இறந்தவர் வீடு
குரு: தந்தை ✞ மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்: ஆமென்.
குரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப் பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள். அவரே நமக்கு எல்லா வகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார்.
குரு தீர்த்தம் தெளிக்கிறார்: தூபம் காட்டுகிறார்.
குரு: ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
எல்: ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
ஒரு: 1. ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
2. ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
3. ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
4. விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
5. இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
எல்: ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.
6. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
எல்: ஆண்டவரே, உம்மை நோக்கி கூவியழைத்தேன்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக. ஆண்டவரே, உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்த்தருளும். உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டகன்ற உம் அடியார் …… உடைய ஆன்மாவை அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் வரவேற்று, உம் புனிதருடைய தோழமையில் சேர்த்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
துக்கப்படுவோருக்காகச் செபம்
குரு: மன்றாடுவோமாக. இரக்கம் மிகுந்த தந்தையே, ஆறுதல் அளிக்கும் இறைவா, நீர் எம்மீது முடிவில்லா அன்பு கூர்ந்து, சாவின் நிழலையே வாழ்வின் வைகறையாக மாற்றுகின்றீர். இன்னலில் உழன்று ஏங்கும் உம் அடியாரைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். (ஆண்டவரே எங்கள் அடைக்கலமும் ஆற்றலும் நீரே. இருளும் துயரும் நிறைந்த எங்கள் அழுகையை மாற்றி, நாங்கள் ஒளியும், அமைதியும் பெறும் வண்ணம் எங்களோடு இருந்தருள்வீராக.)
எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் எங்கள் மரணத்தைத் தம் மரணத்தால் அழித்து, தம் உயிர்ப்பினால் மீண்டும் எங்களுக்கு வாழ்வு அளித்தார். ஆதலால் எங்கள் கண்ணீரெல்லாம் துடைக்கப்பெற்று, நாங்கள் இவ்வுலக வாழ்வின் இறுதியில் எங்கள் உறவினரோடு வானகம் வந்து சேருவதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவை நோக்கி சென்று கொண்டிருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(திருப்பலியின் இறுதியில் நன்றி மன்றாட்டு முடிந்ததும், குருவும் பணியாளரும் சவப்பெட்டியருகே சென்று மக்களை நோக்கி நிற்கின்றனர்.)
குரு: இறைமக்களின் வழக்கப்படி இறந்தோரை நல்லடக்கம் செய்யும் கடமையை நிறைவேற்ற கூடியிருக்கும் நாம், இறைவனை பக்தியுடன் மன்றாடுவோம். அனைத்தும் அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன, நம் சகோதரரின் (சகோதரியின்) உடலை நலிவுற்ற நிலையில் நாம் அடக்கம் செய்தாலும் புனிதரின் கூட்டத்தில் இடம்பெறக் கட்டளையிடுவாராக. தீர்ப்பிடும் போது இறைவன் இரக்கம் காட்டுவதால் இறப்பே இவருக்கு மீட்பு அளிப்பதாகி, பாவக் கடன் ஒழிவதாக; தந்தையிடம் இவர் அன்புறவு கொள்ள நல்லாயன் இவரை அழைத்துச் செல்வாராக. இவர் முடிவில்லா மன்னரின் பரிவாரத்தில் முடிவற்ற இன்பமும், புனிதரின் தோழமையும் பெற்று மகிழ்வாராக.
மன்றாட்டுப் பாடல்
இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர்
இறைவா உம்மிடம் வந்தடைக
1. நின் ஒளி அவர்மேல் ஒளிர்ந்திடுக புவியில்
நிதம் அவர் நினைவு நிலைத்திடுக
தீயவை யாவும் விலகிடுக – அவர்
தினம் உம் மகிழ்வில் நிலைத்திடுக
2. விண்ணக சீயோன் நகரினிலே நிதம்
மண்ணால் உம் புகழ் அவர் இசைக்க
புனிதர் வான தூதருடன் – உம்மை
புகழ்ந்திடும் பேறு அவர் பெறுக
குரு தீர்த்தம் தெளிப்பார்: தூபம் காட்டுவார்
அப்பொழுது எல்லாரும் சேர்ந்து இயேசு கற்பித்த செபம் சொல்லவும்.
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் – ஆமென்.
குரு: கிறிஸ்துவுக்குள் இறந்த அனைவரோடும், இவரும் இறுதி நாளில் உயிர்த்தெழுவார் என்னும் நம்பிக்கையுடன், இரக்கம் மிகுந்த தந்தையே, உம்முடைய கைகளில் எம்முடைய சகோதரரின் (சகோதரியின்) ஆன்மாவை ஒப்படைக்கிறோம்.
(உமது நன்மைத்தனமும், கிறிஸ்துவுக்குள் புனிதரோடு உம் அடியார் இவருக்குள்ள கூட்டுறவும், எங்களுக்குத் தெளிவாய் விளங்கும் படியாக நீர் இவ்வுலக வாழ்வில் இவர்மீது பல நலன்களைப் பொழிந்துள்ளீர். இவற்றிற்கெல்லாம் உமக்கு நன்றி கூறுகிறோம்.)
எனவே ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்குத் தயவாய் செவிசாய்த்து உம் அடியாருக்கு பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்தருளும். மேலும் இங்கிருக்கும், நாங்கள் அனைவரும் கிறிஸ்துவைச் சந்தித்து, உம்மோடும், எம் சகோதரரோடும் (சகோதரியோடும்) எந்நாளும் ஒன்று சேர்ந்திருக்கும் மட்டும் நம்பிக்கை நிறைந்த சொற்களால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
கல்லறைத்தோட்டம்
கல்லறை ஏற்கெனவே மந்திரிக்கப்படாதிருந்தால், குரு கீழ்கண்ட செபத்தைச் சொல்லி அதை மந்திரிக்கிறார்.
மன்றாடுவோமாக
குரு: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சித்திருக்கின்றீர். எனவே உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் கல்லறையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக. உயிர்ப்பும், உயிரும் நீரேயாதலால் இவர் உயிர்த்தெழுந்தபின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தில் முடிவில்லா ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு கல்லறைக் குழியில் தீர்த்தம் தெளித்து தூபம் காட்டுவார்.)
நம் சகோதரரை (சகோதரியை) இவ்வுலக வாழ்வினின்று தம்மிடம் அழைத்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளமானார். இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும்படி இவர் உடலை நிலத்திற்குக் கையளிக்கிறோம். ஆயினும் இறந்தோரிடம் இருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக மாற்றுவார். ஆதலால் நம் சகோதரரை (சகோதரியை) ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக் கொள்வாராக. இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.
(ஏற்கெனவே கோவிலில் இறைமக்களின் மன்றாட்டு சொல்லப்பட்டிருப்பின் கீழ்க்கண்டதை விட்டுவிடலாம்.)
இறைமக்களின் மன்றாட்டு
குரு: “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.” என்றுரைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம் சகோதரருக்காக (சகோதரிக்காக) மன்றாடுவோம்.
ஒரு: இறந்து போன லாசருக்காக கண்ணீர் சிந்தினீரே; எங்கள் கண்ணீரையும் துடைக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. இறந்தோர் உயிர்பெற்றெழச் செய்தீரே; எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) நித்திய வாழ்வளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் சகோதரரை (சகோதரியை) திருமுழுக்கினால் கழுவி, திருப்பூசுதலால் முத்திரையிட்டீரே; இவரை வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
4. எம் சகோதரருக்கு (சகோதரிக்கு) உம் உடலையும் இரத்தத்தையும் திருவிருந்தாக அளித்தீரே; வானக விருந்திலும் இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகிறோம்.
(எல்லாரும் சேர்ந்து இயேசு கற்பித்த செபம் சொல்ல குரு மரித்தவரின் உடல்மேல் தீர்த்தம் தெளிப்பார். தூபம் காட்டுவார்.)
குரு: ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார் தம் தீயச் செயல்களுக்கு தண்டனை பெறாதபடி இரக்கம் காட்டியருளும்; இவரது உண்மையாண நம்பிக்கை இவ்வுலகில் இவருக்கு இறைமக்களின் கூட்டத்தில் இடம் அளித்தது போல உமது இரக்கம் இவரை மறு உலகில் வானதூதரின் கூட்டத்திலும் சேர்க்க வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
குரு: ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.
எல்: முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக.