. உணவருந்துமுன் ஜெபம்:

சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்

17. உணவருந்திய பின் ஜெபம்:

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன். இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது. ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென் மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது -ஆமென்

18. வேலை துவங்குமுன் ஜெபம்:

தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர். ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.

19. வேலை முடிந்தபின் செபம்:

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

20.மூவேளைச் செபம்:

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்;
அவளும் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்தார் – அருள் நிறை
இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் – அருள் நிறை
வார்த்தை மனுவுருவானார்
நம்மிடையே குடிகொண்டார் – அருள் நிறை
இயேசுகிறிஸ்துநாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக
– இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா ! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்துவழியாக மன்றாடுகிறோம் – ஆமென்.

21. பாஸ்கு காலத்தில் மூவேளை செபம்:

முதல்வர் : விண்ணக அரசியே ! மனங்களிகூறும், அல்லேலூயா
துணைவர் : ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறு பெற்றீர், அல்லேலூயா
மு. தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
து. எங்களுக்காக இறைவனை மன்றாடும், அல்லேலுயா
மு. கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர், அல்லேலூயா
து. ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா
செபிப்போமாக
இறைவா! உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினாலே உலகம் களிக்க அருள்புரிந்தீரே! அவருடைய திருத்தாயாகிய கன்னிமரியாளின் துணையால் நாங்கள் என்றென்றும் நிலைத்த வாழ்வின் பேரின்பத்தைப் பெற, அருள்புரியுமாறு எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் -ஆமென்.

22. தேவன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்:

என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக. இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். – ஆமென்

23. புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்n;சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)

24. இயேசு நாதருடைய திரு இதயத்துக்குத தன்னை ஒப்புக் கொடுக்கும் செபம்

புனித மார்கரீத்து மரியா) இயேசு நாதருடைய திரு இதயத்துக்கு எளியேன்(பெயர்) என்னையே கையளித்து ஒப்புக் கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும்படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இதயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இதயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இதயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.
இனிய திரு இதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர், நீரே என் உயிரின் ஒரே காவல். என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே. நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து. என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர் பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ, தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இதயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடி தடுத்தருளும். ஓ, அன்புப் பெருக்கான இயேசுவின் திரு இதயமே! என் பலவீனத்தை எண்;ணி அஞ்சும் அதே வேளையில், உம் தயாளத்தையும் எண்ணி என் நம்பிக்கை முழுவதையும் உம் பேரில் வைக்கிறேன்.
எனவே, உமக்கு விருப்பம் அல்லாதது எதுவும் என்னிடம் இருந்தால், அதை உமது அன்புத் தீயில் சுட்டெரித்தருளும். நான் உம்மை ஒரு போதும் மறவாமலும், உம்மைவிட்டுப் பரியாமலும் இருக்க, உம் தூய அன்பை என் இதயத்தில் பதிப்பித்தருளும். உம் அடிமையாக வாழ்வதும் இறப்பதுமே என் ஓரே பேறாக எண்ணியிருப்பதால், என் பெயரை உம் திரு இதயத்தில் எழுதி வைத்தருளக் கெஞ்சி மன்றாடுகிறேன் – ஆமென்.

25. இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்:

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.
இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். – ஆமென்
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.

26. இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்:

ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
சுவாமி ! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பிரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். இவர்களை ஞானத்தின் பிரகாசத்திற்கும், இறைவனின் அரசிற்கும் அழைத்தருளும் சுவாமி! முற்காலத்தில் தேவரீரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாயிருந்தவர்களின் பிள்ளைகள் பேரில் உமது கருணைக்கள்களைத் திருப்பியருளும்! உமது திரு இரத்தம் அவர்களின் இரட்சணியத்தினுடையவும் சீவியத்தினுடையவும் ஸ்நானமாக அவர்களுக்கு உதவக் கடவதாக.
ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை அபாயத்திலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், “நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக” என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. – ஆமென்.

27. இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம்:

எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்துஎன்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யும் துணிகிறோம்.
ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.
எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் – ஆமென்.

28 கழுவாய் வேண்டுதல் (திருத்தந்தை 11 ஆம் பத்திநாதர் இயற்றியது)

