நோயில் பூசுதல்

தொடக்கம்

குரு: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.

எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

குரு: (நோயாளியின் மீதும் அறையிலும் தீர்த்தம் தெளித்துக் கொண்டு) இத்தீர்த்தம் நாம் பெற்ற திருமுழுக்கை நினைவூட்டுவதாக, தம் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் நம்மை மீட்ட கிறிஸ்துவையும் நமக்கு நினைவுபடுத்துவதாக.

அன்புள்ள சகோதரர்களே, நோயுற்றோர் உடல் நலம் தேடி ஆண்டவரிடம் வந்தார்கள் என்று நற்செய்தி கூறுகிறது. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நமக்காக கொடிய பாடுபட்ட எம்பெருமான், இதோ, தம் பெயரால் கூடியிருக்கும் நம் மத்தியில் எழுந்தருளியிருக்கிறார்.

“உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்” என்று திருத்தூதரான புனித யாக்கோபு வழியாக நமக்குக் கட்டளை தருபவரும் அந்த ஆண்டவரே.

எனவே, நோயுற்றிருக்கும் நம் சகோதரர் (சகோதரி) மீது கிறிஸ்து பெருமானின் அருளும் வல்லமையும் இறங்கி இவரது வேதனையைத் தணித்து, உடல் நலம் அருளுமாறு உருக்கமாக மன்றாடுவோம்.

மன்னிப்பு

குரு: தேவைப்படின் ஒப்புரவு அருளடையாளத்தை அளிக்கலாம். அல்லது

குரு: சகோதரரே இத்திருச்சடங்கில் நாம் தகுதியுடன் பங்கு பெற, நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

(சிறிது நேரம் மௌனம்)

எல்: எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கின்றேன், ஏனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.      

என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும் சகோதர சகோதரிகளே உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.

குரு: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலை வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.

எல்: ஆமென்.

இறைவாக்கு

குரு (அல்லது) ஒருவர்: சகோதரரே, மத்தேயு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் கேட்போம். (மத். 8: 5 – 13)

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம்    ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

மன்றாட்டுக்கள்

குரு: சகோதரரே, நம் சகோதரர் (சகோதரி) ….க்காக இறைவனைத் தாழ்ந்து பணிந்து நம்பிக்கையோடு வேண்டுவோம்.

1. ஆண்டவரே, இத்திருப்பூசுதல் வழியாகத் தேவரீர் பரிவன்புடன் இவரைச் சந்தித்துத் தேற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.

2. தீமை அனைத்திலிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.

3. இங்குள்ள நோயாளிகள் அனைவருடைய வேதனைகளையும் தேவரீர் தணித்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.

4. நோயாளிகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் தேவரீர் துணைநிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.

5. இவரைப் பாவத்திலிருந்தும், சோதனை அனைத்திலுமிருந்தும் விடுவிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும்.

குரு: உமது பெயரால் நாம் இவர் தலைமீது கைகளை வைப்பதால், இவருக்கு நல் வாழ்வும், உடல் நலமும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

(குரு மௌனமாக நோயாளியின் தலைமீது கைகளை வைக்கிறார்.)

திரு எண்ணெய் மீது நன்றி மன்றாட்டு

குரு: எங்களுக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் உம் திருமகனை உலகிற்கு அனுப்பிய எல்லாம் வல்ல தந்தையாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: எங்கள் மனித நிலைக்குத் தாழ்ந்து வந்து, எங்கள் பிணிகளைப் போக்கத் திருவுளமான ஒரே திருமகனான இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: உமது நிலையான வல்லமையால் எங்கள் உடலின் சோர்வினைப் போக்கி, திடப்படுத்தி எங்களுக்குத் துணை நிற்கும் தூய ஆவியாம் இறைவா, போற்றி.

எல்: இறைவா போற்றி, போற்றி.

குரு: அன்புத் தந்தையே, உம் அடியார் மீது திரு எண்ணெய் பூசுகிறோம். இதனால் இவர் வேதனை தணிந்து, ஆறுதல் பெற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

திரு எண்ணெய் பூசுதல்

குரு நோயாளியின் நெற்றியிலும் கைகளிலும் திரு எண்ணெய் பூசி கூறுவதாவது:

குரு: இப்புனித பூசுதலினாலும், தம் அன்பு மிகுந்த இரக்கத்தாலும், ஆண்டவர் தூய ஆவியாரின் அருளைப் பொழிந்து உமக்குத் துணை புரிவாராக.

எல்: ஆமென்.

குரு: இவ்வாறு, உம் பாவங்களைப் போக்கி, உமக்கு நலமளித்து தயவாய் உம்மைத் தேற்றுவாராக.

எல்: ஆமென்.

குருவின் செபம்

குரு: மன்றாடுவோமாக. இரக்கமுள்ள எங்கள் மீட்பரே, தூய ஆவியாரின் அருளால், இந்த நோயாளியின் சோர்வையும் பிணிகளையும் தணித்து, இவருடைய புண்களை ஆற்றி பாவங்களைப் போக்கி, உள்ளத்திலும் உடலிலும் இவர் படும் வேதனைகளை அகற்றி, உள்ளும் புறமும் இவர் முழுமையாக நலம்பெறத் தயைபுரியும். இவ்வாறு இவர் உமது பரிவன்பினால் நலமடைந்து, பழைய நிலை பெற்று, தம் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே, உம்மை மன்றாடுகிறோம்.

சடங்கின் முடிவு

குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்தபடியே நாம் ஒருமித்து இறைவனை வேண்டுவோம்.

எல்: விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் – ஆமென்.

(தேவைப்படின், இங்கு இறுதி வழியுணவு வழங்கலாம்.)

குருவின் ஆசீர்

குரு: தந்தையாகிய இறைவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

குரு: இறைவனின் திருமகன் உம்மைக் குணப்படுத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: தூய ஆவியார் உம்மீது ஒளிவீசுவாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உடலைக் காத்து ஆன்மாவை மீட்பாராக.

எல்: ஆமென்.

குரு: உமது உள்ளத்திற்கு ஒளிதந்து உம்மை வானக வாழ்வுக்கு வழி நடத்துவாராக.

எல்: ஆமென்.

குரு: இங்கிருக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy