புனித யோசேப்பு நவநாள்

புனித யோசேப்புக்கு நம்மை முழுதும் ஒப்புக்கொடுக்கும் செபம்

மகிமை நிறைந்த முதுபெரும் தந்தையாகியத் புனித யோசேப்பே! அன்னை மரியாவின் தூயக் கணவரே! இயேசு கிறிஸ்துவை வளர்த்தத் தகப்பனே! உம்மை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே! நல்ல மரணத்திற்கு முன் மாதிரியும் தஞ்சமுமானவரே! உமது மக்களாக இருக்கும் நாங்கள், எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். உமது திருமுன் தெண்டனிட்டு வணங்கி, மூவொரு இறைவனின் சமூகத்திலும், உமது தெய்வீக மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் முன்னும், உமது பத்தினியாகிய அன்னை மரியாவின் முன்னும், எல்லா விண்ணுலகத்தார் முன்னும், மிகுந்த வணக்கத்துடனே உம்மை எங்களுக்குத் தகப்பனாகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு, எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். உமது மகிமையைக் கொண்டாடி, உமக்குரிய வணக்கத்தை அறிக்கையிட்டு, ஒரு நாளாவது ஒரு புகழையும் வேண்டுதலையும் செலுத்தாமலிருக்கப் போவதில்லை என்று வாக்களிக்கிறேன். நீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து, எங்களுக்காக பரிந்துரைத்து, உமது மகனின் வழியில் வழுவாமல் நடத்தியருளும். இயேசு கிறிஸ்துவும், அன்னை மரியாவும் அருகிலிருக்க இறந்த நீர், நாங்களும் இறை அருளோடு இறந்து விண்ணகப் பேரின்பத்தை அடைந்து உம்மோடு என்றென்றும் இறைவனைத் துதித்து வாழச் செய்தருளும். உமது பிள்ளைகாளான எங்களை என்றும் கைவிடாதேயும் தகப்பனே. ஆமென்.


புனித யோசேப்பு மன்றாட்டு மாலை

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சொல்லவும்)

முத: தூய யோசேப்பே…
முத: தாவீது அரசரின் தலைமுறையில் உதித்தத் திருமகனே…
முத: முதுபெரும் தந்தையரின் மகிமையே…
முத: அன்னை மரியாவின் கணவரே…
முத: கன்னி மரியாவின் கற்புள்ளக் காவலரே…
முத: இறை மகனை வளர்த்தத் தகப்பனே…
முத: கிறிஸ்துவை உற்சாகப் பற்றுடன் காப்பாற்றியவரே…
முத: திருக்குடும்பத்தின் தலைவரே…
முத: நேர்மையாளரான புனித யோசேப்பே…
முத: கற்புள்ளவரான புனித யோசேப்பே…
முத: விவேகமுள்ளவரான புனித யோசேப்பே…
முத: தைரியசாலியான புனித யோசேப்பே…
முத: கீழ்ப்படிதலுள்ளவரான புனித யோசேப்பே…
முத: பிரமாணிக்கமுள்ளவரான புனித யோசேப்பே…
முத: பொறுமையின் கண்ணாடியே…
முத: வறுமையின் அன்பரே…
முத: தொழிலாளர்களின் முன்மாதிரியே…
முத: இல்லற வாழ்க்கையின் ஆபரணமே…
முத: கன்னியர்களின் காவலரே…
முத: குடும்பங்களின் ஆதரவே…
முத: குடும்பத் தலைவர்களின் பேரொளியே…
முத: துன்பப்படுபவர்களின் ஆறுதலே…
முத: நோயாளிகளின் நம்பிக்கையே…
முத: இறப்பவர்களின் பாதுகாவலரே…
முத: சாத்தானை நடுநடுங்கச் செய்பவரே…
முத: புனிதத் திருஅவையின் பரிபாலரே…

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: ஆண்டவர் அவரை தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார்.
எல்: அவரது உடைமைகளை எல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.

முத: செபிப்போமாக: இறைவா, நீதிமானாகியப் புனித யோசேப்பைக் கன்னியான அன்னை மரியாவுக்குக் கணவராகத் தந்தருளினீர். அவருடைய பிரமாணிக்கமுள்ள பாதுகாவலில்தான் மனித மீட்பின் ஊற்றாகிய கிறிஸ்துவை ஒப்படைத்தீர். அந்தப் புனிதரின் உதவியால் நாங்கள் தூய உள்ளத்தோடு அந்த மீட்புப் பணியை தொடர்ந்து செய்ய உமது அருட்கொடைகளை வழங்குமாறு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.


புனித யோசேப்பு நோக்கிச் செபம்

புனித யோசேப்பே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது, வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலனளிக்க வல்லது. எனவே, என் ஆசைகள், என் எண்ணங்கள் அனைத்தையும் உமது பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். உமது வல்லமைமிக்கப் பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத் தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்லத் தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்துவேன்.