மனுக்குலத்தின்மட்டில் உமக்குள்ள அணைகடந்த அன்புக்குக் கைம்மாறாக, மிகுந்த மறதியையும் அசட்டைத்தனத்தையும் நிந்தையையும் பெறுகிற இனிய இயேசுவே! உமது அன்பு இதயம் எல்லாவிடங்களிலும் அனுபவிக்கிற மறதி, நிந்தைகளுக்கொல்லாம் சிறப்பான தொழுகையால் கழுவாய் புரிய ஆவல் கொண்டு, உமது பீடத்தின் முன்பாக இதோ, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கிடக்கிறோம்.
அத்தகைய பெரிய அவமானங்களுக்கு, ஐயையோ, நாங்களும் உடந்தையாய் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, எங்கள் முழு உள்ளத்தோடு அவைகளை வெறுத்து, எங்களை மன்னிக்கும்படி உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம். எங்கள் துரோகங்களுக்காக மட்டுமல்ல, மீட்புப் பாதையை விட்டுத் தொலைவில் விலகிப் போய், தங்கள் பிடிவாதம் பற்றுறுதிக்குறைவை முன்னிட்டு, மேய்ப்பரும் வழிகாட்டியுமான உம்மைப் பின்பற்ற மாட்டோம். என்பவர்களின் பாவங்களுக்காகவும், திருமுழுக்கு வாக்குறுதிகளை மீறி, உமது சட்டத்தின் இனிய நுகத்தடியை உதறிவிட்டவர்களின் பாவங்களுக்காகவும் மனதார கழுவாய் தேடிட தயாராயிருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்.
உமக்கு விரோதமாய்ச் செய்த அருவருப்புக்குரிய நிந்தை ஒவ்வொன்றுக்கும் கழுவாய் புரிந்திட இப்போது தீர்மானித்திருக்கிறோம். மரியாதையற்ற உடையாலும், நடத்தையாலும் கிறிஸ்துவத் தன்னடக்கத்துக்கு விரோதமாய்ச் செய்த கணக்கற்ற துரோகங்களுக்காகவும், மாசற்றவர்களை மயக்கி வலையிலிட்ட அசுத்த துர்மாதிரிகைகளுக்காகவும், ஞாயிறு ஓய்வு நாள் கடமைகளை அடிக்கடி மீறியதற்காகவும், உமக்கும் உம் புனிதர்களுக்கும் விரோதமாகச் சொன்ன வெட்கமற்ற பழித்துரைகளுக்காகவும் கழுவாய் செய்யத் தீர்மானித்திருக்கிறோம். உலகில் உம் பதிலாளியான திருத்தந்தைக்கும், உம்முடைய குருக்களுக்கும் செய்யும அவமானங்களுக்காகவும், உம் அன்பின் திருவருட் சாதனத்தையே மனம்பொருந்தி அலட்சியத்தால் அல்லது கனமான தேவதுரோகங்களால் பங்கப் படுத்தியதற்காகவும், இறுதியாக நீர் நிறுவிய திருச்சபையின் உரிமைகளையும் போதக அதிகாரத்தையும் எதிர்க்கிற மக்களின் பகிரங்க அக்கிரமங்களுக்காகவும் கழுவாய் செய்ய விரும்புகிறோம்.
ஒ, இறைவனாகிய இயேசுவே, இத்தகைய அக்கிரமங்களையெல்லாம் எங்கள் இரத்தத்தினாலே தூய்மைப் படுத்த இயலும் என்றால், எவ்வளவோ பாவிகளை! உமது இறைமகிமைக்கு நேர்ந்த இந்த இழிவுகளுக்ககெல்லாம் கழுவாயாக, நீர் சிலுiவியல் உம் பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்து நாள்தோறும் எங்கள் பீடங்களில் புதுப்பித்துக் கொண்டு வருகிற பலியை ஒப்புக் கொடுக்கிறோம்.
உம்முடைய கன்னித்;தாயும், புனிதர்கள் அனைவரும், பக்தியுள்ள எல்லா பற்றுறுதியாளர்களும்; செய்கிற கழுவாய் முயற்சிகளோடு ஒன்றித்து, அவற்றை ஒப்புக் கொடுக்கிறோம். உமது அணை கடந்த அன்பை அலட்சியம் செய்ததற்காகவும், கடந்த காலத்தில் நாங்களும் பிறரும் செய்த பாவங்களுக்காகவும் உமது அருள்துணையால் எங்களால் இயன்ற மட்டும் கழுவாய் தேட முழுமனத்துடன் வாக்களிக்கிறோம். இனிமேலாக, நாங்கள் பற்றுறுதியின் தளராமல் தூய நடத்தையுள்ளவர்களாய் வாழ்ந்து, நற்செய்திக் கட்டளைகளையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் சிறப்பாக பிறரன்புக் கட்டளையையும் அனுசரித்து வருவோம். பிறர் உமக்குத் துரோகம் செய்யாதபடி எங்களால் ஆனமட்டும் தடுப்போம். பலர் உம்மைப் பின்பற்றும்படி எங்களால் இயன்ற அளவு முயலுவோம் என வாக்களிக்கிறோம்.
ஒ, அன்பு இயேசுவே! கழுவாய் புரிவதற்கு எங்கள் மாதிரியாய் இருக்கிற புனித கன்னிமரியாவின் வழியாக, நாங்கள் செய்யும் கழுவாய் முயற்சி எனும் முழுமனக் காணிக்கையை ஏற்றருளும். நீர் தந்தையோடும் தூய ஆவியாரோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் புனித வீட்டுக்கு நாங்கள் எல்லோருக்கும் ஒரு நாள் வந்து சேரும்படி, எங்களுக்கு இறுதி வரை உமதருளில் நிலைத்திருக்கும் வரம் ஈந்து, எங்கள் கடமையிலும் உமக்குப் புரிய வேண்டிய பணியிலும் சாவு மட்டும் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தருளும் – ஆமென்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy