திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மனிதர் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்வாழ மட்டுமன்று, உறவு வாழ்விற்கும் அடித்தளமிடுகிறது உணவு. உயிர் வாழவும், உறவில் வளரவும் உணவு தேவைப்படுவது போல், நாம் அருளுயிரைப் பெற்று இறை உறவிலும், மனித உறவிலும் செழித்து வளர, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்த ஒப்பற்ற உணவே நற்கருணை. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” என்கிறார் இயேசு.
ஆம், நற்கருணை விருந்தில் நாம் பங்கேற்கின்ற போது, நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஆழப்படுத்துகின்றது. நமக்கும் பிற மனிதருக்கும் உள்ள உறவுகள் வளர்ச்சி அடைகின்றன, உறுதியடைகின்றன. இத்தகைய உறவு வாழ்வில் வளர, நற்கருணைத் திருவிருந்தில் முதல்முறையாக இன்று பங்கேற்கின்றனர் நம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர். அவர்களை அன்போடு நாம் வாழ்த்துவோம். இத்திருப்பலியில் அவர்களுக்காகசச் செபிப்போம். முதல் நற்கருணை பெறப்போகின்ற சிறுவரும் சிறுமியரும் பெற்றோர்கள் மற்றும் குருக்களுடன் பவனியாக வருகின்றனர். நாம் அனைவரும் எழுந்து நின்று மகிழ்வுடன் இறைவனைப் புகழ்ந்து பாடுவோம்.
குத்துவிளக்கு ஏற்றல்
நற்கருணை ஓர் அன்பு விருந்து. அதில் பங்கேற்கும் நாம் ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உள்ளவர்களாய் வாழவேண்டும். சமுதாயத்தில் அன்பின் தீபமாக ஒளிரவேண்டும். ஓளியாம் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட நாம், உலகின் ஒளியாய் விளங்க வேண்டும் என்பதைக் குறிக்க, இப்போது குத்து விளக்கு ஏற்றப்படுகிறது.
உன்னதங்களிலே கீதம்
திருக்குழும மன்றாட்டு
மாந்தர்களின் நாயகனே இறைவா! மண்ணுலக வாழ்வை சிறப்புறச் செய்திட, மனிதராக பிறந்து, வாழ்ந்து வளம் சேர்த்தீரே. தொடர்ந்த வாழ்வு சிறப்பு பெற்றிட, இதை எனது நினைவாகச் செய்யுங்கள் என்று ஒப்புக் கொடுத்து செபித்திட அழைத்தீரே. கொண்டாடி மகிழும் இக்கல்வாரிப் பலியின் பயனை நிறைவோடு பெற்று மகிழ, உம்முடைய பிரசன்னத்தை தந்து, முதல்முறையாக உணவை பெறும் இவரை ஆசீர்வதித்தருளும். உம்மோடு . . .
இறைவாக்கு வழிபாடு
அஞ்சலி
வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார். நாம் அழிந்து போகும் உணவினால் மட்டுமல்லாமல், அழியாத இறைவார்த்தையினாலும் உயிர் வாழ்கிறோம். இறைவன் தமது வார்த்தையின் வழியாக நம்மோடு வாழ்கிறார், நம்மோடு பேசுகிறார். எனவே, இறைவார்த்தை வழியாக நம் நடுவே பிரசன்னமாகும் இறைவனுக்குத் தீப, தூப, மலர்களால் அஞ்சலி செலுத்துவோம்.
முதல் வாசக முன்னுரை (விப 16:2-4, 12-15)
பசியால் வாடிய இஸ்ரயேல் மக்களுக்கு வானத்திலிருந்து மன்னா என்ற உணவால் உயிரளித்தார் இறைவன். இறைவனின் அன்பை, தனிப்பெரும் கருணையை இந்த உணவு அன்று வெளிப்படுத்தியது. இன்று நற்கருணை உணவால் தன்னையே தந்து நம்மையும் பராமரிக்கின்றார். இச்சிந்தனையோடு முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
முதல் வாசகம்
நீங்களும் உங்கள் மூதாதையாரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.
விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4, 12-15
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன். “இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 13)
பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.
12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். – பல்லவி
15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். – பல்லவி
17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். – பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (1 கொரி 10: 16-17)
நற்கருணை கிறிஸ்துவின் உண்மையான உடல். அதை உண்ணும் நாம் இயேசுவோடு ஒன்றிணைக்கப்படுகிறோம், அவரில் ஓருடலாகிறோம். நாம் பலராயினும் சகோதர அன்பில் நிலைத்து வாழ அழைக்கப்படுகிறோம். தூய பவுல் விடுக்கும் இந்த அறைகூவலுக்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 16-17
சகோதரர் சகோதரிகளே,
கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 51-52
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசக முன்னுரை (லூக்கா 24:13-35)
இயேசுவின் இறப்பிற்குப் பின் நம்பிக்கையின்றி, சோர்வுற்றுப் பயணம் செய்தனர் சீடர் இருவர். அவர்களோடு வழிநடந்து நம்பிக்கையூட்டினார் உயிர்த்த ஆண்டவர். அவர் அப்பத்தை பிட்டபோது சீடர்களின் கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் ஆண்டவரைக் கண்டுகொண்டனர். வாழ்க்கைச் சுமையால் தளர்ச்சியுற்று வாடும் நமக்கு, நற்கருணை ஆற்றலையும், புத்துணர்வையும், நம்பிக்கையையும் தருகிறது என்ற உணர்வுடன், நற்செய்திக்குச் செவிமடுப்போம்.
நற்செய்தி வாசகம்
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:13-35
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.
அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!”என்றார். அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
விசுவாசத்தைப் புதுப்பித்தல்
நற்கருணை, விசுவாசத்தின் அருள் அடையாளம். விசுவாசத்தினாலேயே நாம் நற்கருணையில் ஆண்டவரின் திருப்பிரசன்னத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதை வாழ்வளிக்கும் உணவாகக் காண்கிறோம். நற்கருணைத் திருவிருந்தில் பங்கு பெற வேண்டுமாயின் நமக்கு விசுவாசம் தேவை. எனவே, நாம் நமது விசுவாசத்தை இப்போது புதுப்பித்துக்; கொள்வோம்.
குரு கேட்கும் கேள்விக்கு ‘நம்புகின்றேன்’ எனப் ஒருமையில் பதில் கூறுவோம்.
(மெழுகுதிரியை ஏற்றிக் கொள்ளுங்கள்)
குரு: விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகின்றீரா?
பதில்: நம்புகின்றேன்
குரு: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரில் நின்று உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றீரா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: தூய ஆவியையும், தூய கத்தோலிக்க திருச்சபையையும், தூயவர்களின் சமூக உறவையும், பாவ மன்னிபையும், உடலின் உயிர்ப்பையும், முடிவில்லாத வாழ்வையும் நம்புகின்றீரா?
பதில்: நம்புகின்றேன்.
குரு: இதுவே நம்முடைய நம்பிக்கை. இதுவே நாம் சார்ந்துள்ள திருஅவையின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலே நாளும் உறுதிப்பட வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. வாழ்வின் நாயகனே இறைவா!
அன்றாட பலிக் கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ நீவீர் எமக்குத் தந்த குருக்கள், ஆயர்கள், துறவிகள், திருத்தந்தை ஆகியோரை ஆசீர்வதித்து புனிதப்படுத்தும். அவர்கள் தாங்கள் நிறைவேற்றும் பலிக் கொண்டாட்டத்திற்கேற்ப, அதனின் புனிதத்தன்மையை உணர்ந்து, வாழ்ந்து சான்று பகர்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வாழ்வின் நாயகனே இறைவா!
அணுஆயுத அச்சுறுத்துதல் இல்லாத பிரபஞ்சம் வேண்டும் என்று விரும்புகின்ற பலகோடி மக்களை உள்ளடக்கிய இந்த அற்புத பிரபஞ்சத்தை வழிநடத்துவோர், பொறுப்புடனும், உண்மையான அக்கறையுடனும் செயல்பட்டு மக்களை நல்வழி நடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வாழ்வின் நாயகனே இறைவா!
பாரதத்தை ஆசீர்வதியும். ஆன்மீகச் செறிவு கொண்ட இந்த நாட்டில், மதம், இனம், குலம், கோத்திரம் என்று மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை விடுத்து, நேர்மைத்தன்மையோடு வழிநடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. வாழ்வின் நாயகனே இறைவா!
உம்மை முதல்முறையாக பெற ஆயத்தத்தோடு வந்துள்ள இவரை ஆசீர்வதித்து, அர்ச்சித்து, புனிதப்படுத்தும். இவரது பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகளையும் ஆசீர்வதித்து, ஒற்றுமை உணர்வோடு பயணித்து பலன் காண, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. வாழ்வின் நாயகனே இறைவா!
இவரை வாழ்த்தி ஆசீர்வதிக்க வந்துள்ள நாங்கள் யாவரும் எங்களை புதுப்பித்துக் கொண்டு, உமது உறவிலே உண்மையாயும், பிறர் உறவிலே தியாகத்தோடும் பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. வாழ்வின் நாயகனே இறைவா!
நிலைவாழ்வு அருள்பவரே எம் இறைவா! விசுவாசத்தைக் கற்று தந்து, உம்மை தினமும் ஆர்வத்தோடு பெற்று வாழ்ந்து, உம் பாதம் சேர்ந்துள்ள எம் முன்னோர்களுக்கு நித்திய வாழ்வை கொடையாக தந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
தியாகத்தின் தலைவா! உம்மையே கல்வாரியில் பலியாக்கி, எம்மை மீட்புக்கு இட்டுச் சென்றீரே. அந்த தியாகத்தின் நினைவாக நாங்கள் பலியை ஒப்புக் கொடுத்து, மன்றாட முன்வந்துள்ளோம். காணிக்கையாக்கும் இந்த பலிப் பொருட்கள் மீது உம் ஆவியை தங்கச் செய்து, இதனை உம்உடலாக, குருதியாக மாற்றுவது போல, அந்த ஆவி எங்களையும், சிறப்பாக இவரையும் உமக்குந்த பலிப் பொருளாக மாற்றுவராக. எங்கள் . . .
நற்கருணை உட்கொண்ட பின் செபம்
அன்புள்ள இயேசுவே! / நீர் என் உள்ளத்தில் வந்துள்ளீர். / நான் உம்மை ஆராதிக்கிறேன்; / வாழ்த்திப் போற்றுகின்றேன். / என்னில் நீர் குடிகொண்டிருப்பீராக./ உமக்கு நன்றி கூறுகிறேன். / நீர் என்னை ஆசீர்வதியும் / உம் அருள் வரங்களால் /என்னை நிரப்பும்; / என் பெற்றோர்களையும் /உறவினர்களையும் / நண்பர்களையும் என் பங்கிலுள்ள அனைவரையும் / ஆசீர்வதியும். / சிறப்பாக / ஏழைகள், அனாதைகள், / கைவிடப்பட்டோர்கள் / ஆகியோர்மீது இரக்கமாயிரும். /
இனிய இயேசுவே! / உம் ஆவியின் வல்லமையால் / என்னை நிரப்பும். / என்னைப் புதுப்படைப்பாக மாற்றியருளும். / நான் உமது மனநிலையைப் பெற்று / உம்மைப்போல் வாழ அருள்தாரும். / இனி நான் /என் சிந்தனை,/ சொல், செயல் அனைத்திலும் / உம்மையே வெளிப்படுத்தவும், / எல்லா வேளையிலும் / இறையாட்சியின் கருவியாகச் செயல்படவும் /வரம் தாரும். /எனது குடும்பத்திலும், தெருவிலும், / பள்ளியிலும், பங்கிலும் / அனைவரோடும் / அன்புறவும் தோழமையும் கொண்டு வாழ / வரமருளும். / வறியவர்கள் மீது பரிவுகாட்டி,/ என்னிடத்தில் உள்ளதை/ அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள உள்ளத்தைத் தாரும். / நான் எப்போதும் / உம்முடைய விருப்பத்தையே நிறைவேற்ற / ஆற்றலை அளித்தருளும். / ஆமென்.
நன்றி கூறுதல்
எல்லாம் வல்லவராம் இறைவா! எம்மோடு உறவு கொள்ள விண்ணத்தல் இருந்து இறங்கி மண்ணகத்தில் மனுவுருவானவரே. தந்தையாம் கடவுளின் மகன் என்ற நிலையை பற்றிப் பிடிக்க நினைக்காமல் மனுவுருவானவரே இறைவா, உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
உணவானவரே இறைவா! மண்ணுலக மாந்தர்களை திடப்படுத்திட உம்மையே உணவாக்கித் தந்தவரே! உண்பவர்கள் என்றும் வாழ்வர் என்று சொல்லி நிலைவாழ்வை எமக்குப் பரிசாக்கினவரே, உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
உறவை உறுதிப்படுத்தும் எம் இறைவா! இதை எனது நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்லி, அடிக்கடி பங்கேற்பதால் நாங்கள் உம்மோடும், பிறரோடும் இயைந்த நிலையில் பயணிக்க துணை செய்பவரே இறைவா உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
மகிழச் செய்பவரே இறைவா! பலிக் கொண்டாட்டத்தின் வழியாக எங்களை ஒருங்கிணைத்து, ஒன்று சேர்த்து, மகிழ்ந்து இருக்கச் செய்தவரே. உறவுகளாக நாங்கள் ஒன்று சேர்ந்து வரும் போது எமது மத்தியில் இருந்து எமது மகிழ்ச்சியை இரட்டிப்பாகும் இறைவா உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
அக்கறையுள்ளவரே இறைவா! பாதுகாத்து பராமரிப்பவர் நீரே என்று நம்புகின்றோம். உம்முடைய தூதர்களை கொண்டு எங்களது பயணங்களில் எம்மை பாதுகாத்து, பராமரித்த உமது கிருபையை எண்ணி மகிழ்ந்து உம்மை போற்றுகின்றோம். இறைவா உமக்கே நன்றி!
பாடல்: நன்றி . . .
நன்றி மன்றாட்டு
வாழ்வின் நாயகனே இறைவா! எல்லாரும் வாழ்வு பெற உம்மையை கல்வாரியில் கையளித்தீரே. நிறைவாழ்வை சுதந்தரித்துக் கொள்ள உம்மையே உணவாகவும் தந்து எம்மை வழிநடத்தும் உம்அருளை எண்ணி மகிழ்கின்றோம். இக்கொண்டாட்டம் சிறப்புற பெற நீவீர் தந்த மேலான அருளுக்காக உமக்கு நன்றி சொல்லி மகிழ்கின்றோம். என்றும் நாங்கள் மனஉறுதியுடனே, நன்றியுள்ளவர்களாகவும், இனியவர்களாக வாழவும் அருள்தர, எங்கள் . . .