புனித யோசேப்பே! உம்மையும் உமது திருக்கரத்தில் உறங்கும் இயேசுவையும் எக்காலமும் எண்ணி மகிழ நான் தயங்கியதில்லை. இறைவன் உமது மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் பொருட்டு, உமது மார்போடு அவரை இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் வேளையில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படியாகக் கூறும். இறந்த விசுவாசிகளின் ஆன்மாவின் காவலனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.


புனித யோசேப்பு நவநாள் செபம்

எல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தையே! உமது அன்பு மகனின் வளர்ப்புத் தந்தையாக நேர்மையாளரானத் புனித யோசேப்பை நீர் தேர்ந்தெடுத்தீரே. எங்களைக் காக்கவும் எங்களை நல்வழியில் நடத்தவும், எங்களுக்கு அவரைப் போன்றக் காவலரைத் தந்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இதனால், உமது அன்பு மகன் இயேசு கிறிஸ்துவைப் போல் உருவாகும் இறைமக்கள் ஏராளமானோர் உமக்குத் தோன்றுவார்களாக.

இறைவனின் மகனாகயிருந்தும் உம்மையே புனித யோசேப்பின் கையில் ஒப்படைத்து அவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே, நாங்களும், எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், திருஅவைக்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள் புரியும். திருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்தத் தூய ஆவியாரே, எங்கள் குடும்பத்தையும் இறைவனின் திருவுளப்படி பாதுகாத்தருளும்.

இயேசுவை வளர்க்கும் பணியில் புனித யோசேப்பை உமது வாழ்க்கைத் துணைவராகவும், உமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய தூய கன்னி மரியே, அவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத் தாரும். அதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை இறைவனின் திருவுளப்படி எளிமையில் அமைத்து நடப்போமாக.

திருக்குடும்பத்தின் தலைவரான புனித யோசேப்பே, எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழி நடத்தியருளும். திருக்குடும்பத்தை உமது உழைப்பால் உணவூட்டிக் காத்தப் புனித யோசேப்பே, எங்கள் அறிவாலும், உழைப்பாலும், எங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து, செழிப்புறச் செய்யத் துணை புரிந்தருளும்.

குழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித யோசேப்பே, எங்கள் வாழ்க்கையில் நேரிடும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். இயேசு, மரியாவின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து நல்ல மரணமடைந்த புனித யோசேப்பே, நாங்களும் நல்ல மரணமடைய அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


நாள் 1:

புனித யோசேப்பே! அருளிலும் கொடையிலும் உமக்குச் சமானமுள்ளவர் யார்? தந்தையாகிய இறைவனின் பொருட்காப்பாளர் நீர். திருமகனாகிய இறைவனை வளர்த்தத் தந்தை நீர். தூய ஆவியார் வழியாக உமது மனைவிக்கு உகந்த நிழலானவர் நீர். மூவொரு இறைவனால் மறை உண்மைகளின் பாதுகாப்பாளராகத் தெரிந்து கொள்ளப்பட்டவர் நீர். எல்லாவற்றையும் படைத்தவருடைய அன்னைக்கு உத்தமக் கணவரானவர் நீர். இப்படிப்பட்ட உமது மகிமையை வாழ்த்த வானதூதர்களுக்கும் கூட வாய்ப்பில்லாமல் இருக்கும் போது, எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால், என் ஆசையும் பக்தியும் நிறைவேற, என்னால் இயன்ற வரை நான் உம்மைப் புகழ்வேன்.

உமது தாயின் கருவிலே இறைவனின் அருளால் அலங்கரிக்கப்பட்ட பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! பாவ உலகில் நீர் பிறந்தும், பாவப்பழுதில்லாமல் வாழ்ந்த பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! தண்ணீரில் மலர்ந்த மலர் தண்ணீரோடு கலக்காமலிருப்பது போல, பெண் குடும்ப வாசத்தில் வாழ்ந்து, பெண்ணோடு உறவின்றி இருந்த பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! நேர்மையாளரென முதன்முதலாக இறை வார்த்தையிலும் நற்செய்தியிலும் நிரூபிக்கப்பட்ட பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! மாசற்ற கன்னித் தன்மையோடு மரியாவைத் திருமணம் செய்து, தூய ஆவியாரால் உலக மீட்பர் இயேசு கிறிஸ்துவைப் பெற்ற பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! இருபத்தேழு ஆண்டுகள் அன்னை மரியாவோடு உரையாடி, அவர்களைப் பாதுகாக்க அவர்களது பின்னால் சென்ற பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! இயேசு கிறிஸ்துவுக்குக் காவல் தூதராக உம்மையே ஏற்றுக் கொண்ட பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! இயேசு கிறிஸ்துவுக்கு உமது கையால் உணவு ஊட்டி, உடை உடுத்தி, சீராட்டிப் பாராட்டி, அவரை உமது கையில் ஏந்திப் பணிவிடை செய்த பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! தந்தையின் திருமகனே உம்மைத் தந்தை என்று கூப்பிட்ட பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! அறுபது வயது வரை இறைவனின் திருமகன் இயேசு கிறிஸ்துவுக்கும், அன்னை மரியாவுக்கும் துணை செய்து, நீர் இறக்கும் வேளையில் அவர்கள் உமக்கு ஆறுதல் சொல்லி, உமது ஆன்மாவை இறைவனின் கையில் ஒப்புக்கொடுத்து, அடக்கம் செய்யப்பட்ட பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! விண்ணக அரசில் அன்னை மரியாவுக்கு அடுத்தபடியாக அதிக மகிமை அடைந்த பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! அன்னை மரியா உம்மை உண்மையானக் கணவராகவும், திருமகன் இயேசு கிறிஸ்து உம்மைத் தந்தையாகவும் வெகுமானித்து, நீர் கேட்டது எல்லாம் தரும் பாக்கியவாளன் நீர், வாழ்க! வாழ்க! நீர் மாசற்ற கன்னி மரியாவின் கணவரானதால், கன்னியருக்குத் தஞ்சமாகவும், நேர்மையானக் கணவரானதால், திருமணம் ஆனவர்களுக்குத் தஞ்சமாகவும், பாலனான இயேசு கிறிஸ்துவைக் காத்ததால், தாய் தந்தை இல்லாத சிறுவர்களுக்குத் தஞ்சமாகவும், அன்னை மரியாவையும், திருமகன் இயேசு கிறிஸ்துவையும் வெகு தூரம் நாடோடியாய் வழிநடத்தியதால் நாடோடிகளுக்குத் தஞ்சமாகவும், இப்படியே, உம்மை நாடி வரும் யாவருக்கும் நீர் தஞ்சமாகவும், அடைக்கலமாகவும், நம்பிக்கையாகவும் இருப்பதால், நானும் உமக்கு அடிமையாக என்னை ஒப்புக்கொடுக்கிறேன். திருமகன் இயேசு கிறிஸ்துவோடும், அன்னை மரியாவோடும், நீரும் என்னை அடிமையாகக் ஏற்றுக்கொண்டு, தந்தையாகிய இறைவனின் திருவுளப்படி என்னை வழிநடத்தி, என் ஆன்மா விண்ணகம் சேர அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.


நாள் 2:

எனது மீட்பின் தந்தையான புனித யோசேப்பே! இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் வாழ்ந்தக் காலத்தில் உமக்கு மிகுந்த அமைதியோடுக் கீழ்ப்படிந்து, தாழ்ச்சியோடும், வெகுமானத்தோடும் உம்மை ஆதரித்து அனுசரித்து வழிநடந்தாரே; இப்போது விண்ணகத்தில், உமது நற்செயல்களுக்குப் பலன் கொடுக்கும் விதத்தில், நீர் கேட்கும் அனைத்துக்கும் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை. அதனால், நீர் என் தயவுள்ளத் தந்தையைப் போல, எனக்காகப் பரிந்துரை செய்து, முதலில், நான் என் எல்லாப் பாவங்களையும் வெறுத்து, தீயக் குணங்களை அருவருத்து, நற்செயல் செய்ய ஆசைப்படும்படி இறைவனின் அருளை எனக்குப் பெற்றுத் தந்தருளும். அடுத்து, நான் நடக்கும் வழிகளில் சாத்தான் செய்யும் அனைத்துத் துன்பங்களையும் சோதனைகளையும் அகற்றி, உலகத்திலுள்ள அனைத்து தடைகளையும் இடையூறுகளையும் நீக்கி, எனக்கு நேரிடும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்க அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். இந்த நன்மைகளை எல்லாம் இறைவனின் திருவுளப்படி அடைய, உமது அடைக்கலத்தை நம்பி வந்திருக்கிறேன். இறப்பவர்களுக்கு உறுதித் துணையாகிய புனித யோசேப்பே! உமது வலது பக்கத்தில் நீர் வளர்த்த உம் பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவும், உமது இடது பக்கத்தில் உமது துணைவியாகிய அன்னை மரியாவும் உமக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்ததால் ஆனந்த மகிழ்ச்சியோடு உமது மரணத்தை நீர் ஏற்றுக் கொண்டீர். அதை நினைத்து உம்மை வணங்கும் என்னை, இப்பொழுதும் எப்பொழுதும், என் மரண நேரத்திலும், இயேசு கிறிஸ்துவும், அன்னை மரியாவும், தங்கள் திருக்கரங்களால் என் ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவும், உம்மைப் போலவே உறுதியோடு நான் என் மரணத்தை ஏற்றுக் கொள்ளவும், அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.


நாள் 3:

நல்ல மரணத்தைக் கொடுக்கும் வரமுள்ள புனித யோசேப்பே! நான் செய்தப் பாவத்தால் நல்ல மரணத்தை அடையத் தகுதியற்றவனாக நான் இருந்தாலும், நான் உம் மேல் வைத்த நம்பிக்கையினால், நான் நல்ல மரணம் அடைய, எனக்காக நீர் இறைவனிடம் மன்றாடுவீர் என உறுதியாக நம்புகிறேன். இப்படிப்பட்ட பாக்கியமான மரணத்தை நான் அடைய, நீர் இப்போது அனுபவிக்கும் விண்ணகப் பேரின்பத்துக்காக உம்மை மன்றாடுகிறேன். இறைவனின் வரங்களால் நிறைந்த புனித யோசேப்பே! இறைவனாலும், இறைவனின் தாயாகிய கன்னி மரியாவாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீர்! உமது துணைவியாகிய அன்னை மரியாவின் கனியாகிய இயேசு கிறிஸ்துவாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீர்! இறைவனின் தாயாகிய கன்னி மரியாவின் கணவரானப் புனித யோசேப்பே! உமது பிள்ளைகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசு கிறிஸ்துவின் திருக்கரங்களிலும், அன்னை மரியாவின் திருக்கரங்களிலும் பாக்கியமான மரணத்தை அடைந்தவர் நீர்.  இப்போதும், எப்போதும், எங்கள்  மரண நேரத்திலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைவனின் அருளால் நிறைந்தப் புனித யோசேப்பே! இறைமகன் இயேசு கிறிஸ்துவும், அன்னை மரியாவும் உம்முடன் இருக்க ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீர்! புனித யோசேப்பே! அன்னை மரியாவின் துணைவரே! இயேசு கிறிஸ்துவுக்குப் போதித்து வழிநடத்தியவரே! உம்மிடம் பக்திக் கொண்டிருப்பவர்களுக்காக வேண்டிக் கொள்ளும். தூய ஆவியாரின் வரங்களால் நிறைந்தப் புனித யோசேப்பே! அன்னை மரியாவுக்குப் பிள்ளையான இயேசு கிறிஸ்து அனந்த அருளோடு உமக்கும் பிள்ளையாக வளர்ந்ததால் அன்னை மரியா பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டது போல, நீரும் ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே. இயேசு கிறிஸ்துவின் தந்தை எனப் பெயர் பெற்றப் புனித யோசேப்பே! எப்போதும் கன்னியான அன்னை மரியாவின் கணவரே! இந்த உலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்த இயேசு கிறிஸ்துவிடம் பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும், எப்போதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.


நாள் 4:

ஓ புனித யோசேப்பே! யூதேயா நாட்டை ஆண்டப் புகழ் பெற்ற அரசர்களின் குலத்தில் உதித்தவரே, பிதாப்பிதாக்களின் நற்குணங்களைப் பெற்ற பாக்கியமானவரே! என்னுடைய மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும். இயேசு கிறிஸ்துவுக்கும் அன்னை மரியாவுக்கும் பின், என் வணக்கத்துக்கும், முழு விசுவாசத்திற்கும் காரணமாகவும், பாதுகாவலாகவும், சிறந்தப் புனிதராகவும் இருப்பவரே! தாழ்மையில் இறைவனுக்கு மிகுந்தத் தூய்மையோடும், முழு ஆசையோடும் பணிபுரிந்து வருவோருக்கு நன்மாதிரியாக, அந்தரங்கத்தில் விளங்கி நின்ற மகா புனிதரே! உம்மில் விசுவாசம் கொண்டவர்களுள் நானும் ஒருவனாக, உமக்குப் பணி புரிய என்னை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். உமது மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல உமக்கு நான் கீழ்ப்படியவும், உம்மை அன்பு செய்யவும் எனக்கு அருள் புரிந்தருளும். நீர் என் தந்தையாகவும் நான் உமது மகனாகவும் இருப்பதால், மகனாகிய நான் தந்தையாகிய உமக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தையும், உம்மில் வைக்க வேண்டிய அன்பையும் நம்பிக்கையையும் நான் அடையச் செய்தருளும். திருச்சபைக்கு உட்பட்ட கிறிஸ்தவர்களுக்காகப் பரிந்து பேசும் வல்லமை கொண்ட நியாயத் தூதரே! “நீர் இறைவனிடம் எனக்காகப் பரிந்து பேசியது வீண் போனதில்லை” என்று புனித தெரசாள் உறுதியாகச் சொல்லியிருக்கிறாரே, ஆகையால் நான் இப்பொழுது உம்மிடம் சமர்ப்பிக்கும் வேண்டுதல்களை அடைய, எனக்காக இறைவனிடம் மன்றாடியருளும். ஓ சிறந்தப் புனிதரான யோசேப்பே! நித்திய சமாதானத்தோடு என்னை மூவொரு இறைவனிடம் ஒப்புக்கொடுத்தருளும். இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட என்னை நான் பாவக்கறைகளால் அசுத்தப்படுத்திக்கொள்ள விடாதேயும். என் மீட்பர் தமது அன்பின் நெருப்பை என் இதயத்திலும், அனைத்து விசுவாசிகளின் இதயங்களிலும் பற்றி எரியச் செய்ய இறைவனிடம் எங்களுக்காக மன்றாடியருளும். இயேசு கிறிஸ்து குழந்தையாய் இருந்தபோது கொண்டிருந்தப் பரிசுத்த தன்மையையும் தாழ்ச்சியையும் நாங்கள் எங்கள் இதயத்தில் பெற்றுக் கொள்ள இறைவனிடம் எங்களுக்காக மன்றாடியருளும். உமது மணவாளியும், எப்பொழுதும் கன்னியுமான அன்னை மரியாவின் மேல் நான் வைத்திருக்கும் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்தருளும். நீர் இறக்கும் போது இறைவனிடம் பெற்றப் பாக்கியத்தைப் போல, மீட்பரான இயேசு கிறிஸ்துவின், அன்னை மரியாவின் பாதுகாவலில் நான் உயிர் விடச் செய்து, என் வாழ்விலும் இறப்பிலும் என்னைப் பாதுகாத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.  ஆமென்.


நாள் 5:

பாவ இருள் அகலப் புனிதத்தில் உயர்ந்த மனித இயல்பு கொண்ட புனித யோசேப்பே! தந்தையாகிய இறைவனின் திருவுளத்தை அறிந்து, ஆனந்த மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த புனித யோசேப்பே! எனது பிறப்பு நிலைப் பாவத்தின் இருள் அகலவும், ஆனந்தப் பிரகாசமுள்ள இறைவனின் அருள் என் உள்ளத்தில் வரவும் எனக்காக அவரை இரந்து மன்றாடும். ஆடுகள் தங்கள் ஆயனையும், மாடுகள் தங்கள் எஜமானையும் அறிகின்றன. ஐயோ! என்னைப் படைத்து, மீட்டு, ஆனந்த மகிழ்ச்சி அளிக்கும் என் இறைவனை என்னால் முடிந்த வரை அறிந்து, அவருக்குள் நான் ஒன்றிக்காமல் இருப்பதால், மிக வெட்கத்துடன் வேதனைப் படுகிறேன். மூவொரு இறைவனை அறிந்து, அவரது அன்பையும் அருளையும் பெறப் புனிதர்கள் எவ்வளவோ அரும் தவமும், தியானமும், செபமும் செய்தார்கள். ஆனால் நானோ, பாவச் சேற்றில் மூழ்கி, நொந்து, பலவீனப்பட்டிருப்பதால், சூரியனைப் போல புனிதர்களுக்குப் பிரகாசிக்கும் இறை வார்த்தைகளை நான் தியானித்து, என் பலவீனத்திற்குத் தக்கச் செபங்களைச் செய்து, என்னைப் படைத்த இறைவனை அறிய அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். நான், என் தந்தையாகிய இறைவனுக்கும், அவருடைய திருமகனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும், தூய ஆவியாருக்கும் என்றென்றும் ஆராதனையும், புகழ்ச்சியும், நன்றியும் செலுத்த அருள் புரிந்தருளும். இறைவனின் மகிமைப் பிரகாசம் என் ஆன்மாவில் நிலைத்திருக்கவும், நான் படைப்புகளை அறிந்து, என்னைப் படைத்தவரிடமே மீண்டும் இணையவும் அருள் புரிந்தருளும். நான் இறை வார்த்தைகளால் தெளிந்து, நற்செய்தியின் அற்புதங்களால் ஒளி பெற்று, இயேசு கிறிஸ்துவின் தாழ்ச்சியாலும், பாடுகளாலும், இறப்பாலும், உயிர்ப்பாலும் மனமகிழ்ச்சி கொண்டு, உலகத்தை வெறுத்து, நெருப்பு மயமான இறை அன்பை ஏற்றுக் கொள்ள அருள் புரிந்தருளும். சாத்தானின் தந்திரங்களையும், உலக மாயைகளையும் வென்று, மூவொரு இறைவனை சுவைத்துப் பார்க்க வேண்டிய வரத்தை நான் அடைய அருள் புரிந்தருளும். “இறைவனை அறியும் அறிவே நிலையான வாழ்வு” என்று புனிதர்கள் அகமகிழ்ச்சி கொண்டு, எல்லாத் தந்திரங்களையும் வென்று, நிலையான பேரின்பப் பேறு பெற்றவர்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆகையால், திருமகன் இயேசு கிறிஸ்துவோடு வெகு காலம் பழகிய நீர், எனக்கு இரக்கம் காட்டி, இறைவனை அறியும் அறிவை நான் அடைய எனக்காக இறைவனிடம் மன்றாடும். ஆமென்.


நாள் 6:

இறைவனால் மிகவும் உயர்த்தப்பட்ட புனித யோசேப்பே! ஞானத்தின் தொடக்கமாகிய இறை அச்சத்தை நான் பெறச் செய்தருளும். விண்ணிலும் மண்ணிலும் நடைபெறும் செயல்கள் அனைத்தும் இறைவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் காட்டுவதால், என்னில் எவ்வளவோ பயங்கரங்கள் உண்டாயிருக்க வேண்டும். என் நினைவுகளும், சொல்களும் செயல்களும் இறை அச்சத்தால் நடைபெறாமல், கெட்டுப் போன என் சுய சிந்தையால் செய்யப்பட்டுள்ளதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இறைவனின் கட்டளைகளுக்கும் இறை வார்த்தைகளுக்கும் என் மனம் பயப்படாமல், உலக இச்சைகளுக்கும் மாயைகளுக்கும் கீழ்ப்படிவதால், என் புலம்பல்கள் அதிகரித்துள்ளன. “இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பவனை இறைவன் புறக்கணிப்பார்” என்பதை நினைத்து நான் நடுங்குகிறேன். நீர் சிறு வயது முதல் இறைவனின் சகாயத்தைக் பெற்றிருந்தீர். என் அசட்டைத் தனத்தாலும், மந்த குணத்தாலும் இறைவனின் கோபத்திற்கு உள்ளாகாதபடி அருமையான இறை அச்சத்தை நான் பெறச் செய்தருளும். நான் இறப்புக்கும், நோய்க்கும், துக்கங்களும், துயரங்களுக்கும் அஞ்சாமல், என் பாவங்களையும், சாத்தானின் செயல்களையும், சோதனைகளையும் விட்டு, நான் என்னையே விலக்கிக் கொள்ளச் செய்தருளும். நான் என் எதிரிக்கு அஞ்சுவது போல என்னைப் படைத்த ஆண்டவருக்கு அஞ்சாமல், ஒரு பிள்ளை தன் தந்தைக்கு அஞ்சுவது போல அன்பு நிறைந்த அச்சத்தை நான் பெறச் செய்தருளும். துன்பங்களாலும், தொல்லைகளாலும், என் சொந்தப் பலவீனங்களாலும், சோதனைகளாலும் நான் தளராமல், அன்புக்குரிய இறை அச்சத்தால் என் ஆன்மா பலம் பெற்று நிலைத்திருக்க எனக்காக இறைவனை மன்றாடும். நான் செய்யும் எல்லா செயல்களிலும் இறைவனின் வல்லமையையும், ஞானத்தையும், திரு உளத்தையும் சிந்தித்து, இறை அச்சம் கொண்டு, இவ்வுலகத் துன்பங்களுக்கு நான் அஞ்சாதிருக்க அருள் புரிந்தருளும். இவ்வுலகச் செல்வங்களுக்கும், ஆடம்பரங்களுக்கும் என் மனது இசைந்து விடாமல், ஞானமற்ற உலகக் கற்பனைகளுக்கும் பயப்படாமல், உள்ளத்தாலும் உடலாலும் இறைவனுக்கு அஞ்சி, அவருக்கு அஞ்சுபவர்களுக்கு அவர் தரும் வாக்குறுதிகளையும், மீட்பையும், இரக்கத்தையும், அருளையும், ஆசீர்வாதத்தையும், ஞானத்தையும், சகாயத்தையும், நிலையான வாழ்வையும், பேரின்பத்தையும் அடைய எனக்காக வேண்டிக்கொள்ளும்.  ஆமென்.


நாள் 7:

எல்லாம் வல்ல இறைவன் சிறு குழந்தையாக இந்த மண்ணில் வளர்ந்த போது, அவரை இறைவன் என்று விசுவசித்து, அன்புடன் ஆராதித்த புனித யோசேப்பே! நான் சாதாரண உருக்கமுள்ள விசுவாசமடைய எனக்காக வேண்டிக்கொள்ளும். கெட்ட உணர்வினாலும் அவிசுவாசத்தாலும், அவநம்பிக்கையாலும், சந்தேகங்களாலும் என் இதயம் அலைக்கழிக்கப்படுவதால், இவை அனைத்தையும் என் இதயத்திலிருந்து நீக்கி, இறைவார்த்தை என்னுள் சூரிய ஒளியைப் போல பிரகாசிக்க எனக்காக இறைவனிடம் மன்றாடும். நிலையற்ற மனிதர்கள் மேலும், சொத்துக்கள் மேலும் நான் விசுவாசம் வைத்து வீணாகாமலிருக்க எனக்காக இறைவனிடம் மன்றாடும். என்னைப் படைத்த இறைவனையும், அவரது பேரின்பமான விண்ணகத்தையும், அவர் பாவிகளுக்கு உருவாக்கிய பயங்கரமான நரகத்தையும், அவரது திருமகன் இயேசு கிறிஸ்து எனக்குத் தந்த அருளையும், மீட்பையும், பாவ மன்னிப்பையும் நான் உறுதியாக விசுவசிக்கிறேன். என் உடலாலும், உள்ளத்தாலும், பலவீனத்தாலும், வெளித்தந்திரங்களாலும், பாவத்தாலும் நான் மூடப்பட்டிருப்பதால், நான் கண்ணால் பார்க்க முடியாததும், என் இதயத்தால் உணர முடியாததுமான இறைச் செயல்களுக்கு ஊக்கமூட்டி, உயிருள்ள விசுவாசத்தோடு நான் செயல்படச் செய்தருளும். உலக மீட்பர் இயேசு கிறிஸ்துவே வாழ்வும், வழியும் உண்மையுமாய் இருப்பதாலும், அவர் நெரிந்த நாணலை முறியாமலும், குறையும் நெருப்பை அணையாமலும் இருப்பதாலும், உலக இருளின் பாதாளத்தில் அகப்பட்டுக் கொண்டுத் தத்தளிக்கும் என்னை அவர் புறக்கணிக்க மாட்டார். ஆகையால், பொய்யான அறிவுரைகளாலும், மனிதரின் கோட்பாடுகளாலும் நான் வீணாகாமலிருக்க எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்துவை நாடி, அவருடைய நீதியையும் அருளையும் பெற்றுக் கொள்ளச் செய்தருளும். நான் விசுவாசத்தால் ஆபேலைப் போல இறைவனுக்கு பலியிடவும், ஏனோக்கைப் போல விண்ணகத்துக்கு எடுக்கப்படவும், நோவாயைப் போல உண்மையானத் திரு அவையின் உறுப்பினராக இருக்கவும், ஆபிரகாமைப் போல எப்போதும் விண்ணகத்தை நாடி நிற்கவும் அருள் புரிந்தருளும். விசுவாசத்தால் யாக்கோபு வானதூதரின் ஆசீரைப் பெற்றதைப் போல, விசுவாசத்தால் மனிதர்களும் பல வல்லச் செயல்களைச் செய்ய முடியும் நான் விசுவசிக்கிறேன். ஆகையால், உலகத்தாரோடு நான் மகிழ்ச்சி அடையாமல், என் மீட்பரோடு துன்பத்தின் பாதையில் நான் நடக்கத் வல்லமையுள்ள விசுவாசத்தை எனக்குத் தந்தருளும். என் முன்னோர்களைப் போல நான் உறுதியான விசுவாசத்தோடு, வானிலிருந்து இறங்கிய உயிருள்ள உணவாகிய திவ்விய நற்கருணையை உண்டு, தானியேலைப் போல நரக சிங்கமாகிய சாத்தானின் வாயை மூடவும், என்றென்றும் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காண, எனக்காக வேண்டிக்கொள்ள உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.


நாள் 8:

இம்மைக்கும் மறுமைக்கும் இறைவன் மேல் திடமான நம்பிக்கை கொண்டிருந்த புனித யோசேப்பே! விசுவசிக்கிறவனுக்கு வெட்கமில்லை, நம்பிக்கையுள்ளவனுக்கு பயமில்லை என்பதை அறிந்திருந்தாலும், நிலையில்லா செல்வங்கள் மீதும், ஊனியல்பின் செயல்கள் மீதும், இச்சைகள் மீதும் எனக்கு நம்பிக்கை இருப்பதைக் கண்டு மிகவும் வேதனைப்படுகிறேன். இறைவனின் வாக்குறுதிகள் பெரிதே! நான் அன்பால் இழுக்கப்பட்டு, புகை போல் மறையும் நிலையில்லாப் படைப்புகளின் மீது நம்பிக்கை வைத்ததால் துக்கங்களும், தொல்லைகளும், கவலைகளும் என் தலைக்கு மேல் போயின. புனிதர்கள் தங்கள் நம்பிக்கையால் விண்ணகம் சென்றது போல, நான் நம்பிக்கையில் திடன் கொண்டு, உறுதியான செப தவங்களால் விண்ணகம் அடையச் செய்தருளும். எனக்கு உறுதியான விசுவாசமிருந்தால், இறைவன் இருப்பதையும், நிலையான வாழ்வு உள்ளதையும் நம்பி, உலகக் கவலைகளால் மதி மயங்காமல், நான் காணாததும், இறைவார்த்தைகள் சொல்லும் செயல்களில் உறுதி கொண்டு, காற்றுக்கு அசையாத மலை போல் அமர்ந்து, துன்பங்களில் திடன் கொண்டிருக்க அருள் புரிந்தருளும். இப்படி நான் இல்லாததை நினைத்து நான் மனம் வருந்துகிறேன். இறை மகன் மனிதனாகப் பிறந்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்து, விண்ணகத்தில் இருப்பது என் நம்பிக்கைக்கு அடித்தளமாயிருந்தாலும், என் நம்பிக்கையில் நான் இன்னும் தத்தளிப்பதைக் குறித்து மனங்கலங்கி அழுகிறேன். என் மீட்பரை மட்டும் அணுகி, நான் எனக்கும் உலகத்திற்கும் மரித்து, நம்பிக்கையில் உயிர் வாழ உறுதி அளிக்கிறேன். அன்னை மரியாவும், எல்லாப் புனிதர்களும், எல்லா வானதூதர்களும் இந்த உலகில் துன்பப்படும் மனிதர்களுக்காகப் பரிந்து பேசுவதை நான் அறிந்திருந்தும், இரவும் பகலும் ஓயாமல் அவர்களை நோக்கிக் கதறி அழுது, இடைவிடாமல் மன்றாடாததால் நான் மனம் வருந்துகிறேன். வரப் போகும் நிலைவாழ்வுக்கு நான் காத்திருப்பதால், அழிந்து போகும் உடலின் மீதும், ஒழிந்து போகும் பொருட்களின் மீதும் நான் நம்பிக்கை வைப்பதேன்? இன்பத்திலும் துன்பத்திலும் இறைவன் மீது நம்பிக்கை கொண்டப் புனித யோசேப்பே! என் அழுகைக்கும் வேண்டுதலுக்கும் மனமிரங்கி இறைவனிடம் நீர் மன்றாடினால், அவர் எனக்குத் திடமான நம்பிக்கையைத் தருவார் என்று நான் உண்மையாக விசுவசிக்கிறேன். நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கலக்கமில்லை என்பதால், என் இதயம் எதற்கும் கலங்காமல், இறைவன் மீது மட்டும் நம்பிக்கை வைக்கச் செய்தருளும். என் நம்பிக்கைக்கு ஆதாரமாக விண்ணகத்தில் என் இதயம் இடைவிடாமல் குடிகொள்ளச் செய்தருளும். துன்பத் துயரங்களில் கண் கலங்காமல், இறைவார்த்தையில் நம்பிக்கை வைத்து, நான் இறைவனை மட்டும் நாடி, அவரில் மட்டும் விசுவாசமாயிருக்க எனக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.


