உயிர்ப்பின் மகிழ்வு

– மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

அன்பார்ந்தவர்களே! அனைவருக்கும் உயிர்ப்பின் மகிழ்வைப் பரிமாறிக் கொள்கிறேன். ஆறு வார கால தவத்திற்குப் பின்னர் ஒரு வார அக்களிப்பின் நாட்களுக்கு ‘பாஸ்கா’ கடந்து வந்துள்ளோம் என்ற அர்த்தத்தில் கொண்டாட அழைக்கப்படுகின்றோம். அவருடைய உயிர்ப்பில்தான் நம்முடைய நம்பிக்கை அமைந்துள்ளது. அவருடைய உயிர்ப்பில்தான் நாமும் உயிர்பெறுவோம் என்ற நம்பிக்கையை நம்மில் உறுதிப்படுத்துகிறது. இத்தகைய நம்பிக்கையின் மகிழ்வினில் இந்த பாஸ்கா காலம் அமைந்திட செபங்களுடனே உங்களை வாழ்த்துகிறேன்.

கடந்து போகும்

நிலையில்லாத இவ்வுலகில் நிலையானது என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லை என்பதுவே உண்மை. மாற்றங்களைக் கண்டு வருகிறது சமூகம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் உண்மையும்கூட. ஊருக்கு ஒரு மருத்துவர் இருந்தார். அவர் நாடிப் பார்த்துச் சொல்லுவார். இவர்களுக்கு கர்ப்பம் தரித்திருக்கிறது, இவர்கள் மரணித்துப் போவார்கள் என்று. இன்று அங்கம் அங்கமாகப் பிரித்து எடுத்துப் படித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவர், பொது மருத்துவர் என்ற நிலையே இல்லாத நிலை. இவர் இதை மட்டுமே பார்ப்பார். இவர் இதனைப் பார்க்க மாட்டார் என்று சொல்லும் அளவுக்கு எல்லாமே கடந்து போய் கொண்டிருக்கிறது என்பதுவே உண்மை. காலங்கள் மாறும், காட்சிகளும் மாறும். கடந்து போகும் உலகில் எதற்கு கவலை, எதற்கு கஷ்டம், எல்லாமே கடந்து போகும் என்று அன்றன்றைய நாளைப் பற்றிச் சிந்தித்து வாழ்வதுவே வாழ்க்கை.

வாழ்க்கை இன்று

காலையில் எழுகின்றோம் என்றால் அதுவே உண்மை. இந்த நாளைத் தந்து, எழுப்பிவிட்ட இறைவனுக்கு நன்றி சொல்லி, இந்த நாளில் இன்னும் அதிகமாக கடவுளின் அதிமிக மகிமைக்காக அர்ப்பணித்து வாழ்தல் என்பதுவே சால்புடையது. ஒவ்வொரு நாளும் சிறப்புடையதே. ஒவ்வொரு நாளின் அனுபவமுமே சிறப்பானது தான். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத் தந்து கொண்டே இருக்கிறது என்பது உண்மை. நாளும் பலியில் பங்கேற்கின்றோம், நாளும் அற்புதம் நிகழ்கின்றது. நாளும் சுத்தமாகின்றோம், நாளும் புதுப்படைப்பாகின்றோம். நாளும் புதுக்கருத்து இறைவார்த்தை விருந்தினிலே தரப்படுகின்றது. ஒரே திருவிவிலியம் என்றாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதே வாசகங்களை வாசிக்கின்றோம் என்றாலும் காலத்திற்கு ஏற்ப, காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப, காலத்தின் ஓட்டத்தினூடே புதுப்புதுச் சிந்தனைகளைத் தந்து உதவுகின்றது என்பதுவே இறைவார்த்தையின் சிறப்பு. எனவே கடந்ததை மறந்து, கண்முன் இருப்பதைக் களிப்புடனே கண்டு, மனம் மகிழ்ந்து ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைக் கொண்டாடத் தெரிந்தவர்களுக்குத் தான் உயிர்ப்பின் மகிழ்வு உண்டு.

அக்களிப்போம்! அகமகிழ்வோம்!

   ‘எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்’ என்பதுவே பவுலின் வார்த்தைகள். ‘அல்லேலூயா’ என்று முழக்கமிடும் காலமே இந்த பாஸ்கா காலம். இந்த வார்த்தைக்கான அர்த்தமே அக்களிப்போம், அகமகிழ்வோம். ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார். இவரோ மரித்தவர் அல்ல, உயிர்த்து உயிர் வாழும் உன்னத கடவுள் அவரிலே அக்களிப்போம், அகமகிழ்வோம்.

ஆண்டவரிலே இணைந்து வாழ்வோர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல பசுமை, வளமை நிறைந்து இருப்பர். செடியோடு இணைந்திருக்கும் கிளை போல என்றும் கனி தந்து மகிழ்ந்திருக்கும் வாழ்வே நம்முடைய கிறித்தவ வாழ்வு. வறுமைப்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தன்னுடைய பணிகளுக்கு இடையே கிடைக்கும் காலத்தில் திருவிவிலியத்தைத் திறந்து வாசித்துக் கொண்டு இருக்கிறார். இவரிலே உள்ள மகிழ்வினை இவருடைய வறுமை எடுத்து விட முடியுமா? அதிகாலையிலேயே எழுந்து, காலார நடந்து, ஒவ்வொரு நாளும் திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிக்கும் அம்மணியின் சோர்வோ, களைப்போ அவருடைய மனநிறைவான மகிழ்வை திருடிவிட முடியுமா? வருடத்தின் 365 நாட்களும் படுக்கை தான் என்ற நிலையில் மாதா தொலைக்காட்சியில் திருப்பலி கண்டு ஒப்புக்கொடுத்து, ஆசை நன்மை பெற்று, மனமகிழ்ந்து தன்னுடைய வேதனைகளை மறந்து நிற்கும் மனத்திற்கு ஈடு இணையுண்டோ?

அகமகிழ்வு, அக்களிப்பு ஆவியின் அற்புத கனி. யாரெல்லாம் ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அருளப்படும் இந்த மகிழ்வின் கனி என்பதுவே உண்மை.

இத்தகைய மகிழ்வின் மக்கள் எல்லாரும் நேற்றைய நாளைக் குறித்தோ, நாளை தரப்படும் என்ற உத்திரவாதம் இல்லாத நாளைப் பற்றியோ கவலை கொள்ளாமல், இன்று தரப்பட்ட நாளுக்காக நன்றி சொல்லி, இன்று பெற்றுக் கொள்ளும் ஆசீருக்காக நன்றி சொல்லி, ஆண்டவரிலே அகமகிழ்ந்து அக்களிப்படைகிறார்கள் என்பதுவே உண்மை.

மகிழ்வு யாருக்கு சாத்தியம்?

       ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு இது சாத்தியம் என்றால், எதனால் இது சாத்தியமாகும்? என்பதனை தியானிக்கின்ற போது, யார் அவருக்கு, அவருடைய வார்த்தைகளுக்கு, அவருடைய நீதி, நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிகின்றார்களோ, அவர்களுக்கு மகிழ்வு சாத்தியமாகும். ‘பலியை விட கீழ்ப்படிதலே’ அவர் விரும்பும் மேலான காரியம். இந்த கீழ்ப்படிதலாலேயே மகிழ்வு சாத்தியமாகும் என்பதுவே உண்மை. அன்னை மரியாள், ‘இதோ உமது அடிமை. உமது வார்த்தையின்படியே ஆகட்டும்’ என்று தன்னை அர்ப்பணித்தார்கள். எனவே உதவிடச் சென்ற இடத்தில், எலிசபெத்தம்மாள் ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு, ‘ஆண்டவரின் தாய்’ என்றழைத்தபோது, அவர்கள் இருவரும் மகிழ்ந்ததோடு, வயிற்ற்றில் இருந்த கனியும் மகிழ்ந்தது என்று லூக்கா பதிவு செய்கிறார். ஆண்டவரின் அடியார்களை மகிழ்வித்த ஆபிரகாமுக்கு வயது கடந்த நிலையிலும் ஈசாக்கைத் தந்து மகிழ்வித்தார். கொடுத்த மகனையே தனக்குப் பலியாகக் கேட்டுக் கொண்ட போது, பலியாக்க அழைத்துச் சென்ற போது, மகனைக் கொல்லாது, நரபலி செலுத்தவிடாது தடுத்து ஆபிரகாமை மகிழ்வித்தார் என்பது உண்மை. பலவீனத்தால் ‘அவரை எனக்குத் தெரியாது’ என்று மறுதலித்த பேதுருவிடம், ‘நீ என்னை அன்பு செய்கிறாயா?’ எனக் கேட்டு அவரையே திரு அவையின் முதல் திருத்தந்தையாக்கி மகிழ்வித்தார் என்பதுவும் உண்மை. இறைத்தந்தையின் விருப்பம் அறிந்து செயலாற்றுவோர் பேறுபெற்றோர் என்றும், அவரது திருவுளம் அறிந்து, பணிந்து நடப்போர் பேறுபெற்றோர் என்றும் கூறிய இறைமகன் இன்றும் திரு அவையிலே பல மனிதர்களைப் புனிதர்களாகத் தரம் உயர்த்தி நல்ல மாதிரிகையாக, நாம் பின்பற்ற தகுந்த நல் உள்ளங்களாகத் தந்துள்ளார்.

அன்பின் உயர்நெறி

       ஆவியின் கனி மகிழ்வு, இந்த மகிழ்வு கீழ்ப்படிதலால் சாத்தியம். இந்த மகிழ்வினை இரட்டிப்பாக்குவது எது? அன்பின் வழி வாழ்வோர் அவருக்குக் கீழ்ப்படிவார்கள். அவர்களுக்கு மகிழ்வு இரட்டிப்பாகும் என்பதனை உணர்ந்தவர்கள் உயர்நெறி மனிதர்களே. லூக்கா 21இல் இரண்டு செப்ப்புக்காசுகளை ஆலயத்தில் காணிக்கையாகச் செலுத்திய தாயைப் போற்றுகின்றார். நாளைக்கு என்ன தேவை என்பதனை நினையாது, இன்றைக்கு நான் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் எனபதனை உணர்ந்து, நம்பிக்கையை ஆண்டவர் மீது கொண்டு, முழுமன அன்புடனே காணிக்கை செலுத்திய தாயைப் போற்றினார். எத்தனையோ பேர் நீண்ட வரிசையில் நின்றாலும், கை நிறைய காணிக்கையை அள்ளிப் போட்டாலும், இந்த தாயின் அன்பிற்கு ஈடாகாது என அறிவித்த போது தாயின் மகிழ்வு இரட்டிப்பானது. கானாவூரிலே, தன்னுடைய நேரம் வராத நேரத்திலும், தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அன்பினால் உந்தப்பட்டு, திருமண வீட்டாருக்கு ஏதாவது செய்து கொடுக்க முற்பட்ட போது முதல் அற்புதம் அரங்கேறியது, அறுசுவை இரசமானது தண்ணீர்; எல்லாரும் பருகக் கிடைத்தது; அனைவரின் மகிழ்வும் இரட்டிப்பானது.

தந்தையின் மீது கொண்ட அன்பினால், அவருக்கு முற்றிலும் கீழப்படிந்து, தன்னையே சிலுவையிலே ஒப்புக்கொடுத்த மகனை உயிர்ப்பிக்கச் செய்து தன் வலப்பக்கம் அமரச் செய்து, மகிழ்வினை திரு அவை இரட்டிப்பாகப் பெறச் செய்தார் இந்த உலகின்மீது அன்பு கொண்ட தந்தையாம் கடவுள்.

முடிவுரை

       அன்பும் கீழ்ப்படிதலும் இணைந்து செயலாற்றும் போது ஆவியின் கனியாகிய மகிழ்வினை நாம் இரட்டிப்பாகப் பெற்றுக் கொள்கின்றோம். இந்த மகிழ்வு ‘நாமும் உயிர்ப்போம்’ என்பதன் முன்சுவையாகவே அமைந்திருக்கின்றது. கிறிஸ்துவின் உயிர்ப்பினிலே நம்பிக்கை கொண்டோருக்கு நாளும் அவர்தரும் இந்த அன்பின் சுவையை அனுபவித்து மகிழச் செபங்களோடு வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றேன்.

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 அருள்வாக்கு - WordPress Theme by WPEnjoy