திருப்பலி முன்னுரை
அன்பிற்குரியவர்களே! இனிய இயேசுவின் ஈடு இணையில்லாத நாமத்தில் அன்புடனே வாழ்த்தி, வரவேற்கின்றோம்.
அழைப்பையேற்று வந்துள்ள உங்கள் ஒவ்வொருவரையும் உளமார நன்றி சொல்லி வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
உறவுகள் வாழ்வுக்குச் சுவை கொடுக்கின்றன.
உறவுகளாலேயே மனிதம் புனிதமடைகின்றது.
உறவு புனிதமாகி நம்மை தெய்வீகத்தில்
கலந்திடச் செய்வதுவே வாழ்வின் நிறைவாகின்றது.
இத்தகைய நிறைவாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்ல, தன்னையே தரணியிலே தந்தவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நம்மைப் போல வாழ்ந்தவர் தன் உறவை உறுதிப்படுத்திட, தன்னையே நம் எல்லாருக்கும் உணவாக்கினார். அவரை உண்டு. அவரது குருதியை குடிப்பவர் நிலைவாழ்வைச் சுதந்தரித்துக் கொள்வர் என்ற உறுதியையும் தந்தார்.
இந்த இறை உறவு உறுதியானது;
உண்மையானது; உறவை கட்டியெழுப்புவது;
இந்த இறைஉறவே நம்மை ஒன்றிணைத்து பயணிக்கச் செய்கின்றது.
இதனாலேயே இங்கு நாம் ஒன்றுகூடி வந்துள்ளோம். திருஅவை, தலத்திருஅவை என்கிற பெயராலேயே நாம் பயணிக்கின்றோம். பிறரோடு நாம் கொள்ளும் உறவுக்கு நமக்கு மாதிரிகையாக இறை உறவு இருக்கின்றது. இறை உறவும், பிறர் உறவும் நாணயத்தின் இருப்பக்கங்களாக இருந்து மண்ணுலக வாழ்வுக்கு அர்த்தம் தருகின்றது.
திருமுழுக்கினால் கடவுளின் மகனாகி, ஒப்புரவினால் பாவத்தைக் கழுவி சுத்திகரித்து, நற்கருணையினால், இறை உறவை உறுதி செய்து, பிறரது உறவிலே வளர்ந்திட இந்த நற்கருணை திருவருட்சாதனம் நமக்கு துணை செய்கின்றது. இந்த திருவிருந்தை வாழ்விலே முதல்முறையாக பெற ஆயத்தப்பட்டு வந்துள்ள ——ஐ வாழ்த்துவோம். ஆசீர்வதிப்போம்.
நாமும் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள நம்முடைய குற்றங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.
பாவமன்னிப்பு மன்றாட்டு
உறவை உறுதிப்படுத்துபவரே இறைவா!
உம்முடைய உறவிலே பிறரது உறவிலே அலட்சியமாய் இருந்து, உம்மை தேடாது இருந்த தருணங்களை எண்ணிப் பார்க்கின்றேன். பிறரை உயர்வாக கருதாமல் இருந்து, அவர்களது உறவையும் என்னுடைய அலட்சியப் போக்கினால் பகை, வெறுப்பு, வைராக்கியம், என பல நிலைகளினால் கண்டுகொள்ளாத நிலையிலே வாழ்ந்ததற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றேன்.
பாடல்: ஆண்டவரே இரக்கமாயிரும் . . .
உணவானவரே இறைவா!
திருவிருந்து கொண்டாட்டத்திற்குரிய மரியாதை மதிப்பு தராது, தகுந்த முன்தயாரிப்பு இன்றி பங்கேற்று வந்துள்ளேன். ஆர்வத்தோடும், ஆசையோடும், முழுஈடுபாட்டுடனும் பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்காத தருணங்களை எண்ணி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன்.
பாடல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும் . . .
உண்மையுள்ளவரே இறைவா!
கிறிஸ்தவ வாழ்வு தரும் அற்புத அருளை பல நிலைகளிலே உணர்ந்து வாழ மறுத்தும், மறந்தும் இருந்திருக்கின்றேன். இறுதிவரை உறுதியான மனநிலையோடு வாழ விடுக்கப்பட்ட அருளை தொலைத்து, அங்கு இங்கு என ஓடி அலைந்து, உம் அருளை இழந்தும், தொலைத்தும் நிற்கின்றேன். இத்தகைய ஏனோதானே வாழ்வு வாழ்ந்ததற்காய் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றேன்.
பாடல்: ஆண்டவரே இரக்கமாயிரும் . . .
உன்னதங்களிலே கீதம்
திருக்குழும மன்றாட்டு
மாந்தர்களின் நாயகனே இறைவா! மண்ணுலக வாழ்வை சிறப்புறச் செய்திட, மனிதராக பிறந்து, வாழ்ந்து வளம் சேர்த்தீரே. தொடர்ந்த வாழ்வு சிறப்பு பெற்றிட, இதை எனது நினைவாகச் செய்யுங்கள் என்று ஒப்புக் கொடுத்து செபித்திட அழைத்தீரே. கொண்டாடி மகிழும் இக்கல்வாரிப் பலியின் பயனை நிறைவோடு பெற்று மகிழ, உம்முடைய பிரசன்னத்தை தந்து, முதல்முறையாக உணவை பெறும் இவரை ஆசீர்வதித்தருளும். உம்மோடு . . .
முதல் வாசக முன்னுரை (இணைச்சட்டம் 8: 2-3, 14b-16a 16:2-4, 12-15)
பசியால் வாடிய இஸ்ரயேல் மக்களுக்கு வானத்திலிருந்து மன்னா என்ற உணவால் உயிரளித்தார் இறைவன். இறைவனின் அன்பை, தனிப்பெரும் கருணையை இந்த உணவு அன்று வெளிப்படுத்தியது. இன்று நற்கருணை உணவால் தன்னையே தந்து நம்மையும் பராமரிக்கின்றார். இச்சிந்தனையோடு முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
முதல் வாசகம்
நீங்களும் உங்கள் மூதாதையாரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 2-3, 14b-16a
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.
அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 13)
பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். – பல்லவி
15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். – பல்லவி
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். – பல்லவி
இரண்டாம் வாசகம் (1 கொரி 10: 16-17)
நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான உடல். அதை உண்ணும் நாம் இயேசுவோடு ஒன்றிணைக்கப்படுகிறோம், அவரில் ஓருடலாகிறோம். நாம் பலராயினும் சகோதர அன்பில் நிலைத்து வாழ அழைக்கப்படுகிறோம். தூய பவுல் விடுக்கும் இந்த அறைகூவலுக்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17
சகோதரர் சகோதரிகளே,
கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 51-52
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
அக்காலத்தில்
இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”
“நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
விசுவாசத்தைப் புதுப்பித்தல்
நற்கருணை, விசுவாசத்தின் அருள் அடையாளம். விசுவாசத்தினாலேயே நாம் நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதை வாழ்வளிக்கும் உணவாகக் காண்கிறோம். நற்கருணைத் திருவிருந்தில் பங்கு பெற வேண்டுமாயின் நமக்கு விசுவாசம் தேவை. எனவே, நாம் நமது விசுவாசத்தை இப்போது புதுப்பித்துக்; கொள்வோம். குரு கேட்கும் கேள்விக்கு ‘நம்புகின்றேன்’ எனப் ஒருமையில் பதில் கூறுவோம்.
(மெழுகுதிரியை ஏற்றிக் கொள்ளுங்கள்)
குரு: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகின்றீரா?
பதில்: நம்புகின்றேன்
குரு: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீரா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: தூய ஆவியையும், தூய கத்தோலிக்க திருச்சபையையும், தூயவர்களின் சமூக உறவையும், பாவ மன்னிபையும், உடலின் உயிர்ப்பையும், முடிவில்லாத வாழ்வையும் நம்புகின்றீரா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: இதுவே நம்முடைய நம்பிக்கை. இதுவே நாம் சார்ந்துள்ள திருஅவையின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலே நாளும் உறுதிப்பட வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. வாழ்வின் நாயகனே இறைவா!
அன்றாட பலிக் கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ நீவீர் எமக்குத் தந்த குருக்கள், ஆயர்கள், துறவிகள், திருத்தந்தை ஆகியோரை ஆசீர்வதித்து புனிதப்படுத்தும். அவர்கள் தாங்கள் நிறைவேற்றும் பலிக் கொண்டாட்டத்திற்கேற்ப, அதனின் புனிதத்தன்மையை உணர்ந்து, வாழ்ந்து சான்று பகர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வாழ்வின் நாயகனே இறைவா!
அணுஆயுத அச்சுறுத்துதல் இல்லாத பிரபஞ்சம் வேண்டும் என்று விரும்புகின்ற பலகோடி மக்களை உள்ளடக்கிய இந்த அற்புத பிரபஞ்சத்தை வழிநடத்துவோர், பொறுப்புடனும், உண்மையான அக்கறையுடனும் செயல்பட்டு மக்களை நல்வழி நடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வாழ்வின் நாயகனே இறைவா!
பாரதத்தை ஆசீர்வதியும். ஆன்மீகச் செறிவு கொண்ட இந்த நாட்டில், மதம், இனம், குலம், கோத்திரம் என்று மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை விடுத்து, நேர்மைத்தன்மையோடு வழிநடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. வாழ்வின் நாயகனே இறைவா!
உம்மை முதல்முறையாக பெற ஆயத்தத்தோடு வந்துள்ள இவரை ஆசீர்வதித்து, அர்ச்சித்து, புனிதப்படுத்தும். இவரது பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகளையும் ஆசீர்வதித்து, ஒற்றுமை உணர்வோடு பயணித்து பலன் காண, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. வாழ்வின் நாயகனே இறைவா!
இவரை வாழ்த்தி ஆசீர்வதிக்க வந்துள்ள நாங்கள் யாவரும் எங்களை புதுப்பித்துக் கொண்டு, உமது உறவிலே உண்மையாயும், பிறர் உறவிலே தியாகத்தோடும் பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. வாழ்வின் நாயகனே இறைவா!
நிலைவாழ்வு அருள்பவரே எம் இறைவா! விசுவாசத்தைக் கற்று தந்து, உம்மை தினமும் ஆர்வத்தோடு பெற்று வாழ்ந்து, உம் பாதம் சேர்ந்துள்ள எம் முன்னோர்களுக்கு நித்திய வாழ்வை கொடையாக தந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
தியாகத்தின் தலைவா! உம்மையே கல்வாரியில் பலியாக்கி, எம்மை மீட்புக்கு இட்டுச் சென்றீரே. அந்த தியாகத்தின் நினைவாக நாங்கள் பலியை ஒப்புக் கொடுத்து, மன்றாட முன்வந்துள்ளோம். காணிக்கையாக்கும் இந்த பலிப் பொருட்கள் மீது உம் ஆவியை தங்கச் செய்து, இதனை உம்உடலாக, குருதியாக மாற்றுவது போல, அந்த ஆவி எங்களையும், சிறப்பாக இவரையும் உமக்குந்த பலிப் பொருளாக மாற்றுவராக. எங்கள் . . .
நற்கருணை உட்கொண்ட பின் செபம்
அன்புள்ள இயேசுவே! / நீர் என் உள்ளத்தில் வந்துள்ளீர். / நான் உம்மை ஆராதிக்கிறேன்; / வாழ்த்திப் போற்றுகின்றேன். / என்னில் நீர் குடிகொண்டிருப்பீராக./ உமக்கு நன்றி கூறுகிறேன். / நீர் என்னை ஆசீர்வதியும் / உம் அருள் வரங்களால் /என்னை நிரப்பும்; / என் பெற்றோர்களையும் /உறவினர்களையும் / நண்பர்களையும் என் பங்கிலுள்ள அனைவரையும் / ஆசீர்வதியும். / சிறப்பாக / ஏழைகள், அனாதைகள், / கைவிடப்பட்டோர்கள் / ஆகியோர்மீது இரக்கமாயிரும். /
இனிய இயேசுவே! / உம் ஆவியின் வல்லமையால் / என்னை நிரப்பும். / என்னைப் புதுப்படைப்பாக மாற்றியருளும். / நான் உமது மனநிலையைப் பெற்று / உம்மைப்போல் வாழ அருள்தாரும். / இனி நான் /என் சிந்தனை,/ சொல், செயல் அனைத்திலும் / உம்மையே வெளிப்படுத்தவும், / எல்லா வேளையிலும் / இறையாட்சியின் கருவியாகச் செயல்படவும் /வரம் தாரும். /எனது குடும்பத்திலும், தெருவிலும், / பள்ளியிலும், பங்கிலும் / அனைவரோடும் / அன்புறவும் தோழமையும் கொண்டு வாழ / வரமருளும். / வறியவர்கள் மீது பரிவுகாட்டி,/ என்னிடத்தில் உள்ளதை/ அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள உள்ளத்தைத் தாரும். / நான் எப்போதும் / உம்முடைய விருப்பத்தையே நிறைவேற்ற / ஆற்றலை அளித்தருளும். / ஆமென்.
நன்றிகூறுதல்
எல்லாம் வல்லவராம் இறைவா! எம்மோடு உறவு கொள்ள விண்ணத்தல் இருந்து இறங்கி மண்ணகத்தில் மனுவுருவானவரே. தந்தையாம் கடவுளின் மகன் என்ற நிலையை பற்றிப் பிடிக்க நினைக்காமல் மனுவுருவானவரே இறைவா, உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
உணவானவரே இறைவா! மண்ணுலக மாந்தர்களை திடப்படுத்திட உம்மையே உணவாக்கித் தந்தவரே! உண்பவர்கள் என்றும் வாழ்வர் என்று சொல்லி நிலைவாழ்வை எமக்குப் பரிசாக்கினவரே, உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
உறவை உறுதிப்படுத்தும் எம் இறைவா! இதை எனது நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்லி, அடிக்கடி பங்கேற்பதால் நாங்கள் உம்மோடும், பிறரோடும் இயைந்த நிலையில் பயணிக்க துணை செய்பவரே இறைவா உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
மகிழச் செய்பவரே இறைவா! பலிக் கொண்டாட்டத்தின் வழியாக எங்களை ஒருங்கிணைத்து, ஒன்று சேர்த்து, மகிழ்ந்து இருக்கச் செய்தவரே. உறவுகளாக நாங்கள் ஒன்று சேர்ந்து வரும் போது எமது மத்தியில் இருந்து எமது மகிழ்ச்சியை இரட்டிப்பாகும் இறைவா உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
அக்கறையுள்ளவரே இறைவா! பாதுகாத்து பராமரிப்பவர் நீரே என்று நம்புகின்றோம். உம்முடைய தூதர்களை கொண்டு எங்களது பயணங்களில் எம்மை பாதுகாத்து, பராமரித்த உமது கிருபையை எண்ணி மகிழ்ந்து உம்மை போற்றுகின்றோம். இறைவா உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
நன்றி மன்றாட்டு
வாழ்வின் நாயகனே இறைவா! எல்லாரும் வாழ்வு பெற உம்மையை கல்வாரியில் கையளித்தீரே. நிறைவாழ்வை சுதந்தரித்துக் கொள்ள உம்மையே உணவாகவும் தந்து எம்மை வழிநடத்தும் உம்அருளை எண்ணி மகிழ்கின்றோம். இக்கொண்டாட்டம் சிறப்புற பெற நீவீர் தந்த மேலான அருளுக்காக உமக்கு நன்றி சொல்லி மகிழ்கின்றோம். என்றும் நாங்கள் மனஉறுதியுடனே, நன்றியுள்ளவர்களாகவும், இனியவர்களாக வாழவும் அருள்தர, எங்கள் . . .