பொதுக்காலம் 7ஆம் வாரம் – ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே! பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நமதாண்டவர் இயேசு கிறிஸ்து நமக்குப் பகிர்ந்தளித்த அன்புடனும் சமாதானத்துடனும் மகிழ்வுடன் வரவேற்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் பகைவருக்கும் அன்பு என்ற ஆழமானக் கருத்தை நம் மனதில் பதிக்கின்றது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்மைத் துன்புறுத்தி சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுங்கள் என்ற இறைவனின் வார்த்தையை வாழ்வாக்கிய புனித இரண்டாம் ஜாண்பால், புனித அன்னை தெரசா, அருட்சகோதரி ராணி மரியா போன்றோர் நாம் வாழும் காலத்திலேயே கண்கூடாகக் கண்டுள்ளோம். இதற்கு ஒருபடி மேலே நம் இறைவன் நீங்கள் ஒருவர் மற்றவர்மீது காட்டும் அன்பிலிருந்து நீங்கள் என் சகோதரர் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் என்று கூறுகிறார்.
நாம் பிறரை நிபந்தனையின்றி அன்பு செய்யும் போது சிறு சிறு குறைகள் பெரிதாகக் கருதப்படுவதில்லை. தீமைக்குப் பதில் தீமை, தவறுக்குப் பதில் தவறு என்ற எண்ணம் தோன்றாது, அன்பைப் பெற்றுக் கொள்ளும் போதும் நிறைவான மனதுடன் அன்பைக் கொடுக்கும் போதும் தூயவரான நம் இறைவனுக்கு நெருக்கமானவர்களாக ஆவோம். நிறைவுள்ளவர்களாகவும் வாழ முடியும்.
இத்தகைய நல்வாழ்விற்கு இயேசு நம்மை அழைக்கிறார். அவரது மதிப்பீடுகளின்படி வாழ, அவர் வார்த்தையின் வழி வாழ வரம் வேண்டி இப்பலியினில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை
தாவீதை அழிக்கத் தேடிச் சென்ற சவுல் அரசர் கூடாரத்தினுள் தூங்குவதைப் பார்த்த தாவீது அவரைக் கொன்று பழிதீர்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தும் ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைக்க மாட்டேன் என்று சவுலை விட்டுச் சென்ற தாவீதின் மன்னிக்கும் இயல்பை இவ்வாசகத்தில் கேட்டு மனதில் பதித்து பகைவரையும் மன்னிக்கும் மனம் பெறுவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை
முதல் ஆதாமின் பாவம் நம்மைத் தண்டணைத் தீர்ப்புக்கு உள்ளாக்கியது. இரண்டாம் ஆதாமான கிறிஸ்துவோ தன்னையேப் பலியாக்கி நம்மை அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீட்டார். மண்ணகத்தைச் சார்ந்த நாம் விண்ணகத்திலிருந்து வந்த இயேசுவின் சாயலை அணிந்து கொள்வோம். அவரைப் போலவே பகைவரை மன்னித்து வாழும் நல்மனம் கேட்டு வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.
மன்றாட்டுக்கள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. அன்பால் எம்மை ஆள்பவரே எம் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், இருபால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உமது பேரன்பால் நிறைவு பெற்று, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் நல்லுள்ளம் பெற்றவர்களாகவும், பிறரை மன்னிக்கும் நல்மனம் பெற்றவர்களாகவும் திகழ்ந்திட வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. புகழ்ச்சிக்கு உரியவரே எம் இறைவா! இறைமக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொண்டு உள்ளதையும் நல்லதையும் பகிரும் நல் உள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அமைதியை அருளும் தந்தையே இறைவா! உலக நாடுகள் அனைத்திலும் உறவும், அமைதியும் நிலைபெற நல்லெண்ணத்தோடும் அர்ப்பணிப்போடும் உழைக்கும் அனைவரையும் உமது வல்லமையால் நிரப்பி அவர்களின் முயற்சிகள் பலனிக்க வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா! உம் மக்களாகிய நாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் அமைதியுடனும் மன்னிக்கும் மனப்பாங்குடனும் இணைத்து வாழும் நல் மனதை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்ஞானபுரம்.
“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
[email protected]; + 91 944 314 0660; www.arulvakku.com