நாள் 9:

இறை அன்பில் தாராளமுள்ள புனித யோசேப்பே! எல்லாச் செல்வங்களிலும் அபூர்வ செல்வமாகிய இறை அன்பை நான் அடைய எனக்காக இறைவனை மன்றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், விண்ணக வாழ்வை அளிப்பவரும், எல்லா நன்மைகளின் ஊற்றுமாகிய என் இறைவனை அன்பு செய்யாமல் வேறு யாரை நான் அன்பு செய்வேன்? பிறப்பு நிலைப் பாவத்தால் அந்த அன்பு என்னிடம் குறைந்து போனதால், மிகவும் மனம் வருந்தி வேதனைப்படுகிறேன். என் தாயின் வயிற்றில் உருவான நாள் முதல் இந்நாள் வரை, என் மதியீனத்தால் நான் செய்த எல்லாப் பாவங்களையும் மன்னித்து, என் நன்றி கெட்டதனத்தையும் பாராமல், நன்மைகளுக்கு மேல் நன்மைகள் செய்து வரும் இறைவனது அன்பை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்யாதவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதியிருப்பதால், என்னை எல்லா ஆபத்துக்களிலுமிருந்து மீட்டு, தமது கோபத்தின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது அன்பு மீட்பரை நான் அன்பு செய்யாவிட்டால், நானும் சபிக்கப்பட்டு அவரை விட்டு எக்காலமும் பிரிந்திடுவேன் என்றும் நினைத்து பயந்து நடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், உடலின் இச்சையாலும், வாழ்வின் பெருமையாலும், காணும் பொருட்களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக மாயையின் மீது கொண்ட விருப்பத்தாலும், என்னில் இறை அன்பு குறைந்துள்ளதால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் வெறுத்து, என் இறைவனை உருக்கமாக அன்பு செய்யும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக அன்பாலும், அழிந்து போகிற உடலின் இச்சையாலும், உன்னதமான மகிமையும், நிலையான அருளும், ஒரே செல்வமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண உண்மையும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் இறைவனை நான் இழப்பதை விட, அவரது அன்பால் என் இரத்தம் எல்லாம் சிந்தி, அவரது பாதத்தில் என் உயிரை இழப்பது மேல். இறை அன்பு நிறைந்த மகா பெரிய புனிதரே! எல்லா நன்மைகளுக்கும், உதவிகளுக்கும், அருளுக்கும் ஊற்றாகிய இறைவனை நான் என் முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் அன்பு செய்ய உதவியருளும். இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே இறை அன்பு என்பதால், உயிரைக் கொடுத்து அவற்றை அனுசரித்து, இறைவனோடு நான் ஒன்றிக்கச் செய்தருளும். பாவத்தால் கறைபட்டுள்ள என் இதயம், தூய ஆவியாரின் அனலால் வானத்தில் நெருப்புப் பரவுவது போல், என் இதயம் இறைவனை நோக்கிப் பரவ எனக்காக வரம் கேட்டருளும். இறை அன்பால் நான் இறைவனுக்குள் ஒன்றித்து, எல்லா மனிதரையும், அவருக்குள்ளும், அவருக்காகவும் அன்பு செய்ய உதவியருளும். இரக்கமுள்ள இறை அன்பால் என் எதிரிகளை நான் மன்னித்து, அவர்கள் செய்தத் தீமைகளுக்கு எதிராக நன்மைகள் செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும். ஆமென்.

Loading

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy