வருகைச் சடங்கு
(ஆலய வாசலிலே மணமக்களை குரு வரவேற்கிறார். குரு திருப்பலிக்குரிய திரு உடைகள் அணிந்து பணியாளரோடு ஆலய வாசலிலே நின்று வரவேற்புரை வழங்குவார்.)
குரு: அன்புமிக்க மணமக்களே, திருமணத் திருவருட்சாதனத்தை முறையே நிறைவேற்றி, இறைவனின் அருள்பெற, அவரது திருச்சன்னதியை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களோடு இன்று திரு அவையும் மகிழ்கிறது. “பரமனின் திருமுன் பக்தியுடன் வருக!” என உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
(பணியாளர் முன்செல்ல, பின்னர் குரு, மணமக்கள், பெற்றோர், சாட்சிகள் என்ற வரிசையில் பவனி பீடத்திற்குச் செல்லும். அப்போது மக்கள் வருகைப் பல்லவி பாடுவர்.)
திருமணச் சடங்கு
(மணமக்கள் எழுந்து நிற்கின்றனர்.)
குரு: அன்புமிக்க (மணமக்களின் பெயர்கள்) திருச்சபையின் திருப்பணியாளர் முன்பாகவும் இத்திருக்கூட்டத்தின் முன்னிலையிலும் உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டு காத்தருளுமாறு இங்கு வந்திருக்கின்றீர்கள். உங்களது அன்பை கிறிஸ்து நிறைவாக ஆசீர்வதிக்கின்றார். ஏற்கெனவே அவர் உங்களை திருமுழுக்கினால் அர்ச்சித்துள்ளார். இப்பொழுதோ மற்றொரு திருவருட்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளம் ஈந்து நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் உண்மையுடன் இருக்கவும் திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே உங்களது கருத்தை அறிந்து கொள்ள திரு அவையின் முன்னிலையில் உங்களை வினவுகின்றேன்.
குரு: (மணமக்களின் பெயர்கள்) நீங்கள் இருவரும் முழுமன சுதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கின்றீர்களா?
மணமக்கள்: வந்திருக்கின்றோம்.
குரு: நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழ்நாளெல்லாம் ஒருவரை ஒருவர் அன்புசெய்யவும் மதிக்கவும் தயாராக இருக்கின்றீர்களா?
மணமக்கள்: தயாராக இருக்கின்றோம்.
குரு: இறைவன் உங்களுக்கு அருளும் மக்களை நீங்கள் அன்புடனே ஏற்று, கிறிஸ்துவின் போதனைக்கும் திருச்சபையின் சட்ட திட்டத்திற்கும் ஏற்றபடி வளர்ப்பீர்களா?
மணமக்கள்: வளர்ப்போம்.
மனஒப்புதல்
குரு: நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால் உங்களது வலது கைகளைச் சேர்த்து பிடியுங்கள்; இறைவன் திருமுன் திரு அவையின் முன்னிலையில் உங்களது சம்மதத்தை தெரிவியுங்கள்.
(இருவரும் தங்கள் வலது கைகளை சேர்த்து பிடிக்கிறார்கள்.)
மணமகன்: (மணமகனின் பெயர்) என்னும் நான் (மணமகளின் பெயர்) என்னும் உங்களை என் துணைவியாக ஏற்றுக் கொள்கின்றேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல்நலத்திலும் நோயிலும் உங்களுக்கு நான் உண்மையுடன் இருப்பேன் என்றும், நம்முடைய வாழ்நாளெல்லாம் உங்களை அன்புசெய்யவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்.
மணமகள்: (மணமகளின் பெயர்) என்னும் நான் (மணமகனின் பெயர்) என்னும் உங்களை என் துணைவராக ஏற்றுக் கொள்கின்றேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல்நலத்திலும் நோயிலும் உங்களுக்கு நான் உண்மையுடன் இருப்பேன் என்றும், நம்முடைய வாழ்நாளெல்லாம் உங்களை அன்புசெய்யவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்.
குரு: திரு அவையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்த சம்மதத்தை ஆண்டவர் கனிவுடன் உறுதிப்படுத்தி, தம் ஆசீரை உங்கள் மீது நிறைவாய் பொழிந்தருள்வாராக. இறைவன் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். எல்: ஆமென்.
(இணைந்த கைகளின் மேல் குரு தீர்த்தம் தெளிக்கின்றார்.)
திருமாங்கல்யம் அணிவித்தல்
குரு: (திருமாங்கல்யத்தை ஆசீர்வதித்து) ஆண்டவரே, உம் அடியார் இவர்களையும், இவர்களது அன்பையும் ஆசீர்வதித்து புனிதப்படுத்தியருளும். இந்த திருமாங்கல்யம் இவர்களுக்கு உண்மையின் அடையாளமாய் அமைந்து ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஆழ்ந்த அன்பையும் நினைவூட்ட வேண்டும் என்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
(குரு திருமாங்கல்யத்தின் மீது தீர்த்தம் தெளிக்கின்றார்.)
மணமகன்: (மணமகளின் பெயர்) என் அன்புக்கும் உண்மைக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கல்யத்தை தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே அணிந்து கொள்ளுங்கள்.
மணமகள்: என் அன்புக்கும் உண்மைக்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கல்யத்தை தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே அணிந்து கொள்கிறேன்.
இறைமக்களின் மன்றாட்டுக்கள்
குரு: அன்பான இறைமக்களே! இப்புதிய குடும்பத்தின் அன்பு எப்பொழுதும் தொடர்ந்து வளர வேண்டும் என இவர்களுக்காக மன்றாடுவோம். அத்துடன் உலகின் எல்லா குடும்பங்களுக்காகவும் மன்றாடுவோம்.
ஒருவர்: இப்புதிய மணமகனும், மணமகளும் தங்கள் இல்லத்தில் சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழவேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: உலகிலும், திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டும் எனவும், மேன்மேலும் திருச்சபையில் ஒற்றுமை வளர வேண்டும் எனவும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: மணமுடித்த எம் பிள்ளைகள் தாங்கள் உருவாக்கும் புதிய குடும்பத்தில் சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ உம் ஆவியை துணையாக தந்திட, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: எம் பிள்ளைகள் உம் அன்புக்கு அடையாளமாய் திகழ்ந்து, இதனால், நீரும் வாக்களித்தவாறே, வயிற்றின் கனியை ஆசீர்வதித்து, மக்கள் செல்வத்தை கொடையாக தந்திட, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: கானாவூர் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தது போல, எம் பிள்ளைகளையும் குறைகள் களைந்து நிறைவு தந்து ஆசீர்வதிக்க, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: எம் பிள்ளைகளை வாழ்த்த வந்துள்ள, மணம் முடித்த யாவருமே, உமது சந்நிதியில் தங்களது திருமண அருளைப் புதுப்பித்தருள துணை செய்ய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒருவர்: பங்கெடுக்க வந்துள்ள எம் உறவினர்கள், நண்பர்களையும் ஆசீர்வதித்து, உடல்நலத்தோடும், மகிழ்வோடும் அவர்களது பயணம் இனிதாக வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
குரு: ஆண்டவரே, உம் மக்களாகிய இவ்விருவருக்கும் உண்மையான ஆழமான அன்பை நீர் வழங்குவதால், அவர்கள் நிறைந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம். நீர் இணைத்த இவ்விருவரையும் ஒன்றும் பிரிக்காதிருப்பதாக. நீர் ஆசீர்வதிக்கும் இவர்களை எத்தீங்கும் தீண்டாதிருப்பதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.